Jan 23, 2015

எனக்கு எவ்வளவு அனுபவம் தெரியுமா?

பொம்மனஹள்ளி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஓசூர் வழியாக பெங்களூருக்குள் வரும் போது இந்த இடத்தைத் தாண்டித்தான் வர வேண்டும். கன்னடத்தில் ஹள்ளி என்றால் கிராமம். பொம்மனஹள்ளி, மாரத்தஹள்ளி மாதிரி. இந்த இடங்களை எல்லாம் இப்பொழுது ஹள்ளி என்றழைத்தால் பாவம் பிடித்துக் கொள்ளும். சனி, ஞாயிறுகளில் பொழுது போகாமல் வீட்டில் இருந்தால் வண்டியை எடுத்துக் கொண்டு மாரத்தஹள்ளிக்குச் செல்லும்படி ஆண் நண்பர்களுக்கு அறிவுறுத்துவேன். மாரத்தஹள்ளியைக் காணக் கண் கோடி வேண்டும். 

பொம்மனஹள்ளியும் ஒன்றும் மோசமில்லை. திரும்பிய பக்கமெல்லாம் கட்டிடங்கள்தான். சலர்புரியா க்ரீனேஜ் என்ற மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும். பணக்காரர்களின் குடியிருப்பு என்று. அந்தக் குடியிருப்பில் ஒரு சம்பவம். நடந்து மூன்று நாட்களாகிவிட்டது. பத்தாம் வகுப்பு மாணவியொருத்தி எட்டிக் குதித்துவிட்டாள். பெங்களூரின் முக்கியமான பள்ளிகளில் ஒன்றான நேஷனல் பப்ளிக் பள்ளியில் படிக்கிறாள். அப்பா இருதய அறுவை சிகிச்சை நிபுணர். நாராயண ஹிருதாலயா என்ற புகழ்பெற்ற மருத்துவமனையில் இருக்கிறார். அம்மா வங்கியொன்றில் மேனேஜர்.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் இன்னொரு பையனோடு மோனாலி பழகியிருக்கிறாள். அவனும் அதே பள்ளியில் படிக்கிறான். ஏற்கனவே இவர்கள் இருவரும் பேருந்தில் ஏதோ சேட்டை செய்ததாக புகார் இருக்கிறது என்று பள்ளி நிர்வாகத்தினர் சொல்கிறார்கள். எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. இப்பொழுதும் அப்படித்தான். அதே மாணவனோடு பள்ளி வளாகத்தில் ஏதோ சம்பவம் நடந்திருக்கிறது. பள்ளி முதல்வர் அழைத்து கண்டித்ததோடு நில்லாமல் இருவரையும் தற்காலிகமாக பள்ளியிலிருந்து நிறுத்தி உத்தரவு போட்டுவிட்டார். ஒன்றரை நாட்களுக்குத்தான் இந்த சஸ்பென்ஷன். ஆனால் மாணவர்களின் பெற்றோரை அழைத்து தங்களின் பிள்ளைகளை உடனடியாக அழைத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் விவகாரமாக போய்விட்டது.

வாத்தியார்களைக் கண்டு பயப்பட்டதைவிட என் அம்மா அழுவதற்குத்தான் அதிகம் பயந்திருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தானே? ஆசிரியருடன் உணர்வுபூர்வமான உறவு  இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெற்றோர்கள் அப்படியில்லை. ஒரு தவறைச் செய்துவிட்டால் அவர்களை எதிர்கொள்வதுதான் பெரிய சிரமம். மோனாலிக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். பள்ளி முதல்வர் முன்பாகவே அவளது அம்மா தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். விசாரணைக்கு அவளது அப்பா வரவில்லை. மகளை அழைத்துச் சென்று வீட்டிலும் அழுதிருக்கிறார். அம்மாவுக்கும் மகளுக்கும் வார்த்தை முட்டி படுக்கையறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு பால்கனியிலிருந்து குதித்துவிட்டாள். 

பத்தோடு பதினொன்றாக ஒரு சம்பவம்தான். பெங்களூரில் நடந்தது என்பதால் உள்ளூர் செய்தித்தாள்களில் கவனம் பெற்றிருக்கிறது.

உடனடியாக யாரையும் விரல் நீட்டிக் குற்றம் சொல்லிவிட முடியாது. தன் மகள் வீணாகப் போய்விடக் கூடாது என்று பெற்றவருக்கு வருத்தம். தங்களது பள்ளியில் இப்படி நடந்து கண்டிக்காமல் விட்டால் மற்ற மாணவர்களும் சீரழிந்து போவார்கள் என்று நிர்வாகத்திற்கு கவலை. ஹார்மோன் உள்ளுக்குள் விளையாடும் போது தன்னால் என்ன செய்ய முடியும் என்பது மோனாலியின் பிரச்சினை. ஒரு உயிர் போனதுதான் மிச்சம்.

இப்பொழுதெல்லாம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சில்மிஷங்களில் ஈடுபடுவது சர்வசாதாரணம். தாராசுரம் கோவிலுக்கு முன்பாக ஒரு பெரிய புல்தரை இருக்கிறது. அந்தத் தரையில் அத்தனை இளஞ்சோடிகள். பெரும்பாலும் பள்ளி மாணவர்கள்தான். இதை எதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் கும்பகோணம் போன்ற ஊரிலேயே இப்படியான சம்பவங்கள் சாதாரணமாக நடக்கும் போது பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. மூன்று கிலோமீட்டர் பைக் ஓட்டிப் பார்த்தால் தெரிந்துவிடும். எத்தனை பெரிய தட்டிகள். மார்பு தெரியும்படியும், தொப்புள் தெரியும்படியுமான தட்டிகளால் இந்த ஊரை நிரப்பியிருக்கிறார்கள். ஒரு சாதாரண நகைக்கடை விளம்பரமாக இருக்கும். மாராப்பை விலக்கிவிட்டபடிதான் அந்தப் பெண் தான் அணிந்திருக்கும் நகையைக் காட்டுவாள். பெண்கள் மட்டும்தான் என்றில்லை. ஆண்கள் அணியும் ஜட்டிக்கு பதினைந்தடி உயரத்தில் தட்டி வைத்திருக்கிறார்கள். கண்கள் மேயத்தானே செய்யும்?

சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் என எல்லாமுமே ஏதாவதொருவிதத்தில் தூண்டுகின்றன. சினிமாவைப் பற்றி எல்லோரும் பேசிப் பேசி சலித்துப் போய்விட்டது. சினிமா கூட பரவாயில்லை. சிரீயல்கள்கள்?  அவர்களுக்கு சென்சார் போர்டு கூட இல்லை. ஒருத்தியாவது சீரியலில் நல்லவளாக இருக்கிறாளா? அடுத்தவன் குடும்பத்தை எப்படித் தொலைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இணையமும் இப்பொழுது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட்டது. செல்போனிலேயே இணையத்தை வைத்துக் கொள்கிறார்கள். சீரழிந்து போவதற்கு நீலப்படங்கள்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. டைம்பாஸ் போன்ற இதழ்கள் போதும். இரண்டு நாட்களுக்கு முன்பாக இறுக்கமான போலீஸ் உடையில் நமீதா திரும்பி நிற்கும் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு ‘யாரென்று guess செய்யுங்கள் பார்க்கலாம்’ என்ற பொது அறிவுக் கேள்வியைக் கேட்டிருந்தார்கள். எனக்கு முப்பத்தியிரண்டு வயதாகிறது. பையனுக்கு ஆறு வயதாகிறது. நான் தேடிப் பார்த்தேன். பத்தாம் வகுப்பு பையன் தேடாமல் இருப்பானா? ஃபேஸ்புக்கில் பத்தாம் வகுப்பு பையன் இல்லையென்று சொல்ல முடியுமா? நிச்சயம் பார்த்திருப்பான். மனம் அலைபாயத்தான் செய்யும். ஜாக்கெட்டுக்குள் என்ன இருக்கிறது என கை அரிக்கத்தான் செய்யும். வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள். இல்லையென்றால் வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

டைம்பாஸ் இதழை மட்டும் குற்றம் சாட்டவில்லை. கிட்டத்தட்ட பெரும்பாலான ஊடகங்கள் அப்படித்தான் இருக்கின்றன. சமூகப் பொறுப்புணர்ச்சி என்பது கிஞ்சித்தும் கிடையாது. 

ஊடகங்களில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவதையெல்லாம் தவறு என்று சொல்லிவிட்டு ஊடகத்தை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியாது. உள்ளாடை தெரியும்படி ஆடை அணியும் ஆண்களையும் பெண்களையும் வெளியுலகிலேயே இயல்பாகப் பார்க்க முடிகிறது. அது ஃபேஷன். அதனால் ஆடைக் குறைப்பு, கொப்புளிக்கச் செய்யும் காம லீலைகள் என எல்லாமும் இருந்துவிட்டுப் போகட்டும்.

இப்படியெல்லாம் தூண்டிவிடுகிறோம் அல்லவா? அதற்கு என்ன வடிகால் வைத்திருக்கிறோம் என்பதுதான் பிரச்சினை. இந்தியாவில் எங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று விளம்பரப்படுத்தும் கல்வி நிறுவனங்களில் கூட பாலியல் கல்வி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘இவ்வளவுதான் எதிர்பாலினம்’ என்கிற எந்தவிதப் புரிதலையும் உண்டாக்குவதில்லை. க்ளப் நடத்திக் கொள்ளலாம், கட்டுப்பாடில்லாமல் சாராயம் கிடைக்கும், எதிர்பாலினத்தின் தோலைப் பார்ப்பது மிகச் சாதாரணம். இப்படியெல்லாம் அவிழ்த்துவிட்டு ‘அட அது ஒண்ணுமில்லப்பா’ என்று பாலியல் பற்றிச் சொல்லித் தருவதில் மட்டும் சிக்கல். ‘நம்ம கலாச்சாரம் என்ன ஆகும்?’ என்பார்கள்.

வெளியுலகில் எல்லாவிதத்திலும் தூண்டிவிடுகிறோம். ஆனால் கல்வி வளாகத்திற்குள் சென்றால் ஆணும் பெண்ணும் தனித்தனி படிக்கட்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும்- பெங்களூரில் பல கல்லூரிகளில் அப்படித்தான். மாணவனும் மாணவியும் பேசிக் கொள்ளக் கூடாது.   ரகசிய வழியைத்தான் மனம் தேடும். ஆணும் பெண்ணும் புரிதலுடன் பழகுவதற்கான சூழலை உருவாக்குவதில் ஏன் பின் தங்கிக் கொண்டேயிருக்கிறோம்? ஏன் எதிர்பாலினத்தைச் சிக்காத சரக்கு என்றே உருவகப்படுத்துகிறோம்? நாம்தான் இன்னமும் எதிர்பாலினத்தைப் பார்த்து ஏங்கிக் கொண்டேயிருக்கிறோம். அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் தப்பிக்கட்டுமே.

இது போன்ற பிரச்சினைகளில் மனோவியல் கவுன்சிலரை அழைக்கும் பள்ளிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதல்வர்கள்தான் கவுன்சிலர்கள். அம்மாவையும் மகளையும் தனித்தனியாக அழைத்துத்தான் பேசியிருக்க வேண்டுமே தவிர, ஒரே அறைக்குள் வைத்து ‘உம்புள்ள சரியில்லை’ என்று சொல்வதைப் போன்ற முட்டாள்தனம் ஏதாவது இருக்கிறதா? அதைத்தான் செய்திருக்கிறார்கள். கேட்டால் ‘எனக்கு இருபத்தைந்து வருட அனுபவம்...எத்தனை ஆயிரம் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன் தெரியுமா’ என்பார்கள்.

எப்பொழுதுமே அடுத்தடுத்த தலைமுறை முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சிக்கலாகிக் கொண்டேதான் வரும். தாத்தாவைவிட அப்பாவின் தலைமுறை சிக்கலானதுதான். அப்பாவைவிடவும் நம் தலைமுறை சிக்கலானதுதான். ஆனால் தலைமுறை இடைவெளியின் வேகம் சற்று குறைவானது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. நம் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான வேகம் அதிபயங்கரமானது. எவ்வளவுதான் நாம் ஈடுகொடுத்து ஓடினாலும் தொழில்நுட்பத்தின் வேகம் நம்மைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும். நமக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் வேகத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் போது ‘எனக்கு எவ்வளவு வருஷ அனுபவம் தெரியுமா?’ என்ற வெட்டி வீராப்பை பேசிக் கொண்டிருப்பது போல அபத்தம் வேறொன்றும் இருக்க முடியாது.