Jan 6, 2015

இந்த வாரம் ஊருக்கு போறீங்களா?

வரும் சனிக்கிழமை(10.01.2015) ஒரு மணி நேரம் ஒதுக்க முடியுமா? அன்றைய தினத்தில் புத்தகத்தை வெளியிட்டுவிடலாம். அச்சுக்குச் சென்றுவிட்டது. வெள்ளிக்கிழமையன்று கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் சனிக்கிழமை சரியாக இருக்கும். வெளியீட்டு விழாவை நடத்த அரங்கம் எதுவும் பிடிக்கவில்லை. புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் அரங்கிலேயே நடத்தி விடலாம். (அரங்கு எண்: 543-544) எளிமையாக நடத்தினால் போதும். பதிப்பாளருக்கு செலவு இல்லாமல் முடித்துவிடலாம். ஒரு நிழற்படக் கருவிக்கு மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த வேலையையும் பதிப்பாளரின் தலையிலேயே கட்டிவிட்டால் சோலி சுத்தம். 


எதற்கு இந்தத் தலைப்பு? சென்ற முறையே கூட தலைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு பதிப்பாளரிடம் என்னைத் திட்டிய நண்பர்களைப் பற்றித் தெரியும். அந்தப் புத்தகத்தில் சீரியஸான கதைகளும் இருக்கின்றன என்பது வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு திட்டினார்கள். இந்த முறையும் திட்டுவார்கள். திட்டிவிட்டுப் போகட்டும். புத்தகம் என்றாலே வெகு சீரியஸான தலைப்புடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. உள்ளடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அட்டையும், தலைப்பும் புத்தகத்தை கையில் எடுத்துப் பார்க்க வைக்க வேண்டும்.

வலைப்பதிவில் எழுதுகிறோம்; ஃபேஸ்புக்கில் எழுதுகிறோம் என்பதெல்லாம் இருக்கட்டும். இது ஒரு குட்டி உலகம். அதிகபட்சமாக சில ஆயிரம் பேர்களுக்கு நம்மைப் பற்றிய பரிச்சயம் இருக்கலாம். ஆனால் புத்தக உலகம் மிகப் பெரியது. பல லட்சக்கணக்கானவர்கள் வந்து போகும் புத்தகக் கண்காட்சியில் கல்கிக்கும், பாலகுமாரனுக்கும், சுஜாதாவுக்கும் இருக்கும் கிராக்கியில் 0.001 சதவீதம் கூட என்னைப் போன்ற பொடியன்களுக்குக் கிடையாது என்பதுதான் நிதர்சனம். உள்ளுக்குள் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்ளலாம். ஆனால் ரியாலிட்டி என்று ஒன்று இருக்கிறதல்லவா? அப்படியான ஒரு உலகில் எப்படி நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பது?

சிலர் கேட்பார்கள்-  "அப்படித் திரும்பிப் பார்க்க வைக்கவில்லையென்றால் என்ன?" என்று. 

சரியான கேள்விதான். அப்படியென்றால் புத்தகமே எழுதாமல் இருந்துவிடலாம் அல்லவா? எழுதி, பிழை திருத்தி, அட்டை வடிவமைத்து, அச்சிட்டு, பதிப்பாளருக்கு செலவு வைத்துவிட்டு ‘என் புத்தகத்தை நான் விளம்பரப்படுத்த மாட்டேன்’ என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இது எனது புத்தகம். நம்பி பதிப்பிக்கிறார்கள். அவர்கள் கையைப் பதம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக விளம்பரங்கள். அதில் எந்த Controversyயையும் உருவாக்காமல், அடுத்தவர்களை இழுத்துப் போட்டு அடிக்காமல், எதிர்மறையான விளம்பரமாக இல்லாமலிருந்தால் போதும் என விரும்புகிறேன். அவ்வளவுதான்.

அதனால் கண்காட்சி முடியும் வரைக்குமாவது பேசித்தான் ஆக வேண்டும். ப்ளீஸ். பொறுத்தருள்க.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

வெளியீட்டு விழாவில் புத்தகத்தை வெளியிடவும் பெற்றுக் கொள்ளவும் யாரை அழைப்பது? திருமதி. மீரா ரமணன் புத்தகத்தை வெளியிடுகிறார். நிசப்தத்தில் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர். சென்னையில் இருக்கிறார். அவரை அழைத்து புத்தகத்தை வெளியிடச் சொல்வது சரியாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் சரி என்று சொல்லிவிட்டார்.

திருப்பதியைச் சேர்ந்த மகேஷ் பெற்றுக் கொள்வார். மகேஷைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறார். பார்வை இல்லாதவர். தொடர்ந்து நிசப்தம் வாசித்துவிடுவார். ‘Text to sound' மென்பொருளை நிறுவியிருக்கிறார். அதன் வழியாக படித்துவிட்டு பேசுவார். சென்ற வாரத்தில் அழைத்து  ‘புத்தகத்தின் பிடிஎஃப் அனுப்பி வைக்க முடியுமா?’ என்றார்.  ‘முகவரி அனுப்புங்கள்...புத்தகமாகவே அனுப்பி வைக்கிறேன்’ என்றேன். பெருந்தன்மையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டேன். ‘புத்தகத்தை வாங்கி நான் எப்படி சார் படிக்கிறது?’ என்றார். அப்பொழுதுதான் உறைத்தது. வேறு எதுவும் யோசிக்கவில்லை. ‘சென்னை வர முடியுமா?’ என்றேன். நண்பரொருவரின் துணையோடு வருவதாகச் சொன்னார். அவர் முதல் பிரதியை வாங்கிக் கொள்வது என்பது அவரை கெளரவப்படுத்துவதற்கான செயல் இல்லை. என்னை கெளரவப்படுத்திக் கொள்ளும் செயல். இவ்வளவு சிரமத்தோடும் தொடர்ந்து வாசித்தும் பேசிக் கொண்டிருக்கும் மகேஷ் போன்றவர்கள்தான் தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கமருந்து. இந்த நிகழ்ச்சிக்காக அவர் வருவது உண்மையில் பெருமையாகத்தான் இருக்கிறது.

அரங்கம் இல்லை; அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை; இடம் இல்லாமல் அரங்குக்கு வெளியே நூற்றுக்கணக்கில் நின்று கொண்டிருந்தார்கள் என்கிற பதற்றம் இல்லை; அழகிய தொகுப்பாளர் இல்லை; புத்தகம் பற்றி பேச ஆட்கள் இல்லை- இப்படியெல்லாம் பந்தா செய்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்முடைய Range என்பது பற்றி நமக்குத் தெரியாதா? எதற்கு அலம்பல்? ஆனாலும் வெளியீட்டு விழா என்று ஒன்றை நடத்துகிறோம். அல்டாப்பு செய்கிறோம்.

அதிகபட்சமாக பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் முடித்துவிடலாம். மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்துவிடலாம்.

நிசப்தம் என்பதுதான் எனது அத்தனை செயல்களையும் தாங்கிப் பிடிக்கிறது. அதை வாசிப்பவர்கள் இல்லையென்றால் தினம் எழுதுவது, புத்தகமாக்குவது, அதிரடியான விற்பனை என்பதெல்லாம் எந்தவிதத்திலும் சாத்தியமில்லை என்பது உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். அதனால் மற்ற யாரையும் அழைப்பதைவிடவும் உங்களை அழைக்க விரும்புகிறேன்.

வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். வாய்ப்பில்லாதவர்கள் கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். அப்படியும் வர இயலாதவர்கள் வாழ்த்துங்கள். உங்களின் வாழ்த்துக்களில் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

மிக்க அன்புடன்
வா.மணிகண்டன்