Jan 25, 2015

விடுவார்களா?

அத்திபள்ளி சுங்கசாவடியில் நேற்று கடும் கூட்டம். மூன்று நாட்கள் விடுமுறைவிட்டால் இப்படித்தான். அதுவும் முகூர்த்த நாள் என்றால் சோலி சுத்தம். பெங்களூரிலிருந்து சாரை சாரையாக வண்டிகள் கிளம்பிவிடுகின்றன. சுங்கசாவடியைத் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியும். ஆனால் சில கிலோமீட்டர்கள் கூடுதலாகப் பிடிக்கும். அது பரவாயில்லை என்று பாலத்துக்கு கீழாக வண்டியைத் திருப்பிய போது ஏதோ ஒரு கிரகம் பைக்கில் வந்து சேர்ந்தது. வேகமாக எங்கிருந்தோ வந்தவன் வண்டிக்கு முன்பாக திடீரென்று நிற்க நான் இடித்துத் தொலைத்துவிட்டேன். எதுவும் ஆகவில்லை. அலேக்காக வண்டியைக் கீழே சாய்த்தான். இண்டிக்கேட்டர் உடைந்துவிட்டது. அது கர்நாடகா. நான் அமர்ந்திருந்த வண்டி TN 37. விடுவார்களா? பசுபதியும் தனுஷூம் போல 'ஏய் ஏய்' என்று வந்துவிட்டார்கள். 

எதுவுமே பேசவில்லை. ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தேன். காசு கொடுத்த போது வண்டிக்காரன் வேண்டாம் என்றுதான் சொன்னான். கத்திக் கொண்டு வந்தவர்கள்தான் ‘கவலைப்படாமல் வாங்கிக்கொள்’ என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் ஒருவன் ‘அவர் லோக்கல் தெரியுமா? ஒரு போன் போதும்..’என்றான். பயப்படுத்துகிறானாம். ஐந்நூறு ரூபாய்க்கு இண்டிக்கேட்டர் என்றால் ஏதாவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வார்களாக இருக்கும். நிறுவனம் மாறிய பிறகு நேற்று காலையில்தான் முதல் சம்பளம் வந்திருந்தது. காத்தவராயனுக்கு காணிக்கை எழுதிய கணக்காகிவிட்டது. 

நாளின் தொடக்கம் மட்டும்தான் மோசமாக இருந்தது.

கிருஷ்ணகிரியைத் தாண்டும் போதே நாவலாசிரியர் இரா.முருகவேளை அழைத்து கோயமுத்தூர் வருவதாகச் சொல்லியிருந்தேன். அவரை நாவலாசிரியர் என்று எப்படிச் சுருக்க முடியும்? மிளிர்கல் போன்றதொரு அட்டகாசமான நாவலை எழுதியவர் என்றாலும் அதற்கு முன்பே எரியும் பனிக்காடு, பொருளாதார அடியாளின் வாக்குமூலம் போன்ற மிக முக்கியமான படைப்புகளைத் தமிழுக்கு மொழி பெயர்த்தவர். அடுத்து எழுதப் போகும் நாவல் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்று தோன்றியது. 

தாய்த்தமிழ் பள்ளியின் தாளாளர் குமணனும், நண்பர் குமாரும் கோபியில் சேர்ந்து கொண்டார்கள். குமணனைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் தொகுதியில் திமுக ஒரேயொரு முறைதான் சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறது. அந்த ஒருமுறை சென்றவர் ஜி.பி.வெங்கிடு. இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் தான் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பாக பார்த்துக் கொண்ட அதே பெட்டிக்கடையைப் பார்த்துக் கொள்கிறார். அத்தகையதொரு எளியவரின் மகன்தான் குமணன். தமிழ் உணர்வாளர்.

குமார் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஜப்பானிலிருந்து வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஸ்பெயின் செல்கிறார். ஆராய்ச்சியாளர். இடைப்பட்ட காலத்தில் ஊரில் இருக்கிறார். 

சூழலியலாளரும் எழுத்தாளருமான அவைநாயகன் எங்களுக்கு முன்பாகவே கோவை ஞானியின் வீட்டை அடைந்துவிட்டார். நாங்கள் ஞானியின் வீட்டை அடைவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக அலைபேசியில் அழைத்தார். ‘அதிகமாகப் பேச முடியாது கிளம்புங்க’ என்று சொல்லிவிட்டதாக வருத்தப்பட்டார். ஞானி அப்படிப்பட்ட மனிதரே இல்லை. காலங்காலமாக பேசிக் கொண்டேயிருந்தவர். எந்நேரமும் யாரிடமாவது விவாதித்துக் கொண்டிருந்தவர். இப்பொழுது ஐந்து நிமிடங்கள் கூட பேசுவதற்குத் தயாராக இல்லை. மூச்சிரைக்கிறது. 

‘கார்டியாக் வீஸிங்’ என்று முருகவேள் சொன்னார். நாங்கள் உள்ளே நுழைந்த போது ஞானி மட்டும்தான் வீட்டில் இருந்தார். தடுமாறியபடி எதையோ துழாவிக் கொண்டிருந்தவர் எங்களை அமரச் சொல்லிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.  மருத்துவமனைக்குச் செல்வதேயில்லை போலிருக்கிறது. வீட்டை விட்டு வெளியில் நடப்பதற்கு கூட காலில் தெம்பில்லை என்பது அவர் வருத்தம். சென்ற முறை பார்த்ததைக் காட்டிலும் இந்த முறை மிகவும் தளர்ந்திருக்கிறார்.

‘ஐந்து நிமிடங்கள்தான் உங்களிடம் பேச முடியும்’ என்று வருத்தப்பட்டபடியே சொன்னவர் அதில் ஒரு நிமிடத்தை மிளிர்கல்லுக்கும், சிலப்பதிகாரத்துக்கும் ஒதுக்கிவிட்டார். ‘அடுத்த வொர்க் என்ன செய்யறீங்க முருகவேள்’ என்றார். அதுதான் ஞானி. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலமாக பார்வை இல்லை. வீட்டிற்கு வெளியே நடப்பதற்கு கூட காலில் தெம்பில்லை. ஆனால் மிளிர்கல் வரைக்கும் பேசுகிறார். 

சமீபத்தில் கால் விரல்களுக்கிடையே புண் வந்திருக்கிறது போலிருக்கிறது.  ‘வீஸிங் வருது’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ‘மருத்துவமனைக்குச் செல்லலாம்’ என்று முருகவேளும், அவைநாயகனும் சொன்னார்கள். ‘தேவையில்லை’ என்று மறுத்துவிட்டார். ஏதோவொருவகையில் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

கிடைத்த சில நிமிடங்களில் காசோலையில் பெயரை எழுதிக் கொண்டிருந்தேன். ஐம்பதாயிரம் ரூபாய். அறக்கட்டளை பணம்தான். மருத்துவ உதவி அல்லது கல்வி உதவிக்கென வரும் தொகையை அதற்கு மட்டும்தான் பயன்படுத்துவது என்கிற முடிவில் இருப்பதால் ஞானிக்கு என தனியாக கேட்க வேண்டியிருந்தது. மூன்று நண்பர்கள் பணம் கொடுத்திருந்தார்கள். ஒருவர் பதினைந்தாயிரம் ரூபாய். அமெரிக்காவில் வசிக்கிறார். இன்னொருவரும் பதினைந்தாயிரம் ரூபாய். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. துபாயிலிருக்கும் ஒருவர் பத்தாயிரம் ரூபாய். மொத்தமாக நாற்பதாயிரம் இருந்தது. கத்தாரில் இருக்கும் ஒரு நண்பர் புத்தகக் கண்காட்சியின் சமயத்தில் ‘ஞானிக்கு எவ்வளவு தரப் போறீங்க?’ என்றார். நாற்பதாயிரம் என்று சொல்லியிருந்தேன். ‘ஐம்பதாயிரமாகக் கொடுத்துடுங்க’ என்று அவர் ஒரு பத்தாயிரம் அனுப்பி வைத்திருந்தார். ஆக மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய்.

(அவை நாயகன், இரா.முருகவேள், குமணன்)

தனியாகச் செல்வதைவிடவும் இரண்டு மூன்று நண்பர்கள் உடனிருப்பது நல்லது என்று தோன்றியது. அழைத்தவுடன் உடன் எந்தச் சிரமமும் பாராமல் வந்த நண்பர்களுக்கு நன்றி. ஞானி அவர்களிடம் அறக்கட்டளை வழியாக பணம் திரட்டிய விவரத்தைச் சொன்னபோது ‘பெரிய தொகை. ரொம்ப நன்றி’ என்றார்.  சட்டையைத் தேடி எடுத்து அதன் பைக்குள் நிரவியபடியே வைத்துக் கொண்டார்.

உதவியவர்களுக்கு நன்றி என்று சொல்வது டெம்ப்ளேட்டாக இருக்கும். நெகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். அவைநாயகனின் வீடும் ஞானியின் வீடு இருக்கும் அதே துடியலூர்தான். அவரது வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருந்தோம். சுந்தரும், சபரியும் வந்திருந்தார்கள். இரவாகிக் கொண்டிருந்தது. 

கிளம்பிய சில நிமிடங்கள் வரைக்கும் மனதுக்குள் சங்கடமாகத்தான்  இருந்தது. ஒருவிதமான வருத்தம் என்றும் சொல்லலாம். காலம்காலமாக எழுத்து வாசிப்பு என்று அலைந்த ஒரு மனிதன் கடைசியில் எதைச் சம்பாதிக்கிறான் என்ற கேள்வி உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அப்படியொரு கேள்வியே அவசியமில்லை. இந்தக் காலத்தில் ஐம்பதாயிரம் என்பது பெரிய தொகையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகின் ஏதேதோ மூலைகளில் இருக்கும் சில வாசகர்கள் அந்த எழுத்தாளனுக்காக மனமுவந்து கொடுக்கிறார்கள். வேறு சில வாசகர்கள் அதைத் எடுத்துச் சென்று அவரது வீட்டிலேயே கொடுக்கிறார்கள். கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலமாக தமிழில் தொடர்ந்து வாசித்தபடியும் விமர்சித்தபடியும் எழுதியபடியும் இருந்த ஒரு முக்கியமான ஆளுமைக்கு செய்த சிறு கெளரவம் இது. அப்படித்தான் பார்க்க வேண்டும். இத்தகைய கெளரவத்தைத்தான் எதிர்பார்ப்பில்லாத எழுத்து சம்பாதித்துக் கொடுக்கிறது. ஞானி அப்படியான கெளரவத்திற்கு எல்லாவிதத்திலும் தகுதியானவர் என்பதில் துளி சந்தேகமும் தேவையில்லை.

நிழற்பட உதவி: குமார்