Jan 20, 2015

ஏன் பாழுங்கிணற்றில் தள்ளுகிறீர்கள்?

கடந்த வாரத்தில் ஒரு பள்ளியில் அழைத்திருந்தார்கள். தமிழ் வழிக்கல்வியில் பாடம் நடத்தும் பள்ளி அது. மாணவர்களிடையே பேசுவதற்காகச் சென்றிருந்தேன். அரை மணி நேரம் முன்பாகவே சென்றுவிட்டதால் கொஞ்ச நேரம் உதவித் தலைமையாசிரியரின் அறையில் அமரச் சொல்லியிருந்தார்கள். மாணவர்களைத் தயார் செய்யும் வரைக்கும் அங்கேதான் அமர்ந்திருக்க வேண்டும். பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. உதவித் தலைமையாசிரியரின் மேசை மீது நிறைய விடுப்பு விண்ணப்பங்கள் இருந்தன. ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருந்தேன். பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏன் அதிர்ச்சி என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பள்ளியின் பெயரை மட்டும் நீக்கியிருக்கிறேன்.மேடம், Thank you போன்ற சொற்களைக் கூட இவ்வளவு தவறுகளோடு எழுதியிருக்கிறார்கள். இத்தனை தப்பும் தவறுமாக எழுதப்பட்ட விடுப்பு விண்ணப்பங்களை பார்த்ததேயில்லை. எட்டாம் வகுப்பு பெண்கள் எழுதியிருந்த விடுப்பு விண்ணப்பங்கள் அவை. இரண்டை மட்டும் உருவி எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.

அந்தக் கூட்டத்திலேயே இது குறித்து பேச வேண்டும் போலிருந்தது. ஆசிரியர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடும்தான். அதற்காக பேசாமல் இருக்க முடியவில்லை. ஒரு விடுப்பு விண்ணப்பத்தைக் கூட சரியாக எழுதத் தெரியாமல் எப்படி எட்டாம் வகுப்பு வந்திருக்கிறார்கள்? இவர்களுக்கு ஆறாம் வகுப்பிலேயே ஆங்கிலத்தில் எழுதப்படும் விடுப்பு விண்ணப்பங்கள் அறிமுகமாகிவிடுகின்றன. தேர்வில் விடுப்பு விண்ணப்பம் எழுத வேண்டியிருக்கும். அப்படியிருந்தும் எட்டாம் வகுப்பு வந்த பிறகும் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது? அந்தப் பள்ளி சுற்று வட்டாரத்தில் முக்கியமான பள்ளி. பிரபலமான பள்ளியும் கூட. அந்தப் பள்ளியிலேயே இந்த லட்சணம்தான். எனில் மற்ற பள்ளிகளில் நிலைமை எப்படி இருக்கும் என்று முடிவு செய்து கொள்ளலாம். 

இவ்வளவுதான் நம் கல்வியின் தரம்.

தரத்தை சிதைத்து வைத்திருக்கிறார்கள். தேர்வுகள் கிடையாது. நுழைவுத்தேர்வு கிடையாது. மாணவர்கள் படிக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. உருப்பட்ட மாதிரிதான்.

‘நான் கல்வி அதிகாரி இல்லை. உங்களைக் கேள்வி கேட்கும் எந்த உரிமையும் இல்லை. ஆனால் என் புரிதலுக்காகக் கேட்கிறேன். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் சொல்லுங்கள்’ என்றேன். 

உதவித் தலைமையாசிரியர்தான் பதில் சொன்னார். ‘பத்தாம் வகுப்பு வரைக்கும் தேர்வில் எந்தக் கெடுபிடியும் இல்லை. வகுப்புக்கு வந்திருந்தால் போதும். தேர்ச்சியடைவது பிரச்சினையே இல்லை’ என்றார்.

அது ஒரு காரணமாக இருந்தாலும் மாணவர்களை இந்த அளவுக்கு மோசமான நிலைமையில் வைத்திருப்பது ஆசிரியர்களின் குற்றம் இல்லையா? ஆனால் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘வேறு வழியே இல்லை....நாங்கள் தோல்வியடையச் செய்து ஒரு மாணவன் பள்ளியை விட்டு நின்றுவிட்டாலும் கூட கல்வியதிகாரிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்’ என்று சொன்னார்.

இவர்கள் அரசாங்கத்தை நோக்கி கை நீட்டுகிறார்கள். அரசாங்கம் ஆசிரியர்களை நோக்கி கை நீட்டும். ஆனால் கடைசியில் மாணவர்கள்தான் மிதிபடுகிறார்கள்.

மாணவர்களுக்கு எந்தத் தகுதியில்லையென்றாலும் ஒவ்வொரு வருடமும் தேர்ச்சியளிப்பது அரசாங்கத்தின் குற்றம். ‘எப்படியும் பாஸ்தானே’ என்கிற மனநிலையில் ‘அவன் எப்படி படித்தால் என்ன’ என்கிற மாதிரியான மனநிலையில் இருப்பது ஆசிரியர்களின் குற்றம். நிலைமை படு மோசமாகிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் கொஞ்சம் கூட விழித்துக் கொள்வதாகவே தெரியவில்லை. 

எல்லோருக்கும் கல்வி என்பதற்கும் எல்லோரும் தேர்ச்சி என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தேர்ச்சி கொடுக்கவில்லையென்றால் அந்த வருடத்தோடு கிராமப்புற மாணவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டுவிடுகிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான். ஆனால் அதற்காக எந்தவிதத்திலும் மாணவர்களின் தகுதியை பரிசோதிக்காமல் அடுத்தடுத்த வருடங்கள் அவனைத் தேர்ச்சியடையச் செய்வதைக் காட்டிலும் பெரிய பாவம் வேறொன்றுமில்லை. இப்படியே ஒவ்வொரு வருடமும் தேர்ச்சியடைந்து ப்ளஸ் டூ வரும் மாணவனை தனியார் கல்லூரிகள் அள்ளியெடுத்துக் கொள்கின்றன. எப்படியும் வங்கியில் கடன் வாங்கிவிடுகிறார்கள். படித்து முடித்தால் எப்படி வேலை கிடைக்கும்?

பி.எஸ்.ஸி கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு இணையத்தின் அடிப்படை அறிவு கூடத் தெரியவில்லை என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அப்படித்தான் இருக்கிறது. நேரடியாகப் பார்த்திருக்கிறேன். கூகிளில் தேடத் தெரியாத மாணவன் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். கல்லூரியில் இணையவசதியே கிடையாது. கல்லூரி நகரத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது. அதனால் ஏர்செல், ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட யாருமே இணைப்புத் தருவதில்லை என்றார்கள். 

ஆளாளுக்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார்கள்.

கல்லூரி முடித்து வரும் மாணவன் ஒருவனை அழைத்து விசாரித்தால் புரியும். ‘கிராமப்புற மாணவன். தமிழ் மீடியம். எப்படியாச்சும் ஒரு வேலை வாங்கிட்டா போதும்’ என்பார்கள். கிராமப்புறம், தமிழ் மீடியம் என்பதெல்லாம் இப்பொழுது சாதாரணமாக புழங்கும் சாக்கு போக்கு. அதே தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் இப்பொழுது நாஸாவிலும், ஐஎஸ்ஆர்ஓ விலும் பணியில் இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள்தான். கிராமப்புறத்திலிருந்து வந்த பொறியாளர்களே இல்லையா என்ன? இப்பொழுது மட்டும் ஏன் இந்த சாக்கு போக்குகளைச் சொல்லி கருணையை எதிர்பார்க்கிறார்கள்?

கடந்த பதினைந்து வருடங்களில்தான் நிலைமை நாறியிருக்கிறது. யாரைக் குற்றம் சொல்வது? அரசாங்கம், பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றவர்கள் என்று எல்லோரையும்தான் சொல்லியாக வேண்டும். 

மாணவனின் அடிப்படையான அறிவு எந்த நிலையில் இருக்கிறது என்பதையாவது ஒவ்வொரு வருடமும் கவனிக்க வேண்டியதில்லையா? யாருமே கண்டு கொள்வதில்லை. அதனால்தான் கொஞ்சம் தரமான கல்வி வேண்டும் என விரும்புபவர்கள் தனியார் பள்ளிகளுக்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் அடித்தாவது மதிப்பெண் வாங்க வைக்கிறார்கள். மதிப்பெண் சும்மா வாங்க வைப்பார்களா? பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை உருவுகிறார்கள். கொஞ்சம் காசு படைத்தவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? பையன் படிக்கிறான் என்ற நம்பிக்கையில் பன்னிரெண்டு வருடங்களும், கல்லூரிக்குச் சென்றுவிட்டான் என்று அடுத்த ஐந்தாறு வருடங்களும் நம்பிக் கொண்டிருந்து கடைசியில் நொந்து போகிறார்கள். 

அரசாங்கங்கள் கல்விக் கொள்கையில் எந்தவிதமான தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் முடிவெடுத்துக் கொண்டிருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது. விளைவுகள் விபரீதமாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். இன்னமும் விழிக்கவில்லையென்றால் பல லட்சம் குடும்பங்களை பாழ் கிணற்றில் தள்ளிய பாவத்தை எந்த ரத்தத்தாலும் கழுவவே முடியாது.