Dec 3, 2014

எல்லாமே எமோஷனல்தானா?

சமீபத்தில் ஒரு சோஷியாலஜி பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெற்றவர். என்றாலும் இப்பொழுதும் தேசிய சட்டப்பள்ளியில் (National Law school)பணிபுரிகிறார். எப்பொழுதுமே நல்ல ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் அறிவின் ஜன்னல்களைத் திறந்துவிட்டுவிடுவார்கள். இவரும் அப்படித்தான். ‘ரிட்டையர்ட் ஆகிட்டீங்க இல்ல...எதுக்கு மறுபடியும் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் சில இடங்களைப் பிடிப்பவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும். 

‘வர்ற பசங்க அறிவாளிகளா இருக்காங்க....அவங்ககிட்ட இருந்து நாமும் ஏதாச்சும் கத்துக்கலாம்’ என்றார். 

பேசிக் கொண்டிருந்தோம். கொண்டிருந்தோம் என்றால் நான் மட்டுமில்லை. மூத்த எழுத்தாளர்கள் உள்ளிட்ட வேறு சிலரும். பெங்களூரில் அவர்களைச் சந்தித்தது பற்றி தனியாக எழுத வேண்டும். இப்பொழுது அந்த பேராசிரியர் பேசியதை மட்டும் சொல்லிவிடுகிறேன். 

அந்தச் சமயத்தில்தான் தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்திருந்தார்கள். தமிழகத்தில் பெரிய விழாவெல்லாம் நடத்தி விடுதலையான மீனவர்களுக்கு அரசு ஊழியர்கள் மாலையிட்டு அந்த விழாவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தார்கள். என்ன அரசியல் பின்னணி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ஐந்து மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள் அல்லவா என்று நினைத்திருந்தேன். 

அதைப்பற்றிதான் அந்த பேராசிரியர் கேட்டார். ‘ஏன் இந்த மீனவர்களை அடிக்கடி இலங்கைக்காரன் பிடிச்சுட்டு போயிடுறான்?’ 

‘தமிழன்னாலே ராஜபக்‌ஷேவுக்கு வேப்பங்காய் சார்’ என்றுதான் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் அது பக்குவமில்லாத பதிலாக இருக்கும். அடக்கிக் கொண்டேன். சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. அவர் கேட்கிற கேள்வியில் உள்ளர்த்தம் இருந்தது. ‘நம்ம மீனவர்களிடம் தப்பே இல்லையா?’ என்கிற அர்த்தம் அது. 

‘ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது அதனால் அந்த ஊர் மீனவர்கள் தெரியாத்தனமாக எல்லை மீறிவிடுகிறார்கள் போலிருக்கிறது’ என்று கூட அவரிடம் சொல்லலாம்தான். ஆனால் அதற்கு இடமே தராமல் ‘ஏன் இலங்கை மீனவர்கள் தெரியாத்தனமாக எல்லை மீறுவதே இல்லையா? அவர்களை ஏன் இந்தியா கைது செய்வதில்லை’ என்றார். 

அவரது நோக்கம் இந்திய மீனவர்கள் மீது குற்றம் சாட்டுவதில்லை. இதைப் பற்றி ஏன் எந்தவொரு தெளிவான விவாதமும் நடப்பதில்லை என்பதுதான். 

உண்மையிலேயே தமிழர்கள் என்பதால்தான் இலங்கை கப்பற்படை கைது செய்கிறதா? கேரள மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்வதற்கான வாய்ப்பே உருவாகுவதில்லையா? ஏன் அவர்கள் கைது பற்றிய எந்தச் செய்தியும் வருவதில்லை. பாகிஸ்தான்காரனும்தான் குஜராத்திலிருந்தும் மஹாராஷ்டிராவிலிருந்தும் செல்லும் மீனவர்களைப் பிடிக்கிறான். ஆனால் இலங்கையில் சிக்கும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது சொற்பம். பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் மீது இருக்கும் வெறுப்பைக் காட்டிலும் இலங்கைக்கு தமிழர்களின் மீது வெறுப்பு அதிகமா? அப்படியே வெறுப்பு இருந்தாலும் அதை மீனவர்களிடம் காட்டி அவன் என்ன செய்யப் போகிறான்? 

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில்கள் தெரியும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்த அரசுகளும் அரசியல்வாதிகளும் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். இல்லையா?

தமிழகக் கடலில் ஓடும் பெரும்பாலான படகுகள் அரசியல்வாதிகளுடையது என்கிறார்கள். எல்லாவிதமான சட்டத்திற்கு புறம்பான வேலைகளையும் அந்தப் படகுகளின் மூலமாக செய்கிறார்களாம். போதைப் பொருள் கடத்தலிலிருந்து கட்டப்பஞ்சாயத்து வரை. சகலமும். இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று உலக அளவில் தடைசெய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். Destructive Fishing Practices என்று கூகிளில் தேடிப்பார்க்கலாம். அதில் ஒன்று Trawling. மிகப்பெரிய வலைகளை வீசி கடல் ஆழத்தில் இருக்கும் மண்ணோடு சேர்த்து இழுத்துவிடுவார்கள். கடல்பாசி, முட்டை, குஞ்சு, குளுவான் என்று எதுவும் மிச்சம் ஆகாது. இப்படி அடியோடு அழித்துவிட்டு வந்தால் அந்த நாட்டு மீனவன் என்ன செய்வான்? அதுதான் பிடித்து போடுகிறார்கள்.

இது ஒரு அனுமானம்தான். 

இப்படி எவ்வளவோ பிரச்சினைகள் பின்னணியில் இருக்கக் கூடும். ஆனால் பிரச்சினைகளை விரிவாக பேசாமல் அரசியல் ஆக்கிவிடுகிறோம். தொண்டை நரம்பு புடைக்க ‘அடேய்...எங்கள் மீனவர்களையா பிடிக்கிறாய்?’ என்று மேடையில் கத்தி உசுப்பேற்றுகிறார்கள். நாமும் அப்படியே நம்பிக் கொள்கிறோம். யாராவது ஒருவர் இதைப் பற்றி வெளிப்படையாக பேசினால் அவரைத் தமிழின துரோகி ஆக்கி மாநிலத்தை விட்டே துரத்திவிட்டுவிடுவார்கள்.

சரி விடுங்கள்.

நம் மீனவர்கள் நல்லவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்பாவிகள் என்றே இருக்கட்டும். எதனால் இத்தனை கைதுகள் நடக்கின்றன என்ற கேள்விக்கு நம்பும்படியான காரணம் என்ன இருக்கிறது? அதையெல்லாம் ஏன் எந்தப் பத்திரிக்கையிலும் எழுதுவதில்லை. அரசு மற்றும் உளவுத்துறையின் செய்திகளைத்தான் அப்படியே பதிப்பிக்கிறார்கள். மீனவர்களின் பின்னால் இருக்கும் பெருந்தலைகள் தப்பிவிடுகிறார்கள். நான்கு மீனவர்களைக் காட்டி கைது அல்லது விடுதலை என்று மொத்த தமிழகத்தையும் திசை திருப்பிவிடுகிறார்கள். 

எல்லாவற்றையும் எமோஷனலான சங்கதிகளாக மாற்றிக் கொள்கிறோம். இல்லையா? குஷ்பூ விவகாரம் மாதிரி.

அவர் விடுதலைப்புலிகளை தீவிரவாத இயக்கம் என்று சொல்லிவிட்டார் என்பதால் பிராண்டித் தள்ளுகிறோம். அவர் சொன்னதை நியாயப்படுத்தவில்லை. இதே விஷயத்தைத்தான் ஷோபாசக்தி போன்றவர்கள் காலங்காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் விவாதித்தால் உருப்படியானதாக இருக்கும். அது அறிவுசார்ந்த விவாதமாக இருக்கும். அதைவிட்டுவிட்டு குஷ்பூவை பார்த்து ‘உன் யோக்கிதை தெரியாதா?’ என்று கேட்டால் அவர் என்ன செய்வார்? அடங்கிக் கொள்வாரா என்ன? நாளைக்கு இன்னமும் குதிப்பார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க குஷ்பூவால்தான் முடிகிறது. வேறு எந்த நடிகைக்கு இது சாத்தியம்? அவருக்கு அதுதான் தேவை. பத்து பேராவது அவரைப் பற்றி பினாத்த வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். நம்மவர்களும் இம்மிபிசகாமல் அவரது ஆசையை பூர்த்தி செய்கிறார்கள்.