Dec 2, 2014

ரெக்கார்ட் டான்ஸ் பார்க்கணுமா?

சேலம் சுற்றுவட்டாரத்தில் ரெக்கார்ட் டான்ஸ் பிரபலம். இப்பொழுது எப்படியென்று தெரியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்படித்தான். எடப்பாடி, தாரமங்கலம் என்று ஒரு ஊர் விடாமல் சுற்றியிருக்கிறேன். ஆசாத் தான் முதன் முதலாக அழைத்துச் சென்றான். அறைத் தோழன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். ஆறு மாதங்கள் முடிந்திருக்கும். ஆசாத்துக்கு சேலம் அத்துப்படி. அதுவுமில்லாமல் சுற்றுவட்டாரக் கல்லூரிகளில் அவனுக்கு நிறைய தொடர்புகள் இருந்தன. அப்பொழுது செல்போன் இவ்வளவு பரவலாகியிருக்கவில்லை, இருந்தாலும் அவனுக்கு எப்படியாவது  தகவல் வந்துவிடும். 

விடுதியின் காவலர் சித்தன். அவர் வடிவேலு மாதிரி. பயங்கரமாக படம் காட்டுவார். ‘அண்ணா வைங்கண்ணா’ என்று பத்து அல்லது இருபது ரூபாயை நீட்டினால் ‘இதுதான் கடைசி..சரியா?’ என்று கதவைத் திறந்துவிட்டுவிடுவார். இருபது ரூபாய் என்பதே பெரிய காரியம் என்பதால் முடிந்தவரை அவரிடம் கண்ணில்படாமல் உள்ளே நுழைவதற்கான சாத்தியங்களைத்தான் தேடிக் கொண்டிருப்போம். 

அது இருக்கட்டும்.

அன்று மாலையில் ஆசாத் கல்லூரி முடிந்து வந்ததும் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான். 

‘ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க போறேன்..வர்றியா?’ என்றான். ஜிவ்வென்றிருந்தது.

‘அங்க என்ன பண்ணுவாங்க?’ - ஒன்றுமே தெரியாதவனைப் போல கேட்டான். உண்மையிலேயே அவ்வளவாகத் தெரியாது. 

‘டேய்ய்ய்ய்ய்...வர்றதுன்னா வா...எனக்கு நேரமாகுது’ கெத்து காட்டினான்.

‘மாட்டிக்க மாட்டோமா?’ என்றதற்கு முறைத்தான். வேறெதுவும் கேட்காமல் எழுந்து லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினேன். 

‘எதுக்கும் நல்ல ஜட்டியா போட்டுக்க’ என்ற போது விளங்கவில்லை. தலையாட்டிக் கொண்டேன். போகும் போதுதான் விளக்கம் கொடுத்தான். ‘ஒருவேளை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஜட்டியோடு அமர வைத்தால் அசிங்கமா இருக்குமுல்ல?’ என்றான். அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்டது. 

‘இதுக்கெல்லாம் போலீஸ் புடிப்பாங்களா?’ என்றேன்.

‘ஆட்டத்தை பார்த்தா புடிக்க மாட்டாங்க...அதுக்கு அப்புறம் ஒரு காரியம் இருக்கு..அதை செஞ்சா புடிப்பாங்க...’ என்று சஸ்பென்ஸ் கொடுத்தான். எவ்வளவுதான் கேட்டாலும் அது என்ன காரியம் என்று சொல்லவில்லை. ஆட்டம் முடிந்த பிறகு இவன் என்ன செய்தாலும் நாம் ஓடி வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அடக்கம் மட்டுமே அமரருள் உய்க்கும்.

தாரமங்கலம் செல்வதற்கான பேருந்தில் ஏறிய போது கூடவே வேறு சில கல்லூரி மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆசாத்தின் நண்பர்கள். அதில் ஒருவன் என்னைப் பார்த்து ‘என்னடா பிஞ்சு ஒண்ணு கூட வருது?’ என்றான். அவமானமாகிவிட்டது. பழுத்துவிட்டேன் என்று நிரூபிக்கவா முடியும்?  

‘கடவுளே எல்லோரையும் ஜட்டியோடு அமர வைத்தால் இவனை மட்டும் அம்மணமாக உட்கார வைக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன். 

தாரமங்கலத்திலிருந்து அந்த ஊர் வெகுதூரம். எட்டு மணிக்கெல்லாம் தாரமங்கலத்தில் இறங்கிவிட்டோம். எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகத்தான் ஆட்டம் ஆரம்பிக்கும் என்று நடக்கத் துவங்கினோம். போய்ச் சேர்ந்த போதும் ஆட்டம் ஆரம்பித்திருக்கவில்லை. அது ஒரு அத்துவானக்காடு. வீடுகள் வெகு தொலைவில் இருந்தன. விசில்கள் பறந்து கொண்டிருந்தன. நூறு அல்லது நூற்றைம்பது பேர்தான் இருந்தார்கள். மதுவும் புகையும் நெடியடித்தன. கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகிக் கொண்டோம்.

மேடைக்கு கீழே குண்டாந்தடியோடு சில ஆண்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ‘ஆட்டத்தின் போது ஏதாச்சும் சில்மிஷம் செஞ்சீன்னா....அந்தத் தடியிலேயே ஒரு போடு போடுவாங்க....’  பிஞ்சு என்றவன் கண்ணடித்தபடியே என்னிடம் சொன்னான். நான் எதற்கு வம்பு செய்யப் போகிறேன்? 

முதன் முதலாக பிட்டுப்படம் பார்த்தது, முதன் முதலாக அந்த வகையறா கதைகளைப் படித்தது, முதன் முதலாக இண்டர்நெட்டில் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பார்த்ததெல்லாம் நினைவில் வந்து போனது. என்னைப் பார்த்து பிஞ்சு என்கிறான். மடையன். 

கூட்டம் பொறுமையிழந்து கொண்டிருந்தது. ‘ஆட்டம் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்கும்’ என்று மேடையில் அறிவித்தார்கள். அதையே திரும்பத் திரும்பச் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். விசில்கள் குறைந்து கெட்டவார்த்தைகள் பறக்க ஆரம்பித்தன. ஏற்பாட்டாளர்களின் வீட்டில் ஒருவர் பாக்கியில்லாமல் வசவில் சிக்கிக் கொண்டார்கள். அத்தனை பேரையும் அந்த மைதானத்தில் திட்டிக் கொண்டிருந்தார்கள். ஏற்பாட்டாளர்களும் எவ்வளவு நேரம்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்?

அவர்களது காதுகளில் ரத்தம் வருவதற்கு முன்பாக விளக்குகள் அணைக்கப்பட்டன. மேடை விளக்குகளோடு சேர்த்து பார்வையாளர்கள் பக்கத்திலிருந்த விளக்குகளும் சில வினாடிகள் அணைந்தன. இருட்டுக்குள் என் தொடையை யாரோ வெறுக்கென கிள்ளி வைத்தார்கள். அநேகமாக அந்தப் பரதேசியாகத்தான் இருக்கும். ஆனால் கேட்கவா முடியும்? கண்களில் நீர் முட்ட பற்களைக் கடித்துக் கொண்டேன். விளக்கு எரிந்தது. சில நொடிகளில் மேடையில் அரைகுறை ஆடையுடன் இரண்டு பேர் ஆடத் தொடங்கினார்கள். ‘பூவெடுத்து வெக்கனும் பின்னால...அத வெக்கிறப்போ சொக்கணும் தன்னால’ மாதிரியான பாடல்கள். நடனம் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்யும் சேட்டைகள்தான் முக்கியம். சேட்டை குறைந்தால் கூட்டம் கத்தத் தொடங்கிவிடும். முதல் நான்கைந்து பாடல்களில் கிளுகிளுப்பே இல்லை.

‘போலாமாடா?’ என்ற போது ஆசாத் கடுப்பாகிவிட்டான். 

‘இதுக்குத்தாண்டா சின்னப்பசங்களை கூட்டிட்டு வரக் கூடாது...க்ளைமேக்ஸ்லதான் நல்லா இருக்கும்’ என்று எதிர்பார்ப்பைக் கூட்டினான். மீண்டும் நரம்புகள் முறுக்கேறின. வாயைத் திறந்தபடியே அமர்ந்திருந்தான். அவன் சொன்னதும் சரிதான். ‘உருகுதே பொன்மேனி’ பாடல் ஒலித்த போது கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன். இப்படியே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். கூட்டமும் ஆடத் துவங்கியது. ஒன்றிரண்டு திலுப்பாமாரிகள் மேடை மீது ஏற முயன்று அடி வாங்கினார்கள். இரண்டரை மணிக்கு ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

‘இந்த நேரத்தில் சேலத்துக்கு பஸ் இருக்காது’ என்றார்கள். 

அதுவரைக்கும் என்ன செய்வது? அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள். ‘தீக்குச்சி டான்ஸ் பார்த்துவிட்டுச் செல்லலாம்’ என்றார்கள். அதுக்குத்தான் போலீஸ் வருமாம். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருண்டை உருளத் தொடங்கியிருந்தது. பார்க்கவில்லை என்று சொன்னால் சின்னப்பையன் என்பது உறுதியாகிவிடும். பார்க்க முடிவு செய்தால் நல்ல ஜட்டி போட்டு வந்ததது நல்லதாகப் போய்விடக் கூடும். வேறு வழியில்லை. மானத்தை காப்பதற்காக கடைசியில் பார்ப்பதாக முடிவு செய்து கொண்டேன்.

அது என்ன தீக்குச்சி டான்ஸ் என்று சொல்லவில்லை பாருங்கள். 

ஒரு கூடாரம் அமைத்திருப்பார்கள். உள்ளே கும்மிருட்டாக இருக்கும். வரிசையில் நிறுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுமதிப்பார்கள். பத்து ரூபாய் கொடுத்தால் ஒரு தீக்குச்சி கொடுப்பார்கள். நிறைய பணம் இருந்தால் எத்தனை தீக்குச்சி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். உள்ளே ஒரு பெண் அமர்ந்திருப்பாள். எப்படி அமர்ந்திருப்பாள் என்பதையெல்லாம் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அவள் அருகில் சென்று தீக்குச்சியை உரசிக் கொள்ளலாம். வெளிச்சம் பரவும். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது சேட்டை செய்தால் அவள் தீக்குச்சியை ஊதி அணைத்துவிடுவாள். அவ்வளவுதான். சோலி சுத்தம். வெளியே அனுப்பிவிடுவார்கள்.

ஆளாளுக்கு ஒரு தீக்குச்சியை வாங்கி வைத்துக் கொண்டு வரிசையில் நின்றோம். சொல்லி வைத்தது மாதிரி என்னையே கலாய்த்தார்கள். ‘வேகத்துல குச்சியை முறிச்சு போடாதடா’ என்றான். அப்பொழுதுதான் விரல்கள் நடுங்கத் தொடங்கின. தீக்குச்சியை சரியாக உரச முடியுமா என்ற சந்தேகம் வந்து ஒட்டிக் கொண்டது. ஒருவேளை எனக்குக் கொடுத்த குச்சி நமுத்துப் போனதாக இருந்தால் என்ன செய்வது? இப்பவே உரசியும் பார்க்க முடியாது. இன்னொரு முறை கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டேன். 

முன்பாகச் சென்றவர்கள் பெரிய ஆட்கள். ஆளாளுக்கு ஐந்து அல்லது பத்துக் குச்சியைக் கொண்டு போயிருந்தார்கள். எங்கள் முறை வருவதற்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகும் போலிருந்தது. நேரமாவது கூட பிரச்சினயில்லை. இவர்களின் கலாய்ப்பைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். செமத்தியாக என்னை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். தீக்குச்சி ஒளி பரவும் அந்த பதினைந்து வினாடிகளை எதிர்பார்த்து இவர்களை பொறுத்துக் கொண்டிருந்தேன்.

இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். இன்னும் நான்கு பேர்கள் எனக்கு முன்பாக நின்றார்கள். எங்கள் குழுவில் நான் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன். ‘நீயே போடா’ என்று சொல்லியிருந்தார்கள். பதற்றம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. இப்பொழுது  எனக்கு முன்பாக மூன்று பேர் ஆகியிருந்தார்கள். எப்படி உரச வேண்டும்? தீக்குச்சியை அவள் முன்பாக எப்படி நகர்த்த வேண்டும் என்றெல்லாம் உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது  கூட்டத்தில் திடீரென பரபரப்பு. ‘போலீஸ் வருகிறது’ என்றார்கள். அவ்வளவுதான் தெரியும். எந்தத் திசையில் ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. குறுக்கே குண்டு குழி எதுவும் வந்துவிடக் கூடாது என ஓடிய ஓட்டத்தில் கால் நிற்கவேயில்லை. ஆசாத் ‘பின்னாலேயே வாடா’ என்று சொல்லியபடியே ஓடினான். மூச்சை தம் கட்டிக் கொண்டு ஓடினேன். எவ்வளவு நேரம் ஓடினோம் என்று தெரியவில்லை. கடைசியில் தாரமங்கலம் ஓடித்தான் நின்றோம். வழியில் எத்தனை நாய் துரத்தல்கள்? எத்தனை கல் குத்தல்கள்? இப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் பொத்துவிடும். 

தாரமங்கலம் போய்ச் சேர்ந்தபோது ஆளாளுக்கு ஒன்றைத் தொலைத்திருந்தோம். ஒருவன் பர்ஸை விட்டிருந்தான். இன்னொருவன் சாவியை விட்டிருந்தான். நான் ஒரு கால் செருப்பை விட்டிருந்தேன். ஆசாத் மட்டும் எதையும் தொலைத்திருக்கவில்லை. அந்த தெனாவெட்டில் ‘போனால் போகுது விடுங்கடா...ஜட்டியை தொலைக்காம வந்தோமே’ என்றான். எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இன்னும் அரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் பேருந்தை எடுப்பார்கள் என்றார்கள். அப்படியே தூக்கம் அள்ளிக் கொண்டது. கனவில் தீக்குச்சிகள் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தன.