Dec 3, 2014

நம்மிடம் தவறே இல்லையா?

பேராசிரியர் சொன்னதை  காதால் கேட்டு அப்படியே எழுதியிருக்கிறேன் என்று முந்தைய கட்டுரையை வாசித்தவர்களில் சிலர் குழப்பிக் கொண்டார்கள். அப்படியில்லை.  ‘எதனால் தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தான தெளிவான புரிதல் நம்மிடமில்லை’ என்பதுதான் அவர் பேசியதன் அடிப்படை. அது சரியான வாதம் என்றுதான் தோன்றியது. 

உதாரணமாக கச்சத்தீவு என்கிற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறேன். ஆனால் கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்று தெரியாது. தமிழக மீனவர்கள் கைது என்று வாசிக்கும் அளவுக்கு பிற மீனவர்கள் ஏன் கைது செய்யப்படுவதில்லை என்று புரிந்ததில்லை. தினத்தந்தியிலும் சன் நியூஸிலும் சொல்லப்படும் செய்திகளை அப்படியே மண்டையில் ஏற்றிக் கொண்டு இலங்கை அத்து மீறுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சில நண்பர்களிடம் பேசினால் அவர்களுக்கும் தெளிவான பதில் இல்லை. ‘நீ ஏன் கண்டவர்களிடம் பேசினாய்? அறிவாளிகளிடம் பேச வேண்டியதுதானே?’ என்று கேட்கக் கூடாது. சாமானியர்களிடம் என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதுதான் நோக்கம். ஆக, பெரும்பாலும் ஒரே மாதிரியான புரிதல்தான்- ‘தவறு முழுக்கவும் இலங்கையிடம்’. இந்தப் புரிதல் எந்தவிதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என்று தமிழகக் கட்சிகள் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இலங்கையின் பண்டாரநாயகாவுடன் நல்லவிதமான உறவைப் பேணிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரும்பாதவர்கள். பெண்மணிகள். இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்பொழுது பண்டாரநாயகாவுக்கு உள்நாட்டில் நிறைய பிரச்சினைகள் உருவாகியிருந்தது. தனது சரிந்து வரும் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக இந்திராவின் உதவியை நாடுகிறார். கச்சத்தீவு இலங்கை மக்களால் செண்டிமெண்டலாக பார்க்கப்பட்ட தீவு. அதன் உரிமையை வாங்கினால் தனது புகழ் மீண்டும் ஓங்கும் என நினைக்கிறார். இந்திராவும் அதற்கு சம்மதிக்கிறார். இந்திய பாராளுமன்றத்தின் ஒப்புதல் எதுவும் பெறாமலேயே இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

ஏற்கனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பு வெகு குறைவு. இதில் இந்த தாரைவார்த்தலின் காரணமாக இலங்கையின் எல்லை கச்சத்தீவு வரைக்கும் நீளத் தொடங்கியது.  பொதுவாக ராமேஸ்வரத்தைச் சுற்றிலும் இருக்கும் கடற்பகுதி ஆழம் குறைவானது. Shallow water. அவ்வளவாக மீன்கள் கிடைக்காது. அதுவுமில்லாமல் கரையிலிருந்து சில கடல்மைல்கள் நாட்டுப்படகுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் விசைப்படகுகளை பயன்படுத்தும் இந்திய மீனவர்கள் கடலுக்குள் வெகுதூரம் செல்கிறார்கள். இந்தப் பயணமானது சர்வதேச கடல் எல்லை (International Maritime Boundary Line) தாண்டி இலங்கையின் கடற்பகுதி வரையிலும் நீள்கிறது.

இப்படி வரும் படகுகள் Trawlers ஐ பயன்படுத்துகின்றன என்பதுதான் இலங்கையின் முக்கியமான குற்றச்சாட்டு. சமீபத்தில் இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கும் இந்தப் பிரச்சினைதான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. வேண்டுமானால் Trawlerகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்கிறோம் என்று தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு இலங்கை மீனவர்கள் சம்மதிக்கவில்லை. மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட  இரண்டு லட்ச மீனவர்கள் இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படும் போது எப்படி ஒத்துக் கொள்வார்கள்?

 தமிழக மீனவர்கள் ‘இந்த மீன்பிடி முறையை நம்பி ஏகப்பட்ட மீனவர்கள் இருக்கிறோம். திடீரென்றெல்லாம் நிறுத்த முடியாது. வேண்டுமானால் இரட்டை மடிப்பு வலையையும், சுருக்கு மடிப்பு வலையையும் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்கிறோம்’ என்கிறார்கள். ஆனால் Trawlers ஐ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் இலங்கை மீனவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். பேச்சுவார்த்தை தடைபட்டுவிட்டது. 

அதே போல, இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கும் தங்கூசி வலையை இலங்கையின் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் விரித்து வைத்திருக்கும் வலைகளை கிழித்துவிட்டு வருகிறது. 

இப்படி நிறைய விஷயங்களைப் பேசலாம். நான் கடற்கரை மாவட்டத்தைச் சார்ந்தவன் இல்லை. மீனவர்களிடையே எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் என் புரிதல் தவறானதாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒன்றை நிச்சயமாக நம்புகிறேன். தமிழக மீனவர்களின் மீதான மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இட்டுக்கட்டிச் சொல்லப்படுவதில்லை. மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட்டவைதான். இந்தக் குற்றச்சாட்டுக்களை தமிழக மீனவர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய மீன்பிடி முறைகளைக் கைவிட முடியாது என்று அவர்கள் மறுப்பதுதான் பிரச்சினையை இழுத்துக் கொண்டு போவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

வலைகள் அறுக்கப்படுகின்றன. கொடூரமான மீன்பிடி முறைகளினால் கடல்வளம் சிதைக்கப்படுகிறது. இலங்கை வாழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இப்படி நிறையச் சொல்ல முடியும். இதைப் பற்றிய பரவலான புரிதல் தமிழகத்தில் உருகாகவே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் அந்தப் பேராசிரியரின் வாதம். இல்லையென்று என்னால் மறுக்க முடியாமல்தான் மேற்சொன்ன விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். கிடைத்த சொற்ப விவரங்களிலிருந்து யோசித்தால் கூட இந்தப் பிரச்சினையை நாம் ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே பார்க்கிறோம் என்று தோன்றியது. அதைத்தான் முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.

இதை தமிழக அரசியல் கட்சிகள் இருநாடுகளுக்கிடையேயான இனப்பிரச்சினையாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. உண்மையில் பிரச்சினை என்பது சிங்களர்களுக்கும் தமிழருக்குமான பிரச்சினையில்லை. ஈழத்தமிழ் மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமான பிரச்சினைதான். மீனவர்களை பகைத்துக் கொண்டால் மிகப்பெரிய வாக்கு வங்கியை இழந்துவிடுவோம் என்பது நம் கட்சிக்காரர்களுக்குத் தெரியாதா என்ன? 

ஆனால் ஒன்று - தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமேயில்லை.