Dec 26, 2014

வேறு என்ன வேலை?

எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் பள்ளி வண்டிக்காக நிற்குமிடத்தில் ஒரு பெட்டிக்கடை இருக்கும். அதில் தினமும் ஒரு ரஜினி படம் வாங்கிக் கொடுத்தால்தான் வண்டியேறுவேன். ஒரு படம் இருபத்தைந்து பைசா. மிரட்டியும் பார்த்தார்கள். அடித்தும் பார்த்தார்கள். ம்ஹூம். நான் திருந்தவேயில்லை. காலையில் வாங்கிக் கொடுக்கும் படத்தை பத்திரமாக வைத்திருக்கிறேனோ அல்லது தொலைத்துவிடுகிறேனோ என்பது இரண்டாம்பட்சம். ஆனால் என்னைத் தவிர வேறு யாரையும் தொடவிடமாட்டேன். இதை ரஜினியுடனான பிணைப்பு என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ரஜினி படம் என்ற பொருளின் (object) மீதான பிணைப்பு. இப்படி ஒவ்வொரு பருவத்திலும் நமக்கு ஏதாவதொரு பொருள் மீதுடன் மிகுந்த பிணைப்பு ஏற்பட்டிருக்கும். யோசித்துப் பார்த்தால் ஜியோமெட்ரி பாக்ஸிலிருந்து, சைக்கிள், டிபன் பாக்ஸ் என்று ஏதாவதொன்றின் மீது பாசம் வைத்திருப்போம். அதெல்லாம் கையில் இருக்கும் வரை தெரியவே தெரியாது. பிரிந்துவிடுகிற சமயத்தில் ஒரு ஃபீல் வரும் பாருங்கள். ப்ச்.

திடீரென்று எதற்கு  செண்டிமெண்ட்?

இந்தப் பிணைப்பு பொருளின் மீது மட்டும்தான் என்றில்லை. ஒரு நிறுவனத்தின் மீதாகக் கூட இருக்கலாம் அல்லவா?. இன்று அப்படியான நாள். இந்த நிறுவனத்தில் கடைசி நாள். டெல் கம்ப்யூட்டர்ஸ். ஆறரை வருடங்களாக இந்த நிறுவனம்தான். எவ்வளவோ பிடிக்காத விஷயங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு ஒட்டுதலான நிறுவனம். இங்கு சேர்ந்த பிறகுதான் திருமணம் நடந்தது, குழந்தை பிறந்தது என்று ஒரு பக்கம், ஆறரை வருடங்களில் நான்கு பதவி உயர்வுகள், நூற்றைம்பது சதவீத சம்பள உயர்வு என்று இன்னொருபக்கம், கிட்டத்தட்ட பதினைந்து நாடுகள் பயணம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்கள் என்பது மற்றொரு பக்கம். இதையெல்லாம் பெருமையடித்துக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. இதுநாள் வரையிலும் இந்நிறுவனத்தை பாராட்டி எழுதியதைவிடவும் கண்டபடி விமர்சித்து எழுதியதுதான் அதிகம்- பெயர் குறிப்பிட்டதில்லை என்றாலும் கூட நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கும். இவ்வளவையும் அனுபவித்துவிட்டு இந்த ஒரு சிறு நன்றியையாவது பாராட்டவில்லையென்றால் தின்ற உப்பு உடம்பில் ஒட்டாது.

இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது நிறைய எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் கிடைத்த வாய்ப்பு. அது இங்குதான் கிடைத்தது. அலுவலகத்தைப் பொறுத்தவரையிலும் Flexible timing. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்ற நாட்கள் இருக்கின்றன. யாருமே கேட்டதில்லை. அதற்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லையென்றால் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து என்னுடைய வேலையை முடித்துவிட்டு அந்த தினம் முழுவதும் வெட்டியாகத் திரிந்திருக்கிறேன். அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிறுவனத்தைவிட்டு ஏன் வெளியேற வேண்டும் என்று கேள்வி கேட்கலாம்தான். 

‘Love your job; but don't love your company. because you may not know when your company stops loving you' என்று சொல்வார்கள். அதைத்தான் அடிப்படையான கொள்கையாக வைத்திருக்கிறேன். என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் இது மற்றொரு பன்னாட்டு நிறுவனம்தான். எல்லா பன்னாட்டு நிறுவனங்களிடமும் கொடுக்கு இருக்கும். எப்பொழுது கொட்டும் என்று தெரியாது. அதனால் நாம் செளகரியமாக இருக்கும் போதே வெளியேறிச் சென்றுவிடுவதுதான் உசிதம் என்று நம்புகிறேன். புதிதாகச் சேருமிடத்தில் நல்ல பெயரை எடுப்பதற்கு இரண்டு வருடங்களாவது தேவைப்படும். அதற்காக பயம் இருந்து கொண்டே இருக்கும். நுணுக்கமாக வேலை செய்யத் தொடங்குவோம். சப்ஜெக்ட் மீதான பிடிப்பு இருந்து கொண்டேயிருக்கும். சப்ஜெக்ட் மீதான பிடிப்பு இருந்தால் போதும்; யார் நம்மை வெளியேறச் சொன்னாலும் வேலை வாங்கிவிடலாம் என்கிற தைரியம் ஒட்டிக் கொள்ளும். கார்போரேட் உலகில் இந்த தைரியம்தான் அவசியம். இந்த தைரியம் இல்லையென்றால் அது மட்டும்தான் பூதாகரமான பிரச்சினையாகத் தெரியும். ‘அய்யோ வெளியே அனுப்பினா எப்படி வேலை வாங்குவது?’ என்று நம்மையுமறியாமல் புலம்ப வேண்டியிருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலையை விட்டுத் தூக்குகிறார்கள் என்பதை எழுதியதன் அடிநாதமான விஷயம் இதுதான். எட்டு, பத்து வருடங்களாக ஒரே நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான செளகரியத்தன்மை வந்திருக்கும். comfort zone. யாரை எப்படி ஏய்த்து வேலை வாங்குவது என்ற சூட்சமம் தெரிந்திருக்கும். அதனால் தங்கள் வேலையை அடுத்தவர்களின் தலையில் கட்டியே சமாளித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியிருப்பதால் சப்ஜெக்ட்டில் எவ்வளவு பிடிப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியானவர்களை வெளியே அனுப்பும் போதுதான் சிக்கலாகிவிடுகிறது. சம்பளமும் அதிகமாக இருக்கும். தங்களது சப்ஜெக்ட்டும் மறந்து போயிருக்கும். 

இத்தனை ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் எப்படி ஏய்ப்பது என்பதைப் பழகியிருக்கிறேன். சப்ஜெக்ட் மறந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சம்பளமும் அதிகரித்துவிட்டது. ஆழ்மனத்தில் மணியடித்தது. இலக்கியப்பூர்வமாகச் சொன்னால் பிரக்ஞை விழித்துக் கொண்டது. வேலையை விட்டுவிட்டேன். புதிய நிறுவனம் எப்படியானதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நல்லதாக இருந்தால் இன்னுமொரு ஆறேழு வருடங்களுக்கு இருக்கலாம். இல்லையென்றால் இரண்டாவது வருடம் இன்னொரு நிறுவனத்தைத் தேடிக் கொள்ளலாம். நக்குகிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன? நக்கிப் பிழைக்கும் கார்போரெட் பிழைப்பு.

வேலை, நிறுவனம் என எல்லாவற்றையும் கூட விட்டுவிடலாம். இந்த லேப்டாப் இருக்கிறதே- நான்கு வருடங்களுக்கு முன்பாகக் கொடுத்தார்கள். அன்றிலிருந்து கங்காரு தனது குட்டியைச் சுமப்பதைப் போல தூக்கிக் கொண்டு சுற்றுவேன். இதை விட்டுவிட்டு எந்த ஊருக்கும் போனதாக ஞாபகம் இல்லை. பயன்படுகிறதோ இல்லையோ- தூக்கிச் சென்றுவிடுவது வாடிக்கையாகியிருந்தது. இது கையில் கிடைத்த நான்கு ஆண்டுகளில்தான் நிறைய தட்டச்சிக் குவிக்க முடிந்தது. சமீபத்தில் தாராசுரம் கோவிலின் பின்புறமாக அமர்ந்து கூட இரண்டு மூன்று பத்தி தட்டச்சு செய்து வைத்திருந்தேன்.  அம்மா, மனைவி என்று எல்லோரும் திட்டிக் கொண்டிருப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பாக ‘உங்க லேப்டாப்தானே உங்களுக்கு முதல் பெண்டாட்டி?’ என்று வேணி சண்டை பிடித்தபிறகு அவள் கண்முன்னால் நல்லபிள்ளையாக நடித்துவிட்டு திருட்டுத்தனமாக பயன்படுத்தத் துவங்கியிருந்தேன். அதுவும் கொஞ்ச நாட்களுக்குத்தான். அதன்பிறகு ‘இவனைத் திருத்த முடியாது’ என்று விட்டுவிட்டாள்.

எங்கள் பக்கத்து ஊரில் ஒரு கார்க்காரர் இருந்தார். வாடைக்கார் ஓட்டுவதுதான் ஜீவாதாரம். அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று பெரிய குடும்பம். தனது திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் போன போது எந்த வசதியும் இல்லை. வாடகை வீட்டில் குடியேறிருக்கிறார்கள். அந்தக் காரை ஓட்டிய வருமானத்திலேயே வீடு கட்டி, பெண்ணையும், பையனையும் படிக்க வைத்து நல்லபடியாக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து எவ்வளவோ செய்துவிட்டார். கடைசி காலத்தில் ஏதோ சில பிரச்சினைகளால் அந்த அம்பாஸிடர் காரை விற்றும்விட்டார். வெகு நாட்களுக்குப் பிறகாக பையன் ‘உங்களுக்கு என்னப்பா வேணும்?’ எனக் கேட்டிருக்கிறார். ‘அந்தக் காரை மட்டும் வாங்கிக் கொடுத்துடுப்பா’ என்று கேட்டாராம். இன்னமும் அவர்களது வீட்டு முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருக்கிறது.

அவர் உழைத்தார்; அவருக்கான வாய்ப்புகள் சரியாக அமைந்தன; அவருக்கு நல்ல நேரம் - இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால் தனது முன்னேற்றத்திற்கு அந்தக் கார்தான் மூலகர்த்தா என்று அவர் நம்புகிறார். அப்படித்தான் நானும். இந்த மடிக்கணினியைத்தான் நினைக்கிறேன். நல்ல எழுத்து; மோசமான எழுத்து என்பதையெல்லாம் காலம் முடிவு செய்யட்டும். முதலில் எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து எதையெல்லாம் எழுத்தாக்க முடியுமோ அதையெல்லாம் இதை வைத்துதான் எழுதத் துவங்கியிருந்தேன். ஒன்றும் மோசமாகிவிடவில்லை. தகுதிக்கு மீறியதான கவனம் கிடைக்கத் துவங்கியது. சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஐந்தாறு வருடங்களை எப்படிப் பார்த்தாலும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த லேப்டாப்பை மூடி அலுவலகத்தில் ஒப்படைப்பதன் வழியாக இந்த வருடங்களை நிறைவு செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருப்பதாகத் தோன்றுகிறது. மூடுவதற்கு முன்பாக இந்தக் கட்டுரையை போஸ்ட் செய்துவிட்டேன். அதைத் தவிர எனக்கு வேறென்ன தெரியும்?