Dec 27, 2014

புத்தகக் கண்காட்சியின் சூப்பர்ஸ்டார்

மாதொருபாகன் பெருமாள் முருகனின் மிக முக்கியமான நாவல். அதை எதிர்த்து பா.ஜ.வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.  நாவலை  தீ வைத்துக் கொளுத்திவிட்டு பெருமாள் முருகனையும் கைது செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.  ‘எழுத்தாளரைக் கைது செய்யக் கோரி போராட்டம்’ என்ற செய்தியைப் பார்த்தவுடன் எந்த எழுத்தாளராக இருக்கும் என்று யூகிக்கத் துவங்கினேன்.  ஜெயமோகன், சாருநிவேதிதா என்றெல்லாம் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன ஆனால் அந்தப் பட்டியலில் பெருமாள் முருகனின் பெயரே வரவில்லை.  அப்படியான எழுத்தாளர் அவர். சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் சாந்தமான மனிதர். அவரது நிழற்படத்தைத்தான் செருப்பால் அடித்து தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் கூட சுரணையே கிடையாது என்பதற்கு இது இன்னுமொரு ஆதாரமான சம்பவம்.  அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் செய்திருக்கிறார்கள்.  புரிதல் உள்ள பா.ஜ.க அபிமானிகள் இது மோசமான புத்தகம் என்று னுமானித்துக் கொள்ள வேண்டியதில்லை. புத்தகத்தை வாசித்துவிட்டு முடிவு செய்யலாம். ஒருவேளை இந்த அமைப்புகளின் சார்பாக ‘இந்தப் புத்தகம் இந்துப் பெண்களை இழிவுபடுத்துகிறது’ என்று தர்க்கரீதியாக நிரூபிக்க முடியுமானால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுதான் சரியான செயல். பெருமாள் முருகன் ஒன்றும் விவாதத்திற்கு பயந்து ஒளிந்து கொள்ளும் மனிதர் இல்லை. அந்த விவாதம் எழுத்து வழியாகவோ அல்லது பேச்சு வழியாகவோ நடக்கட்டும். பிறகு முடிவு செய்யட்டும். 

ஒரு படைப்பை விமர்சிக்க வேண்டுமானால் இன்னொரு படைப்பின் வழியாகத்தான் செய்ய முடியும்.  ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம். விவாதத்திற்கு அழைத்திருக்கலாம்.  தவறு இருக்கிறது என்றால் அதை விவாதத்தின் மூலமாகத்தான் நிரூபித்திருக்கலாம். அந்த விவாதங்களின் வழியாகவே நமது புரிதல்கள்  வெவ்வேறு பரிமாணங்களை எடுக்கும். அதுதான் ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அதைவிடுத்து தடை செய், கைது செய் என்கிற ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது அறிவிலித்தனம் ஆகிவிடாதா? முரட்டுத்தனமான எதிர்ப்பு என்பது நம்மை இருண்ட பாதைக்குத்தான் இழுத்துச் செல்லும். அதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களோ என்று பயமாக இருக்கிறது.

சல்மான் ருஷ்டியை நாடு கடத்த வைத்தவர்களுக்கும், லஜ்ஜாவை எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரினை கொலை செய்வோம் என்றவர்களுக்கும், இன்று பெருமாள் முருகனின் நாவலை தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஒரே குட்டை. ஒரே மட்டை.

நூற்றைம்பது பேர் கலந்து கொண்ட போராட்டத்தில் மூன்று பேர் கூட அந்த நாவலை முழுமையாக வாசித்திருக்க மாட்டார்கள் என்று சத்தியமே செய்யலாம். எவனோ ஒரு அரை மண்டையன் படித்துவிட்டு எதையாவது உளறினால் இதுதான் சாக்கு என்று போராட்டம் நடத்த களமிறங்கியிருப்பார்கள். ஹிந்து நாளிதழில் செய்தி வந்துவிட்டதல்லவா? அவ்வளவுதான்.  இதற்குத்தான் இவ்வளவு அட்டகாசங்களும்.

கொங்கு நாட்டின் வரலாற்றையும் அதன் இண்டு இடுக்குகளையும் அதன் சாதியக் கட்டமைப்புகளையும் தனது எழுத்துக்களின் வழியாக எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாமல் பதிவு செய்து வருபவர் பெருமாள் முருகன். கொங்கு வட்டாரச் சொல்லகராதியை முழுமையாக்கியவர். கொங்குவட்டார வழக்கை தொடர்ந்து இலக்கியத்தில் உலவச் செய்பவர் என எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். இந்தப் போராட்டம் நடத்துபவர்கள் நாமெல்லாம் இந்த வரலாறுகளுக்காகவும் வட்டார இலக்கியத்திற்காகவும் துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறோமா என்று யோசிக்க வேண்டும். அதுசரி. யோசித்திருந்தால் எதற்கு போராட்டம் நடத்தப் போகிறார்கள்?

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல்   நாவலை தீயில் இடுவதும், கைது செய்யக் கோருவதும் ஆகாவழித்தனம். இதை பாசிசம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? 

பெருமாள் முருகன் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஃபேஸ்புக், வலைப்பதிவு, ஃபோன்கால்கள் என்று எதையும் தொடாமல் அமைதியாக இருந்தாலே அடங்கிவிடும். இப்படி மணிகண்டன் மாதிரியான ஆட்கள் எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது என்று "I Support Perumal Murugan" என்று எழுதி பிரச்சினை என்னமோ பூதாகரமாக மாறிவிட்டது போல ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் “பெருமாள் முருகனை கைது செய்யப் போகிறார்களாமே?” என்று தீ அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். தீயை வைத்துக் கொளுத்தியவனையும் திருத்த முடியாது. அந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்பவர்களையும் திருத்த முடியாது என்பதால் “ஏதாவது கோர்ட் கேஸ் வந்தால் நீங்க பார்த்துக்குங்க” என்று பதிப்பகத்தாரிடம் சொல்லிவிட்டு அடுத்த புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிடுவது உசிதம்.

மாதொருபாகனின் தொடர்ச்சியாகத்தான் பெருமாள் முருகனின் அடுத்த இரண்டு நாவல்கள் வருகின்றன என்பதால் அவற்றையும் தடை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 

தமிழக பா.ஜ.கவில் சில முட்டாள்கள் இருந்தாலும்  அறிவாளிகளும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மட்டத்துக்குச் செல்லும் போது இந்தப் பிரச்சினை அடங்கிவிடும். அவர்கள் மட்டத்திற்குச் கொண்டு செல்லாமல் விடுவோமோ? அடுத்த ஒரு நல்ல சப்ஜெக்ட் கிடைக்கும் வரை சமூக வலைத்தளங்களில் பெருமாள் முருகனை புரட்டி எடுத்துவிடுவோம் அல்லவா?

உண்மையிலேயே இந்தப் பிரச்சினையினால் புத்தகத்தின் விற்பனை தூள் கிளப்பும். சென்ற வருடத்தில் அதிகம் விற்பனையான புத்தகங்களுள் பெருமாள் முருகனின் ‘சாதியும் நானும்’ ஒன்று. இந்த வருடமும் பெருமாள் முருகன்தான் டாப் செல்லராக இருப்பார் என்று அந்த திருச்செங்கோட்டு மாதொருபாகன் மீது சத்தியமாகச் சொல்லலாம்.

மாதொருபாகன் ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது.