Nov 27, 2014

வாய்ப்பிருக்கிறதா?

காலையில் ராஜலிங்கம் அழைத்திருந்தார். வழக்கமாக புத்தகங்கள் பற்றியோ அல்லது சினிமா பற்றியோ பேசுவார். இன்று முகேஷ் குறித்து பேச விரும்புவதாகச் சொன்னார்.

முகேஷ் மதுரைக்காரர். நாற்பது வயதைத் தொடக் கூடும். அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மூத்தவளுக்கு ஒன்பது வயது. இளையவனுக்கு ஆறு. ஆரோக்கியமான குழந்தைகள் என்று சொல்ல முடியாது. பிறந்தவுடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஐ.சி.யூவில் இருந்திருக்கிறார்கள். இன்னமும் வலு குறைந்த குழந்தைகளாகவேதான் இருக்கிறார்கள். குழந்தைகளைப் பராமரிக்க நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒரு அங்காடியில் எழுத்தராக இருக்கிறார். அந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் இதுவே கஷ்ட ஜீவனம்தான். 

முகேஷின் மனைவி நர்சரி பள்ளியொன்றி டீச்சர். மாதம் மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கிறது. வேறு என்ன செய்துவிட முடியும்? இருந்தாலும் இதுவரை நல்லபடியாகத்தான் நாட்கள் நகர்ந்திருக்கின்றன. கைக்கும் வாய்க்கும் சரியான ஜீவனம். சொத்தெல்லாம் எதுவும் இல்லை. இருந்தாலும் அழகான குடும்பம்தான்.

ஓடிக் கொண்டிருந்த வண்டியில் பெரிய அடி. முகேஷூக்கு இருதயத்தில் அடைப்பு. கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் அடைப்பு இருக்கும் போலிருக்கிறது. மதுரை அப்பல்லோவில் அனுமதித்திருக்கிறார்களாம். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாய் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். மூன்றாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் முகேஷின் மனைவிக்கு மூன்று லட்சம் என்பது பெரிய தொகை. நண்பர்களிடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் வேலை செய்யும் பள்ளியின் ஆசிரியைகள் கொஞ்சம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம். இப்போதைக்கு மொத்தமாக ஒரு லட்சம் தேறுமா என்றே தெரியவில்லை. ராஜலிங்கம் வருத்தமாகத்தான் சொன்னார். ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டார்.

இதுவரை மருத்துவ செலவுக்கு என்று உதவ முயற்சி எடுத்ததேயில்லை. ராஜலிங்கம் சொல்லிக் கொண்டிருந்த போது ‘அவர் பிழைத்து வந்தால் அவர் குடும்பத்துக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்குமா?’ என்று ஒரு வினாடி யோசித்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என்று தெரியவில்லை. இப்படி நினைத்தேன் என்று சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதானே உண்மை? அப்படித்தானே நினைத்தேன்? எல்லாவற்றிலும் ஒரு பயன் இருக்குமா என்று பார்ப்பதற்கு மனம் பழகியிருக்கிறது. கேடுகெட்ட மனம்.

பிரயோஜனம் என்று எப்படி அளந்து பார்ப்பது? அது ஒரு உயிர். வெற்று தசையாகக் கூடக் கிடக்கட்டும். அந்தக் குழந்தைகளுக்கு தங்கள் அப்பா உயிரோடு இருக்கிறார் என்கிறார் நினைப்பைக் கொடுத்து விட முடியும் அல்லவா? காலம் முழுவதும் அசைவே இல்லாத ஜடமாகக் கூட கிடக்கட்டும். தினமும் தந்தையின் முகத்தை பார்க்கின்ற வாய்ப்பைக் கொடுத்து விடலாம். இளம் பிராயத்தில் தங்களின் தந்தையரை இழந்துவிட்ட குழந்தைகளின் முகம் ஒவ்வொன்றாக வந்து போனது. அதன் பிறகு எதையும் எதிர்மறையாக நினைக்கவில்லை.

முகேஷைக் காப்பாற்றிவிட முடியும். நம்மால் முயன்றதைச் செய்யலாம். இது வெறும் அடைப்புதான். நீக்கிவிட்டால் இன்னும் பல வருடங்கள் அவரால் உழைக்க முடியும். குழந்தைகளைக் கரையேற்றிவிடக் கூடும். 

அந்தப் பெண்மணி தனியாக திணறிக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் அழுது கொண்டிருக்கின்றன. முகேஷூக்கு உங்களால் ஏதாவது உதவ முடியுமா?

ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. பணத்தை அப்பல்லோவின் நேரடிக் கணக்குக்கு மாற்ற முடியுமா என்கிற விவரத்தைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.  யாராவது உதவ விரும்பினால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும். 

vaamanikandan@gmail.com