Nov 27, 2014

அறிவு இருக்கா?

ஊரில் ஒருவர் இருந்தார். நாற்பத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். தனுஷ் மாதிரி ஒரு மகன். பாசக்காரன் ஆனால் அடிக்கடி அப்பாவுக்கும் மகனுக்கு சண்டை வந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டதால் எங்கள் பழைய வீட்டை இரண்டாகப் பிரித்து வாடகைக்கு விட்டிருந்தோம். அதில் ஒன்றில் அந்தக் குடும்பம் வாடகைக்கு இருந்தது. அந்த மனிதருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடி என்றால் முரட்டுக் குடி. மனைவி பாவப்பட்டவர். இந்த மனிதனிடம் தினமும் போராடிக் கொண்டிருப்பார்.

ஊருக்கு வரும் போதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது புகார் வாசிப்பார்கள். அம்மாவுக்கு டென்ஷன் ஆகிவிடும். ‘காலி பண்ணி உடுங்க...அன்னாடம் சண்டை புடிச்சுட்டு..நம்முளுக்கு எதுக்கு வம்பு?’என்பார். ஆனால் பல வருடங்களாக அவர்களேதான் இருக்கிறார்கள். யாரையாவது வீட்டை காலி செய்ய வைப்பது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெங்களூரில் ஒரு மண்டையன் வீட்டில் இருந்தோம். ஏகப்பட்ட டார்ச்சர். குழந்தை கத்தக் கூடாது. சோறூட்டும் போது வாசலில் பருக்கைகள் சிந்தக் கூடாது. காலிங் பெல் அடிக்கக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். கொடுத்த அட்வான்ஸில் இருபதாயிரத்தை பிடித்துக் கொண்டு திருப்பிக் கொடுத்தார். காலி செய்து வரும் போது ‘இந்த மாதிரி ஒரு சைக்கோ கேரக்டரை பார்த்ததேயில்லை’ என்று சொல்லிவிட்டு வந்தேன். 

இந்தக் குடிகாரர் நல்ல மனிதர்தான். பண்பாக பேசுவார். படு சாந்தமாக இருப்பார். குடித்துவிட்டு வந்தால் யாரைப் பார்த்தாலும் ‘இல்லீங்ண்ணா...ஆமாங்ண்ணா’ என்பார். முதன்முறையாக பார்ப்பவர் கள் கலாய்க்கிறார் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவரது குணமே அப்படித்தான். மற்றவர்களிடம் பம்முவார். வீட்டிலிருப்பவர்களிடம் எகிறுவார். இதனால் பையனுக்கும் அவருக்கும் அடிக்கடி தள்ளுமுள்ளு நடக்கும். சென்ற வாரத்திலும் ஏதோ சண்டை வந்திருக்கிறது. ‘உன்னை வெட்டிப் போடுறேன்’ என்று பையன் சொன்னானாம். ‘இந்தா வெட்டு’ என்று அரிவாளை எடுத்து வந்து கொடுத்திருக்கிறார். இப்படியே ஒரு வாரமாக இழுத்துக் கொண்டிருக்கிறது. 

பிரச்சினை என்னவென்றால் பையன் அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறான் என்பது அவருக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதைத் திரும்பத் திரும்ப கண்டித்திருக்கிறார். பையனும் படிப்பதெல்லாம் இல்லை. பத்தாவதோ என்னவோ முடித்துவிட்டு ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான். ‘வேலையைப் பார்க்காமல் என்னடா செல்போன்?’ என்று பறித்து உடைத்துவிட்டார். சண்டை பெரிதாகிவிட்டது.

நமக்குதான் திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் இருக்கிறதே? தினமும் குடித்துவிட்டு வந்து ‘சாகப் போறேன்’ என்று பினாத்திக் கொண்டிருந்தாராம். சாகப் போகிறவன் எந்தக் காலத்தில் சொல்லி விட்டு செத்திருக்கிறான்? மனைவியும் மகனும் சற்று பயப்பட்டிருந்தாலும் தைரியமாகத்தான் இருந்திருக்கிறார்கள். பையனைவிடவும் அந்தப் பெண்மணிக்கு சற்று கவலை அதிகம். இன்னமும் நாற்பதைக் கூட தொடாத வயது. இந்த மனுஷன் ‘வெள்ளைப்புடவை எடுத்து வெச்சுக்க’ என்று மிரட்டிக் கொண்டேயிருக்கிறார். குடிகாரனோ அடிகாரனோ- கல்லானாலும் கணவன் என்கிற வகையறா அந்தப் பெண்மணி. இவன் கைவிட்டுவிட்டு போய்விட்டால் என்ன செய்வது என்கிற குழப்பம்தான்.

இந்தக் குடிகார சமூகத்தில் பெண்கள்தான் உண்மையில்யே பாவப்பட்டவர்கள். அதுவும் மத்தியதர, வறுமையில் வாழும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவன் எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் குழந்தைகளுக்காகவாவது அவனுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் கொடுமைக்காரனாக இருந்தாலும் சமூகத்திற்காகவாவது அவனோடு ஒட்டியிருக்க வேண்டியிருக்கிறது. கணவன் குடிக்கிற அதே வீட்டில் மகன் குடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. ஏகப்பட்ட பேருக்கு குடிப்பது என்பது தினசரி வழக்கமாகிவிட்டது. ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதி இப்படித்தான் தொலைகிறது. அன்றன்றே சம்பாதிப்பதை அன்றன்றே அழிக்கும் ஒரு மோசமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் இப்படியான வழக்கம் இருக்கிறதுதான். சம்பாதிப்பார்கள் அழிப்பார்கள். ஆனால் வயதான காலத்தில் அவர்களது வாழ்க்கையைக் காக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. இந்தியாவில் அந்தச் சூழல் வந்துவிட்டதா என்ன? 

சென்ற ஆண்டு வரைக்கும் கண்ணில்படுபவர்களையெல்லாம் ஓ.ஏ.பி பணம் என்னும் ஆதரவற்றோர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான பட்டியலில் சேர்த்திருந்தார்கள். எனக்குத் தெரிந்தே கூட அரசாங்க அதிகாரியின் அம்மாவெல்லாம் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது அந்த நிதியில் கை வைத்துவிட்டார்கள். அந்தப் பட்டியலிலிருந்து இஷ்டத்துக்கு பெயரை நீக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்தவிதமான ஆதரவும் இல்லாதவர்கள் கூட தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அதைப்பற்றியெல்லாம் எதுவுமே கவலைப்படுவதில்லை. நூறு மீட்டருக்கு அந்தப் பக்கம் பிராந்திக்கடையை திறந்து வைத்துவிட்டு இந்தப்பக்கமாக போலீஸ்காரர்களை நிறுத்தி காசு பிடுங்குகிறது. இவர்களே கடையையும் திறந்து வைப்பார்கள். இவர்களே குடித்துவிட்டு வருபவர்களிடம் ஃபைனும் வசூலிப்பார்கள். தொலையட்டும்.

வீட்டில் குடியிருந்த மனுஷன் பம்ப்செட் கடையொன்றில் வேலை செய்கிறார். சம்பாதிப்பதும் குடிப்பதும் சரியாக இருக்கிறது. வீட்டுக்கு காசு கொடுப்பதெல்லாம் அரிது. இந்த வாரத்தில் குடி அதிகமாகியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக சல்பேட் மாத்திரையை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். தென்னை மரத்துக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள். அதை அக்குளுக்குள் வைத்தாலே உயிர் போய்விடுமாம். சண்டை முற்றிய போது வாழைப்பழத்துக்குள் வைத்து விழுங்கியிருக்கிறார். மனைவியும் மகனும் பதறியிருக்கிறார்கள். பக்கத்து வீடுகளில் யாரும் உதவியதாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் ஏதேதோ வைத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் தாக்குப்பிடிக்கவில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு உயிர் போய்விட்டது.

போலீஸ் விசாரணை வரக்கூடும் என்று அப்பா நினைத்தார். அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்திருந்தேன். இரண்டு நாட்களாக தண்ணீர் கூட அருந்தாமல் மகனும் மனைவியும் கிடந்தார்கள். சொந்தக்காரர்கள் என்று ஒரு மனிதர் இல்லை. அழுகையையும் பசியையும் கண்கள் காட்டிக் கொண்டிருந்தன. ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. ‘குடி புத்தியை மறைச்சுடுச்சு’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தார். வண்டியை எடுத்துச் சென்று இருவருக்கும் பார்சல் சாப்பாடு வாங்கி வந்தேன். இன்று காலை வரையிலும் அது பிரிக்கப்படாமலேயே கிடக்கிறது. இன்னும் பத்து நாட்களில் அவர்கள் தங்களின் அன்றாட நிகழ்வுகளை தொடங்கி விடக் கூடும்தான். ஆனால் தமிழகத்தின் இன்னொரு மூலையில் இன்னொரு மனிதன் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருப்பான். 

சரி விடுங்கள். புத்தாண்டு தினத்துக்கு டாஸ்மாக்கின் டார்கெட் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்.