Nov 28, 2014

இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்?

சில நாட்களுக்கு முன்பு நண்பர் அழைத்திருந்தார். நலம் விரும்பி. மனதில் வஞ்சகம் இல்லாமல் ஆலோசனைகளைச் சொல்வார். நிறைய பேசிவிட்டு ‘சீக்கிரமா ஒரு நாவல் எழுது’ என்றார். அப்படிச் சொல்வதற்கான காரணமும் அவரிடமிருந்தது. ‘அப்போதான் உன்னை எழுத்தாளன் என்பார்கள்’. அவர் சொல்வதும் சரிதான். என்னதான் தினமும் எழுதிக் கொண்டிருந்தாலும் ‘இணையத்தில் எழுதுபவன்’ என்கிற இளக்காரப் பார்வையை தவிர்க்க முடியாது. சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.

அவ்வப்போது இப்படி யாராவது குழப்பி விட்டுவிடுகிறார்கள். இப்படியே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? உருப்படியாக எதையாவது செய்ய வேண்டாமா? எனக்கும் ஆசைதான். தடி தடியாக நாவல்களை எழுத வேண்டும். நிறைய சிறுகதைகளை எழுத வேண்டும். கவிதைகளைத் தொடர வேண்டும். இலக்கியவாதியாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டும். வட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இத்யாதி. இத்யாதி.

ப்ச்.

இவை அத்தனை கொடுக்கும் திருப்தியைவிடவும் வேறு சில காரியங்கள் அதிகமான சந்தோஷத்தை கொடுத்துவிடும் என மனப்பூர்வமாக நம்பலாம்.

நேற்று முகேஷ் பற்றிய பதிவை எழுதிவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டேன். பெங்களூரு வந்து சேர்ந்த போது பதினெட்டு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. துல்லியமாக எவ்வளவு தொகை சேரும் என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் ஒரு லட்சம் ரூபாயை சர்வ சாதாரணமாகத் தாண்டிவிட முடியும் போலிருக்கிறது. பெரும்பாலானவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டிருந்தார்கள். அனுப்பி வைத்திருக்கிறேன். 

விளிம்பில் நிற்கும் ஒரு குடும்பத்துக்கு கையை நீட்டுகிறோம் அல்லவா? அந்த சந்தோஷத்தைவிடவா ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்கிற நினைப்பு அதிக சந்தோஷத்தைத் தந்துவிடும்? இதைச் சொல்வதற்காக எழுத்தை உதாசீனப்படுத்துகிறேன் என்று அர்த்தம் இல்லை. எழுதுகிறவர்கள் எழுதிக் கொண்டிருக்கட்டும். ஆனால் இதைத்தான் எழுத வேண்டும் என்கிற எந்த நோக்கமும் இல்லாமலேயே எழுதிக் கொண்டிருக்க விரும்புகிறேன். 

இப்பொழுது நிறையப் பேர் வாசிக்கிறார்கள். வாசிக்கிறவர்கள் நம்புகிறார்கள். அது போதும். 

பிரபாகரன் என்றொரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘பிரதர் என் கணக்கில் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய்தான் இருக்கிறது. ஆனால் ஆயிரம் ரூபாயைக் கொடுக்க விரும்புகிறேன்’ என்று அதில் ஒரு வரி இருந்தது. சென்ற முறை ‘எனக்கு வேலை எதுவும் இல்லை. அதனால் இவ்வளவுதான் அனுப்ப முடிந்தது’ என்று ஐந்நூறு ரூபாயை அனுப்பி வைத்த சார்லஸின் பெயர் ஞாபகம் வருகிறது. இவர்களுக்கே ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. அத்தனை சிரமங்களையும் தாண்டி எந்த நம்பிக்கையில் உதவுகிறார்கள்? வெறும் பத்து ரூபாயை சட்டைப் பையில் இருந்து எடுக்க வைக்கக் கூட எவ்வளவு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்று யோசிக்கிறேன. இத்தகைய நம்பிக்கையை நாவலினாலும் சிறுகதையினாலும் உருவாக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. வாசிக்கிறவர்கள் ‘இவன் நம்மில் ஒருவன்’ என்று நினைக்க வேண்டும். அப்படியான ஒரு எண்ணத்தை உருவாக்குவதைத்தான் விரும்புகிறேன். அதை நோக்கித்தான் பயணிக்க விரும்புகிறேன்.

தன்னை ஆழமான வாசகர் என்று நம்புபவர் ‘இவன் எழுத்து ஒன்றுமேயில்லை’ என்று சொல்லக் கூடும். அது பற்றி விசனப்படவில்லை. தன்னைத் தீவிரமான எழுத்தாளனாக நினைத்துக் கொண்டிருப்பவர் ‘இவனால் நம் பக்கத்தில் கூட வர முடியாது’ என்று நினைக்கக் கூடும். அதுவும் சந்தோஷம்தான். யார் பக்கத்திலும் நிற்க விரும்பவில்லை. 

புதிய நிறுவனத்தின் நேர்காணலில் கூட ஹெச்.ஆர் பெண்மணி கேட்டார். ‘எதுக்கு உன்னை நம்பி பணம் தர்றாங்க?’.இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது? சிரித்து மட்டும் வைத்தேன். எனக்கே பதில் தெரியாது என்பதுதான் உண்மை.

அவரிடம் அறக்கட்டளை பணிகளைப் பற்றி கொஞ்சம் சொல்லி வைத்திருக்கிறேன். வேலைக்கு சேர்ந்த பிறகு அதையெல்லாம் அவர்கள் கேள்வி கேட்கக் கூடாது அல்லவா? தற்போதைய நிறுவனத்தில் அப்படித்தான் ஆகிவிட்டது. அலுவலகத்தின் மின்னஞ்சலிலிருந்து ஒரு பத்திரிக்கைக்கு நிழற்படத்தை அனுப்பி வைத்திருந்தேன். கட்டுரையை வேறொரு மின்னஞ்சலிலிருந்து முன்பே அனுப்பியிருந்தேன். பிரசுரம் செய்தவர்கள் கட்டுரையின் கீழாக ஜிமெயில் ஐடிக்கு பதிலாக அலுவலக மின்னஞ்சலை பிரசுரித்துவிட்டார்கள். சோலி சுத்தம். விடிந்தும் விடியாமலும் தலையில் குண்டு விழுந்து விட்டது. ethics, compliance என்று ஒவ்வொரு துறை டைரக்டருக்கும் பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது. எதற்கு வம்பு? புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போதே ‘இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லியாகிவிட்டது. 

இதெல்லாம் இருக்கட்டும்.

முகேஷுக்கான சிகிச்சை, செலவு செய்யப்பட்ட தொகை,  நாம் எவ்வளவு தொகை சேகரித்தோம் போன்ற விவரங்களை அடுத்த வாரத்தில் விரிவாகச் சொல்கிறேன். 

அத்தனை பேருக்கும் நன்றி.

உங்களின் பெயர்கள் வழியாக தெய்வத்தினை பார்க்க முடிகிறது என்று சொன்னால் அது ஃபார்மாலிட்டிக்காகச் சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. சத்தியம்.