Nov 30, 2014

பட்டையை கிளப்பிட்டாங்கய்யா

‘கீழ மட்டும் அவன் பேரு இல்லைன்னா அப்படியே X எழுத்தாளனோட எழுத்துதான்’ இப்படியொரு டயலாக்கை சர்வசாதாரணமாக கேட்க முடியும். ஒரு எழுத்தாளனை பிடிக்கவில்லையென்றால் இப்படிச் சொல்லிவிடுவார்கள். தன்னை பெரியவனாகக் காட்டிக் கொள்வதற்கும் கூட இந்த வசனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். போகிற போக்கில் தட்டிவிட்டு போய்விடலாம். மனசாட்சியே இல்லாமல் அடுத்தவனைக் காலி செய்யும் உலகம் இது. அதே போலத்தான் முருக பூபதியின் நாடகம் பெங்களூரில் நடக்கவிருக்கிறது என்று சொன்ன போது ‘அவர் ஒரே நாடகத்தைத்தானே திருப்பி திருப்பி போடுவாரு? டைட்டில் மட்டும்தான் வேற’ என்றார் ஒருவர். இதற்கு முன்பாக முருகபூபதியின் சூர்ப்பணங்கு  நாடகத்தை மட்டும் பார்த்திருக்கிறேன் என்பதால் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. அதே சந்தேகத்தோடுதான் அரங்குக்குச் சென்றிருந்தேன். குகைமரவாசிகள்  என்பது நாடகத்தின் டைட்டில்.

பிரமாதமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனால் நல்ல கூட்டம்.  

மேடை அமைப்பு எதுவும் இல்லை. பள்ளியின் மைதானத்திலேயே தேவையானபடிக்கு மின் விளக்குகளை அமைத்திருந்தார்கள். இரவு கவியட்டும் என்று காத்திருந்தவர்கள் ஏழு மணிக்கு மேலாகத்தான் நாடகத்தை துவக்கினார்கள்.

நாடகம் முடிந்த பிறகு சிலர் புரியவில்லை என்றார்கள். ஒன்றரை மணி நேர நாடகம். ஒரே தடவையில் முழுமையாக புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லைதான். ஆனால் மொத்தமாக நாடகம் பேசுகிற விஷயத்தை அதிக சிரமமில்லாமல் புரிந்து கொள்ள முடிந்தது. குகைகளில் வாழும் மனிதக் கூட்டத்தில் ஆரம்பித்து இன்றைய நிறுவனங்களால் துரத்தியடிக்கப்படும் ஆதி குடிகள் வரையிலும் ஊடாக கார்போரேட் கலாச்சாரம், நுகர்வியல் போன்றவற்றால் சிக்கிச் சீரழியும் எளிய மனிதர்களின் கனவுகளையும், வாழ்வாதாரத்தையும் பேசுகிறது. 

நவீன நாடகத்தை புரிந்து கொள்வது என்பதும் நவீன கவிதையை புரிந்து கொள்வது என்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நாடகத்தின் வழியாக நமது கற்பனைகளுக்கு சிறகு கட்டிக் கொள்ள வேண்டும். உதாரணமாக இந்த நாடகத்தில் ‘நகரத்தின் கழிப்பறையில்தான் நான் பிறந்தேன். அந்தக் கழிப்பறையில் வாழ்ந்த என் அம்மாவை புத்தன் என்பேன்’ என்று ஒரு வசனம் வருகிறது. அவனுடைய அம்மா மட்டும்தான் புத்தனா என்ன? பார்வையாளனின் அம்மாவும் புத்தன்தான். ‘நீங்க சின்னப்பசங்களா இருக்கும் போது வீட்டில் விட்டுட்டு வேலைக்கு போனா திரும்பி வர்ற வரைக்கும் உங்க மேலேயேதான் நினைப்பு இருக்கும்’ என்று அம்மா சொல்லியிருக்கிறார். அப்பொழுது எங்களைப் பார்த்துக் கொள்ள வீட்டில் பெரியவர்கள் இல்லை. நானும் தம்பியும் பொடியன்கள். அம்மா வேலைக்குச் சென்றே தீர வேண்டும். அம்மாவுக்கு எங்கள் மீதான நினைப்பு இருக்கத்தானே செய்யும்? அம்மா எப்பொழுதோ சொன்னது நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நினைவுக்கு வந்தது. என் அம்மாவும் புத்தன் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

நாடகத்தில் மதுவைப் பற்றி பேசுகிறார்கள். காமம் பற்றி பேசுகிறார்கள். காதல் பற்றி பேசுகிறார்கள். அரச பயங்கரவாதம் பற்றி பேசுகிறார்கள், நவீன வாழ்க்கை உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள் பற்றி பேசியிருக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்த நாடகத்தில் நடித்தவர்களின் நடிப்பை பற்றிச் சொல்லியாக வேண்டும். எவ்வளவு வெறி? எவ்வளவு ஆக்ரோஷம்? இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடல் சிலிர்க்கிறது. அந்த அளவிற்கு உருகியிருந்தார்கள். புழுதிக்குள் படுத்து புரள்கிறார்கள். மண்ணோடு மண்ணாக நெளிகிறார்கள். அதே புழுதியை உறிஞ்சுகிறார்கள். தலை, உடல், முகம் என எல்லாம் புழுதி. அந்த புழுதியிலிருந்துதானே நாம் அத்தனை பேரும் வந்திருக்கிறோம்? அந்தப் புழுதியில்தானே நம் தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் உயிரையும் உடலையும் உருக்கிக் கிடந்தார்கள்? அந்தப் புழுதியில்தானே தங்கள் வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை கழித்திருக்கிறார்கள்? அவற்றையெல்லாம் இப்பொழுது மறந்துவிட்டோம். 

நிறுவனங்கள்(Institutions) உருவாக்கியிருக்கும் வலைகளுக்குள் சிக்கிக் கொண்டு நம் தாத்தனும் பாட்டியும் ஓட்டிக் கொண்டிருந்த வெள்ளாடுகளையும், மாடுகளையும் எங்கேயோ தொலைத்துவிட்டோம். புழுதியும் மண்ணும் கைகளில் பட்டால் உடனடியாக சவுக்காரம் போட்டுக் கழுவிக் கொள்கிறோம். நம்மிலிருந்து மண்ணையும் புழுதியையும் கல்லையும் வெற்றிகரமாக அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இல்லையா? 

ஒன்றரை மணி நேரமும் என்னென்னவோ நினைவுகளைக் கீறிக் கொண்டிருந்தார்கள் அந்த நாடகக் கலைஞர்கள்.

பார்வையாளர்களுக்காக நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அதில் அமர விருப்பமில்லை. மண்ணில் அமர்ந்து கொண்டேன். நாடக நடிகர்களின் உடல் மொழியும், அவர்களின் வசன உச்சரிப்புகளும் இன்னமும் கண்களுக்குள்ளேயே இருக்கின்றன. நாடகம் பார்த்துக் கூட அழ முடியுமா என்று நினைத்திருக்கிறேன். ஆனால் முடியும். நேற்றைய நாடகத்தில் ஒரு இடத்தில் கண்ணீர் கசிந்துவிட்டது. அப்படியொரு நடிப்பு மொழியை அவ்வளவு அருகாமையில் பார்க்கிறேன்- முதன் முதலாக.

முருக பூபதியின் குழுவினர் உருவாக்கியிருந்த மேடைக்கான பொருட்கள், நாடகத்தின் இசையெல்லாம் தனித்துவமாகத் தெரிந்தன. நம் சடங்குகளையும், ஒலிகளையும் உடல் மொழியாக்கி நாடகத்தில் திரியவிட்ட முருக பூபதிக்கு நிச்சயம் வாழ்த்துச் சொல்ல வேண்டும். இந்த நாடகத்தை பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த மரா என்ற அமைப்பினருக்கு நாடகங்கள் புதிது இல்லை. நிறையப் பார்க்கிறார்கள். அவர்களே கூட இது மிகப் புதுமையாக இருந்தது என்று சிலாகித்தார்கள்.

இந்த நாடகத்தில் சில குறைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை குறிப்பிடும்படியான குறைகளாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தமிழகத்தின் தென்கோடியிலிருந்து வந்து  மணல்மகுடி குழுவினர் பட்டையைக் கிளப்பிவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையான பாராட்டு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.