Nov 11, 2014

போடா Beggar

ரிலையன்ஸூக்கும் எனக்கும் வெகுநாள் கொடுக்கல் வாங்கல் பந்தம் இருக்கிறது. அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும்.  இழுத்தடித்து வருகிறேன். அவர்களிடம் எனது வீட்டு முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் என எல்லாமும் இருக்கிறது. அவர்களும் சளைக்காமல் கேட்கிறார்கள். நானும் டபாய்த்துக் கொண்டேயிருக்கிறேன். இரண்டாயிரம் ரூபாய்தான். தந்துவிடலாம். ஆனால் ஒரு முறை அவர்களின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்குச் சென்றிருந்த போது ஒரு பெண் கடித்துவிட்டாள். இது அந்தக் கடி இல்லை. வேறு கடி. ‘டேட்டா கார்டை திருப்பியெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது. இது ஒரு பேஸிக் விதி. இது கூடத் தெரியாமல் எதுக்கு வாங்குனீங்க?’ என்ற ரீதியில் எகிறினாள். ‘இந்தப் பொடிசுக்கெல்லாம் வந்த மவுசை பாரு’ என்று அவளது மேலதிகாரியிடம் பேசினேன். பெரிய பலன் இல்லை. ‘சரி எப்படி இரண்டாயிரத்தை வாங்குவீங்கன்னு பார்த்துடுறேன்’ என்று தெனாவெட்டாக பேசிவிட்டு வந்துவிட்டேன். அவர்களிடம்தான் அத்தனை விவரங்களும் இருக்கின்றதல்லவா? இரண்டு நாட்களில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள். ‘வக்கீல் நோட்டீஸ் அனுப்புவோம்’ என்று அதில் மிரட்டியிருந்தார்கள்.

வக்கீல் நோட்டீஸூக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அனுப்புவேன் என்று யாராவது மிரட்டுவார்கள். எப்படியும் ரவுடி ஆகிவிடலாம் என்று வாயைத் திறந்தபடி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு மண்ணும் வராது. அப்படியொரு ராசி. இப்படியே மாதாமாதம் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு முறை ஃபோனில் அழைத்தார்கள். காரணத்தைச் சொன்னேன். எங்கள் மேனேஜரை பேசச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு துண்டித்தார். அதன் பிறகு அழைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பணம் கட்டாதவர்கள் இத்தனை பேரிடம் விசாரித்தேன் என்று கணக்கு காட்ட வேண்டும் போலிருக்கிறது. அழைப்பார்கள். சொல்லும் காரணத்தை பதிவு செய்து கொள்வார்கள். அதன் பிறகு எந்தச் சத்தமும் இருக்காது. மீண்டும் வெகு நாள் கழித்து அதே ராகம். அதே தாளம். என்னிடமிருந்து அதே பல்லவி.

நேற்று வந்த அழைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பிரியங்கா என்ற பெண் அழைத்திருந்தார். ‘நான் சிட்டி சிவில் கோர்ட்டிலிருந்து பேசுகிறேன்’ என்றார். கொஞ்சம் பதறிவிட்டேன். அப்புறம் பேச பேசத் தெரிந்துவிட்டது- சும்மா லுலுலாயிக்கு என்று. எப்படியெல்லாம் கேட்க முடியுமோ அப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தார். ‘அவர்கள் ஏன் அப்படி எரிஞ்சு விழுந்தார்கள்’ என்று கேட்டதற்கு 'Past is past...இப்போ கட்ட முடியுமா முடியாதா?’ என்றார். முடியாது என்று சொல்லிவிட்டேன்.  ‘அதெல்லாம் முடியாது இன்னைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு கூப்பிடுவேன். ரெசிப்ட் நெம்பர் கொடுக்கணும்..இல்லைன்னா உங்க ஹெச்.ஆர் கிட்ட சொல்லிடுவேன்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. 

‘நான் இப்போதான் எட்டாவது படிக்கிறேன். எங்க டீச்சர் கிட்ட வந்து சொல்லுங்க’ என்றேன். சொல்லிவிட்டு ‘புதன்கிழமை கட்டிவிடுகிறேன்’ என்று சொன்னேன்.பயன்படுத்தியதற்கு காசு கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் உண்மையாகவே கட்டிவிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தேன். இந்த விவகாரம் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் அவளுக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லை. நாம்தான் எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கிறோமே. ‘உனக்கு என்ன வயசு?’ ‘எவ்வளவு சம்பளம்?’ ‘எவ்வளவு பவுன் போடுறாங்க?’ ‘எவ்வளவு வசூல் ஆச்சு?’ ‘எவ்வளவு சார் லோன் வேணும்’ என்று ஒரு நாளில் எவ்வளவு முறை எண்களைப் பயன்படுத்துகிறோம்? எண்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு கைகள் உடைந்த மாதிரி ஆகிவிடும். 

‘எவ்வளவு நாள்தான் இப்படியே சொல்லிட்டு இருப்ப?’ என்றார். உண்மையிலேயே என்னிடம் பணம் இல்லை. இன்றைய தேதிக்கு என் கணக்கில் வெறும் இரண்டாயிரத்து தொள்ளாயிரம்தான் இருக்கிறது. அதில் இரண்டாயிரத்தைக் கொடுத்துவிட்டால் இன்னும் இருபது நாட்களுக்கு பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட சிரமமாகிவிடும். ஆறாம் தேதி வாக்கில் கையில் முப்பத்து மூன்றாயிரம் இருந்தது. ஆனால் அதற்கு ஒரு தேவை வந்துவிட்டது. வேறொருவருக்கு கை மாற்றிவிட்டேன். பணத்தை வாங்கியவர் எங்கள் ஏரியாவில் பழைய பேப்பர் வாங்க வருவார். அவரது வீடும் எங்கள் ஏரியாவில்தான் இருக்கிறது. காலி இடத்தில் டெண்ட் அடித்து குடியிருக்கிறார்கள். அவரது பெண் குழந்தைக்கு கிட்னியில் பிரச்சினை. ஆரம்பத்தில் ஏதோ ஒரு மருத்துவமனையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விவகாரம் தெரிந்து ஆனந்த் என்ற மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். ஆனந்த் நல்ல நண்பர். தமிழ் மருத்துவர்தான். நிசப்தம் வழியாகத்தான் அறிமுகம். சோதனைகளை எல்லாம் தன் செலவிலேயே செய்துவிட்டு ‘அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது...எனக்கு எந்த பணமும் வேண்டாம்...ஆனால் மருத்துவமனை செலவுக்கு மட்டும் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்’ என்றார். அவர் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். அதனால் மருத்துவமனைக்கான தொகையைக் கொடுத்துதான் தீர வேண்டும். கர்நாடக அரசின் மருத்துவ உதவித்திட்டத்தில் ஒரு தொகை கிடைத்தது. ஆனால் அப்பொழுதும் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய் வரைக்கும் போதாமல் இருந்தது. அதற்காகத்தான் முப்பதாயிரத்தை அந்த பேப்பர்காரருக்கு கொடுத்துவிட்டேன். அவர் ஊரிலிருந்து முப்பதாயிரத்தை புரட்டிக் கொண்டு வந்திருந்தார். அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. ‘இனி பிரச்சினை இருக்காது’  என்று நேற்றிரவு ஆனந்த் அழைத்துச் சொன்னார். 

பேப்பர்காரருக்கு பணம் கொடுத்தது இதுவரை எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்தால் கோபப்படக் கூடும். இதை விளம்பரத்திற்காகச் சொல்கிறேன் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். வெளிப்படையாகச் சொல்லிவிடும் போது ஒரு திருப்தி கிடைக்கிறது அல்லவா? சொல்லிவிட்டேன். 

இதுதான் உண்மை நிலவரம். அதனால்தான் புதன்கிழமை வரைக்கும் இழுத்தேன். தம்பியிடம் வாங்கிக் கட்டிவிடலாம் என்று யோசித்திருந்தேன். அந்தப் பெண்ணிடம் ‘பணம் இல்லை’ என்று சொன்னால் நம்புவாளா? பண விஷயத்தில் இந்த உலகம் யாரையுமே நம்புவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பெங்களூரில் ஒரு கொலை நடந்திருக்கிறது. பிரஜித் என்கிற மலையாளி பெங்களூரில் மென்பொருளாளர். கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவ்வப்போது நண்பர்களுக்கு கைமாற்றாக பணம் கொடுப்பதும் வாடிக்கை. வட்டி எல்லாம் வாங்குவதில்லை. தேவைப்படும் போது கொடுத்துவிட்டு பிறகு திரும்ப வாங்கிக் கொள்வாராம். அப்படித்தான் மூன்று நண்பர்கள் தலா ஒரு லட்சம் வாங்கிக் கொண்டு தராமல் ஏய்த்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவ்வப்போது தகராறு கூட வந்திருக்கும் போலிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘ஹூடி க்ராஸ் வந்துவிடு...தருகிறோம்’ என்று அழைத்திருக்கிறார்கள். நம்பிச் சென்ற பிரஜித்தை அடித்துக் கொன்றுவிட்டார்கள். ஒரே ஊர்க்காரர்கள். வெகு நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தவர்கள். காரியத்தை முடித்துவிட்டார்கள். 

பணம் என்றால் நண்பர்கள், சொந்தக்காரர்களே நம்புவதில்லை. அந்த ரிலையன்ஸ் பெண் எப்படி நம்புவாள்? ‘போடா பெக்கர்’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாள். ஒரு வினாடிதான். குப்பென்று வியர்த்துவிட்டது.