Nov 12, 2014

இவர்கள் இப்படித்தான்

இங்கெல்லாம் பத்து மாத வாடகையை வீட்டுக்கு அட்வான்ஸாக தர வேண்டும். இங்கு என்றால் பெங்களூரைச் சொல்கிறேன். சென்னையிலும் அப்படித்தானே?. ஹைதராபாத் இந்த விஷயத்தில் பரவாயில்லை. இரண்டு மாதங்களுக்கான வாடகையைக் கொடுத்தால் போதும். இந்த மூன்று ஊர்களையும் ஒப்பிட்டால் ஹைதராபாத் நல்ல ஊர். இந்த அட்வான்ஸ் விஷயத்தில் மட்டுமில்லை. பொதுவாகவே நல்ல மனிதர்கள். பெங்களூர் ஒரு காலத்தில் நன்றாகத்தான் இருந்திருக்கும் போலிருக்கிறது. இப்பொழுது நாசக்கேடாகிவிட்டது. ரெட்டிகள் ஒரு பக்கம் அழிச்சாட்டியம் செய்தால் நம்மவர்களும் சளைத்தவர்களில்லை. அதேபோல கன்னடக்காரர்களையும் லேசில் விட்டுவிட முடியாது. ரெட்டிகளுக்கு தாங்கள் காசுக்காரர்கள் என்ற பந்தா என்றால் கன்னடக்காரர்களுக்கு ‘ இது எங்க ஊர்’ என்கிற கெத்து உண்டு. ‘இவனுக பிழைக்க வந்தவனுகதானே?’ என்ற இளக்காரமும் உண்டு. தமிழர்களைப் பற்றித்தான் தெரியுமே. ஈகோ. முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். ஆனால் பொதுவாக பார்த்தால் தெலுங்குக்காரர்களையும், தமிழர்களையும் விட கன்னடக்காரர்கள் ஒரு படி உசத்திதான். இப்படி எல்லாவற்றையும் பொதுப்படையாக  சொல்லிக் கொண்டே போக முடியாதுதான். ஆனால் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

லே-அவுட்டில் செடிகளை நட்டிருந்தார்கள். ஒரு ஆட்டுக்காரர் வந்து கொக்கியில் வளைத்து தனது ஆட்டுக்குட்டிகளுக்கு தின்னக் கொடுத்தார். ‘என்னங்க இப்படி செய்யறீங்க?’ என்று ஒருவர் கேட்டதுதான் மிச்சம். வாட்டி எடுத்துவிட்டார். ‘நீ எங்க வேணும்ன்னாலும் சொல்லிக்க...நான் அப்படித்தான் கொடுப்பேன்’ என்று கட்டுக்கு நிற்கிறார். எங்கள் ஊரில் இந்த உரிமை கூட இல்லையா? என்கிற ரீதியில் கத்தத் துவங்க கேட்டவர் அடங்கிக் கொண்டார். அடுத்த முறை குடியிருப்புவாசிகளின் கூட்டத்தில் இந்தச் சண்டையைப் பற்றி பேச்சை எடுத்தார். உள்ளூர்வாசிகளிடம் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று அமுக்கிவிட்டார்கள். அவ்வளவுதான். முக்கால்வாசி செடிகள் மக்கி மண்ணோடு போய்விட்டன.

ஆட்டுக்காரன் மாட்டுக்காரன் என்றுதான் இல்லை. எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு ஐடிக்காரனை எதிர்வீட்டில் குடி வைத்திருந்தார்கள். வீட்டின் உரிமையாளர் தமிழ்நாட்டுக்காரர். ஓனருக்கு ஒற்றை மாட்டு வண்டி குடித்தனம். அவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார். நகையெல்லாம் விற்று கடனை வாங்கி வீட்டை கட்டி முடித்திருக்கிறார். வாடகை பதினான்காயிரம் ரூபாய். சம்பளத்தை கடனுக்கு கொடுத்துவிட்டு இந்த பதினான்காயிரத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. உரிமையாளருக்கு இரண்டு குழந்தைகள். ஐந்தாவது வரைக்கும் சுமாரான பள்ளியில் படிக்கட்டும் என்று விட்டிருக்கிறார். சமாளிக்க வேண்டுமல்லவா? கஷ்ட ஜீவனம்தான்.

குடி வந்தவர் கன்னடக்காரர். பெங்களூரின் வேறொரு ஏரியாவில் சொந்த வீடு இருக்கிறது. அங்கு பக்கத்திலேயே சரக்குக் கடையைத் திறந்துவிட்டார்கள். குடி வந்தவருக்கு அவருக்கு வயது வந்த பெண்கள் மூன்று பேர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் கணக்கு தவறாகிவிட்டது. அந்த மூன்று பேரில் ஒருவர் மற்ற இரண்டு பெண்களுக்கு அம்மாவாம். ஆக மூன்று இளம் பெண்கள் இருக்கிறார்கள் என்பதால் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டார்கள். அவர்கள் குடிவந்ததிலிருந்தே எனக்கு பக்தி அதிகமாகிவிட்டது. இனி எதிர் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் வயது பெண்கள் குடி வரக் கூடாது என்று வெகுநாட்களாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஜீன்ஸூம் டீ சர்ட்டும் அணிந்திருக்கிறார்களே என்று செய்தித்தாள் படிக்கிற பாவ்லாவுடன் கூட வெளியே வர முடிவதில்லை. மனசாட்சியே இல்லாமல் அங்கிள் என்று அழைத்துவிடுகிறார்கள். ஆண்டவனும் கருணையே இல்லாதவன் தான். இருக்கிற முடியையெல்லாம் பெருமொத்தமாக பறித்துக் கொண்டிருக்கிறான் படுபாவிப்பயல்.

அது தொலையட்டும்.

குடி வந்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. காலி செய்வதாகச் சொல்லிவிட்டார்கள். வீட்டு உரிமையாளரை விட எனக்கு வருத்தம்தான். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. என்னவோ காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் புருடா காரணங்கள். எங்கள் பகுதியில் யாருமே வாடகைக்கு வருவதில்லை. ஆனாலும் தயங்காமல் புதுப்புது வீடுகளாகக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அதுவும் எப்படி? மூன்றரை செண்ட் இடத்தில் எட்டு வீடுகள். கிட்டத்தட்ட அத்தனை வீடுகளிலும் ‘டு லெட்’ பலகை தொங்குகிறது. பத்தாயிரம் ரூபாய் வாடகை சொல்லிக் கொண்டிருந்த வீடுகள் இப்பொழுது எட்டாயிரத்துக்கே கிடைக்கும் போலிருக்கிறது. இருந்தாலும் யாரும் சீண்டுவார் இல்லை. இத்தனை வீடுகள் இருப்பதால் இந்தக் கன்னடக்காரர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு இன்னொரு வீட்டை பிடித்துவிட்டார்கள். புது வீட்டின் உரிமையாளரும் கன்னடக்காரர். கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.

இனி எதிர் வீட்டுக்காரருக்கு பெரும் சிரமம் ஆகிவிடும். இவர்கள் கொடுக்கும் வாடகையில்தான் வீட்டுச் செலவுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுதெல்லாம் யாருமே வீடு கேட்டு வருவதில்லை. என்ன செய்வது? பெரும் குழப்பம். இப்படியெல்லாம் பாதியில் போனால் இரண்டு மாத வாடகையாவது பிடித்துக் கொண்டுதான் தருவார்கள். இவர் பயந்தாங்கொள்ளி. ‘ஒரு மாத வாடகையை பிடித்துக் கொள்கிறேன்...பெய்ண்ட் செய்யணும்’ என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான். அந்த கல்லூரி சிட்டுகளின் அம்மா குதித்துவிட்டார். அவர் எகிறிக் கொண்டிருக்கிறார் என்று அம்மா சொன்ன போது நம்பவேயில்லை. அது எகிறிக் குதிக்கும் முகமேயில்லை. அவசர அவசரமாக ஓடிப் பார்க்கிறேன். அது சாதாரண எகிறல் இல்லை. கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது. ‘பத்து பைசாவை எடுத்தா கூட நடக்கிறதே வேற’ என்று சொல்லிவிட்டு தான் குடியிருந்த வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு சாவியை எடுத்து கையில் வைத்துக் கொண்டார். சினிமாவாக இருந்தால் இந்த ஸீனில் சாவியை இடுப்பில்தான் செருகியிருக்க வேண்டும். ஆனால் இது ரியல். சுடிதார் அணிந்திருந்தார். இடுப்பில் சொருகுவது சிரமம் என்பதால் கைகளில் சுழன்று கொண்டிருந்தது. 

‘அக்ரிமெண்ட் இருக்குல்ல?’ என்று எதிர்வீட்டுக்காரரிடம் யாரோ ஒருவர் கேட்டார். கேட்டவர் சிக்கிக் கொண்டார். 

‘கேஸ் போடுவீங்களா? போடுங்க...அதுவரைக்கும் சாவி என்கிட்டதான் இருக்கும்’ என்கிறார். 

‘கவுன்சிலர்கிட்ட போறீங்களா? எம்.எல்.ஏகிட்ட போறீங்களா?...போங்க நான் மினிஸ்டர்கிட்ட போறேன்’ என்கிறார். இந்த பதினான்காயிரத்துக்கெல்லாம் அனந்தகுமார் பஞ்சாயத்துக்கு வருவாரா என்று தெரியவில்லை. அவர்தான் எங்கள் தொகுதி எம்.பி. நம் அஞ்சாநெஞ்சனின் துறையை இப்பொழுது அவர்தான் வைத்திருக்கிறார். வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்கிறார் என்று அர்த்தம்.

ஆயிரம் தலைவாங்கிய அந்த அபூர்வ சிந்தாமணி ‘இது கன்னட தேசம்தானே?’ என்று துணைக்கேள்வி வேறு கேட்கிறார். இந்தக் கேள்வி போதாதா? 

எதிர்வீட்டு உரிமையாளர் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்துக் கொண்டார். ஓசூரிலிருந்து இருபது கிலோமீட்டர்தான். இருந்தாலும் வேறு மாநிலம் வேறு மாநிலம்தானே? யாரும் எதுவுமே பேசவில்லை. அவர் கேட்டது போலவே பத்து பைசா குறைவில்லாமல் எடுத்து வந்து கொடுத்துவிட்டார். 

எதிர் வீட்டில் இரண்டு மூன்று வாரங்களாக ‘டு லெட்’ பலகை கண்ணில்படுகிறது. காகம் குருவி கூட எட்டிப்பார்ப்பதில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரோ வந்து வீடு கேட்டார்களாம். கொடுக்க முடியாது என்று நாசூக்காகச் சொல்லிவிட்டு எங்களிடம் ‘இனிமேல் கன்னடக்காரர்களுக்கு தரவே மாட்டேன்’ என்று சொல்கிறார். வாடகை வரவில்லையென்றால் வெகு சிரமம்தான். ஆனாலும் அதற்காக அவமானப்பட முடியாதல்லவா? முதல் பத்தியில் சொன்னது போல இப்படி பெருமொத்தமாக எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே போக முடியாதுதான். ஆனால் இப்படியும் இருக்கிறார்கள்.

நேற்று அந்த அம்மாவையும் மகளையும் பார்த்தேன். எந்தச் சங்கடமும் இல்லாமல் அதே சாலையில் ஜர்ர்ர்ரென்று வண்டியில் போகிறார்கள். ஆமாம் ஜர்ர்ர்ரென்றுதான்.