Nov 5, 2014

தூக்கிடுவீங்களா?

வாசு என்கிற தெலுங்கு நண்பர் ஹைதராபாத்தில் பழக்கம். ஒரே அறையில் தங்கியிருந்தோம். என்னைவிட பத்து வருடங்களாவது மூத்தவர். இப்பொழுது அநேகமாக நாற்பதைத் தொட்டிருப்பார். சுரங்க பொறியியல் (Mining) முடித்துவிட்டு ஒடிசாவில் பணியில் இருந்தார். அது ஒரு கொடுமையான வேலை. வெறும் இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய்தான் சம்பளம். பிழிந்து எடுத்துவிடுவார்கள். இந்தச் சொற்ப சம்பளத்துக்கு யார் பெண் தருவார்கள்? முப்பதைத் தாண்டியும் திருமணமாகியிருக்கவில்லை. பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் வேலையை துறந்துவிட்டு மென்பொருள் Testing சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலையும் வாங்கிவிட்டார். ஒரு வருடத்திற்கு பிறகு பெண் தேடத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில்தான் நண்பர்களாகியிருந்தோம். விஜயவாடா பக்கத்தில் ஒரு கிராமம். படித்துக் கொண்டிருந்தாள். வசதி இல்லாத குடும்பம். திருமணத்தை முடித்துக் கொண்டு படிக்கட்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவளது படிப்புச் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக வாசு உறுதியளித்திருந்தார். 

திருமணத்திற்குச் சென்றிருந்தோம். மிக எளிமையான திருமணம். மொத்தமே ஐந்நூறு பேர்தான் இருப்பார்கள். பொதுவாக ஆந்திராக்காரர்கள் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்துவார்கள். ஆனால் வாசுவுக்கும் அது சாத்தியமில்லை. பெண் வீட்டாருக்கும் அது சாத்தியமில்லை. திருமணம் முடிந்து பத்து நாட்கள் கழித்து வாசு எங்கள் அறைக்கே வந்துவிட்டார். அவரது மனைவி அங்கேயே இருந்து கொண்டார். படிப்பு முடியும் வரை இப்படித் தொடரப்போவதாகச் சொல்லியிருந்தார்.

நல்ல மனிதர். அதிர்ந்து பேசிக் கூட கேட்டதில்லை. அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் பெரிய இடி ஒன்றை இறக்கிவிட்டார்கள். வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். அலுவலகம் முடிந்து நாங்கள் திரும்பிய போது அறையில் கதறிக் கொண்டிருந்தார். பத்து மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறார். பத்து இருபதுக்கெல்லாம் காரியம் முடிந்துவிட்டது. அறைக்குள் அழைத்துச் சென்ற சில தாள்களில் கையொப்பம் பெற்றுக் கொண்டு அந்த மாதத்திற்கான சம்பளத்தை மட்டும் காசோலையாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். எந்த முன்னறிவிப்பும் இல்லை. ஒரு காரணமும் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஆட்டுத் தலையை வெட்டுவது போலத்தான்.

அவரது முகம் வீங்கிக் கிடந்தது. கையில் பணம் துளி கூட இல்லை. திருமணமே சேமிப்பையெல்லாம் உறிஞ்சிவிட்டது. அடுத்த மாதத்திற்கு என்ன செய்வது? எப்படி மனைவியிடம் சொல்வது? அவளைப் பெற்றவர்களிடம் என்ன பேசுவது? அவரது எந்தக் கேள்விக்கும் எங்களிடம் பதில் இல்லை. சொல்லப் போனால் அவருக்கு நிகழ்ந்தது எங்களில் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். அதன் பிறகு இப்படி வேலையை இழந்தவர்களைப் பார்ப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்றாலும் வாசுவைத்தான் முதன் முதலாக பார்த்தேன் என்பதால் மறக்கவே முடிவதில்லை.

எதனால் பெருநிறுவனங்கள் இப்படி கருணையே இல்லாமல் நடந்து கொள்கின்றன? குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அவகாசம் கொடுக்கலாம் அல்லவா? இதையெல்லாம் கேட்டால் சில்லரைத்தனமான காரணங்களை அடுக்குவார்கள். அவகாசம் கொடுத்தால் இருக்கிற தகவல்களையெல்லாம் திருடிக் கொள்வார்கள் என்பார்கள். சங்கம் அமைத்து போராடுவார்கள் என்பார்கள். நிறுவனங்களுக்கு இந்தச் சிக்கல் எதுவுமே இருக்கக் கூடாது. தேவையிருக்கும் வரை வைத்திருப்பார்கள். தேவை முடிந்தால் சொற்ப பணத்தைக் கொடுத்து வெளியே தள்ளி கதவைச் சாத்திவிடுவார்கள். வேசிக்கு இருக்கும் மரியாதை கூட இல்லை.

அரசாங்கத்தின் கூற்றுப்படி இவை Sunshine நிறுவனங்கள். அதாவது வளரும் நிறுவனங்களாம். இந்நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியடைய வேண்டுமென இந்த அரசாங்கங்கள் சலுகைகளை அள்ளி வீசியிருக்கின்றன. தொழிலாளர் நலத்துறை போன்ற அரசு சார்ந்த அமைப்புகளால் இந்நிறுவனங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. சம்பள விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. அலுவலகத்திற்குள் நடக்கும் விவகாரங்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை. ஊழியர்கள் சங்கம் எதுவும் அமைக்க முயன்றால் நசுக்குவதற்கான உரிமை உண்டு. யாரை வேண்டுமானாலும் காரணம் சொல்லாமல் துரத்தியடிக்க முடியும். எக்ஸெட்ரா. எக்ஸெட்ரா.

டெக்னிக்கலாகச் சொன்னால் Industrial Employment(Standing Orders)Act,1946 லிருந்து விதிவிலக்கு. கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களாக இந்த விதிவிலக்கு அமலில் இருந்ததால்தான் சர்வசாதாரணமாக ஹெச்.ஆர் பெருமக்கள் கத்தியைச் சுழற்றிக் கொண்டிருந்தார்கள். சிக்கினால் தலை துண்டுதான். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்த போது இந்த விதிவிலக்கு நீக்கப்படும் என்றுதான் பேசிக் கொண்டார்கள். ஆனால் அப்படி நடக்கவிட்டுவிடுவார்களா? நிறுவனங்களின் சார்பில் பெரிய லாபி நடந்ததாகச் சொன்னார்கள். அதனால் ஜனவரி 2014லிருந்து மேலும் ஐந்தாண்டுகளுக்கு இந்த விதிவிலக்கை நீட்டிப்பு செய்துவிட்டார்கள். நீட்டிப்பு செய்தாலும் சில முக்கியமான நிபந்தனைகளை அரசாங்கம் விதித்திருக்கிறது.

பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும், ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஒரு குழு செயல்பட வேண்டும் என்பதோடு சேர்த்து யாரை வேலையைவிட்டு நீக்குவதாக இருந்தாலும் அது பற்றிய விவரங்களை தொழிலாளர் நலத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற முக்கியமான நிபந்தனையையும் விதித்திருக்கிறார்கள். நேற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தியைப் படிக்கும் வரைக்கும் இந்த நிபந்தனைகள் பற்றிய விவரம் நிறையப் பேருக்கு தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

தனது பெண் பணியாளர் ஒருவரை பெங்களூர் நிறுவனம் துரத்தியடித்திருக்கிறது. வழக்கமாக அறைக்குள் அழைத்து ஒரு தொகையைக் கொடுத்து சில தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவார்கள். அந்தப் பெண் கையொப்பம் எதுவும் போட முடியாது என்று சொல்லியிருக்கிறாள். ‘நீ போடாவிட்டால் போ’ என்று செக்யூரிட்டியை அழைத்து அவளை வெளியேற்றச் சொல்லியிருக்கிறார்கள். ‘இவளால் என்ன செய்துவிட முடியும்’ என்கிற தைரியம். அந்தப் பெண் துணிச்சலானவள் போலிருக்கிறது. நேராக காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துவிட்டாள். கடந்த ஆண்டுகளில் தனது ரேட்டிங் நல்லபடியாக இருந்தது என்றும் காரணமேயில்லாமல் வலுக்கட்டாயமாக துரத்தியடித்தார்கள் என்கிற ரீதியிலான புகார். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தாகிவிட்டது. பிறகு மகளிர் ஆணையத்தின் கதவைத் தட்டியிருக்கிறாள். விசாரணை தொடங்கியிருக்கிறது. இதனிடையே மூன்று முறை அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்கள் நிறுவனத்தால் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் மன உளைச்சல் அடைந்ததாகவும், மருத்துவச் செலவு எகிறிக் கொண்டிருப்பதாகவும் தொழிலாளர் நலத்துறையையும் அணுகியிருக்கிறாள். கடைசியில் எல்லாமுமாகச் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு லட்ச ரூபாயை அந்தப் பெண் கோரியிருக்கிறாள். பத்தரை லட்சம் தருவதற்கு நிறுவனம் சம்மதித்திருக்கிறது. இரு தரப்பும் ஒத்துக் கொண்டதால் அவள் தனது புகார்களை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போகிறாளாம்.

சில ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் அவ்வளவு சீக்கிரம் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டுத் துரத்திவிட முடியாது. அரசாங்கத்திடம் தகவல் தெரிவித்து ஒரு மாத காலத்திற்கு முன்பாகவாவது ஊழியருக்கு அவகாசம் தர வேண்டும். குறைந்தபட்சம் இது கூட இங்கு இல்லை. அவனவன் நாற்பது வயதில் வீட்டுக்கடன், குழந்தைக்கு படிப்புச் செலவு, பெற்றவர்களுக்கு மருத்துவச் செலவு, தனக்கு எட்டிப்பார்க்கும் நோய்க்களுக்கான சிகிச்சைச் செலவு என சிக்கிக் கொள்ளும் தருணத்தில் எந்த யோசனையுமில்லாமல் ‘போய் வேற இடம் பார்த்துக்க’ என்று சொல்வது எவ்வளவு பெரிய அதிகார துஷ்பிரயோகம்? வாசு போன்ற அப்பாவிகள் கதறிக் கொண்டிருப்பார்கள். அவரைவிட பலவீனமானவர்கள் இன்னும் மோசமான முடிவுகளை எடுக்கக் கூடும்.

இந்தப் பிரச்சினையில் முடிவு எட்டப்பட்டதன் காரணமாக அவள் புகார்களை வாபஸ் பெற்றுக் கொண்டாள். அதனாலோ என்னவோ பிரச்சினை பற்றிய முழுவிவரமும் வெளியிடப்படவில்லை. நிறுவனத்தின் பெயர் கூட வெளியில் சொல்லப்படவில்லை என்பதால் இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிவிடும் என்றெல்லாம் நம்பவில்லை. ஆனால் குறைந்தபட்சம் நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கும். தொழிலாளர் நலத்துறைக்கு கமுக்கமாக தகவல் அனுப்பிவிடுவார்கள் என்றாலும் இப்படியான பிரச்சினைகளில் ஓரளவுக்கு திருப்தியான பணத்தைக் கொடுத்தால் கையெழுத்திட்டுவிட்டு வந்துவிடலாம். நிறுவனம் நம்மை ஏமாற்றுவதாகத் தெரிந்தால் துள்ளிப்பார்க்கலாம் போலிருக்கிறது. 

எப்படியோ தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரிகிறது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.