Oct 22, 2014

எனர்ஜி எங்கேயிருந்து கிடைக்கிறது?

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ‘உங்களின் முகவரி கொடுக்க முடியுமா?’ என்று ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பிரவீன் குமார். சென்னையில் இருக்கிறார். இப்படியெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் கேட்டால் தயக்கமாகத்தானே இருக்கும்? இரண்டு பேர் வந்து அடித்துவிட்டுப் போகுமளவிற்கு நானெல்லாம் வொர்த் இல்லை என்ற நம்பிக்கையில் கொடுத்திருந்தேன். அடுத்த மூன்று நாட்களில் ஒரு பார்சல் வந்திருந்தது. வெடிகுண்டா அனுப்பியிருக்கப் போகிறார்? பிரித்துப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ இரண்டு பாகங்கள். இரண்டையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான பக்கங்கள். நெகிழ்ந்துவிட்டேன். இருக்காதா பின்னே? நள்ளிரவில் எழுந்து தண்ணீர் குடிக்க வரும் போதெல்லாம் அம்மா கத்தாத நாளே இல்லை. ‘விடிய விடிய முழிச்சுட்டு...சாமக்கோழி மாதிரி..போய் தூங்கு’ என்று மங்கல வாழ்த்து வாங்கியே தீர வேண்டும். டாக்டரை தனியாகச் சந்தித்து தூக்க மாத்திரையின் அளவை துளி அதிகமாக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

இந்தப் புத்தகங்கள் கூரியரில் வந்திருந்த போது எனக்கு பெருமை தாங்கவில்லை. ‘சும்மா அனுப்பி வைப்பாங்களா? கஷ்டப்பட்டாத்தான் கவனிப்பாங்க...உங்களுக்கு யாராச்சும் 100 ரூபாய்க்கு புக் அனுப்பி வைக்கட்டுமே...காதை வட்டம் போட்டு அறுத்துக்குறேன்’ என்று பீலா விட்டுக் கொண்டு திரிந்தேன். உள்ளுக்குள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. முந்தாநாள் இரண்டு மணிக்கு அலைந்து கொண்டிருந்த போது எதுவும் கண்டுகொள்ளவில்லை. இது போதும்.

இன்று ஒரு தகவல் புத்தகத்தைdial for books இல் கேட்டால் வாங்கிக் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.  அட்டகாசமான புத்தகம். நாவலைப் போலவோ அல்லது சிறுகதைத் தொகுப்பை போலவோ தொடர்ந்து மண்டியைப் போட்டுக் கொண்டு படித்து முடிக்க வேண்டியதில்லை. அலுவலகத்தில் அல்லது வீட்டில் மேசை மீது வைத்துக் கொள்ளலாம். பசிக்கும் போது சமையலறைக்குள் புகுந்து முந்திரியையோ அல்லது மிக்சரையோ அள்ளி வாய்க்குள் போட்டுக் கொள்வது போல ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டிப் பார்க்கலாம். 

தென்கச்சியாரின் கதைகளைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கிட்டத்தட்ட அனைவருக்குமே பரிச்சயமான கதை சொல்லிதான். அவரது வார்த்தைகளை அப்படியே அச்சாக்கியிருக்கிறார்கள். அவர் பேசுவது போலவே இருக்கிறது. எனர்ஜி டானிக் மாதிரி அவ்வப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

எனர்ஜி டானிக் என்றவுடன் இன்னொரு நண்பரின் பெயர் நினைவுக்கு வருகிறது. திருப்பதி மகேஷ். எம்.ஏ படித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில இலக்கியம். அதோடு ஒரு வலைப்பதிவும் எழுதுகிறார். தான் நினைப்பதை எழுத்துப் பிழைகளோடு எழுதி சில நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் பிழைதிருத்தி பதிவேற்றிவிடுகிறார்கள். மகேஷே கூட பிழை திருத்திவிடலாம்தானே? அது சாத்தியம் இல்லை. மகேஷூக்கு பார்வையில்லை. குழந்தையிலிருந்தே அப்படித்தான். மகேஷின் தாய்மொழி தெலுங்கு. பக்காவான திருப்பதிக்காரர். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் சென்னையில் படித்திருக்கிறார். அப்படித்தான் தமிழ் மொழி பரிச்சயம். 

மகேஷ் நிறைய வாசிக்கிறார். தனது கணினியில் வாசித்துக் காட்டும் மென்பொருளை நிறுவியிருக்கிறார். அதுவே படித்துக் காட்டிவிடுகிறது. அதனால் வாசிப்பதில் சிரமம் எதுவும் இல்லை. எழுதுவதில்தான் சிரமம். எந்த இடத்தில் ‘ந’ ‘ண’ ‘ன’ பயன்படுத்த வேண்டும் என்று குழப்பமாக இருக்கும் என்பார். ஆனால் நண்பர்களின் உதவியால் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டுரையில் ‘படம் பார்த்தேன்’ என்று எழுதியிருந்தார். நாசூக்காக கேட்டேன். ‘கேட்கிறதுதான் சார்..படம் கேட்டேன்னு எழுதினா வித்தியாசமா இருக்கும்ல...அதான் பார்த்தேன் என்று எழுதினேன்’ என்றார். வாயடைத்துப் போய்விட்டது.

சமீபத்தில் ஒரு நண்பர் ‘எழுதித்தான் ஆக வேண்டுமா?’ என்று கேட்டார். இப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது சில வினாடிகள் சலனமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தச் சலனங்களை எல்லாம் தாண்டி வருவதற்கு மகேஷ் போன்றவர்களைத்தான் ரோல் மாடலாக வைத்துக் கொள்கிறேன். இவர்கள்தான் நம்பிக்கையூட்டிகள். சமீபமாக மனம் சோர்வடையும் போதெல்லாம் மகேஷின் எழுத்துக்களை வாசிக்கிறேன். அதில் இருக்கும் உள்ளடக்கம் முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மகேஷ் என்கிற இளைஞனின் முயற்சிகள் எனக்கான எனர்ஜியைக் கொடுப்பதாக நினைக்கிறேன். 

உலகில் எப்பொழுதுமே நம்மைவிடவும் அதிகமாகச் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள். நம்மைவிடவும் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உழைப்போடும் சிரமத்தோடும் ஒப்பிடும் போதுதான் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று புரியும். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களின் பிரச்சினை என்னவென்றால் நம்மைவிட சொகுசாக இருப்பவர்களோடு ஒப்பிட்டுக் கொள்கிறோம். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டுவதற்கு நாம் எப்பொழுதுமே நம்மைவிடவும் கடினமாக உழைப்பவர்களோடுதான் நம்மை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டுமே தவிர நம்மைவிட சொகுசாக இருப்பவர்களோடு இல்லை. 

                                                                      ***

தென்கச்சியாரின் கதை ஒன்று-

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கடுமையான தலைவலி. அதை எந்த மருத்துவராலும் சரி செய்ய முடியவில்லை. எந்த மூலிகையும் பயனளிக்கவில்லை. நாடு முழுவதும் அலைந்து திரிந்த பணியாட்கள் காட்டில் ஒரு முனிவர் இருப்பதாகச் சொன்னார்கள். அவருக்கு இந்தப் பிரச்சினைக்கு வைத்தியம் தெரியும் என்று நம்பிக்கையூட்டினார்கள். அவரை அழைத்து வரச் சொல்லி ராஜா உத்தரவிட்டார். முனிவரும் வந்தார். சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு ‘பச்சை நிறம் கண்ணில் படுகிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று ராஜாவிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவ்வளவுதான். நாட்டில் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றத் தொடங்கினார்கள். அரண்மனை பச்சை நிறம். அரண்மனைப் பணியாளர்களின் உடைகள் பச்சை நிறம். வீதியில் இறங்கினால் வீடுகளின் சுவர்கள் எல்லாம் பச்சை நிறம். எங்கும் பச்சை எதிலும் பச்சை. 

தலைவலி பரவாயில்லாமல் இருந்தது. சில நாட்கள் கழித்து ராஜாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று முனிவர் காட்டிலிருந்து வந்து சேர்ந்தார். அவருக்கு பச்சை நிறத்தைப் பார்த்தவுடன் ஒரே ஆச்சரியம். அரண்மனைக்குள் நுழையும் போது அவரையும் பச்சையாக்குவதற்கு இரண்டு பணியாளர்கள் பச்சை நிற பெய்ண்ட்டை தூக்கிக் கொண்டு வந்தார்கள். முனிவர் தலையில் அடித்துக் கொண்டு ராஜாவிடம் போனார். ‘யோவ் மன்னா...இப்படியா எல்லாவற்றையும் பச்சையாக மாற்றி கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்ய வேண்டும்? உன் கண்களில் பச்சை நிறம் படும்படியாக மாற்றிக் கொள்ள முடியாதா?’ என்றாராம். ராஜாவுக்கு குழப்பம். அது எப்படி சாத்தியம் என்று கேட்டிருக்கிறார்.

‘ஒரு பச்சை நிறக் கண்ணாடி இந்த நாட்டில் என்ன விலை?’ என்றாராம். அப்பொழுதுதான் ராஜாவுக்கு உரைத்திருக்கிறது.

இந்தக் கதைக்கும் அம்மாவின்- இந்த அம்மா சுப்பீரியர் அம்மா- பச்சை நிறத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.