Oct 23, 2014

என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா?

குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை. 

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நாள் அவனுக்கு வேறொரு பிரச்சினை வந்த போது மின்னலை மீண்டும் வரவழைத்து உதவி கோருகிறான். மின்னல் உதவுகிறது. சுபம்.

இந்த மாதிரியான கதைகள்தான் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் என்று யாராவது சொல்லக் கூடும். அதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு வரை வேண்டுமானால் சரியான வாதம். இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எவ்வளவோ தாண்டிச் செல்கிறார்கள். மூன்று வயது குழந்தைக்கு குறைந்தபட்சம் மின்னல் எப்படி உருவாகிறது என்கிற அறிவு இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து வைத்திருக்கும் குழந்தையிடம் இந்தக் கதையைச் சொல்லிப் பாருங்கள். எந்த பாதிப்பையும் உருவாக்காது. உடான்ஸ் என்று சொல்லிவிடும். இந்தக் காலத்துக் குழந்தைகளை அழைத்து வைத்து மின்னலை வலையில் பிடிக்கிறான் என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்தால் ஏதாவதொரு வகையில் அவர்களது வளர்ச்சியைத் தடுக்கிறோம் என்றுதான் பொருள்.

மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று நினைப்பவர்களுக்கு அலீஸா கார்சனின் கதையைச் சொல்லிவிட வேண்டும்.

அலீஸா கார்சன்(Alyssa Carson) அமெரிக்கக் குழந்தை. குழந்தைதான். பதின்மூன்று வயது. ஏழாம் வகுப்பு படிக்கிற வயது. ஆனால் செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக் கூடிய எல்லாத் தகுதிகளையும் பெற்றுவிட்டாள். நாஸாவும் அவளுக்கு எல்லாவிதமான முன்னுரிமையையும் கொடுத்திருக்கிறது. அநேகமாக செவ்வாயில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற GK கேள்விக்கு அலீஸா கார்சன் என்ற பதிலை நாம் விரைவில் எழுதக் கூடும்.

அலீஸாவுக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சுவாரசியமான பின்னணி இருக்கிறது. மூன்று வயதில் ஏதோ ஒரு குழந்தைகள் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அதில் சிலர் செவ்வாய் கிரகத்துக்கு பயணிப்பது பற்றிய ஒரு நிகழ்வைப் பார்க்கிறாள். செவ்வாய் கிரகம் பற்றி அப்பாவிடம் விசாரிக்கிறாள். அவளது அப்பா செவ்வாய் கிரகத்தைப் பற்றி விவரிக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களில் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக்கிக் கொள்வதாக முடிவு செய்கிறாள். நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் - ஆனால் அவள் அப்படி முடிவு செய்த போது அவளது வயது வெறும் மூன்று. 

அலீஸாவுடன் இந்தியக் குழந்தைகளை ஒப்பீடு செய்ய முடியாதுதான்.  நம் குழந்தைகள் மூன்று வயதில் முடிவெடுப்பதற்கான வளர்ச்சியை அடைகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பெற்றவர்கள் என்ற வகையில் நம்மால் அவர்களுக்கு அடிப்படையான அறிவியல் அறிமுகங்களை கொடுக்க முடியும். அலீஸாவின் அப்பா அதைத்தான் மூன்று வயதில் அவளுக்குச் செய்திருக்கிறார். ‘செவ்வாய் என்பது ஒரு கிரகம்’ என்ற பதிலோடு அவர் நிறுத்தியிருந்தால் அலீஸாவுக்கு இதில் ஆர்வம் உருவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது. செவ்வாய் கிரகம் பற்றிய விவரங்களைத் தன்னால் முடிந்த அளவு திரட்டிக் கொடுத்திருக்கிறார். அலீஸாவுக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார். ஆர்வம் தானாக பற்றிக் கொண்டது. அவ்வளவுதான். ‘தந்தை மகற்கு ஆற்றும் உதவி’. உதவிவிட்டார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா செவ்வாய் கிரகத்துக்குச் செல்பவர்களுக்காக ‘நாஸா பாஸ்போர்ட் ப்ரோகிராம்’ என்றொரு தேர்வை வைக்கிறார்கள். அதில் வெற்றியடைந்த முதல் நபர் அலீஸாதான். கிட்டத்தட்ட அத்தனை விண்வெளி பயிற்சிகளையும் முடித்துவிட்டாள். இப்பொழுது விண்கலங்கள் ஏவப்படுவதை நேரடியாகப் பார்ப்பதற்கு நாஸா அவளுக்கு அனுமதியளித்திருக்கிறது. நாஸாவின் அனைத்து Space camp களையும் முடித்த முதல் ஆளாக அலீஸா இருக்கிறாள். 

அலீஸா செவ்வாய் கிரகத்துக்கு செல்வது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. 

அலீஸாவின் கதை உந்துதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மகனிடம் சொல்லியிருந்தேன். ‘அந்த அக்காவிடம் பேச முடியுமா?’ என்றான். பேச முடியும் என்று உறுதியளிக்க முடியவில்லை. ஆனால் அலீஸாவிடம் சில கேள்விகளை அனுப்பி பதிலை வாங்கிவிட முடியும் எனத் தோன்றியது. அவரிடம் பேசினேன். மின்னஞ்சல் ஐடியைக் கொடுத்து கேள்விகளை அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார். அனுப்பி வைத்தேன். பதில் வந்து சேர்ந்தது. அந்த பதில்களை வைத்து மகனுக்கு ஒரு கதையைச் சொன்னேன். அவனுக்கு பரம சந்தோஷம்.

அலீஸாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளைத்தான் அனுப்பியிருந்தேன். யாராவது பத்திரிக்கை நிருபர்கள் விரும்பினால் அவரது மின்னஞ்சல் முகவரியைத் தருகிறேன். ஒரு விரிவான நேர்காணலை முயற்சிக்கலாம். அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு அலீஸா போன்றவர்களின் வழிகாட்டுதல்கள்தான் அவசியம். இல்லையா?


அலீஸாவின் நேர்காணல்:

நீங்கள் விண்வெளியாளர் ஆக வேண்டும் என்று எதனால் முடிவு செய்தீர்கள்?

மூன்று வயதில் ஒரு சிறார் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் குழந்தைகள் தங்கள் வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்குச் செல்வார்கள். அப்பாவிடம் செவ்வாய் பற்றிக் கேட்டேன். அள்ளிக் கொட்டினார். அடுத்த இரண்டு வாரத்தில் நான் விண்வெளியாளர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்துவிட்டேன். அதுவும் செவ்வாய்க்குத்தான் செல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அப்பொழுதிலிருந்து இதுவரை அந்தக் கனவை அடைவதற்காக என்னால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்.

என்ன மாதிரியான பயிற்சிகளை எடுத்துக் கொள்கிறீர்கள்?

விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வதற்காக விண்வெளியில் இருப்பது போன்றே புவியீர்ப்பு விசை இல்லாத, அங்கு இருப்பது போன்றே காலநிலை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்ட பயிற்சிக் கூடங்களில் (Simulators) எல்லாவிதமான பயிற்சிகளையும் எடுத்துக் கொள்கிறேன். தவிரவும், ஸ்கூபா டைவிங் சான்றிதழ் பயிற்சி, விமானிக்கான உரிமம் மற்றும் விண்ணில் சுழலும் பயிற்சி ஆகியனவற்றை ஆரம்பித்திருக்கிறேன். இவையாவுமே விண்வெளி வீரருக்கு அவசியமானவை என்று நாஸா அறிவுறுத்தியிருக்கிறது.

பயிற்சிகளைத் தவிர வேறு என்ன செய்கிறீர்கள்?

பியானோ வாசிக்கத் தெரியும், புத்தகங்கள் வாசிக்கிறேன், பள்ளியின் ரோபாடிக்ஸ் குழுவில் இருக்கிறேன், ஃபுட்பால் விளையாடுகிறேன், பள்ளியின் நாடகக் குழுவில் தீவிரமான உறுப்பினராக இருக்கிறேன். ஆங்கிலம் தவிர ப்ரெஞ்ச், சீனம் உட்பட நான்கு மொழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இவை தவிர Scout உறுப்பினராகவும் இருக்கிறேன்.

மூச்சடைக்கிறது. பதின்மூன்று வயதில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

நான்கு வயதிலேயே நேர மேலாண்மையை அப்பா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் எல்லாமுமாக இருக்கிறது. நேரத்தை துல்லியமாக நிர்வகிக்கிறேன். அது எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் செய்ய உதவுகிறது. So simple.

நீங்கள் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை மற்றும் உந்துதலூட்டும் பேச்சுக்களை தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள் என்று தெரியும். சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

இளைய வயதினருக்கு ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போதே உங்களுக்கு பிடித்தமான பாடத்தைத் தேர்ந்தெடுங்கள். அந்தப் பாடத்தில் உங்கள் வேலையை அமைத்துக் கொள்ள முடிவெடுங்கள். என்னைப் போலவே அந்தத் துறையில் சாதிக்க கனவு காணுங்கள். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருங்கள்....உங்களிடமிருந்து உங்களின் கனவை பறித்துவிட யாரையும் அனுமதித்துவிடாதீர்கள். இதுதான் தாரக மந்திரம்.