Oct 3, 2014

போலீஸ் ஸ்டேஷனை எப்போ திறப்பீங்க சார்?

அவிநாசி-கோவை சாலையில் சென்னியாண்டவர் கோவில் இருக்கிறது. சென்னி என்றால் தலைமை. உச்சி. சிலப்பதிகாரத்தில் மாலை தாழ் சென்னி என்று ஒரு இடத்தில் வருகிறது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உச்சி என்று பொருள். எங்கள் ஊர்ப்பக்கத்தில் சென்ற தலைமுறை வரைக்கும் சென்னி என்ற பெயர் புழக்கத்தில் இருந்தது. சென்னிமலை, சென்னியப்பன் என்பதெல்லாம் பொதுவான பெயர்கள். இப்பொழுது யாரும் வைப்பதில்லை. இந்த இரண்டு தலைமுறைகளில் நாம் தொலைத்த பெயர்களைக் கணக்கெடுத்தால் பல்லாயிரக்கணக்கில் தேறும். அவனக்காள், பலனாயாள், அங்கப்பன், பொங்கியம்மாள், காசியம்மாள், கருப்பாயாள், ஆயிக்கவுண்டர், அப்பிச்சிக் கவுண்டர் என்ற பெயர்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளில் மிகப்பெரிய ஷிப்ட். சென்ற தலைமுறையில் சதீஷ், மகேஷ், ரமேஷ் போன்ற பெயர்கள் நிறைந்தன. இந்தத் தலைமுறையில் ரஷ்வந்த, ரிதன்யா, நித்திஷ் வகைப் பெயர்கள் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்தத் தலைமுறையில்தான் பெயரின் அழகியல் முக்கியத்துவம் பெறுகிறது. நதி வதனா, துகில், முல்லை, ஆதிரை போன்ற பெயர்களை கேள்விப்படும் போது சந்தோஷமாக இருக்கிறது. 

சென்னியாண்டவரில் ஆரம்பித்து ஆதிரைக்கு வந்துவிட்டேன். சொல்ல வந்த விஷயம் இது இல்லை.

இந்த சென்னியாண்டவர் கோவிலுக்கு அழைத்துச் சென்றுதான் வேணியை முதன்முதலாகக் காட்டினார்கள். அது ஒரு பெருங்கூட்டம். அவர்கள் வகையறாவில் ஐம்பது பேர் வந்திருந்தார்கள். எங்கள் வகையறாவில் ஐம்பது பேர். நூறு பேர்களுக்கு மத்தியில் தனியாக பேசிக் கொள்ள அனுமதி கொடுத்தார்கள். ‘போனோமா சட்டுப்புட்டுன்னு பேசினோமான்னு வந்துடு’ என்று உத்தரவு வேறு போட்டிருந்தார்கள். ஐந்து நிமிடங்களுக்குள் முடிவு செய்தாக வேண்டும். சிகரெட் பிடிக்காது. சரக்கடிப்பவனை பிடிக்காது என்று பட்டியல் வாசித்தாள். அப்பொழுதே இந்த பழக்கங்கள் எல்லாம் எனக்கு உண்டு என்று சொல்லியிருந்தாள் தப்பித்திருப்பேன். ‘அதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க..டீ கூட குடிக்க மாட்டேன். Teetotaller' என்று பெருமையடித்தேன்.  ‘சரி எதுக்கும் யோசிச்சுட்டு சாயந்திரம் சொல்லிக் கொள்ளலாம்’ என்று பேசி வைத்திருந்தோம். வந்தவுடனே ஒரு பெரியவர் ‘பையனையும் பொண்ணையும்  மூஞ்சியைப் பார்த்தா தெரியாதா? அடுத்த ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க’ என்று அவரே முடிவு செய்து அறிவித்துவிட்டார். அவ்வளவுதான். அடுத்த ஆறாவது மாதத்தில் அடிமை சாசனத்தில் கையெழுத்து போட வேண்டியதாகிவிட்டது.

அப்பொழுதே அந்த சென்னியாண்டவரிடம் சொல்லி வைத்திருந்தேன். ‘கடைசி வரைக்கும் உனக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கும் பார்த்துக்க’ என்று. வீட்டில் சண்டை வரும் அல்லவா? வீட்டுக்கு வீடு வாசப்படி. அந்தச் சமயங்களில் எல்லாம் சென்னியாண்டவனைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். ‘ஏய்யா யோவ்..இவ என்ன இந்த ராஞ்சு ராஞ்சறா..ஒன்னா அவளை அடக்கி வை..இல்லைன்னா எனக்கு தைரியத்தைக் கொடு...ரெண்டுமில்லாம இப்படி பூனைகிட்ட சிக்குன எலிக்குஞ்சு மாதிரி ஆக்கி சிரிச்சுட்டு இருந்தீன்னா உம்பக்கமே வரமாட்டேன் பார்த்துக்க’ என்று கேட்டால் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும். நம்பிக்கை இல்லையென்றால் மனைவி திட்டும் போது கண்களை மூடிக் கொண்டு ஏதாவது கடவுளை வேண்டிப்பாருங்கள். நம்மிடம்தான் பம்முகிறான் என்ற நினைப்பில் மனைவி அமைதியாகிவிடுவார். ஆனால் அதன் பின்னணியில் நம் பிரார்த்தனையின் வலிமைதான் காரணம் என்று நாம் நம்பிக் கொள்ளலாம். 

நிலைமை கை மீறிய சமயங்களும் இருக்கின்றன. அந்தச் சமயங்களிலும் முருகன் மாதிரியான சாமிகளிடம் சரணாகதி ஆவது ஒருவிதத்தில் பலனளிக்கும். ‘ஒருத்தியைவே என்னால சமாளிக்க முடியலையே..உன்னையெல்லாம் நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது...ரெண்டு பேரு..ரெண்டு பக்கம்...கோவணமாச்சும் உனக்கு மிஞ்சுச்சேன்னு சந்தோஷமா இரு அப்புனு’ என்று உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொள்ளலாம். முருகர் நம்மை பார்த்து டென்ஷன் ஆவதற்கு சகலவிதமான சாத்தியங்களும் இருக்கின்றனதான். ஆனால் அடுத்தவரின் மோசமான நிலைமையைப் பார்த்து சந்தோஷம் அடைந்து கொள்வது நம் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. Sadism தான். ஆனால் அந்த ரணகளத்திலேயும் நமக்கு ஒரு கிளுகிளுப்பு கிடைக்கும் அல்லவா? 

சென்னியாண்டவனுடன் எனக்கு அப்படியொரு அந்நியோன்யம்.

இன்று மகியை மொட்டையடிக்க அழைத்துச் சென்றிருந்தோம். அது அம்மாவின் வேண்டுதல். பையனும் மருமகளும் நல்லபடியாக இருந்தால் பேரனை மொட்டையடிக்கச் சொல்கிறேன் என்று வேண்டியிருந்தாராம். இந்த டீலிங் இதுவரை எனக்குத் தெரியாது. 

கோவிலில் கூட்டமே இல்லை. இருந்த நான்கைந்து பேரும் உருகி உருகி வேண்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே தத்தமது மனைவியுடன்தான் வந்திருந்தார்கள். அவனவன் பிரச்சினை அவனவனுக்கு. கோவிலில் மனைவியுடன் வந்து மனப்பூர்வமாக கண்களை மூடிக் கொண்டு வேண்டிக் கொண்டிருக்கும் நம் வயது ஆட்கள் என்ன வேண்டிக் கொண்டிருப்பார்கள் என்று ஒரு நினைப்பை ஓட்டிப் பார்த்தால் நமக்கு சிரிப்பு வந்துவிடும். அவன் மட்டும் என்ன மங்கள்யான் ப்ராஜக்ட் வெற்றியடைய வேண்டும் என்றா வேண்டிக் கொண்டிருக்கப் போகிறான்? இல்லை மீனவர் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்லப் போகிறானா? ஆல் ஆர் ஒரே குட்டைஸ். ஆல் ஆர் ஒரே மட்டைஸ்.

இன்றைக்கு மிஸ்டர். சென்னிக்கு மகியை பிடித்துவிட்டது போலிருக்கிறது. அவனிடம் ஏதோ சொல்லிக் கொடுத்திருக்கிறார். மகி சேட்டையைக் காட்டிவிட்டான். அவனிடம் எப்பொழுதோ ஒரு சமயத்தில் 100க்கு அழைத்து புகார் அளித்தால் திருடனை வந்து பிடித்துவிடுவார்கள் பேச்சுவாக்கில் என்று சொல்லியிருந்தேன். மதிய உணவை முடித்துவிட்டு தூங்க வந்துவிட்டேன். எனது செல்போனை எடுத்து 100 ஐ அழைத்து ‘எங்கப்பா என் கூட விளையாடாம தூங்கிட்டு இருக்காரு’ என்று புகார் அளித்துவிட்டான். அது கூட பரவாயில்லை.  ‘இந்த சித்தப்பா ஓவரா குறும்பு பண்ணுறாங்க...கிள்ளி வைக்கிறார்..வந்து புடிச்சுட்டு போறீங்களா?’ என்றும் கேட்டிருக்கிறான். இந்தச் சேட்டையைச் செய்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டான். போலீஸ்காரர்களுக்கு நல்ல மனநிலை போலிருக்கிறது. மாலையில் அழைத்து ‘ஸ்டேஷனுக்கு வர முடியுமா?’ என்றார்கள். எனக்கு இந்த புகார் விவகாரம் எதுவும் தெரியாது. காரணமே இல்லாமல் காவல் நிலையத்திலிருந்து அழைக்கிறார்கள் அதுவும் மாமனார் ஊர் காவல் நிலையத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் ஜெர்க் ஆகத்தானே செய்யும்?  ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு விவரத்தைச் சொன்னார்கள். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ‘ஸாரி சார்’ என்று பத்து முறையாவது சொன்னேன். 'பையன்கிட்ட போனைக் கொடுக்காதீங்க’ என்றார். சில விஷயங்கள் எப்பொழுதாவது அவனுக்கு பயன்படும் என்றுதான் சொல்லித் தருகிறேன். இப்படியெல்லாம் எதிர்வினை இருக்கும் என்று எப்படித் தெரியும்? 

இந்த சென்னியாண்டவன் மனைவியைச் சமாளிக்க மட்டும்தான் உதவுவான் போலிருக்கிறது. மகனைச் சமாளிக்க இன்னொரு கடவுளை பிடிக்க வேண்டும். இனி சென்னியாண்டவனை விட்டுவிட்டு சிவபெருமானிடம் சரணடையத் துவங்கலாம் என்றிருக்கிறேன்.