Oct 3, 2014

உன் வயதென்ன தம்பி?

கீதாஞ்சலி குறித்தான விமர்சனத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.  ‘உன்னைப் போன்றவர்களால் தமிழ் வளர்வதேயில்லை. உன்னால் செய்ய முடிந்தால் செய்யவும் இல்லையென்றால்_____’ என்கிற ரீதியில் நீண்டிருந்தது. கீதாஞ்சலியை மொழிபெயர்த்திருந்த பெரிய மனிதரும் பத்து பன்னிரெண்டு மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தார். அதுவும் ஒரே நாளில். உன் படிப்பு என்ன? உன் தகுதி என்ன? நீ எவ்வளவு கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறாய்? என்றெல்லாம் கேட்டிருந்தார். 

குழப்பமாக இருக்கிறது.

படிப்புக்கும் விமர்சனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. உனக்கு என்ன வயது என்று கேட்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. எட்டாவது மட்டுமே படித்துவிட்டு பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன், வண்ணதாசன், கலாப்ரியா என்று தொடங்கி இன்றைய இசை, இளங்கோ கிருஷ்ணன், லிபி ஆரண்யா, நரன், கதிர்பாரதி உள்ளிட்ட அத்தனை கவிஞர்கள் குறித்தான அறிமுகத்தோடு இருக்கிறவனைத் தெரியும். கவிதையின் போக்கு அதன் நுட்பங்கள் பற்றி அலசிக் கொட்டுவான். அவன் எட்டாவது மட்டுமே படித்திருக்கிறான் என்பதால் அவன் கவிதையைப் பற்றி பேசக் கூடாது என்பார்கள் போலிருக்கிறது. கல்லூரியில் பல பட்டங்களை வாங்கியிருக்கும் நண்பர்கள் பல பேருக்கு கவிஞர் என்றால் கண்ணதாசனும் வைரமுத்துவும்தான். அவர்கள் கவிதைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனென்றால் அவர்கள் கல்லூரியில் மெத்தப் படித்திருக்கிறார்கள்.

படிப்புக்கும் படைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இவர்களிடம் எப்படி நிரூபிப்பது? 

எத்தனை கவிதையை மொழிபெயர்த்திருக்கிறாய் என்று கேட்பதற்கு என்ன பதிலைச் சொல்வது? முடிந்தால் நீ மொழிபெயர்த்துக்காட்டு என்பதற்கு எதை பதிலாக எழுதுவது? இதுவரை நான் ஒரு வரியைக் கூட மொழிபெயர்த்ததில்லைதான். எனக்கு கவிதையை மொழிபெயர்க்கும் யோக்கிதையே இல்லை. அதற்காக கவிதையை விமர்சிக்கத் தகுதியில்லை என்றாகிவிடுமா? அப்படியானால் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் தோனியை விமர்சிக்க முடியும். வேறு யாராவது விமர்சித்தால் ‘நீ இறங்கி ஒரு சிக்ஸ் அடிச்சுட்டு விமர்சிக்கவும்’ என்று வாயை அடைத்துவிடலாம். பாரதிராஜா மட்டும்தான் லிங்குசாமியை கலாய்க்க முடியும். மற்றவர்கள் யாராவது வாயைத் திறந்தால் ‘எங்கே நீ ஒரு படம் எடுத்துக் காட்டு’ என்று சாணத்தை கரைத்து ஊற்றிவிடலாம்.

விமர்சனம் என்பது அந்தப் படைப்போடு சம்பந்தப்பட்டது. அதைப் புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு இருக்கிறதா என்பது பற்றிய பிரச்சினை அது. அதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி பேசத் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு உனக்கு வயது என்ன? படிப்பு என்ன? என்றெல்லாம் கேட்டு என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. நல்லவேளையாக அப்பாவிடம் சொல்லி ஜாதகத்தை ஸ்கேன் செய்யச் சொல்லியிருக்கிறேன். இனிமேல் விமர்சனம் எழுதும் போது இறுதியில் இணைத்துவிடலாம். விருப்பப்படுபவர்கள் இன்னொரு பெண் பார்க்கும் படலத்தை நடத்தட்டும்.

ஒரு படைப்பை முன் வைக்கிறோம். அதை நான்கு பேர் பாராட்டினால் ஒன்றிரண்டு பேராவது விமர்சிக்கத்தான் செய்வார்கள். எதிர்மறையான விமர்சனம் வரும் போது ஏன் இவ்வளவு பதற்றமடைய வேண்டும்? படைக்கிறவன் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் மண்டை காய வேண்டியதில்லை. சில விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். அந்த விமர்சனத்திற்கான பதில் அந்த படைப்பில்தான் இருக்கும். வெளியிலிருந்து தேட முடியாது. உதாரணமாக பாரதியின் கவிதைகளை இன்றும் விமர்சனம் செய்கிறோம். பாரதியா வந்து பதில் சொல்கிறார்? அந்த மனிதனின் கவிதைக்குள்தான் அந்த விமர்சனத்திற்கான பதில் இருக்கிறது. ஒரு விமர்சகன் ‘பாரதியின் கவிதைகள் படு மோசம்’என்று எழுதுகிறான் என வைத்துக் கொள்வோம். அந்த விமர்சனத்தில் இருக்கும் உண்மையை வாசகனால் அதை முடிவு செய்ய முடியாதா? அதே போலத்தான் எல்லா படைப்புகளுக்கும். 

விமர்சனம் வருகிறதே என்பதற்காக தாராளமாக சந்தோஷப்படலாம். அது நல்லதோ கெட்டதோ- ஏதாவதொரு உரையாடல் நிகழ்கிறது அல்லவா? இன்றைக்கு அற்புதமான கவிதைத் தொகுப்புகளுக்குக் கூட ஒன்றரை வரி விமர்சனம் வருவதில்லை. கிணற்றில் போட்ட பெருங்கல்லைப் போலக் கிடக்கின்றன. 

விமர்சனத்தால் தமிழ் வளர்வதேயில்லை என்பதைவிடவும் அபத்தமான கூற்று இருக்கவே முடியாது. கறாரான விமர்சகர்கள் எப்பொழுதுமே ஒரு மொழிக்கு மிக அவசியமானவர்கள். படைப்பின் போக்கை செழுமைப்படுத்துவதில் படைப்பாளர்களைவிடவும் விமர்சகர்களுக்கு முக்கியமான இடமிருக்கிறது. படைப்பில் வந்து குவியும் கழிசடைகளை ஓரளவுக்கேனும் விமர்சகர்களால்தான் கட்டுப்படுத்த இயலும். இன்றைக்கு  தமிழில் விமர்சனத்திற்கான இடம் அருகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 

குப்பைகளை நிரப்பித்தான் தமிழை நாள்தோறும் ஒன்றரை இஞ்ச் வளர்க்க வேண்டுமானால் அதற்கு தமிழ் இப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்றுவிடலாம் அல்லவா? 

தெரியாத்தனமாக ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டேன். சந்தர்ப்ப சூழலில் விமர்சனமும் எழுதியாகிவிட்டது. அதை நீக்கியாக வேண்டும், எடிட் செய்ய வேண்டும் என்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அது அப்படியே இருக்கட்டும். வாசிக்கிறவன் முடிவு செய்யட்டும். ‘இது நல்ல கவிதைகள்தான்..விமர்சனம் செய்தவனுக்கு சுத்தமாக அறிவே இல்லை’ என்று வாசகன் முடிவு செய்யட்டும் அல்லது ‘இவன் சரியாகத்தானே எழுதியிருக்கிறான்..தாகூரை நாறடித்திருக்கிறார்’ என்று அவன் தீர்மானத்துக்கு வரட்டும். அது வாசகனுக்கான இடம். அதைவிட்டுவிட்டு படைத்தவனும் விமர்சித்தவனும் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? இவ்வளவு பதற்றம் தேவையே இல்லை. எழுதியது எழுதியதுதான். தனிப்பட்ட எந்தக் காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை. மனதில் பட்டதைத்தான் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு சொல் கூட மாற்றப்படாமல் அப்படியேதான் இருக்கும். 

நன்றி.