Oct 4, 2014

நானும் ரெவிடிதான்....

இன்று ஒரு ஜோதிடரிடம் செல்ல வேண்டியிருந்தது. நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல ஊருக்கு வந்தால் இப்படித்தான். மொட்டையடிப்பதும் ஜோதிடம் பார்ப்பதுமாக ஒரே அமர்க்களமாக இருக்கிறது. ஆனால் நான்கு நாட்களும் இப்படி ஊர் சுற்றிக் கொண்டேயிருந்தால் சிலருக்கு பொறுப்பதில்லை. நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதே ஜெயபாரதன் அனுப்பியிருந்தார். தனது புத்தகம் குறித்தான விமர்சனத்தை நீக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக வழக்கறிஞர் ஒருவரை Ccயில் வைத்து எழுதியிருந்தார்.  ‘அடேயப்பா’ என்றிருந்தது. ‘ஒரு புறாவுக்கல்லவா அக்கப்போராக இருக்கிறது?’. ஒரு ஜீப்பை ஏற்பாடு செய்வதற்கு ஏற்பாடாகிவிட்டது. ‘நானும் ரெவிடிதான் நானும் ரெவிடிதான்’ என்று ஒற்றைக் கையையும் காலையும் தொங்கவிட்டு பெங்களூரிலிருந்து சென்னை வரைக்கும் கொடியைப் பறக்கவிட்டபடியே வரலாம் போலிருக்கிறது.

விமர்சனத்தில் அவரது பெயர் ஐந்து இடங்களில் வந்திருக்கிறதாம். இந்த விமர்சனத்தால் அவரது புத்தக விற்பனை பாதிக்கப்பட்டு பேரளவிலான பொருள் இழப்பு ஏற்பட்டுவிடுமாம். இந்த வரிகளை எல்லாம் படித்த பிறகு எனக்கு கலர் கலராகத் தெரிகிறது. தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது. தமிழில் ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்றுத் தள்ள கோடிக்கணக்கான ரூபாயை ஒவ்வொரு எழுத்தாளனும் சம்பாதித்துக் கொண்டிருக்க இந்த பொல்லாத படவா ராஸ்கல் ஒரு எழுத்தாளனின் வருமானத்தில் கையை வைத்துவிட்டான் பாருங்கள். 

இந்த ஒரு பொக்கையான விஷயத்திற்கு திரும்பத் திரும்ப பதிவுகளை எழுதி ஜல்லியடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. மூன்று பதிவுகள் என்பதே டூ மச். ஆனால் இந்த ஒரு பதிவை மட்டும் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த பிரச்சினையினால் வீண் விளம்பரம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று மட்டும்தான் வருத்தமாக இருக்கிறது. ஆகவே இதற்கு மேல் இதைப் பற்றி எழுத மாட்டேன்.

விமர்சனத்தில் அந்த மனிதருக்கு தர வேண்டிய மரியாதையைத் தந்துதான் எழுதியிருந்தேன். விமர்சனத்தில் கூட அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதற்காக விமர்சனமே எழுதக் கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? பொதுவெளிக்கு வந்துவிட்ட பிறகு எந்தப் படைப்பின் மீதும் விமர்சனம் வரும். ஒரு வாசகனாக எனக்கு இருக்கும் உரிமையில் அதைச் செய்திருக்கிறேன். தனிமனித மீறலோ அல்லது உரிமைப் பிரச்சினையோ இருந்தால் சட்டத்தைக் காட்டி மிரட்டலாம். 

சட்டம் தெரியாது என்று மிரட்டுகிறாரா என்று தெரியவில்லை. ‘என்னய்யா செய்துவிட்டான் என் கட்சிக்காரன்? ஒன்றேகால் பக்க விமர்சனம். அது தவறாய்யா? மை லார்ட், உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்லை. நீதி இல்லை. நீங்களாகப் பார்த்து எதையாவது சொல்லி என் கட்சிக்காரனை விடுதலை செய்துவிடுங்கள்’ என்று வாதாடும் அளவுக்கு எனக்கும் சட்டம் தெரியும். அதையும் வடிவேலின் பாணியில் இம்மி பிசகாமல் பேசுவேன் என்பது அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.

சட்டமும் காமெடியும் இருக்கட்டும்-

நேற்றிரவு துளி யோசனை இருந்தது. விமர்சனத்தை நீக்கிவிட்டால் அவருக்கும் பிரச்சினையில்லை எனக்கும் பிரச்சினையில்லைதான். ஆனால் அப்படியெல்லாம் அழிக்க வேண்டியதில்லை. அச்சில் வரும் எந்த படைப்பையும் விமர்சிக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. ஒரு படைப்பின் மீதான விமர்சனத்திற்கெல்லாம் சட்ட நடவடிக்கை அனுப்புவேன் என்று மிரட்டினால் அதற்கு பயந்து கொண்டு நீக்குவதை அவமானமாகக் கருதுகிறேன். நாளைக்கு எந்தப் படைப்பை விமர்சிக்கும் போதும் பயப்பட வேண்டியிருக்கும். ‘எதுக்கு வம்பு?’ என்று பம்ம வேண்டியிருக்கும். யார் வேண்டுமானாலும் இந்தச் சம்பவத்தை உதாரணமாகக் காட்ட முடியும். ஆனது ஆகட்டும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஒருவேளை வழக்கு அது இது என்று வந்தாலும் நின்று ஆட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீதிபதியிடமே ‘இந்தக் கவிதைகளை ஒவ்வொன்றாக வாசித்துக் காட்டுகிறேன். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை அய்யா’ என்று வாசித்துக் காட்டுகிறேன். அப்புறம் இருக்கிறது வேடிக்கை. 

விமர்சனம் செய்தது தவறு என்று எந்தவிதத்தில்  நிரூபிப்பார்கள்? இன்றைக்கு ஒருவர் தாகூரை கூறு போடுவார். நாளை இன்னொருவர் ஷேக்ஸ்பியரை கூறு போடுவார். நாளை மறுநாள் இன்னொருவர் எலியட்டை பந்தாடுவார். ஆனால் யாருமே கேட்கக் கூடாது. அப்படித்தானே? எவனும் கேள்வி கேட்கக்கூடாது என்றால் அச்சடித்து சொந்தகாரர்களுக்கு கொடுக்கட்டும். வீட்டில் அலமாரியில் அடுக்கி வைக்கட்டும். காசு கொடுத்து வாங்குபவன் பண்டம் சரியில்லை என்றால் பேசத்தான் செய்வான். கடைக்காரன் மீது கை வைத்தால் வழக்குத் தொடுக்கலாம். ஆனால்‘அந்தக் கடையில் அரிசி சரியில்லை’ என்று சொன்னால் வழக்குத் தொடுக்க முடியுமா என்ன? 

அப்படி ஒருவேளை விமர்சனம் தவறு என்றால் நீதிமன்றம் சொல்லட்டும். அங்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் ‘நீ நீக்கு’ என்றால் நீக்கிவிடுவேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. விமர்சனம் தவறு என்றால் விவாதிக்கட்டும். விமர்சனம் எழுதியவன் பதில் சொல்வான். அது சிறந்த படைப்பு என்றால் ஏன் அது நல்ல படைப்பு என்று நிரூபிக்கட்டும். விமர்சகன் தனது தவறை உணர்வான். இதையெல்லாம் செய்தால் வாசகனுக்கு பிரயோஜனம் உண்டு. படைப்பு குறித்தான் உரையாடல் நிகழும். அதை விட்டுவிட்டு சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் நீதிமன்றம் செல்வேன் என்றும் விமர்சனம் செய்தவனை மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? ‘சின்னப் பையன் பயந்து விடுவான்’ என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.