Oct 27, 2014

கொஞ்சம் முழிங்க பாஸ்

ஆளாளுக்கு தலையில் கொங்காடையை மாட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். கொங்காடை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொங்குநாட்டுக்காரர்களின் தலைப்பாக்கட்டுக்கு கொங்காடை என்று பெயர் உண்டு. இப்பொழுதெல்லாம் யாரும் கட்டுவதாகத் தெரியவில்லை. ஊர்ப்பக்கம் சாக்குப்பையைத் தலையில் மாட்டிக் கொண்டு வந்தால் அதைத்தான் கொங்காடை என்கிறார்கள். அந்தக் கொங்காடை மனிதர்கள் நேராக குளத்துக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். மழை அப்பொழுதும் தூறிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அரை குளம் நிரம்பிவிட்டது. இன்னமும் நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீரைப் பார்ப்பதற்காகத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு தண்ணீரைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? கடைசியாகக் குளத்தில் தண்ணீரைப் பார்த்து ஏழெட்டு வருடங்களாவது இருக்கும். குளம், குட்டைகள் எல்லாம் காய்ந்து கிடந்தன. ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டு போயின. புதியதாகத் தோண்டினால் ஆயிரம் அடிகளைத் தாண்டினாலும் புகைதான் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்? ஆளாளுக்கு மில்களுக்கு வேலைச் சென்றார்கள். தோட்டமெல்லாம் காடாக மாறின. மழை பெய்தால் விவசாயம். இல்லையென்றால் தொலையட்டும் என்று ஆடு மாடுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். அதிலும் கடந்த ஆண்டு பெரிய அடி விழுந்தது. ஆடு மாடுகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. மாடுகள் உண்ணும் சோளத்தட்டுக்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயாக விலை ஏறியது. அத்தனை காசு கொடுத்து சோளத்தட்டு வாங்க முடியாது என்ற நிலைமைக்கு விவசாயிகள் வந்து சேர்ந்தார்கள். இருக்கிற மாடுகளை விற்கத் தொடங்கினார்கள். இவர்கள் விற்கத் தயார்தான். வாங்குவதற்கு ஆள் வேண்டாமா? இந்த வறட்சியில் புதிதாக மாடு வாங்கிச் சென்று தீனிக்கும் தண்ணீருக்கும் எங்கே போவது? கால்நடைகளின் விலைகள் அதலபாதாளத்தில் இறங்கின.

இந்த வருடமும் புரட்டாசி பாதி வரைக்கும் மழை இல்லை. நிறைய தென்னைகளும் பனைகளும் கருகிப் போயின. ஊருக்குள் கற்றாழை, கள்ளியைத் தவிர வேறு எதுவும் பசுமையாக இல்லை. மனிதர்களை வெயில் வாட்டிக் கொண்டிருந்தது. உதடுகள் வறண்டு போயின. விவசாயத்தை மட்டும் நம்பிக் கொண்டிருந்தவர்கள் வீடுகளுக்குள் அடைபட்டார்கள். கால்களை நிலத்தில் வைக்க முடியாத அளவுக்கு வெக்கை ஏறிக் கொண்டிருந்தது. இனி விவசாயம் அவ்வளவுதான் என்கிற நினைப்புக்கு கிட்டத்தட்ட வந்திருந்தார்கள்.

ஐப்பசி பிறந்தது. அடைமழை பெய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஒரேயொரு பெரு மழை பெய்யட்டும் என்று யோசிக்கத் தொடங்கியிருந்தார்கள். அரை உழவு, கால் உழவு என மழை போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. ஐப்பசியிலேயே மழை பெய்யவில்லையென்றால் கார்த்திகையும் காலை வாரிவிடும் என்று அமத்தா புலம்பினார். அவர் வாழ்ந்த காலத்தில் இதே ஊரில் நெல்லும் கரும்பும் பயிர் செய்திருக்கிறார்கள். அத்தனை தண்ணீர் இருந்திருக்கிறது. இன்று சோளமே கூட மேல வருவதில்லை. அப்படி இருந்த ஊரில்தான் சனிக்கிழமை காலையில் வானம் பொத்துக் கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மழை அடித்து நொறுக்கியது. ‘குட்டையெல்லாம் நிரம்பிக் கொண்டிருக்கின்றன’ என்று சொன்னார்கள். அப்பொழுது எங்கள் ஊரில் இருந்தேன். இந்த மழையைப் பார்ப்பதைவிடவும் வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது எனக் கிளம்பிய வழியெல்லாம் மழை. நனைவது சுகம். இதுநாள் வரையிலும் காய்ந்திருந்த மரங்கள் மழையில் அசைவதைப் பார்ப்பதற்கு அவை துள்ளுவதைப் போலவே இருக்கிறது. அவற்றின் கால்களை யாரோ நிலத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஆட்டம் பட்டையைக் கிளப்பக் கூடும்.

சில வருடங்களுக்கு முன்பாக சொட்டுநீர்ப்பாசன முறை பரவலான போது விவசாயம் மீது ஓரளவுக்கு விவசாயிகள் நம்பிக்கை வைக்கத் துவங்கினார்கள். குறைந்த அளவிலான தண்ணீரைக் கொண்டு நல்ல மகசூலை எடுக்கத் துவங்கினார்கள். ஆழ்துளைக் குழாய்களில் ஓரளவுக்கு நீர் இருந்தாலும் கூட சமாளிக்க முடிந்தது. ஆனால் தொடர்ச்சியாக நான்கைந்து வருடங்கள் மழை குறைந்த போதுதான் வாயடைத்துப் போனார்கள். ஒவ்வொரு வருடமும் மழை பொய்த்த போது விவசாயிகளின் நம்பிக்கை சிதைந்து கொண்டேயிருந்தது. ஒரே மாவட்டத்தில் இருபத்தைந்து கிலோமீட்டருக்கு இந்தப்பக்கம் தண்ணீருக்கு பஞ்சமே இருக்காது. வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர்தான். அந்தப்பக்கம் சென்றால் குடிக்கக் கூட தண்ணீர் இருக்காது. நம் அரசாங்கங்களின் தண்ணீர் மேலாண்மை லட்சணம் இவ்வளவுதான். 

பவானி ஆற்றில் எப்பொழுதுமே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆற்றோரமாக இருப்பவர்கள் நெல்லையும் மஞ்சளையும் பயிரிட்டு இருபத்து நான்கு மணி நேரமும் தண்ணீரை நிலத்தில் தேங்கச் செய்வார்கள். அவர்களுக்குத் தண்ணீர் பஞ்சமே இல்லை. ஆனால் இருபது கிலோமீட்டர் அந்தப் பக்கமாகப் போனால் குடிக்கத் தண்ணீர் இருக்காது. சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்கள் ஆகப் போகிறது. ஓரளவுக்காவது நீர் மேலாண்மையை ஒழுங்கு செய்திருக்கலாம். பவானி ஆற்றிலிருந்து கீழ் பவானி என்ற இருநூறு கிலோமீட்டர் கால்வாயை வெட்டி வைத்திருக்கிறார்கள். அந்தக் கால்வாயின் வடக்குப் பகுதியில் கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் வரைக்கும் இருக்கும் நிலங்கள் பயன்பெறுகின்றன. அந்தக் கால்வாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் தெற்கே இருக்கும் ஊரில் குடி தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.

அந்தக் கால்வாய் வடக்குப்பகுதி நிலங்களுக்கே நீர் பாய்ச்சட்டும். ஆனால் ஏன் இத்தனை வருடங்களாக தெற்குப்பகுதி நிலங்களுக்கு எந்தத் திட்டமும் உருவாக்கவில்லை? அவ்வளவுதான் நம் அரசாங்கங்கள். சரி புதிதாக எந்தத் திட்டமும் கொண்டு வர வேண்டாம். இருக்கிற திட்டங்களையாவது காப்பாற்றலாம் அல்லவா? அதையும் செய்ய மாட்டார்கள். கால்வாயின் தரைப்பகுதியையும் பக்கவாட்டிலும் கான்கிரீட் போடும் திட்டத்தை உருவாக்கினார்கள். தண்ணீர் நிலத்தில் இறங்கிவிடுகிறது; அதனால் கடைமடையில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு வந்து சேர்வதில்லை என்று காரணத்தைச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது. கடைமடைப் பகுதி பழைய பொதுப்பணித்துறை அமைச்சரின் தொகுதி. அதனால் அந்தத் தொகுதியினரை குளிரூட்டுவதற்காக இந்தத் திட்டத்தை கொண்டு வந்தாராம். கான்க்ரீட்டைப் போட்டு வாய்க்காலின் இருநூறு கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் என்னதான் நாசமாகப் போனால் என்ன? அவனவன் தொகுதியில் வாக்கு வாங்கினால் போதுமல்லவா? நல்லவேளையாக அமைச்சரை டம்மியாக்கினார்கள். இப்பொழுது அந்த கான்க்ரீட் திட்டம் என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

மேட்டூரிலும் தஞ்சாவூரிலும் காவிரியின் இருமருங்கிலும் நெல்லுக்கு இறைக்கும் தண்ணீரில் நான்கில் ஒரு பங்கை மற்ற ஊர்களுக்கு இறைத்தால் போதும். அவ்வளவு நீரை இறைக்கிறார்கள். நீர் இருக்கிறதென நெல்லும் கரும்பும் மஞ்சளும் பயிர் செய்து ஒரு பக்கம் கொழித்தால் இதே தமிழகத்தில் இன்னொரு பக்கம் காய்கிறார்கள். நெல்லையும் கரும்பையும் பயிரிட வேண்டாம் என்று அர்த்தமில்லை. தொழில்நுட்பம் எவ்வளவோ தூரம் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற நீர் குடிக்கும் பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசன முறையை ஏன் அரசாங்கம் முயற்சிப்பதில்லை? வேளாண்மைத் துறையினரிடம் பேசிப் பாருங்கள். ‘அதெல்லாம் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்பார்கள். நாம் நம்பிக் கொள்ள வேண்டும்.

நீர் இருக்கும் இடங்களில் எல்லாம் அள்ளி இறைக்கப்படும் நீரை மிச்சப்படுத்துவதற்கான எந்தச் செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓரளவுக்காவது நீர் மேலாண்மையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நீர் வளத்தை வறண்ட பகுதிகளில் பரவலாக்கும் முன்னெடுப்புகளை யோசிக்க வேண்டும். டாஸ்மாக்கிலும், மீத்தேன் வாயுத் திட்டத்திலும் செலுத்தும் கவனத்தில் பாதியையாவது நீர் மேலாண்மையில் செலுத்தலாம். தஞ்சாவூர் பசுமையடிக்கிறது, நாகர்கோவில் செழிக்கிறது என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். ராமநாதபுரம் காய்கிறது. திருப்பூர் தேய்கிறது என்பதையெல்லாம் டீலிங்கில் விட்டுவிடுவோம்.

நீர் வளத்தை ஒழுங்குபடுத்தவில்லையென்றால் நிலைமை படு மோசமாகிவிடக் கூடும். தண்ணீர் வசதியுள்ள நிலங்கள் கிட்டத்தட்ட ஏக்கர் முப்பது லட்சங்களுக்கு விற்கிறது. காசு வைத்திருக்கும் கறுப்புப் பண முதலைகள் கொண்டு வந்து கொட்டி நிலத்தை வாங்கிவிடுகிறார்கள். விவசாயம் செய்கிறார்களோ இல்லையோ அவர்கள் வருமான வரித்தாக்கல் செய்யும் போது நஷ்டக்கணக்கு காட்டுவதற்கு அந்த நிலம் தேவைப்படுகிறது. நீர் வசதி இல்லாத நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் கொத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள். கடைசியில் எப்படிப் பார்த்தாலும் விவசாயம் நிலம் நாசமாகிக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயி நம்பிக்கை இழந்து வருகிற லாபத்துக்கு விற்றுவிட்டுப் போகிறான்.

இதையெல்லாம் அதிகார வர்க்கம் கண்டு கொள்வதாகவே தெரிவதில்லை. 

குளம் நிரம்பிக் கொண்டிருந்த போது இத்தனை வருடங்களாகக் காய்ந்து கிடந்த விவசாயிகளின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! மண்ணைக் கரைத்துக் கொண்டு நீர் ஓடி வருகிறது. நிலம் முழுவதும் கருவேல முட்கள். பட்டால் கிழித்துவிடும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கழுத்து வரைக்குமான நீரில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தார்கள். அடுத்தவர்களின் முகத்தில் நீரை அள்ளி இறைக்கிறார்கள். விவசாயி இவ்வளவு சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததில்லை. அரசாங்கம் பார்த்து நினைத்தால் நீர் வளத்தைக் காப்பாற்றி விவசாயியின் சிரிப்பை நிரந்தரமாக்க முடியும். ஆனால் அதையெல்லாம் செய்வார்களா என்று தெரியவில்லை. மழை பெய்கிற போது அரசாங்கம் விட்டுவிடும். மழை இல்லாத காலங்களில் கர்நாடகாவிடம் கையேந்தப் போவார்கள். இல்லையென்றால் சண்டைக்கு போவார்கள்.