Oct 26, 2014

குழந்தைகளுக்கு எப்படி கதை சொல்வது?

வணக்கம் மணிகண்டன்,

நலமா?

அலிஸா கார்சன் பற்றிய உங்கள் பதிவு என் நீண்ட நாளைய எண்ண ஓட்டங்களோடு ஒத்திருந்ததால் இந்த மின்னஞ்சல்.

மே மாதம் முழுவதும் வேறெந்தப் பொழுது போக்கையும் திட்டமிடாமல் , குழந்தைகளுடன் மட்டுமே திட்டமிட்டுக் கழித்தேன். அண்ணனின் குழந்தைகள், மாமாவின் குழந்தைகள் எனது மகள் என 8 பேர், அவர்களை என் வீட்டில் ஒரு மாதம் வைத்துக் கொண்டாடினோம்.

பொள்ளாச்சி இலக்கிய வட்ட மே மாத நிகழ்வு கூட குழந்தைகளின் கலைக் கொண்டாட்டமாகவே நடத்தினோம்.

ஒரு மாதம் அவர்களுடனேயே செலவிட்ட போது, உண்மையில் நான் நிறையக் கற்றுக் கொண்டேன். எனது வலைப்பூவில் இதைப்பற்றி எழுத நினைத்து என் சோம்பேறித் தனத்தால் கைவிட்டேன். ஒரு மாதமும், தினமும் மாலையிலும், வார இறுதி நாட்களில் முழு நாட்களாகவும் எங்களது கொண்டாட்டம் இருக்கும்.

எங்களது தினப்படி அட்டவணை இதுதான்
  • திருக்குறள் படிப்பும்,எழுத்தும்
  • விளையாட்டு (பழைய கிராமத்து விளையாட்டுகள்)
  • விடுகதை
  • பொது அறிவு உரையாடல்
  • வாசிப்பு (குழந்தை இலக்கியம் / கதைகள் )
  • இரவாகிவிடும்.....பின் கதை சொல்லல்

வார இறுதியிலும் இது தொடரும் இத்துடன் சுற்றுலா சேர்ந்து கொள்ளும்.

இப்படியான நாட்களில் நான் உணர்ந்தது, உண்மையில் நமது குழந்தைகள் நமது நீதிக் கதைகளை மிகவும் விரும்புகிறார்கள். அது போதிக்கும் அறத்தை உணர்ந்து கொண்டு பதில் சொல்கிறார்கள். அவர்களது அடுத்த நாளின் எதாவதொரு செய்கையில் அது பிரதிபலிக்கவும் செய்கிறது. இவை எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் அறிவியலை அவர்கள் அறியச் செய்வது.

ஒவ்வொரு கதைக்கும் நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். அறிவியல் பூர்வமான விளக்கங்கள் அதற்குத் தேவையாக இருக்கின்றன. நான் அவர்களுக்காகவே அறிவியல் தகவல்களைப் படித்தும் பதில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொன்னதைப்போல மிகை எதார்த்தக் கதைகளை அவர்கள் ரசித்தாலும் நம் தலைமுறைக் குழந்தைகளைப் போல அவற்றை நம்பி ஏற்றுக் கொள்வதில்லை. அவற்றைக் கேள்விகளால் எதிர்கொள்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது நிலவு நம் துணைக்கோள் அங்கு மனிதன் வாழ முடியாது, பாட்டி வடையெல்லாம் சுட முடியாது என்று. இத்தனைக்கும் இரண்டாம் வகுப்பு மகள் இதைத் தெரிந்தே வைத்திருக்கிறாள் நீங்கள் சொன்னது போல. அவளுக்கு நிலவைப்பற்றிய அறிவியல் தகவல்களுடனே ஒரு கதை தேவைப்படுகிறது. மட்டுமல்லாமல், போட்டி நிறைந்த உலகில் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, ஒரு குழந்தை தன்னைத் தனித்துக் காட்ட அல்லது சோரம் போகாமல் இருக்க தனது பொது அறிவை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.

குழந்தைகளை விளையாட விடலாம், நல்லது. கதைகள் சொல்லலாம் மிக நல்லது. அறிவியலையும், பொது அறிவையும் இணைத்துச் சொல்வது இன்னும் நல்லது. சரிதானே?

தயாராகவே இருக்கிறார்கள். நாம் தான் கொடுக்க வேண்டும்.

நட்புடன்,
இரா.பூபாலன்

                                                                   ***

அன்புள்ள பூபாலன்,

வணக்கம்.

நீங்கள் குழந்தைகளோடு சேர்ந்து மே மாதத்தில் பெற்றுக் கொண்ட அனுபவம் மிகச் சிறந்த ஒன்று. அதை நீங்கள் ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த IQவுடன் இருக்கிறார்கள். இது பரிணாமத்தில் சாதாரண நிகழ்வுதான். அடுத்தடுத்த தலைமுறைகளில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியான பிரமிக்கத்தக்கதாகவே இருக்கும். நேற்றைய தலைமுறைக் குழந்தைகளுடன் இன்றைய தலைமுறைக் குழந்தைகளை நம்மால் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. 

பிறந்ததிலிருந்தே குழந்தைகள் அடுத்தவர்களை கவனிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தொடக்கத்திலிருந்தே அவர்களுக்காக நாம் நேரத்தை ஒதுக்கிவிடுவது நல்லது. Quantity of Time ஐ விடவும் Quality of Time என்பது முக்கியம் என்பார்கள். தினமும் பத்து மணி நேரம் குழந்தைக்காக ஒதுக்குகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டே ஃபேஸ்புக்கில் படம் போடுவதையும், டிவியில் நாடகங்கள் பார்ப்பதையும் விட வெறும் ஒரு மணி நேரம் வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவர்களுக்காக ஒதுக்குவதுதான் சரி.

கூர்ந்து கவனித்துப் பார்த்தால் இன்றைய தலைமுறைக் குழந்தைகளின் கிரகிக்கும் சக்தியும் கற்பனை சக்தியும் அபரிமிதமானது. நான்கு வயதுக் குழந்தையிடம் ஒருவாரம் டிவியையும் ரிமோட்டையும் கொடுத்தால் சோட்டா பீமின் கதையைத் துல்லியமாகச் சொல்லிவிடும். நான்கு கதைகளை அவர்களிடம் சொல்லிவிட்டு ‘நீ ஒரு கதை சொல்லு’ என்று கேட்டால் நமது நான்கு கதைகளைவிடவும் கூட நல்ல கதையொன்றை குழந்தையினால் சொல்லிவிட முடிகிறது. 

குழந்தைகளுக்கு கதை மிக மிக அவசியம். கதைகளின் வழியாகவே குழந்தையின் கவனிப்புத்திறன், கற்பனைத்திறன் போன்றவற்றை ஒரு சேர வளர்த்தெடுக்க இயலும். 

ஜப்பானில் வாழ்ந்து வரும் நண்பர் ஒருவரிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். பெரியவர்களிடம் எப்படிப் பழகுவது, சமூகத்தில் எப்படி நடந்து கொள்வது போன்றவற்றையெல்லாம்தான் ஆரம்பகால பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நமது பள்ளிகளில் இதையெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. நீதி போதனைகள் போன்றவையெல்லாம் இந்தக் காலக் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படுவதேயில்லை. ‘Finger on your lip' என்று சொல்லி குழந்தைகளை அமைதியாக அமர வைப்பதுதான் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும் அதிகபட்ச ஒழுக்கம்.

இன்றைய குழந்தை வளர்ப்பில் இப்படியான விட்டுப் போன விஷயங்களையெல்லாம் நம் கதைகளில் சேர்த்துச் சொல்லித் தரலாம். நாம் சொல்கிற கதைகளில் வானியலைச் சேர்க்கலாம், நீதி போதனைகள், பொது அறிவு, அடிப்படை அறிவியல் போன்றவற்றையெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு நம் அறிவைக் கொஞ்ச பட்டை தீட்டிக் கொள்வது அவசியம். குழந்தைகளுக்கு கதை சொல்வது மிக எளிமையான நுட்பம்தான். நம் குழந்தை எதைச் சொன்னால் ரசிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது வரையிலும்தான் சிரமம் இருக்கும். சில குழந்தைகள் பறவைகளைப் பற்றிச் சொன்னால் ரசிக்கக் கூடும். சில குழந்தைகள் வில்லன் அடி வாங்குவதை ரசிக்கக் கூடும், சில குழந்தைகள் அசாத்திய காரியங்களைச் செய்யும் நாயகனை ரசிக்கக் கூடும். இப்படி எதை அவர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் கதையின் போக்கை முடிவு செய்துவிடலாம்.

பறவைகளை விரும்பும் குழந்தைக்கு ‘ஒரு பெரிய பறவை..அது பேர் அஸன் முஸன்....எவனாச்சும் கெட்டவன் வந்தான்னு வை...Beak ஐ செம கூர்மையா செஞ்சுக்கும்...Beak ன்னா தெரியும்ல?’ இப்படி இடையிடையே ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மீண்டும் தொடர வேண்டும் ‘அஸன் முஸன்கிட்ட ஒரு மந்திரக்கல் இருந்துச்சு..அது Mars ல இருந்து எடுத்துட்டு வந்த கல்....அதுல உரசுச்சுன்னு வை...Beak கத்தி மாதிரி ஆகிடும்..போய் மண்டையிலேயே கொட்டும்...கெட்டவன் ஒரே ஓட்டம்...நிக்காம ஓடுவான் பாரு’ என்று நாமும் சிரிக்க வேண்டும். குழந்தை சிரிக்கத் தொடங்கிவிடும். இந்த நான்கு வரியிலேயே பறவையின் அலகு பற்றிச் சொல்லிவிட முடிகிறது. செவ்வாய் கிரகம் பற்றிச் சொல்லிவிட முடிகிறது. தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் எவ்வளவு விஷயங்களைக் கற்றுத் தர முடியும்? 

இதைத்தான் பெற்றோராக நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளின் முடிவெடுக்கும் திறன், ஆளுமைத் திறன், பாஸிட்டிவ் எனர்ஜி, தன்னம்பிக்கை போன்றவற்றையெல்லாம் நம் கதைகளின் வழியாகவே இயல்பாகச் செதுக்கிக் கொண்டிருந்தால் போதும். பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.