Oct 25, 2014

ஏன் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம்?

மெட்ராஸ் படம் வந்த மூன்றாவது நாளில் பெங்களூரில் பார்த்தேன். சுமாரான கூட்டம். சாதாரண மசாலா படமாகத்தான் தெரிந்தது. ஆனால் இங்கு இணையத்தில் ஆளாளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எழுதியதையெல்லாம் படித்துவிட்டுத்தான் அது ஒரு தலித் படம் என்றே தெரியும். ஒரு கவுண்டப்பையன் ஹீரோவாக நடிக்க, ஒரு கவுண்டர் தயாரித்திருக்கிறார். அவ்வளவுதான். ஆனால் அந்தப் படத்திற்கு நம் ஆட்கள் பூசிய சாயத்தை இப்பொழுது நினைத்தாலும் கண்ணைக் கட்டுகிறது. தலித்திய படமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஒரு மாபெரும் தலித்திய காவியத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும், நடிகர் கார்த்தியும் தங்களது வீட்டிற்குள் அருந்ததியரையும், ஆதிதிராவிடரையும் தயக்கமில்லாமல் விடுவார்களா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளாளுக்கு அவரவர் பிஸினஸ். ஆளாளுக்கு அவரவர் அரசியல்.

ஆனால் நம் வழக்கமே இதுதானே? 

ஏதாவதொரு விவகாரத்தை மூன்று நாட்கள் பிடித்துக் கொள்ள வேண்டியது. பிறகு நான்காவது நாள் வேறொன்று கிடைத்துவிடும். மெட்ராஸ் ஓய்ந்து கத்தி வந்தது போல. விமர்சனம் எழுதுகிற அத்தனை பேரும் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்கள். இனி அடுத்த ஒரு வாரத்திற்குள் இன்னொரு மேட்டர் சிக்கிக் கொள்ளும். பிறகு இதை விட்டுவிடலாம். 

சினிமா போகட்டும். ஈரோட்டில் ஒரு மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்த்தார் என்ற செய்தியை பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தோம். அவரது குழந்தையின் படத்தைப் போட்டு ‘கலெக்டருக்கு சல்யூட்’ என்று பாராட்டித் தள்ளினோம். இப்பொழுது அவரது பெயராவது ஞாபகமிருக்கிறதா? எனக்கு மறந்துவிட்டது. ‘நாங்க திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்க சமச்சீர் கல்வித்திட்டத்தில் உங்க பையனை சேர்த்து அதுக்கு விளம்பரம் கொடுக்கறீங்களா?’ என்று மிரட்டி தூக்கியடித்தார்களாம். இப்பொழுது அவர் எங்கேயிருக்கிறார் என்று கூடத் தெரியவில்லை.

காரைக்காலில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றது அல்லவா? ஒரு திமுக பிரமுகர் சம்பந்தப்பட்ட விவகாரம். இப்பொழுது என்ன ஆனது? குற்றவாளிகள் அநேகமாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது கொந்தளித்தோம். இப்பொழுது அந்தச் செய்தி முழுமையாக Fade out ஆகிவிட்டது. தர்மபுரியில் தொடரூர்திப் பாதையில் கிடந்த இளவரசனின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? திவ்யாவுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைந்ததா? 

இளவரசன் இருக்கும்வரை ‘எதிர்கால தலித் சமூகத்தின் அடையாளமே நீதான்’ என்றெல்லாம் ஏற்றிவிட்டார்கள். இப்பொழுது பெட்டிச் செய்தியில் கூட அவனுக்கு இடம் இல்லை. அன்புமணி தேர்தலில் வென்றார். பத்திரிக்கைகளுக்கு கவர் ஸ்டோரி கிடைத்தது என்பது தவிர அந்தச் சம்பவத்தின் விளைவுகள் என்ன? யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை.

ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக பெங்களூரில் ஆறு வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். பள்ளியிலேயே நிகழ்ந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து வீதிக்கு வீதி களமிறங்கினார்கள். பெரிய அளவில் பிரச்சினை வெடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். நான்கு நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை. அப்படியே நமுத்துப் போனது. இன்னமும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லையாம். அதை மறந்துவிட்டோம். ஆனால் சென்ற வாரத்தில் கூட மூன்று வயதுக் குழந்தையொன்றை Orchid என்ற பள்ளியில் எவனோ ஒருவன் வன்புணர்ந்திருக்கிறான். அந்தக் குழந்தை வீட்டிற்கு வந்து ‘அங்கிள் அடித்துவிட்டார்’ என்றுதான் அழுதிருக்கிறது. மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால் பாலியல் பலாத்காரம் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் பற்களால் கடிக்கப்பட்ட புண் ஆகியிருக்கிறது. மூன்று வயதுக் குழந்தைதான். குதறியிருக்கிறான்.

இனி ஒரு வாரத்திற்கு இது குறித்து போராட்டங்களை நடத்துவார்கள். ஒன்றாம் தேதி சம்பளம் வந்தவுடன் மறந்துவிடுவார்கள். 

சமூகத்தின் medulla oblongata வில் ஓங்கித் தட்டியிருக்கிறார்கள்.  ஊடகங்கள் உட்பட நம் எல்லோருக்குமே short term இல் நினைவிழப்பு நிகழ்கிறது. எந்த விவகாரத்தையும் பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்வதில்லை. சமூக வலைத்தளங்கள்தான் நம்மை அப்படி ஆக்கி வைத்திருக்கின்றன என்று இணையதளத்தைக் குற்றம் சாட்ட முடியாது. அதைப் பயன்படுத்துபவர்கள் மிஞ்சிப்போனால் இருபது சதவீதம் இருப்பார்கள். அதைத்தாண்டிய வெளியுலகமும் அப்படித்தான் இருக்கிறது.

வெறும் பரபரப்புக்காக மட்டுமே மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. தினசரிகள் ஒவ்வொரு நாளும் பற்றியெரியும் தலைப்புச் செய்தி வேண்டுமென எதிர்பார்க்கின்றன. வார இதழ்களுக்கு ஒவ்வொரு வாரமும் எக்ஸ்க்ளூசிவ் கவர் ஸ்டோரி வேண்டும். நமக்கு ஒவ்வொரு மணி நேரமும் சூடேற்றும் ஸ்டேட்டஸ் வேண்டும். 

மேனேஜ்மெண்ட்டில் ஒரு கான்செப்ட் சொல்வார்கள். ‘உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்று கேட்க வேண்டும். ஆமாம் என்ற பதில் வந்துவிட்டால் பிரச்சினையில்லை. அதை பிரதானமாக பேசி தன்னால் தீர்த்து வைத்துவிட முடியும் என்று உறுதியளிக்க வேண்டும். இல்லை என்ற பதில் வந்தால் ‘அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்று கேட்க வேண்டும். அவனுக்கும் பிரச்சினை இல்லையென்றால் ‘வேறு யாருக்கு பிரச்சினை இருக்கிறது?’ என்று கேட்க வேண்டும். யாருக்குமே பிரச்சினை இல்லையென்றால் அப்பவும் சோர்ந்துவிடக் கூடாது. நாமாகவே ஒரு பிரச்சினையை உருவாக்கிவிட்டு அதைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். 

நமது இருப்பை மற்றவர்களுக்கு இப்படித்தான் காட்டிக் கொண்டேயிருக்க முடியும். நம்மைச் சுற்றி தினம் தினம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறோம். பரபரப்பு இல்லாத ஒரு தினத்தையும் கூட நம்மால் சுலபமாக எதிர்கொள்ள முடிவதில்லை. எதையோ இழந்துவிட்டது போல ஆகிவிடுகிறது. அடுத்தவர்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டு உள்ளூர சந்தோஷமடையும் ஸேடிஸ மனநிலை, பல பிரச்சினைகளை ஒரே சமயத்தில் குதப்பிக் கொண்டிருக்கும் மனச்சிதைவு நிலை என எல்லாவற்றையும் ஒரு சேர அடைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் விளைவுகளைப் பற்றி எதுவுமே யோசிப்பதில்லை. எதற்காக இந்தக் கொஞ்ச நேர கிளுகிளுப்புக்காக மனம் ஏங்குகிறது? எப்படி இதிலிருந்து விடுபடப் போகிறோம்? விடுபடுவது சாத்தியம்தானா? இன்னும் பதினைந்து வருடங்களில் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும்? நமது குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கலாம்தான். ஆனால் அது ரிஸ்க். விட்டுவிடலாம்.

பரபரப்பான டாபிக் ஒன்றை யோசித்துவிட்டு வருகிறேன். இருங்கள்.