Oct 10, 2014

ஏன் சைக்கோவாகிறார்கள்?

அணுசக்தி குறித்து சுவாரசியமாக எழுதியிருந்தது போலவே சைகோ கொலையாளிகள் பற்றியும் போண்டாமணி எழுதியிருக்கிறார்.   ‘நீதான் போண்டாமணியா’ என்று ஒருவர் கேட்டிருந்தார். இல்லை. போண்டாமணியின் உண்மையான பெயர் சுப்ரமணியன். சென்னையில் இருக்கிறார். அவ்வப்பொழுது மின்னஞ்சல்கள் அனுப்புவார். இப்பொழுது சுவாரசியத்துடனான தகவல்களைத் திரட்டி அனுப்புகிறார்.

அவருடைய கடிதம்-

                                                             ***

ஒரு சாதாரண குழந்தை பின்னாளில் சைகோவாக மாற கீழ்க்கண்ட விஷயங்கள் தேவை.
 • மிக மோசமான பெற்றோர்கள் (எப்பவும் அடிக்கும் அப்பா; அடங்காப்பிடாரி அம்மா .. etc )
 • கேலி செய்யும் , கூட சேராத Classmates.
 • சிறுவயதில் பாலியல் தொந்தரவுகள் அல்லது கொலை போன்ற அசம்பாவிதங்களைக் காண நேருதல்.
 • செக்ஸ் வாழ்கையில் கேள்விகுறி.
 • வெகு சில தருணங்களில் மூளை கோளாறு.

இவை ஐந்தில் ஏதேனும் ரெண்டு இருந்தாலே சமுகத்திற்கு ஒரு சைகோ கில்லர் ரெடி.

ஏன் கொலை செய்கிறார்கள் ?

சிலர் செக்ஸூக்காக செய்கிறார்கள். சிலர் சில நிமிட சந்தோசத்திற்காக செய்கிறார்கள். சிலர் ‘அந்த ஆளை (அல்லது பெண்ணை) பிடிக்கவில்லை அதனால் கொன்றேன்’  என்கிறார்கள். என்னை வேறு சக்தி ஆட்கொண்டது அது என்னிடம் ‘கொல் கொல்’ என்றது அதனால் கொன்றேன் என்கிறார்கள்.அந்த நபரை பார்த்தது தான் தெரியும் கண் விழித்தால் என் அருகே செத்து கிடக்கிறான் என்கிறார்கள். அந்த நபர் என்னை இடித்து விட்டு சாரி கேட்காமல் சென்றான் அதனால் கொன்றேன் என்கிறார்கள். ஆயிரம் காரணம் சொன்னாலும் கொலை செய்வது தவறு என்பது ஒரு உயிர் அவர்கள் கைகளில் ஊசல் ஆடும்போது அவர்களுக்கு தெரியாது. ஒரு பொம்மையை உடைக்கும் குழந்தையின் மனநிலையை ஒத்து இருக்கும் அவர்கள் மனநிலை.

சில சைகோ கொலைகாரர்களை கண்டுபிடிக்க முடியாது. தடயமே இருக்காது. வருவான் கொல்வான் செல்வான். தான் தான் செய்தேன் என்பதற்கு சாட்சி எதாவது விட்டு செல்வான். அந்நியன் விக்ரம் மாதிரி.

சிலர் விளம்பர பிரியர்கள். தனக்கு ஒரு பேர் கொடுத்து கொள்வார்கள். தன்னை பற்றி பொது ஜனங்களுக்கு சொல்லி ஆகவேண்டும் என்பார்கள். சொல்லலேன்னா கொலை விழும் என்பார்கள்.

சிலர் போற போக்கில் போட்டு தள்ளி விட்டு கமுக்கமாக இருப்பார்கள். சைலென்ட் கில்லர். கொலை யார் செய்தது ஒரு ஆளா வெவ்வேறு ஆட்களா என்பது கூட தெரியாது. ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு டிசைன். போலீஸ் கடந்து சாவுவாங்க யார் இதுக்கெல்லாம் காரணம் ? என்று.

குழந்தைகளும் பெண்களும் தான் அவர்களுக்கு ஈஸி டார்கெட். ஊனமுற்றவர் என்றால் இன்னும் சுலபம்.

ஒரு சைகோ கில்லர் ஒரு முழுமையான கில்லர் ஆக பல stageகளை கடந்து வருகிறார்.(என்னோட தியரி படி)
 1. சிறு வயதில் கேவலப்படுதல் அல்லது கொடுமைபடுத்தப்படுதல் 
 2. தனிமையில் இருத்தல்
 3. முதல் கொலை (தப்பும் தவறுமாக)
 4. Silent மோடு - போலீஸ் தன்னை கண்டு பிடித்து விடுமோ என்ற பயம்.
 5. தன்னை கண்டுபிடிக்கவில்லை என்றால் அடுத்த முயலுக்காக காத்திருத்தல்.
 6. முயல் கிடைத்தவுடன் தவறில்லாத தடயமில்லாத அடுத்த கொலை.
 7. Silent மோடு - சென்ற முறையை விட இந்த முறை குறைந்த நேரம்
 8. Goto பாயிண்ட் no 5 ; repeat .போலீஸ் கண்டுபிடிக்கும் வரையில்.
சில சீரியல் கில்லர்ஸ் போலீஸூக்கும் அவர்களது lie-detectorக்கும் டிமிக்கி கொடுத்த கதை எல்லாம் உண்டு. அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை தூக்கில் போட்ட பிறகு 'ஏன்யா அவன போய் கொன்னீங்கன்னு ?’ லெட்டர் போட்ட கதையும் உண்டு.

எனக்கு பிடித்த (நேரில் பார்க்க விரும்பாத) சில சைகோக்கள் :

1.Andrei Chikatilo 

வாத்தியார். பொலிடிகல் பார்ட்டி தொண்டர். செக்ஸ் வாழ்க்கை சரியில்லை. சைகோவா மாறிட்டார். இப்ப தெரிந்த வரைக்கும் 50 சொச்சம் கொலை செய்திருக்கிறார். Cannibalistic - மனித மாமிசம் சாப்பிடுபவர். போலீஸிடம் கிட்ட மாட்டியும் குடும்ப விவரத்தை சொல்லியும், பொலிடிகல் பார்ட்டி பேரை சொல்லி எஸ் ஆகிட்டாரு. பின்னதலைல ஒரு Bullet கொடுத்து மேல அனுப்பி வெச்சுட்டாங்க.

2.Jeffrey Dahmer 

Gay கில்லர்.Cannibalistic. zombie man உருவாக்குற ஆசை ல 17 சின்ன பசங்களை கொன்னுட்டார்.இவர் வீட்லேந்து மண்டை ஓடும் எலும்பு கூடுமா எடுத்து இருக்காங்க.இவர் கிட்ட மாட்டுன ஒருத்தர் ஓடி போய் ரோட்டுல மயக்கமாய் விழுந்து, போலீஸ் இவன் வீட்டுக்கு எடுத்துட்டு போய் "பத்திரமா பாத்துக்கங்க" கொடுத்துட்டு வந்துட்டாங்க. பாவம்ல அவன். கூட இருந்த கைதி இவரை போட்டு தள்ளிட்டான்.

3.Dennis Rader 

சர்ச்க்கு தவறாமல் போகும் இரண்டு குழந்தைகளின் தந்தை. BTK Killer (Bind, Torture, Kill)என்று தன்னை பெருமையாக அழைத்து கொள்வார். போலீஸ் கிட்ட தான் கொலை செய்த இடத்தில் இருந்து எடுத்து வந்த பொருட்களை அனுப்பி திகில் ஊட்டுவார்.காலையில் ஆபீஸ் , மதியம் ஒரு கொலை செய்து விட்டு, திருப்பி  ஆபீஸ் போய் வேலை பாத்து இருக்கிறார். 10 victims. 17 வருஷமா சிக்காம ஒரு floppy diskஐ போலீஸ்க்கு அனுப்பி சிக்கி கொண்டார். 175 வருஷம் தான் சிறை தண்டனை. அதுக்கு மேல உயிர் இருந்தா வெளிய போகலாம்.

4.Zodiac Killer

இவர் உயிரோடு இருக்கிறரா இல்லையா என்பதே தெரியாது. 5 பேரைக் கொன்று , 2 பேர் சாவின் விளிம்பு வரை சென்று திரும்பி இருக்கிறார்கள். தொழில் சுத்தம். யாராலும் இவரை அடையாளம் சொல்ல முடியவில்லை. இவர் 3 கடிதங்கள் போலீஸுக்கு அனுப்பி இருக்கிறார் puzzle டைப். அதை solve செய்தால் இவரை பற்றி தெரிய வரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒன்று solve செய்துவிட்டார்கள்.  இன்னமும இரண்டு அப்படியே இருக்கின்றன. அதனாலேயே இவருக்கு grace.

5.John Wayne Gacy

Gay .சின்ன பசங்களை கொன்று வீட்டுக்கு அடியிலேயே புதைச்சு இருக்காரு. 33 பேர்கள்..அரசியல் ஈடுபாடு உண்டு. கோமாளி மாதிரி வேஷம் அணிந்து பர்த்டே பார்ட்டி க்கு போவார். இவர் வீட்டில் தோண்டத் தோண்ட பிணம் வந்திருக்கிறது. விஷ ஊசி ஏத்தி க்லோஸ் செஞ்சுட்டாங்க- ஆளையும், கேஸையும்.

6.Ted Bundy 

Lawyer. அழகன். பார்த்தால்  ‘இவனா கொலை செஞ்சான்னு’ கேட்கலாம் .ஆனா 35 கொலை பண்ணி இருக்கிறான். எல்லாம் இளம்பெண்கள். ரெண்டு தடவை போலீஸிடமிருந்து எஸ் ஆகி இன்னும் கொடூரமா கொலை செஞ்சு இருக்கிறான். மாறு வேஷத்தில் மன்னன். மின்சார நாற்காலி உபயத்தில் ஜீசுஸ்லோக பதவி அடைந்தார்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்தியா போன்ற நாட்டில் சைகோ கில்லர்ஸ் உருவாகும் நாள் தூரத்தில் இல்லை. பெருகி வரும் விவாகரத்துகளும் , புருஷன்-பொண்டாட்டி சண்டைகளும் , குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும் குறையுமானால் அதை தவிர்க்கலாம்.

ஒரு குழந்தை எதிர்கால சைகோ என்பதை கண்டு பிடிக்க முடியுமா ? - சில symptoms வைத்து பொதுவாகச்  சொல்லலாம்.
 • சிறு வயதில் தூக்கத்தில் தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல். (10% சான்ஸ்)
 • சிறு எறும்பு, பறவை, நாய் போன்றவற்றை கொடுமை படுத்துதல். (20% சான்ஸ்)
 • வெளி வர முடியாத மனஅழுத்தம். (20% சான்ஸ்)
 • பயந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் மறைத்தல். (10% சான்ஸ்)
 • பெற்றோர்களை வெறுத்தல். (10% சான்ஸ்)

எல்லாருமே ஒரு கட்டத்தில் சைகோ மோடுக்கு போய் இருப்போம்- குழந்தை பருவத்தில். அதிலேயிருந்து வெளியே வருகிறோமா இல்லையா என்பது தான் நீங்கள் சைகோவா இல்லையா என்பதை பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

உங்களுடன் இருக்கிற ஒருத்தன் சைகோவா இல்லையா என்பதை அவன் சைகோ மோடுக்கு போகும் வரை கண்டு பிடிக்க முடியாது. ஏன்னா அவன் உங்களை விட புத்திசாலி. அவன் சைகோ மோடுக்கு போய்ட்டா நீங்க காலி. (அட அட அட.. என்னா ரைமிங்.)

                                                 ***

இந்த கடிதத்தை பிரசுரித்த பதினைந்து நிமிடங்களில் ரத்தினக்கனியின் பின்வரும் மின்னஞ்சல் வந்ததால் அதனையும் இதே பதிவோடு பின்னிணைப்பாகச் சேர்த்துவிடுகிறேன்.

அன்புள்ள மணி அண்ணன் அவர்களுக்கு,

வணக்கம். நலமுடன் இருக்கின்றீர்களா?

தங்களின் "ஏன் சைக்கோவாகிறார்கள்?" பதிவை தற்போது வாசித்தேன். இதற்கு முன்பே தங்களுக்கு எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மை மற்றும் மறதியினால் எழுதவில்லை. மன்னிக்கவும் !

சைக்கோ கொலைகாரர்கள் பற்றி அறிந்து கொள்ள கார்டூனிஸ்ட் மதன் அவர்களின் "மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்" என்ற புத்தகத்தில் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளது. இது ஜூனியர் விகடனில் தொடரை வந்து பிற்பாடு புத்தகமாய் வெளியிடப்பட்டது.

எனக்கு மதனின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். அந்த நடை மிகவும் சுவாரசியமாக இருக்கும். தகவல்களை அள்ளித் தெளித்திருப்பார் என்பது எனது கருத்து. இதுவரை அவரின் நான்கு புத்தகங்கள் படித்துள்ளேன். அதிலும் நான் புத்தகம் என்று முதன் முதலில் வாங்கியது "மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்" தான். நான் படித்த மற்ற மூன்று புத்தகங்கள்:

1. கிமு கிபி
2. வந்தார்கள் வென்றார்கள்
3. மனிதனும் மர்மங்களும்

இவற்றை ஏன் கூறுகின்றேன் என்றால் திரு. போண்டா மணி என்ற சுப்ரமணியன் அவர்கள் அனுப்பிய தகவல்கள் இந்த புத்தகத்தை வாசித்து விட்டு சுருக்கமாக தொகுப்பு எழுதியது போல் தோன்றியது. அவரும் அவ்வாறு செய்திருந்தால் மகிழ்ச்சியே. தங்களுக்கு நேரம் இருப்பின் பின்வரும் சுட்டியில் சொடுக்கினால் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் புத்தகத்தை மின்-புத்தகமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.