Oct 9, 2014

பெரிய கம்பசூத்திரமா?

கவிதையைப் பற்றிய குறிப்பு என்றவுடன் ப்ரவுசரை மூடாத தங்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிட்டட்டும். 

‘கவிதையா? அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்’ எனச் சொல்பவர்கள் அதிகம். அது ஒருவகையில் ஃபேஷனும் ஆகிவிட்டது. ஏன் இப்படி என்பதையெல்லாம் இன்னொரு நாள் யோசித்துக் கொள்ளலாம்.

கவிதை அல்லது பாடல் என்பதுதான் நம் ஆதி வடிவம். பிறப்பிலும் பாடல், சண்டையிலும் பாடல், பொழுது போக்கிலும் பாடல், இறப்பிலும் பாடல் என்று காலங்காலமாக அப்படியே வாழ்ந்தவர்கள் நாம். உரைநடை வடிவில் எழுதப்படுகிற சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாம் வெகு சமீபத்தில்தான் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அப்படி ஆதிகாலத்து வடிவமான பாடலும் கவிதையும் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற பெயர்களை எல்லாம் சூட்டிக் கொண்டு இப்பொழுது கவிதை என்றாலே தலை தெறிக்க ஓடுபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது.

ஒரு கவிதைத் தொகுப்பை எவ்வளவு பிரதிகள் அச்சடிக்கிறார்கள் என்று பெரிய பதிப்பகங்களில் விசாரித்தால் மூச்சடைத்துவிடும். வெறும் முந்நூறுதான். ஆனால் அந்த முந்நூறு விற்கவே மூக்கால் அழ வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இந்தச் சூழலில்தான் தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய லட்சத்தைத் தொடுகிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கவிஞர்கள் ஆளுக்கு ஒரு பிரதி வாங்கினாலே கூட பல்லாயிரம் பிரதிகள் அடிக்க வேண்டியிருக்கும். ம்ஹூம். என் கவிதையைத் தவிர வேறு எந்தக் கவிதையும் வாசிக்கமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரியும் பல கவிஞர்களை எனக்குத் தெரியும். கவிஞர்களே இப்படியென்றால் வாசகர்களைக் கேட்க வேண்டுமா? ‘ஆளை விடுய்யா சாமி’ என்று கும்பிடு போட்டுவிடுகிறார்கள்.

உண்மையில் இன்றைக்கு எழுதப்படுகிற கவிதைகள் பெரிய கம்பசூத்திரம் எல்லாம் இல்லை. சற்று பழகிக் கொண்டால் போதும்- பிடிபட்டுவிடும். கவிதையில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. உங்களுக்கு புரிந்த வகையிலேயே எனக்கு புரிய வேண்டும் என்றில்லை. எனக்கு புரிந்த மாதிரியே இன்னொருவருக்கு புரிய வேண்டும் என்பதில்லை. ‘பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்ன்னும் சொல்லலாம்’ என்கிற மாதிரிதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல்.

உதாரணமாக, கவிதையில் இருள் என்ற சொல் வருகிறது என்றால் அதை நான் இரவு என்று பார்க்கிறேன். நீங்கள் கருப்பு என்று பார்க்கிறீர்கள். இன்னொருவர் மனதில் இண்டிக்கிடக்கும் துக்கங்கள் என்று பார்க்கிறார். சொல் ஒன்றுதான் பொருள் வேறு. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் கவிதையின் அடிப்படையான கான்செப்ட். இதை மனதில் வைத்துக் கொண்டால் ‘கவிதை எனக்கு புரியலையே’ என்று சொல்லவேண்டிய அவசியமே இருக்காது.

தினமும் ஒரு கவிதையைப் பற்றி பேசலாம் என்று ஐடியா. அதோடு சேர்த்து கவிதையின் நுட்பங்களைப் பற்றி விவாதிக்கலாம். கவிதையின் போக்கை கவனிக்கலாம். கவிதையின் புரிதலில் இருக்கும் ஜிகினாக்களை ரசிக்கலாம். இது ஒரு விளையாட்டு மாதிரிதான் இருக்கும். மிக எளிமையான முறையில் கவிதையை அணுகுவதான முயற்சி. எந்தவிதமான கெத்து காட்டுவதான பாவனையையும் செய்யப் போவதில்லை என்ற உறுதியைக் கொடுத்துவிட்டு முதல் கவிதை-

குளிர்கண்ணாடிகளை
அணிந்துகொண்டேன்
சாயம் பூசப்பட்ட உலகம்
ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது
சாயம் பூசப்பட்ட மனிதர்கள் 
என் கண்களை உற்றுப் பார்த்தனர்
ஒருவன் என்னைக் கேட்டான்
ஏன் இந்தக் கண்ணாடி
ஆயிரம் காரணங்களை
நான் கூற எத்தனித்தேன்
உண்மையை அவன் நம்பவே இல்லை
கண்ணாடியைக் கழற்றி வைத்தேன்
உலகம்
ஒரு விதத்தில் அழகாகவே இருந்தது


ஆத்மாநாம்மின் இந்தக் கவிதை வாசிப்பதற்கு எளிமையான கவிதைதான். புரியவில்லை என்றெல்லாம் டபாய்க்க முடியாது.

குளிர்க் கண்ணாடியை அணிந்திருக்கிறார். உலகம் அழகாகத் தெரிகிறது. எதிர்ப்படுபவன் எல்லாம் சாயத்தோடு தெரிகிறான். ஒருவன் ஏன் இந்தக் கண்ணாடி அணிந்திருக்கிறாய் என்று கேட்கிறான். ஆயிரம் காரணங்களைச் சொல்ல முயற்சிக்கிறார். அவன் நம்பவில்லை. போடா என்று கழட்டி வைக்கிறார். இப்பொழுதும் உலகம் அழகாகத்தான் இருக்கிறது. அவ்வளவுதான்.

இது நேரடியான புரிதல்.

கொஞ்சம் வேறு வகையிலும் புரிந்து கொள்ளலாம்.

இங்கு ஏதோவொரு விதத்தில் போலியாக நடித்துக் கொண்டிருக்கிறோம். அந்த போலித்தனம்தான் குளிர்கண்ணாடி. போலித்தனத்தோடு பார்க்கும் போது உலகம் அழகாகத் தெரிகிறது. எதிரில் இருப்பவர்கள் எல்லாம் போலியாகவே தெரிகிறார்கள். ஒருவன் எதற்கு இத்தனை போலித்தனம் என்று கேட்கிறான். என்ன காரணம் சொன்னாலும் நம்புவதில்லை. போலித்தனத்தை கைவிட்டுப் பார்க்கிறார். அப்பொழுதும் உலகம் அழகாகத்தான் தெரிகிறது.

இது அதே கவிதையில் வேறொரு புரிதல். இந்தக் குளிர்க்கண்ணாடி என்பதை போலித்தனம் என்று நான் பார்க்கிறேன். ஆனால் போலித்தனத்துக்கு பதிலாக வேறொரு வகையிலும் புரிந்து கொள்ளக் கூடும். இப்படி ஆளாளுக்கு ஒருவகையில் இந்தக் கவிதையை புரிந்து கொள்ள சாத்தியங்கள் உண்டு. 

கவிதையை புரிந்து கொள்கிறோம். சரி. அதனால் என்ன பிரயோஜனம்? பிரயோஜனமில்லாமல் இருக்குமா? கவிதைகள் நமக்குள் உருவாக்கும் விளைவுகள் என்ன? தாக்கங்கள் என்னென்ன? ஏன் கவிதை என்ற வடிவம் தேவைப்படுகிறது? இப்படியான பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த கவிதைகளில் பதில்களைத் தேடிப் பார்த்துவிடலாம்.

(ஆத்மாநாம் தமிழ் கவிதைகளில் தவிர்க்க முடியாத பெயர்.  கவிதைக்கான ஒரு வரிசையை எழுதினால் அவரது பெயரும் இடம் பெற்றுவிடும். அவரது அத்தனை கவிதைகளும் பிரமாதமானவை என்று சொல்ல முடியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு என்னவோ இருக்கிறது என்பதான எண்ணத்தை உருவாக்கிவிடும் கவிதைகள் அவை. முப்பத்து மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். 1951 ஆம் ஆண்டில் பிறந்தவர் 1984 ஆம் ஆண்டு மனோவியல் பிரச்சினைகள் காரணமாக முடிவைத் தேடிக் கொண்டார்)