Sep 28, 2014

I Love Bangalore

நேற்று திண்டுக்கல்லில் இருந்தேன். கல்லூரியொன்றில் பேச வருவதாக ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அது. முந்தின நாள் பெங்களூரிலிருந்து கிளம்பும்போதே கடும் போக்குவரத்து நெரிசல். பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் இருக்கும் ஹொசா ரோடு முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. வண்டிகள் சாலையை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. கர்நாடக போலீஸார் அவர்களை அனுமதிக்க முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் களோபரத்தில் அந்தப் பகுதியைத் தாண்டவே வெகுநேரம் ஆகிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் சற்று யோசனையாக இருந்தது. நாளைக்கு தீர்ப்பு குண்டக்க மண்டக்க வந்துவிட்டால் திண்டுக்கல்லிலேயே சிக்கிக் கொள்ள நேரிடக் கூடும். கல்லூரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாடிக்கொம்பு வரைக்கும் சென்று வரலாம் என்றிருந்தேன். அது நாயக்கர் காலக் கோவில். அதெல்லாம் தேவையில்லை என்று தோன்றியது. வீடு திரும்புவதற்கான சாத்தியங்களை மட்டும் பார்க்க வேண்டும்.

மதியம் ஒரு மணிக்கு தலப்பாக்கட்டியில் பிரியாணியை விழுங்கத் தொடங்கும் போதே கடைகளை மூடத் துவங்கியிருந்தார்கள். அவசர அவசரமாகக் கிளம்பினால் பேருந்து நிலையம் வெறிச்சோடத் துவங்கியிருந்தது. ‘நீ அங்கேயே இருக்கிறதுதான் நல்லது’ என்றார்கள். திண்டுக்கல்லில் தனியாக என்ன செய்வது? மதியம் இரண்டரை மணிக்கு ஒரு பாசஞ்சர் தொடரூர்தி இருப்பதாகச் சொன்னார்கள். பிடித்துக் கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்தவர்களின் செல்போன்கள் ஒளிரத் தொடங்கின ‘கரூரில் கலவரமாம்...தஞ்சாவூரில் ஒரு கடையைக் கொளுத்திட்டாங்களாம்...வேலூரில் ஒருத்தனை கொன்னுட்டாங்களாம்’ என்ற தகவல்கள் அந்தத் தொடரூர்தியை நிரப்பிக் கொண்டிருந்தன. பயணிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து விசாரித்தார்கள். எல்லோரிடமும் ஒரு கலவர பயம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வந்திருந்த பெண்களும், முதியவர்களும் சற்று அதிகமாக மிரண்டிருந்தார்கள். ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றிருந்த போது எதிர் திசையில் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த இன்னொரு வண்டிக்கு மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் திரும்பவும் தங்களின் ஊருக்கே சென்றுவிடுவதுதான் நல்லது. வண்டியில் கூட்டம் குறைந்தது.

ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியில் ஏறியவர்களை விசாரிக்கத் தொடங்கினார்கள். பேருந்துகள் எதுவும் ஓடவில்லை; எல்லா ஊர்களிலுமே கடைகள் மூடப்பட்டுவிட்டன என்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. அனைத்து ஊர்களிலுமே பேருந்துகள் எரிகின்றன என்பதெல்லாம் வதந்திதான். நம் மக்கள் வெகுவாக பயந்துவிடுகிறார்கள். இந்த செல்போன்களும் அந்த பயத்துக்குள் பெட்ரோல் ஊற்றுகின்றன. வதந்திகளுக்கு றெக்கை கட்டிவிடுவதில் செல்போன்களுக்கு நிகர் செல்போன்கள்தான். அமைச்சர் செந்தில்பாலாஜியை முதலமைச்சராக அறிவித்துவிட்டார்கள் என்று கூட இரு கரூர்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். அது அவரது விருப்பம் போலிருக்கிறது. வதந்திகளைத் தவிர, தாண்டி வந்த ஒவ்வொரு ஊருமே அமைதியாகத்தான் இருந்தன. மக்களின் பயம் மட்டும்தான் ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருந்தது. 

வெள்ளியணை என்ற ஊரில் தொடரூர்தி நின்று கொண்டிருக்கும் போது யாரோ ஒரு குழுவினர் வண்டியை நிறுத்திவிட்டார்கள் என்றார்கள். பெட்ரோல் குண்டுகளை ஓடுகிற வண்டிக்குள் வீசுகிறார்கள் என்றார்கள். அத்தனையும் புருடா. வண்டி ஈரோடு வரும் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கிருந்துதான் ஆரம்பமானது. பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்குக் கூட பேருந்துகள் இல்லை. ஆட்டோவில் இரு மடங்காக காசு கேட்கிறார்கள். ‘இந்த வாடகைக்கு ஆசைப்பட்டு அங்க இங்க போய் யாராவது வண்டியை நொறுக்கினா என்ன சார் பண்றது?’ என்று தங்களின் அதிக வாடகைக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஆனால் வண்டியில் ஏறும் வரைக்கும்தான். ஏறி அமர்ந்ததும் ‘ஈரோடு எப்படி இருக்குங்குதுங்கண்ணா?’ என்றால் அவர் சிரிக்கிறார். நாற்பது அல்லது ஐம்பது பேர்கள் சேர்ந்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே கடைகளையெல்லாம் அடைத்திருந்தார்கள். குறிப்பாக டாஸ்மாக்கை மூடியிருந்ததால் அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் எதுவுமே நடக்கவில்லை. அதோடு சரி. ஆனால் ஆட்டோ டிரைவர் அவர் பங்குக்கு ‘பஸ்ஸ்டேண்டுலதான் ஒரு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம்’ என்றார். ஆனால் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து பார்த்த போது திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள்தான். வண்டி வாகன வசதி இருப்பவர்களை யாராவது வந்து அழைத்துச் செல்கிறார்கள். இல்லாதவர்கள் பாடு பெரும்பாடு. 

ஒரு பெண்மணி குழந்தையை மருத்துவரிடம் காட்டுவதற்காக ஈரோடு வந்திருக்கிறார். செல்போனில் பேட்டரி சார்ஜ் இல்லை. குழந்தைக்கு பால் அல்லது பழம் வாங்கக் கூட கடையில்லை. அந்தியூருக்குச் செல்ல வேண்டும். எப்படிச் செல்வதென்று தவித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வயதான பெண்மணி கையில் வெறும் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு திண்டல் செல்ல வேண்டும் என்று நின்று கொண்டிருந்தார். ஆட்டோவும், மினிவேனும் குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஏறுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் தயாராக இருந்தார்கள். அப்படியிருந்தும் அந்த இடத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று கொண்டிருந்தார்கள். கடைகளை மூடிவிட்டார்கள். பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஈரோடு மாநகராட்சியில் ஏழரை மணி வரைக்கும் தெருவிளக்குகள் எரியத் தொடங்கவில்லை. அதற்கு பிறகு எரித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அது வரைக்கும் ஊரே இருளடைந்து கிடந்தது. அங்கு எவன் நினைத்தாலும் திருட முடியும். எவன் நினைத்தாலும் உரச முடியும்.  ‘அம்மா சிறைக்குச் செல்வதால் தமிழகமே இருளடைந்துவிட்டது’ என்று சிம்பாலிக்காக உணர்த்திக் கொண்டிருந்தார்கள். இங்கெல்லாம் அனைத்து செய்திச் சேனல்களையும் துண்டித்திருக்கிறார்கள். ஜெயாவில் மட்டும் தமிழகமே கண்ணீர் வடிக்கிறது என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். அம்மாவும் அப்பாவும் கோபியில் இருந்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பயம் அவர்களுக்கு. முப்பத்தைந்து கிலோமீட்டருக்கு பன்னிரெண்டு இரு சக்கர வாகனங்களில் சேர்வலம்(லிஃப்ட்) கேட்டு வந்தேன். பெரும்பாலானவர்கள் வண்டியை நிறுத்துவதில்லை. தனியாகவே வந்தாலும் விரைந்துவிடுகிறார்கள். இதை மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஊரே இருளடைந்து கிடக்கிறது. சேர்வலம் கேட்கிறேன் என்று வந்து எத்தனை பேர் திருட நிற்கிறார்களோ? அவர்களவில் அவர்கள் பயப்பதும் சரிதான். ஆனால் பன்னிரெண்டு நல்லவர்கள் இருந்தார்கள். மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு முப்பத்தைந்து கிலோமீட்டரைத் தாண்டினேன். வழிநெடுகவும் மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் கண்ணில்படவில்லை. மக்களின் பயம்தான் அதிகமும் தெரிந்தது.

எதற்காக இவ்வளவு ரியாக்‌ஷன்? பிரான்ஸிலும் இத்தாலியிலும் அதன் தலைவர்களுக்கு தண்டனையளிக்கப்படும் போது இப்படித்தான் எதிர்வினையாற்றுகிறார்களா? நாம் மட்டும் ஏன் இப்படியாகிக் கொண்டிருக்கிறோம்? இங்கு எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்? என்ன ஆட்டம் போட்டாலும் ஓட்டுக்கு முந்நூறு கொடுத்தால் வென்றுவிடலாம் என்கிற தெனாவெட்டுதானே இத்தனைக்கும் காரணம். அமைச்சர்களை விட்டுவிடலாம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கும் வேடிக்கை பார்ப்பதுதான் வேலை போலிருக்கிறது. கொடுமை.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பதினெட்டு ஆண்டுகள் இழுப்புக்குப்பின். இந்த அளவிற்குக் கூட தண்டனை இருக்கக் கூடாது என்பதில் என்ன நியாயம்? இதில் காவிரி பிரச்சினைக்கு பழி வாங்கிவிட்டார்கள், கருணாநிதியின் சதிச் செயல் என்பதெல்லாம் அபத்தம். மைக்கேல் குன்ஹா மாதிரியான நீதிபதி இருந்ததால்தான் இந்த அளவிற்கேனும் நடந்திருக்கிறது. இதே வழக்கு தமிழகத்திலோ அல்லது வேறு நீதிபதியின் தலைமையிலோ நடந்திருந்தால் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க முடியாது. 2ஜியில் எப்படி தீர்ப்பு வரும்? அதற்கு எப்படி ரியாக்‌ஷன் இருக்கும் என்றெல்லாம் இப்பொழுது சம்பந்தமேயில்லாமல் கேட்க வேண்டியதில்லை. எந்த ஊழலாக இருந்தாலும் வழக்கு நடந்து தண்டனையளிக்கப்படுமானால் அதைவிட ஒரு சாமானிய மனிதனுக்கு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? இன்னமும் நீதிமன்றங்கள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு விதைக்கப்பட முடியுமானால் அதைவிடவும் நல்ல விஷயம் ஜனநாயகத்தில் வேறு என்ன இருக்க முடியும்? இன்று அந்தச் சந்தோஷமும் நம்பிக்கையும் வந்திருக்கிறது.

I Love Bangalore.