எதிர்பாராத சமயத்தில் சைக்கோபாத் என்ற சொல் காதில் விழுந்தது. பேசிக் கொண்டிருந்த நண்பர் ‘we are all psychopath' என்றார். அந்தச் சொல்லுக்கு முழுமையான அர்த்தம் தெரியவில்லை. அவரிடம் கேட்டால் அவருக்கும் துல்லியமான அர்த்தம் தெரியவில்லை. ஆனால் ‘தனக்கிருக்கும் பிரச்சினைகளினால் சமூகத்தை ஏதாவதொரு வகையில் சீண்டுவது’ என்றார். அவர் சொன்ன அர்த்தம்தான் சைக்கோபாத் என்றால் இங்கு எல்லோருமே அப்படித்தான்.
சீண்டல்கள் என்பதெல்லாம் சிறு வயதிலேயே நமக்குள் வந்துவிடுகிறது. பள்ளியில் சைக்கிள் ஸீட் கவர்களை பிளேடினால் கீறுவதிலிருந்து கைவிடப்பட்ட கைவிடப்பட்ட கட்டடத்தின் கண்ணாடிகளை நொறுக்குவது வரை என்று ஏதாவதொருவகையில் ஒவ்வொருவருமே சைக்கோபாத்தாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ‘இதையெல்லாம் விளையாட்டுத்தனமாகச் செய்தேன்’ என்று தப்பித்துவிடவும் முடியாது. அந்த விளையாட்டுத்தனமே கூட ஒரு வித மனப்பிறழ்வின் விளைவுதானே? ஆனால் அடுத்தவனைக் கீறிவிட்டதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சைக்கோபாத் என்பதெல்லாம் டூமச். அந்தச் சொல்லுக்கு அதைவிடவும் தீவிரமான பொருள் இருக்கிறது.
உதாரணங்களைத் தேடிய போது ஒரு பெயர் சிக்கியது. எய்லீன் கரோல் வுர்னோஸ்(Aileen Carol Wuornos). அமெரிக்கப் பெண்மணி. 1989 மற்றும் 1990 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏழு ஆண்களைக் கொன்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் ப்ளோரிடா மாகாணத்தில் விஸ்வரூபமெடுத்த சீரியல் கில்லர். சாலையின் ஓரமாக நின்று லிப்ட் கேட்பார். கார் சென்று கொண்டிருக்கும் போது ஆளரவமற்ற பகுதிகளில் நிறுத்தச் சொல்லி சுட்டுக் கொன்றுவிடுவார். ஒவ்வொரு கொலை நடந்த போதும் போலீஸார் மண்டை காய்ந்திருக்கிறார்கள். வரிசையாக கைப்பற்றப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்ததுதான் மிச்சம். ஏழாவது விக்கெட் விழுந்த பிறகு இன்னொரு போலீஸ்காரரை எய்லீனுடன் பழக வைத்து அவர்கள் இருவரும் மதுபானவிடுதியை விட்டு வெளியில் வரும் போது கைது செய்திருக்கிறார்கள்.
எய்லீன் பற்றிய கட்டுரைகளும் தகவல்களும் கிட்டத்தட்ட பயமூட்டுபவை. அதைவிடவும் அவள் மீது பரிதாபம் உண்டாக்குபவை. அவள் பிறக்கும் போதே அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிடுகிறார்கள். அது அமெரிக்காவில் சகஜம்தான். ஆனால் அம்மாவும் கூட சீக்கிரமே எய்லீனையும் அவளது சகோதரனையும் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறாள். குழந்தைகளைத் தாத்தாவும் பாட்டியும் வளர்க்கிறார்கள். பாட்டி குடிகாரி. தாத்தா முரடன். எய்லீனை அடித்து நொறுக்குகிறான். அவ்வப்போது பாலியல் பலாத்காரமும் செய்கிறான். கேட்பதற்கு நாதியில்லை. எய்லீனுக்குத் நினைவு தெரியும் போது அவளது அப்பா சிறையில் தூக்கிலிட்டு இறந்து கொள்கிறான். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சைக்கோபாத் அவன். தனக்கு ஒரே ஆதரவு என சகோதரனை நினைக்கிறாள். அவனும் அவளை விட்டு வைப்பதில்லை. உறவு கொள்கிறார்கள். உலகமே குரூரமானதாகத் தெரிகிறது. புகைப்பிடித்துப் பழகுகிறாள். சிகரெட் வாங்குவதற்கு காசு இல்லை. பதினோரு வயதில் தனது உடலை விற்கத் துவங்குகிறாள். பணம் கிடைக்கிறது. பதினான்கு வயதில் எய்லீன் கர்ப்பமடைகிறாள். ஏதோ ஒரு விடுதியில் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தன்னை முழுமையான பாலியல் தொழிலாளியாக மாற்றிக் கொள்கிறாள்.
பதினைந்து வயதுக்குள் அவளுக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். பிஞ்சு மனம் புரண்டு போகிறது. இறுகிக் கல்லாகிறது. அன்பு, பாசம் என்ற சொற்களுக்கெல்லாம் அவளது அகராதியில் இடமே இல்லை. எல்லாமே உறைந்துவிட்ட சொற்கள். சமூகம் அவளைப் பந்தாடுகிறது.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவளுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு ஏற்படுகிறது. லெஸ்பியனாகவே இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இருண்ட உலகத்தில் அந்த உறவு மட்டுமே சற்று வெளிச்சம் காட்டுகிறது. இருவருமே சேர்ந்து திருடுகிறார்கள். கொலைகளில் கூட இருவருக்குமே பங்கிருக்கிறது என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் கடைசி வரைக்கும் தான் மட்டுமேதான் கொலைகளைச் செய்ததாக எய்லீன் உறுதியாக இருக்கிறாள். அவளது தோழி மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் எய்லீனின் குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
2002 ஆம் ஆண்டில் அவளுக்கு விஷ ஊசி ஏற்றி தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
எய்லீன் பற்றிய டாக்குமெண்டரிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிக் ப்ரூம்பீல்ட் என்ற இயக்குநர் அவருடனான உரையாடல்களைப் பதிவு செய்திருக்கிறார். அவரோடு எய்லீன் மிகத் தெளிவாகப் பேசுகிறார். ‘ஆமாம் கொலைளைச் செய்தேன். ஆனால் அவர்கள் என்னைத் துன்புறுத்தினார்கள். பாலியல் அத்துமீறல்களைச் செய்தார்கள்..ஆனால் இங்கு அதையெல்லாம் மறைத்துவிட்டார்கள்’ என்கிறார். தண்டனை நிறைவேற்றுவதற்கு முந்தின நாள் கூட நிக் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என்று பேசுபவர் டென்ஷனாகிறார். ‘வன்புணரப்பட்ட பெண் கொலை செய்யப்படவிருக்கிறாள். புத்தங்களுக்கும் சினிமாவுக்கும் பயன்படுவாள்’ என்கிற ரீதியில் முடித்துவிட்டு எழுந்து செல்லும் வீடியோவைப் பார்க்கும் போது உள்ளங்கை உறைந்து போயிற்று. முதலிலேயே இதைப் பார்த்திருந்தால் இவ்வளவு பதற்றம் உண்டாகியிருக்காது. ஒரு கொலைகாரியின் பேச்சை கேட்கிறோம் என்கிற நினைப்புதான் வந்திருக்கும். ஆனால் எய்லீனின் வாழ்க்கையைத் தெரிந்து கொண்டு அதைப் பார்க்கும் போதுதான் அந்தப் பேச்சில் இருக்கும் வலி, வஞ்சிக்கப்பட்டதன் துக்கம் என சகலமும் தெரிகிறது.
அவள் குற்றவாளிதான். இல்லையென்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் எதனால் அவள் சைக்கோபாத் ஆகிறாள்? ஐந்து வயதிலும் பத்து வயதிலும் விளையாட்டுச் சாமான்களையும் பந்துகளையும் வைத்துக் கொண்டு விளையாட வேண்டிய வயதில் குடிகாரனிடமும் காமுகனிடமும் சிக்கிக் கொள்கிறாள். மூச்சுவிடக் கூட இடைவெளியில்லாமல் இந்த உலகம் அவளை எல்லாத்திசைகளிலிருந்தும் நசுக்கிறது. பிஞ்சுப்பருவத்திலேயே மனதுக்குள் நஞ்சு ஏறுகிறது. அவள் தனது வன்மத்தையெல்லாம் எங்காவது இறக்கி வைத்துவிட சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மனம் ஒரு வேட்டைக்காடு இல்லையா? எந்த இரை வந்து சிக்கும் என்றும் காத்துக் கொண்டிருக்கிறது. எய்லீனின் வேட்டைக்கு ஆண்கள் சிக்குகிறார்கள். சுட்டுப் பொசுக்கிறாள். தன்னை வஞ்சித்த உலகத்தை பழி வாங்கிக் கொண்டிருப்பதாக அவளது மனம் நம்பத் தொடங்குகிறது. அவளது பழிவாங்கலுக்கு இந்தச் சமூகம் இன்னொரு பெயரை வைக்கிறது. ‘சைக்கோபாத்’.
குழந்தைகள் மீதான ஒவ்வொரு வன்முறையுமே அவர்களை கரடுமுரடான பாதைகளுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடுகிறது. சில குழந்தைகள் வெளியில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் பல குழந்தைகள் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். சொல்வதற்கான சூழல் அமைவதில்லை. ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள், பக்கத்து வீட்டுக்காரனின் கிள்ளுகள், எதிர்வீட்டுக்காரனின் சேட்டைகள் என எதிர்க்க முடியாத வக்கிரங்கள் குழந்தைகளை சைக்கோபாத்களாக மாற்றி விடுகின்றன. வயது கூடக் கூட அவர்களது மனம் வேட்டையாட விரும்புகிறது. பழி வாங்கத் துடிக்கிறார்கள். எல்லோரும் எய்லீனாக மாறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் எய்லீனின் சாராம்சங்களை ஏதாவதொரு விதத்தில் பெற்றுவிடுகிறார்கள்.
மரண தண்டனைக்கு முந்தின நாள் அளித்த எய்லீனின் நேர்காணல்.
மரண தண்டனைக்கு முந்தின நாள் அளித்த எய்லீனின் நேர்காணல்.