Sep 29, 2014

தண்டனை வேண்டுமா வாத்தியாரே?

நல்லியண்ணன் என்றொரு பையன் இருந்தான். எனக்கு இரண்டு வருடங்கள் ஜூனியர். ஒரே தனிப்பயிற்சியில் படித்தோம். மாலை நேர வகுப்புகள். நான் மாதம் முப்பத்தைந்து ரூபாய் தர வேண்டும் என்றால் என்னைவிட இரண்டு வருடம் சிறியவன் என்பதால் அவனுக்கு இருபத்தைந்து ஃபீஸ். ஒரே தனிப்பயிற்சி வகுப்பு என்றாலும் நாங்கள் வெவ்வேறு பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தோம். அவன் உள்ளூரிலேயே அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவர்கள் திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்த்திருந்தார்கள். அவனது அப்பா ஒரு அடுமனையில் (பேக்கரி) ஸ்வீட் மாஸ்டர். ஜிலேபி லட்டு போன்ற பொருட்களை மாதச் சம்பளத்திற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். 

நல்லி அதிபயங்கர சேட்டைக்காரன். யாரையாவது வம்பிழுத்துக் கொண்டேயிருப்பான். அவனிடம் முடிந்தவரையில் அடங்கிப் போய்விடுவார்கள். இல்லையென்றால் அடுத்த நாள் சட்டையின் பின்னால் இங்க் அடித்துவிடுவான். அதுவும் எப்படி? ஸ்பெஷல் ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்ட இங்க் அது. விளக்கெண்ணெயில் காபித்தூள் டிக்காஷன் அரைப்பங்கு மஞ்சள் பொடி கால் பங்கு என்று கண்டதையெல்லாம் கலந்து எடுத்து வந்திருப்பான். எவ்வளவுதான் துவைத்தாலும் கறை இருந்து கொண்டேயிருக்கும். இதை ஆசிரியர்களிடம் சொல்லி வைத்தால் ஆசிரியர்களும் அமைதியாக இருக்கமாட்டார்கள். இவனை ஏதாவதொரு காரணத்தை முன்னிட்டு அடித்துக் கொண்டே இருப்பார்கள். இவனும் அடித்த ஆசிரியர்களை பழிவாங்க புதிது புதிதாக ஏதாவதொரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பான். Technocrat.

வாத்தியார் சைக்கிளின் முன்சக்கரத்தில் ஆணியைச் சொருகுவது, வாத்தியாருக்குத் தெரியாமல் தண்ணீர் பாட்டிலில் எச்சிலைத் துப்பி வைப்பது போன்ற தியாகராஜர் காலத்திய சேஷ்டைகள் எல்லாம் சலித்துப் போன பிறகு வேறு சில தண்டனைகளைக் கண்டுபிடிப்பதற்காக இடது மூளையையும் வலது மூளையையும் 24x7 இல் கசக்கிக் கொண்டிருந்தான். இந்த மாதிரியான விவகாரங்களில் அறிவுரை கேட்க சரியானவன் என்று என்னை நம்பிக் கொண்டிருந்தான். அதற்கு காரணமிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக வண்டியின் பெட்ரோல் டேங்கில் சர்க்கரையைப் கலந்துவிடும் உத்தியை சொல்லிக் கொடுத்திருந்தேன். எனக்கு அந்தளவுக்கு சுயமான அறிவெல்லாம் இல்லை. எங்கள் பள்ளியில் பொன்னுச்சாமி ஆசிரியரின் டிவிஎஸ் 50 வண்டியின் பெட்ரோலுக்குள் கரும்புச் சர்க்கரையை ஒரு மாணவன் கலந்த கதை தெரியும். அதனால் அந்த ஆசிரியர் நொந்து போன கதையும் தெரியும். பெட்ரோலோடு கலந்துவிடும் சர்க்கரை எஞ்சினுக்குள் அப்பிக் கொள்ளும். மொத்தமாக கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். இந்த நுட்பத்தை நான் நல்லிக்குச் சொல்லிக் கொடுக்கவும் அதை அவன் இம்மி பிசகாமல் தனது கணக்கு ஆசிரியரிடம் செயல்படுத்தி புளகாங்கிதம் அடைந்துவிட்டான். அதிலிருந்து அவனது Trusted partner ஆகிவிட்டேன்.

நமக்கும் இது போன்ற நண்பர்கள் தேவை. ஒரு முறை அப்துல் அஜீஸ் என்கிற மாணவன் என்னிடம் லோலாயம் செய்து கொண்டிருந்தான். அவனையெல்லாம் அடிக்கிற அளவுக்கு என்னிடம் தெம்பு இல்லை. நல்லியிடம்தான் சரணடைந்திருந்தேன். நல்லி அஜீஸை தொலைப்பதற்காக இரண்டு நாட்கள் ஸ்கெட்ச் போட்டான். அஜீஸ் எப்பொழுதுமே சைக்கிளைத் தள்ளியபடி ஓடிச்சென்று ஜம்ப் அடித்து வண்டி மீது அமர்வான். இதுதான் அவனது பலவீனமான புள்ளியாக இருந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆக்கப்பூர்வமான சதியாலோசனைக்குப் பிறகு நல்லியண்ணன் என்னிடமிருந்து காம்பஸை வாங்கி அஜீஸின் மிதிவண்டி ஸீட்டுக்கு அடியில் பொருத்திவிட்டான். அஜீஸின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று ஒன்றரை வினாடி மட்டும் நினைத்துப் பாருங்கள். திகிலாக இருக்குமே? அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் அஜீஸூக்கு மட்டுமில்லை எங்களுக்கும் நல்ல நேரம்தான். திட்டமிடலில் நிகழ்ந்த ஏதோ ஒரு டெக்னிக்கல் பிரச்சினையினால் காம்பஸின் நுனி முழுமையாக வெளிவரவில்லை. வெளிவந்திருந்தால் எங்களை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். கால் இஞ்ச்சோ அல்லது அரை இஞ்ச்சோதான் வெளி வந்திருந்தது. ஆனால் அது போதாதா? பம்ஸை பஞ்சராக்குவதற்கு? ஆகிவிட்டது. ‘அய்யோ அம்மா’ என்று கவுண்டமணி வாய்ஸில் கதறிக் கொண்டு விழுந்தான். அடுத்து வெகு நாட்களுக்கு ஒரு பக்கமாகத் தூக்கியபடியே அமர்ந்திருந்தான்.

அப்படிப்பட்ட வல்லவன் இந்த நல்லியண்ணன். ஆறுமுகம் என்றொரு வாத்தியார்தான் அவனுடைய ஹிட் லிஸ்ட்டில் முதலாவதாக இருந்தார். பெல்பாட்டம் அணிந்து வருகிற ஆசிரியர் அவர். அந்த மனுசன் நல்லியை நாற்காலி போடச் சொல்லிவிட்டார். அந்த தண்டனை தெரியும் அல்லவா? சுவரை ஒட்டியபடி நாற்காலியில் அமர்வது போன்ற தொனியில் முட்டியை மடக்கியபடி நிற்க வேண்டும். நாற்காலி இருக்காது- அது இருப்பதான பாவனையில் நிற்க வேண்டும். ஐந்து நிமிடத்தில் கால் கடுகடுக்கத் தொடங்கிவிடும். அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. நல்லி சைட் அடித்துக் கொண்டிருந்த பெண்ணை அழைத்து வந்து பக்கத்தில் நிறுத்தி வைத்துவிட்டார். நல்லி அசையும் போதெல்லாம் கொட்டு வைக்க வேண்டும் என்பதுதான் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை. அந்தப் பெண்ணுக்கு இவன் மீது பயங்கரக் கடுப்பு இருந்திருக்கும் போல. இதுதான் சாக்கு என்று உச்சி மண்டையில் கபடி ஆடிவிட்டாள்.

‘அவனை விடக் கூடாது’ என்று நல்லி சொல்லிக் கொண்டு திரிந்தான். அவருக்கு ஏதாவதொரு புதிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். என்ன யோசித்துப் பார்த்தாலும் புதிய தண்டனையை யோசிக்கவே முடியவில்லை. கும்பிபாகம், கிருமிபோஜனம் எல்லாம் எங்களுக்கு அறிமுகமாகியிராத பருவம் அது. எங்கள் ரேஞ்சுக்கு சப்பாத்திக்கள்ளி ஒரு தோதான ஐட்டமாக இருந்தது. அதன் பழங்களைப் பறிக்கும் போது முள் குத்து வாங்குவோம். எவ்வளவுதான் நேக்காக முயற்சித்தாலும் முள் குத்திவிடும். ஆனால் முள் எந்த இடத்தில் ஏறியது என்று தெரியாது- அவ்வளவு சிறியதாக இருக்கும். ஆனால் குத்திய இடத்தில் மரண வேதனையாக இருக்கும். அது ஒரு நல்ல ஆயுதம்தான். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பெருங்குழப்பம் வந்து சேர்ந்துவிட்டது. எதிரி சம வயதை உடையவனாக இருந்தால் பேச்சுவாக்கில் தேய்த்துவிட்டுவிடலாம். ஆனால் ஆசிரியரிடம் தொட்டு பேசுவதெல்லாம் ஒத்து வராது. அதனால் வேறொரு ஆயுதத்தை எதிரி மீது பிரயோகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் வந்து சேர்ந்துவிடது. இன்னொரு வஸ்து மப்பூட்டான் இலைகள். அதுவும் கொடூரமான தண்டனைதான். உடலில் பட்டால் போதும். பயங்கரமான பிய்ப்பு ஆரம்பித்துவிடும். அதைத் தொடாமல் விட்டுவிட்டால் அவ்வளவாக பிரச்சினை இருக்காது. ஆனால் கை சும்மா இருக்காமல் சொறிந்துவிடும். எரிச்சல் தாங்க முடியாது. இந்த இலையிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உடல் மீது பட வேண்டும். துணி மீது பட்டால் அவ்வளவு பெரிய விளைவு இருக்காது. அதனால் அதையும் தவிர்த்துவிட்டான்.

அந்தச் சமயத்தில்தான் எங்களுக்கு பூனை பூட்டான் அறிமுகமாகியது. வாய்க்கால் தண்ணீர் பாயும் கரும்புக்காடு ஓரமாக இருக்கும். சிறிய பந்துவடிவத்தில் காய். நல்லியும் நானும் வாய்க்காலில் துண்டை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது உடல் எரியத் தொடங்கியது. இத்தனைக்கும் நாங்கள் எந்தச் செடியையும் தொடவில்லை. முதுகு நெஞ்செல்லாம் அலறத் தொடங்கியது. ஒன்றுமே புரியவில்லை. பயந்துவிட்டோம். ஏதோ விபரீதம் என்று கிட்டத்தட்ட அழும் நிலைமை. அந்தக் கரும்புக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த அக்கா எங்களிடம் விசாரித்துவிட்டு பூனை பூட்டானைக் காட்டினார். அப்பொழுது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ட்ரவுசர் போட்டுத் திரிந்த காலம். ‘அது ட்ரவுசர்ல கூட அப்பியிருக்கும் தம்பி’என்றார். அவ்வளவுதான். ட்ரவுசரை எல்லாம் கழட்டி வீசிவிட்டு வாய்க்காலுக்குள் குதித்ததுதான். முக்கால் மணி நேரத்திற்கு பிறகுதான் ஒரு சுமாராக இருந்தது. பூனை பூட்டானுக்கு அவ்வளவு வீரியம். காற்று வேகமாக அடித்தாலே அதன் மொளங்கு காற்றில் பறக்க ஆரம்பித்துவிடும்- பஞ்சு மாதிரி. அது உடலில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். அலற வேண்டியதுதான். அந்த மொளங்கு மிகச் சிறியதாக இருக்கும் என்பதால் சட்டை பேண்ட்டைக் கூடத் தாண்டிவிடும். இதுவல்லவா ஆயுதம்?

நல்லிக்கு பயங்கர சந்தோஷம். வெடிகுண்டைக் கையாள்வது போல நான்கைந்து காய்களைப் பறித்து மழைக்காகிதத்தில் போட்டு ஒரு நூலை வைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். ஆறுமுகம் அவுட் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நாள் மதியம் முதல் பீரியட் ஆறுமுகம் வாத்தியாருடையது. அதற்கு முன்பாகவே மதிய உணவுக்குக் கூட போகாமல் நல்லி காத்திருந்தானாம். எல்லோரும் போய்விட்ட பிறகு அந்தக் காய்களை அதே வெடிகுண்டு லாவகத்துடன் எடுத்து வந்து அவரது நாற்காலி கை வைக்கும் மேசை என மனப்பூர்வமாக தேய்த்துவிட்டான். சோலி சுத்தம். அந்த ஆறுமுகத்தின் அசுபவேளை வந்து சேர்ந்தது. வழக்கம் போல வகுப்பிற்குள் வந்தவர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அவர் கண்டாரா? பாவம். அதிகபட்சம் முக்கால் நிமிடங்கள்தான்.மாணவர்களுக்கு முன்னால் கையை அந்த இடத்தில் வைத்து சொறிவதற்குச் சங்கடமாக இருக்கும் அல்லவா? ஆனால் எவ்வளவு நேரம்தான் பொறுக்க முடியும். அலறிக் கொண்டே எழுந்தவர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தேய்க்கத் தொடங்கியிருக்கிறார். அது ஒன்றும் சாதாரண எரிச்சலாக இருக்காது. மேசையில் எதுவுமே இல்லை ஆனால் எரிகிறது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. மாணவர்களுக்கும் காரணம் தெரியவில்லை. நல்லி பற்களைக் கடித்துக் கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருக்கிறான். அவசரமாக ஓடியவர் அடுத்த அரை மணி நேரத்திற்கு வரவே இல்லை. அந்தக் காலத்தில் அரசு பள்ளிகளின் கழிவறையைப் போல கேவலமான இடம் வேறு இருக்கவே முடியாது. அங்கு நுழைந்து அரை மணி நேரம் கொடுமையைப் பொறுத்துக் கொள்கிறார் என்றால் அந்த எரிச்சல் எவ்வளவு இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அரை மணி நேரத்திற்குப் பிறகும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கண்கள் சிவக்க தலைமையாசிரியரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றவர்தான். அதன் பிறகு அந்த வருடத்தில் யாரையுமே அடிக்கவில்லை என்றார்கள்.

நல்லிக்கு அது ஒரு பெரும்சாதனை. சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். அவனது சேட்டைகள் என்னும் கிரீடத்தில் அவனைப் பொறுத்தவரைக்கும் இதுதான் ஒரு வைரக்கல். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.  அவனுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அப்பாவின் வேலையைத்தான் தானும் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்பொழுதே அவனது அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அந்தச் சமயங்களில் வீட்டு வேலைகளையெல்லாம் செய்துவிட்டு பள்ளிக்குச் செல்லமாட்டான். அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளைப் பார்த்துக் கொள்வதும் அவனது வேலையாகவே இருந்தது. அந்த ஒரே வருடத்திலேயே அவனது அம்மா காசநோய் முற்றி இறந்து போனார். அவருக்கு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காகத்தான் எங்கள் ஊருக்கு குடி வந்திருந்தார்கள். ஆனால் அந்த சிகிச்சை தோல்வியில் முடிந்து போனது. 

அம்மாவின் இறுதிக்காரியத்திற்கு சொந்தக்காரர்கள் யாரும் வந்திருக்கவில்லை. நல்லியண்ணன் அழுது கொண்டிருந்தான். அவனது தங்கைக்கு எதுவுமே புரியவில்லை என்று எங்கள் அம்மா சொல்லியது ஞாபகமிருக்கிறது. இறுதிக்காரியம் முடிந்த பிறகு பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை நிறுத்திவிட்டான். அந்த வருடத்தோடு நல்லியண்ணனின் குடும்பம் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டது. அவனது அப்பா அங்கேயே ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேரவிருப்பதாகச் சொன்னான். அதன் பிறகு ஒன்றிரண்டு கடிதங்கள் எழுதிக் கொண்டோம். பிறகு தொடர்பு அறுந்துவிட்டது. இப்பொழுது நல்லியண்ணன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அவர்கள் குடியிருந்த இருந்த இடத்தில் இப்பொழுது மிகப்பெரிய பங்களா வந்துவிட்டது. அந்த பங்களாவை ஒரு அரசு ஊழியர் கட்டியிருக்கிறார் என்று யாரோ சொன்னார்கள். அந்த இடத்தைத் தாண்டும் போது பவழமல்லி மனம் ஆளையே மயக்குகிறது.