Sep 30, 2014

பரப்பன அக்ரஹாரா

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்குச் சென்றிருந்தேன். இன்று மதியம்தான். ஏனோ காலையிலிருந்தே கடும் தலைவலி. அதனால் விடுப்பு எடுத்திருந்தேன். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மதிய உணவுக்காக கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் கடையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் சிறை வளாகம். முன்பு ஒரு முறை அங்கு சென்றிருக்கிறேன். அந்தச் சிறை வளாகத்திற்குள்ளேயே ஒரு காவல் நிலையம் இருக்கிறது. பாஸ்போர்ட் விசாரணைக்கு வரச் சொல்லியிருந்தார்கள். அப்பொழுது பெரிய கெடுபிடியெல்லாம் இல்லை. 

இன்றைக்கு அப்படியில்லை. அந்தச் சாலையே மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தமிழ்நாட்டு மகிழ்வுந்துகள்தான். அத்தனையும் அதிமுக கொடியோடு திரிகின்றன. பெருந்தலைகளைச் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிந்தது. ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....’ போன்ற செல்போன் ட்யூன்கள் அலறிக் கொண்டிருக்கின்றன. கதர் வேஷ்டி கசங்காமல் தூக்கிப்பிடித்தபடி பிரமுகர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள். வளாகத்தின் முதல் தடுப்பைத் தாண்டுவதே பெரிய காரியம். அந்தத் தடுப்புக்குள் செல்வதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை மட்டும்தான் அனுமதிக்கிறார்கள். மேயர்களுக்குக் கூட அனுமதி இல்லை என்றார்கள். ஆனால் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா உள்ளேயிருந்து வந்தார். ஏதாவது ஃபேக் ஐடி வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

அதற்கடுத்த தடுப்பைத் தாண்டுவதற்கு அம்மாவின் அனுமதி வேண்டும் போலிருக்கிறது. அவர் பார்க்க விரும்பினால் மட்டுமே உள்ளே விடுகிறார்கள். யாரையுமே அவர் பார்த்த மாதிரி தெரியவில்லை. எங்கள் பக்கத்துத் தொகுதி எம்.எல்.ஏ உள்ளேயிருந்து வந்தார். அவராகத்தான் இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. கேட்பதில் என்ன தவறு? ‘நான் கோபிதாங்க’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருக்கு சந்தோஷம். சில கேள்விகளைக் கேட்டார். அவர் விசாரித்து முடித்த பிறகு ‘அம்மாவை பார்த்தீர்களா?’ என்றேன். ‘யாரையும் பாக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க’ என்றார். மூன்று நிமிடங்கள் பக்கத்தில் நின்றிருந்தார். இன்று வெயில் அதிகம். ‘நான் காருக்கு போகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஏஸிக்குள் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டார்.

முதல் தடுப்புக்கு அருகில் நின்றிருந்தவர்களை போலீஸ்காரர்கள் கன்னடத்தில் துரத்திக் கொண்டேயிருந்தார்கள். ஒரு ஐபிஎஸ் அதிகாரி யாரிடமோ கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் யாரையும் உள்ளே விடாமல் துரத்திக் கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர். ‘மேடமுக்கு வயிற்று வலி அது இதுன்னு கன்னடச் செய்திகளில் போடுகிறார்கள்..அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ்ச் செய்தித்தாள்களிலும் கூட அப்படித்தான் எழுதியிருந்தார்கள். ஜெயா டிவிக்காரர்கள் தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தந்தி டிவி வேன் நின்று கொண்டிருந்தது. டைம்ஸ் நவ், என்.டிடிவி உட்பட பல ஆங்கிலச் சேனல்கள் முகாம் அடித்திருக்கின்றன. என்.டிடிவியின் இமாம் சித்திக் நேரடி ஒளிபரப்பில் பேசிக் கொண்டிருந்தார். நான் முகத்தை கேமராவுக்குக் காட்டிக் கொண்டிருந்தேன். டிவியில் என் முகம் வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத கருப்புச்சட்டையணிந்த அதிமுகவினர் ‘அம்மாவை விடுதலை செய்’ என்று ஓடி வந்துவிட்டார்கள். இமாம் அவர்களிடம் பேசத் தொடங்கிவிட்டார். ‘தொலைந்து போங்க’ என்று நகர்ந்துவிட்டேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிக்கையாளர்களோடு ஒப்பிடும் போது கன்னடச் செய்தியாளர்கள் சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். 

நகராட்சித் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், மேயர்கள், எம் எல் ஏக்கள், எம்பிக்கள் என்று சகலரும் வட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது கோரிக்கை மனுவைக் கொடுத்தால் வாங்குவார்களா என்று தெரியவில்லை. முதல் தடுப்பைத் தாண்டிய பிறகு அமைச்சர்கள் நிலத்தில் அமர்ந்திருந்தார்கள். மொத்த தமிழகமும் கர்நாடக சிறைவளாகத்திற்குள் புரண்டு கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். 

பெங்களூர்- ஓசுர் சாலையின் பெரும்பாலான ஹோட்டல்களில் அதிமுகவினர்தான் இருக்கிறார்கள். ரெயின் ட்ரீ, கீஸ் என்று பல ஹோட்டல்களுக்குள்ளும் அதிமுக வண்டிகள் நிரம்பியிருக்கின்றன. இன்றிரவும் அங்கேயேதான் தங்கப்போவதாக அந்த எம்.எல்.ஏ சொல்லியிருந்தார். அவரைப் போலவேதான் மற்றவர்களும் தங்குவார்கள் என நினைக்கிறேன். ஜாமீன் மனு விசாரனையைத் தள்ளி வைத்துவிட்டார்கள். இனி எப்படியும் ஜாமீன் கிடைக்க சில நாட்கள் ஆகும் என்பதால் இந்த கேம்ப் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது. 

போலீஸ்காரர்கள் துரத்துவது ஓவர் டார்ச்சராக இருந்தது. பக்கத்தில் அமைச்சர்களின் பி.ஏக்கள் ஒரு பெட்டிக்கடையில் பிஸ்கெட் தின்று கொண்டிருந்தார்கள். மணி மூன்று ஆகியிருந்தது. அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது வெகு சிலர் பந்தா இல்லாமல் பேசினார்கள். இன்னமும் யாருமே உணவருந்தியிருக்கவில்லை. எவ்வளவு ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள்? இங்கே காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘நீங்க சாப்டீங்களா?’ என்று ஒருவர் கேட்டார். பிரியாணிக்கடை ஒன்றுக்கு வழி காட்டினேன். எனக்குத் தெரிந்து அந்த ஏரியாவில் பிரியாணிக்கடை மட்டும்தான் இருக்கிறது. சிக்கன் பிரியாணி எண்பது ரூபாய். பெப்ஸி பன்னிரெண்டு ரூபாய். அமைச்சருடன் செல்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். 

‘பிரியாணி சாப்பிடுவாரா?’ என்றேன்.

‘அதெல்லாம்’ என்றார்.

‘நேற்று அழுதுவிட்டு இன்று பிரியாணியா?’ என்று வாய் வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. ஏற்கனவே எனக்கு சனி திசை. பைக்கை கிளப்பிக் கொண்டு வந்துவிட்டேன்.