ஊர்ப்பக்கங்களில் கற்களைத் தேடுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். கற்கள் என்றால் வெண்செங்கற்களிலிருந்து(வெங்கச்சங்கல்) நாக மாணிக்கக் கல் வரையிலும். காங்கேயேம் கரூர் பக்கங்களில் நிறையக் கற்கள் கிடைப்பதாகச் சொல்வார்கள். ‘ஒரு எட்டு போய்ப் பார்த்தால் லட்சமாவாது தேறும்’ என்கிற நினைப்பில் வண்டியை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அது கிடைக்கிறதோ இல்லையா என்பது வேறு பிரச்சினை. ஆனால் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக இப்படி? ‘மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் குதித்து வரும்’ என்று அந்தக் காலத்து புலவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் அல்லவா? இப்பொழுது மானும் இல்லை துள்ளுவதும் இல்லை- ஆனால் ஒரு காலத்தில் கொங்கு நாட்டில் இந்தக் கற்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. இங்கிருந்து ரோம் வரைக்கும் சென்றிருக்கின்றன. ரோமாபுரிச் சீமாட்டிகளுக்கு இந்தக் கற்கள் மீது அவ்வளவு மோகம். இன்னமும் மேற்கத்திய நாடுகளில் இந்தக் கற்களுக்கு கிராக்கி அதிகம். Semi Precious stones.
அந்தக் காலத்தில் மாணிக்கம், வைடூரியம், நீலக்கல், மரகதம் என்று விதவிதமாகக் கிடைத்திருக்கின்றன. யாரும் சுரங்கம் எதுவும் தோண்டியதில்லை. இப்பொழுது வரைக்கும் அதே நிலைமைதான். கிடைக்கும் கற்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்னமும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. உழவு ஓட்டும் போதும் கிணறு வெட்டும் போதும் காடுகளில் கற்களைப் பொறுக்கி அகற்றும் போதும் கிடைக்கின்ற கற்கள் இவை. இதை விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கு புரோக்கர்கள் உண்டு. ஐம்பதாயிரம் பெறுமானமுள்ள கல்லை ஆயிரத்துக்கோ ஐந்தாயிரத்துக்கோ வாங்கிக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாது. கிடைக்கிற விலைக்குக் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கவில்லையென்றால் ‘கவர்மெண்ட்டுக்கு தெரிஞ்சுதுன்னா காட்டை அவங்களே எடுத்துக்குவாங்க’ என்று புரளியைக் கிளப்பினால் போதும். பதறிவிடுவார்கள். கற்களின் வியாபாரம் ஒரு மிகப்பெரிய உலகம். ஒழுங்குபடுத்தப்படாத உலகம்.
இப்படியொரு உலகம் இருக்கும் போது பன்னாட்டு நிறுவனங்கள் அமைதியாக இருப்பார்களா? அரசின் அனுமதி பெறுவது குறித்தும் சுரங்கம் அமைப்பது குறித்தும் எல்லாவிதமான முஸ்தீபுகளிலும் இறங்குகிறார்கள். யாரைப் பிடித்தால் வேலை ஆகும் என்று பார்க்கிறார்கள். எந்த அரசியல்வாதியையும் அதிகாரியையும் விலை பேச முடியும் என்று பார்க்கிறார்கள்.ஆனால் இந்த நிறுவனங்கள் வந்து சுரங்கம் தோண்டிவிட்டால் இந்தக் கற்களை வைத்து வியாபாரம் நடத்தும் புரோக்கர்களின் தொழில் இருளடைந்துவிடுமே? புரோக்கர்கள் வழியாக இந்தக் கற்கள் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதியின் வருமானம் அஸ்தமித்துப் போய்விடுமே? அதனால் அரசியல்வாதி சும்மா இருப்பானா? களமிறங்குகிறான். கடத்துகிறான். மிரட்டுகிறான்.
இத்தகையதொரு முடிச்சை எடுத்துக் கொண்டு ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது. மிளிர்கல். இரா.முருகவேள் எழுதியிருக்கிறார்.
முருகவேளின் எழுத்து மீது எனக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. டேனியலின் ‘Red Tea' நாவலை ‘எரியும் பனிக்காடு’ என்று முருகவேளின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது பிரமித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு என்று நினைத்துவிடுவதற்கு எந்தச் சாத்தியத்தையும் விட்டு வைக்காமல் மொழிபெயர்த்திருப்பார். அப்படிப்பட்டவரின் எழுத்து என்பதால் மிளிர்கல் நாவலை எடுக்கும் போதே உற்சாகமாக இருந்தது.
முல்லை என்கிற பெண் டெல்லியிலிருந்து வருகிறாள். சிலப்பதிகாரத்தில் வரும் இடங்களை பார்த்துவிட வேண்டும் என்கிறாள். அதை ஆவணமாக்கும் எண்ணமும் அவளுக்கு இருக்கிறது. இடதுசாரி இயக்கத்தில் இருக்கும் நவீன் என்கிற இளைஞனை துணைக்குச் சேர்த்துக் கொள்கிறாள். இருவரும் பூம்புகாருக்கு பயணிக்கிறாள். அங்குதான் ப்ரொபஸர் ஸ்ரீகுமார் அறிமுகமாகிறார். அவர் ஆய்வறிஞர். மூவருமாக கோவலன் கண்ணகியின் இடங்களைத் தேடுகிறார்கள். அந்த ஊரின் பழைய இடங்களைப் பார்க்கிறார்கள். மாதவி வாழ்ந்த பகுதியில் அலைகிறார்கள். பூம்புகாரைப் பார்த்துவிட்டு காவிரியின் வடகரையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் நடந்த பாதையிலேயே பயணிக்கிறார்கள். இது வெறும் கோவலன் கண்ணகி சென்ற பாதையைத் தேடும் பயணமாக மட்டும் தொடங்கி பிறகு சிலப்பதிகாரத்தின் ஆன்மாவைத் தேடும் பயணமாக மாறுகிறது. ஒவ்வொரு ஊராகப் பார்த்துவிட்டு மதுரையில் ஆயர்சேரி, கோவலன் பொட்டல் ஆகியவற்றையெல்லாம் தேடிப்பார்க்கிறார்கள். கோவலன் பொட்டலில் இருக்கும் சுடுகாட்டில் இன்னமும் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல் மீது வைத்துத்தான் கோவலனை வெட்டிக் கொன்றார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். பேராசிரியர் சாந்தலிங்கன், தோழர் கண்ணன் போன்றவர்கள் உதவுகிறார்கள். கேரள-தமிழ்நாட்டின் எல்லையில் இருக்கும் கண்ணகி கோவில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுடன் அவர்களது பயணம் முடிவடைகிறது.
இந்தப் பயணத்தில்தான் Semi Precious stone கற்களைப் பற்றிய கதையும் இணைந்து வருகிறது. அதைத் தேடும் புரோக்கர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், உள்ளூர் தாதாக்கள் என்று பின்னுகிறது.
நாவல் முழுவதுமே முல்லையும் நவீனும் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்ரீகுமார் சலிக்காமல் பதில் சொல்கிறார். இந்த ஒவ்வொரு பதிலுமே வாசகருக்கான திறப்பு. யோசிக்கச் செய்கிறது. உண்மையிலேயே கோவலனும் கண்ணகியும் இருந்தார்களா? கண்ணகியை ஏன் கொங்கர் குலச் செல்வி என்கிறார்கள்? அவளுக்கும் கொங்கு நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவள் வாழ்ந்த நாடான சோழ நாட்டின் மன்னர்களையும் அவள் பழி வாங்கிய பாண்டிய நாட்டின் மன்னர்களையும் விட சேரன் மன்னன் ஏன் அவளுக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான்? ஏன் இந்த மக்கள் இன்னமும் கண்ணகியைக் கொண்டாடுகிறார்கள்? இடைப்பட்ட காலத்தில் ஏன் சிலப்பதிகாரத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள். எல்லாவற்றுக்கும் பதிலைக் கண்டுபிடிக்கிறார் முருகவேள். சிலப்பதிகாரக் கதையில் இருக்கும் லாஜிக் சிக்கல்களைத் தொடுகிறார். கண்ணகியின் பூர்விகத்தைப் பற்றி பேசுகிறார். சிலப்பதிகாரத்தில் வரும் பெரும்பாலான பெயர்கள் பொதுவான பெயர்கள் இல்லை. மாசாத்துவன், கண்ணகி, வசந்தமாலை என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள். ஆனால் கோவலன் என்பது பொதுப்பெயர். வள்ளுவர் என்பது போல. அதற்கான காரணத்தைப் பற்றி நாவல் பேசுகிறது. கணித அறிஞர் பிதாகரஸ் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ரோம வணிகம் பற்றிய விவரங்கள் உண்டு. கற்கால நினைவுச்சின்னங்கள் பற்றிப் பேசுகிறது. சமணத்துறவிகளின் வாழ்முறை பற்றிய விவரங்கள் இருக்கின்றன. மறுபிறப்பு பற்றிய விவாதங்கள் இருக்கின்றன. சமணர் படுக்கைகள் ஏன் குறிப்பிட்ட வடிவத்தில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவல் உண்டு. தமிழக வரலாற்றின் இருண்டகாலம் என்று சொல்லப்படுகிற களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அது ஏன் இருண்டகாலம் இல்லை என்கிற பதிலும் உண்டு.
இன்றைய விவசாயிகளின் பிரச்சினைகள் உண்டு. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு பற்றிய பார்வை உண்டு. இடதுசாரி அமைப்புகள் பற்றிய விவரங்களைத் நாவல் பேசுகிறது- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எந்தத் தகவலும் சலிப்படையச் செய்வதில்லை. ‘இந்த மனுஷன் எவ்வளவு உழைத்திருக்கிறார்?’ என்ற பிரமிப்புத்தான் உருவாகிறது. மிளிர்கல் நாவலை வாசிக்க இலக்கியம் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. சித்தாந்தங்கள் பற்றிய புரிதலும் அவசியமில்லை. வரலாற்று ஆய்வாளனாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருப்பின் - இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை முந்நூறு பக்கங்களில் குறுக்குவெட்டாக அரிந்து காட்டிவிடுகிறது.
மிக இயல்பான மொழியில் எந்த ஜிகினா வேலையும் இல்லாமல் மடமடவென நாவல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவலை வாசிக்கும் போது நமக்குள் கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளை பெரும்பாலும் கதாபாத்திரங்களே எழுப்பிவிடுகின்றன. அவை வெறும் சிலப்பதிகாரத்திலிருந்தும் இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து மட்டும் எழும் கேள்விகள் இல்லை. நற்றினை பற்றியும் புறநானூறு பற்றியும் பதிற்றுப்பத்து பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் கற்களைத் தேடியலையும் புரோக்கர்கள் பற்றியும் நாகமாணிக்கம் பற்றியும் இன்னும் என்னனென்னவோ பற்றியும்....
நமக்குள் எழும் பெரும்பாலான கேள்விகளுக்கு நாவலில் முழுமையான பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. நாவல் வழியாகக் கிடைக்கிற பதில்தான் இறுதியானது என்றும் அர்த்தமில்லை. ஆனால் தன் போக்கில் இந்த நாவல் உருவாக்குகிற கேள்விகள் முக்கியமானவை. நாவல் திறந்து காட்டுகிற வரலாற்றின் பக்கங்கள் அதிசுவாரசியமானவை. நிற்காத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அதன் விறுவிறுப்பு புதிரானது.
ஒரு தேடலை உருவாக்குவதைவிடவும் நாவலுக்கு வேறு என்ன பெரிய வெற்றி அமைந்துவிட முடியும்? இதுவரை நான் சிலப்பதிகாரத்தை முழுமையாக வாசித்ததில்லை. ஜெயமோகனின் கொற்றவை வாசித்ததுண்டு. அது மிகச் சிறந்த நாவல் என்றாலும் அது சிலப்பதிகாரத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மிளிர்கல் தூண்டியிருக்கிறது. இன்னொரு முறை கொற்றவையை வாசிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. பூம்புகார் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. பிதாகரஸ் பற்றியத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என குறித்து வைத்திருக்கிறேன். கொடுங்கலூர் வெளிச்சப்பாடுகள் பற்றிய விவரங்களின் மீது ஆர்வம் வந்திருக்கிறது. கொங்குநாட்டின் கற்கள் பற்றிய தேடல் குறித்தான விருப்பம் உண்டாகியிருக்கிறது. Chain Reactions. இத்தகைய சங்கிலித் தொடர் ரியாக்ஷன்களைத்தான் ஒவ்வொரு வாசிப்பிலும் மனம் விரும்புகிறது. நாம் வாசிக்கும் எழுத்தானது ஒரு தேடலை உருவாக்குவதைத்தான் மனம் எதிர்பார்க்கிறது. ஆனால் அது அனைத்து வாசிப்பிலும் சாத்தியம் இல்லை. ஏதாவது சில புத்தகங்களே இத்தகைய சங்கிலிப்பிணைப்பைத் தூண்டிவிடுகிறது. இப்பொழுது மிளிர்கல் தூண்டியிருக்கிறது.
மொத்தம் இருநூற்றியறுபத்தைந்து பக்கங்கள். இருநூறாவது பக்கத்திற்கு மேல் அடுத்த அறுபத்தைந்து பக்கங்களில் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்க முடியும் என்று தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். அதைச் செய்திருந்தால் நாவல் இன்னமும் இறுக்கமானதாக மாறியிருக்கும்.
பொன்னுலகம் பதிப்பகம்,
4/413, பாரதி நகர், 3 வது வீதி,
பிச்சம்பாளையம் அஞ்சல்
திருப்பூர் - 641 603
# 94866 45186
gunarpf@gmail.com
ஆன்லைன் விற்பனையில் மிளிர்கல்
பொன்னுலகம் பதிப்பகம்,
4/413, பாரதி நகர், 3 வது வீதி,
பிச்சம்பாளையம் அஞ்சல்
திருப்பூர் - 641 603
# 94866 45186
gunarpf@gmail.com
ஆன்லைன் விற்பனையில் மிளிர்கல்