Oct 1, 2014

இவ்வளவுதானா?

பள்ளியில் படித்த காலத்தில் ரவிந்திரநாத் தாகூரைப் பற்றி சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கீதாஞ்சலி என்ற பெயரையும் சேர்த்துத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தாகூரையும் கீதாஞ்சலியையும் பிரிக்க முடியாது. அவ்வளவு புகழடைந்த தொகுப்பு அது. பிற்காலத்தில் வந்த விமர்சகர்கள் கீதாஞ்சலியை தாகூரின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருத முடியாது என்று எழுதினாலும் எந்த விதத்திலும் தவிர்க்கவே முடியாத பாடல்கள் அவை. அந்தத் தொகுப்பு வெளி வந்து நூற்றி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. 1910 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வந்திருக்கிறது. பிறகு இரண்டு ஆண்டுகளில் தாகூரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டார்.

சமீபத்தில் மதிப்புரை.காம் தளத்தில் மதிப்புரைக்காக சில புத்தகங்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். பதிவு செய்து கொண்டால் விமர்சனத்திற்காக புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். பட்டியலிலிருந்த புத்தகங்களில் கீதாஞ்சலியும் ஒன்று. கனடாவில் வாழும் தமிழரான சி.ஜெயபாரதன் மொழி பெயர்த்திருக்கிறார். மிகுந்த ஆர்வத்தோடு மதிப்புரை.காம் தளத்தில் பதிவு செய்துவிட்டேன். தாகூரைப்பற்றிய கட்டுரைப் போட்டி ஒன்றிற்காக கல்லூரியில் படித்த சமயத்தில் கீதாஞ்சலியிலிருந்து சில பாடல்களை வாசித்திருக்கிறேன். தற்பொழுது தமிழிலும் கிடைக்கிறது என்றவுடன் உற்சாகமாக இருந்தது.

ஓரிரு நாளில் புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். தாகூர் வங்காளத்தில் எழுதியது 157 பாடல்கள். அவற்றிலிருந்து 103 பாடல்களைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த ஆங்கிலத் தொகுப்பிற்குத்தான் 1913 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்தது. நூறு வருடங்களுக்கு முன்பாகவே அந்தப் பரிசை வாங்கிய இந்தியன் அவர். அத்தகைய ஆளுமையின் படைப்புகளை மொழி பெயர்க்க ஒரு துணிச்சல் வேண்டும். ஜெயபாரதன் துணிந்து செய்திருக்கிறார். என் அப்பாவுக்கு எட்டு வயதாக இருக்கும் போதே பொறியியல் படிப்பை முடித்தவர் திரு. ஜெயபாரதன். அத்தனை அனுபவம் அவருக்கு. அவரது துணிச்சலுக்கும் இந்த வயதில் செலுத்தியிருக்கும் உழைப்புக்கும் மனப்பூர்வமான வந்தனங்கள். 

ஆனால் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்று தயவு செய்து கேட்க வேண்டாம். 

சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருக்கிற வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றுவது கட்டுரைகளில் வேண்டுமானால் வேலைக்கு ஆகலாம். கவிதையில் எப்படி சாத்தியமாகும்? கவிதைக்கென்று ஒரு உயிர்ப்பு இருக்கிறது அல்லவா? அப்பொழுதுதான் வெட்டியெடுக்கப்பட்ட மாமிசத் துண்டு போல சூடும் துடிப்பும் கவிதையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எந்த மொழியிலிருந்து வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். ஆனால் கவிதையை வாசித்துவிட்டு அந்த சாராம்சம் துளி கூடச் சிதையாமல் கொடுத்திருக்க வேண்டும். அப்படியான ஒரு நம்பிக்கையில்தான் இந்தத் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே மிகுந்த சங்கடமாகிவிட்டது. 

பொதுவாக, விருப்பமில்லாத புத்தகங்களில் தலையைக் கொடுத்துவிட்டால் அப்படியே விட்டுவிடுவதுதான் வாடிக்கை. அதைப் பற்றி எழுதுவம் பேசுவதும் சச்சரவுகளை உருவாக்கும். ஆனால் மதிப்புரை.காம்மின் நிபந்தனைப்படி புத்தகம் வந்து சேர்ந்த இருபது நாட்களுக்குள் மதிப்புரையை அனுப்பி வைத்தாக வேண்டும். உண்மையிலேயே இந்த புத்தகத்திற்கு எப்படி விமர்சனம் எழுதுவது என்று தெரியவில்லை. அவ்வளவு மோசம்.

முதலில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்- இந்த மொழிபெயர்ப்பில் எந்த ரஸமும் இல்லை. இலக்கிய ரஸத்தைச் சொல்லவில்லை. தக்காளி ரஸம் கூட இல்லை. நம்பிக்கை இல்லையென்றால் முதல் கவிதையின் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest 
again and again, and fillest it ever with fresh life. 

This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through 
it melodies eternally new. 

மொழிபெயர்ப்பு

அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்பதல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை 
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த 
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!

எதற்காக ஆச்சரியக்குறிகளும் கேள்விக்குறிகளும் அவசியமில்லாமல் தொகுப்பு முழுவதுமாக விரவிக் கிடக்கின்றன என்று புரியவில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுத்தற்குறிகளை பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கவிதையின் வலுவைக் குறைக்கிறோம் என்று பொருள். ‘இந்த இடத்தில் ஆச்சரியக்குறி வந்திருக்கிறது அதனால் நீ ஆச்சரியப்பட வேண்டும்’ என்று கவிஞன் சொல்லித் தரத் தேவையில்லை. எந்த இடத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எந்த இடத்தில் ஆச்சரியப்பட வேண்டும் என்பது வாசகனுக்கே தெரியும். தாகூருக்கு இது தெரியாதா? அவர் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் மொழிபெயர்ப்பு முழுவதுமாக இவற்றை ஜெயபாரதன் அள்ளி இறைத்திருக்கிறார். 

இந்தப் பாடலிலேயே பாருங்கள். தாகூர் கேள்வி எதுவும் கேட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ‘உவகை அளிப்பதல்லவா அது உனக்கு?’ என்று கேள்வியாக மொழிபெயர்த்திருக்கிறார். தொனியே மாறுகிறது அல்லவா?. 

அடுத்ததாக வரி அமைவை கவனியுங்கள். எப்படி பத்தி பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். தாகூரின் பாடலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? மூச்சடைக்கிறது. கவிதையைப் பொறுத்த வரையில் வரி அமைப்பு மிக முக்கியமானது. கவிதையை மனப்பூர்வமாக உணர்ந்து எழுதும் எந்தக் கவிஞனுக்கும் இதன் முக்கியத்துவம் தெரியும். குறிப்பிட்ட சொல்லானது முதல் வரியில் வருமா அல்லது இரண்டாவது வரியில் வருமா என்று குழம்பி முடிவெடுக்க முடியாமல் அந்தக் கவிதையையே கைவிட்ட கவிஞர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் இந்த மொழிபெயர்ப்பில் மூலத்திற்கும் மொழிபெயர்ப்புக்குமான கொட்டிக்கிடக்கும் வித்தியாசங்கள் ஆயாசமடையச் செய்கின்றன. 

இன்னொரு விஷயம்- தலைப்புகள். என்னிடமிருக்கும் ஆங்கில வடிவத்தில் எந்தப் பாடலுக்கும் தலைப்பு இல்லை. பிடிஎஃப்பாக தரவிறக்கம் செய்து பார்த்த போதும் தலைப்புகள் இல்லை. ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பாடலுக்கும் மொழிபெயர்ப்பாளர் தலைப்பை உருவாக்கியிருக்கிறார். இது எந்தவிதத்தில் சரி என்று தெரியவில்லை. தாகூருக்குச் செய்யும் துரோகமில்லையா?

இப்படி பக்கம் பக்கமாக குறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புமே தாகூரின் படைப்பின் மேன்மையை புரட்டிப் போடுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பாடலையும் உதாரணம் காட்டவிரும்புகிறேன்.

MY song has put off her adornments. 

She has no pride of dress and decoration. Ornaments would mar our union; they would 
come between thee and me; their jingling would drown thy whispers. 

My poet's vanity dies in shame before thy sight. O master poet, I have sat down at thy 
feet. Only let me make my life simple and straight, like a flute of reed for thee to fill with 
music. 

இதன் மொழிபெயர்ப்பைப் பாருங்கள்-

எனது கவித்துவ
மனது 
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது 
ஒய்யாரக் கவர்ச்சி 
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது நட்பின் இணைப்பை 
நாசம் செய்வது
நகை அலங்காரம்!

உனக்கும் 
எனக்கும் உள்ள
உறவின் குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உனது அணிகள் உண்டாக்கு
சலசலப்பு ஓசை
முணுமுணுக்கும் 
உன் இனிய மொழிகள்
என் செவியில் விழாமலே
அமுக்கி விடும்!

இந்த பாடலின் மூலத்திற்கும் மொழிபெயர்ப்புக்குமான வித்தியாசங்களை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம். குறிப்பாக கடைசி பத்தியில் மூலத்திற்கும் மொழிபெயர்ப்புக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று மண்டை காய்கிறது. இதற்கு மேல் வாசிப்பது நல்லதுக்கில்லை என்று ஏழாவது பாடலுடன் ஜெயபாரதனின் வார்த்தைகளில் சொன்னால் ‘அமுக்கி வைத்துவிட்டேன்’.

ஜெயபாரதனை முன் பின் சந்தித்தது இல்லை. மின்னஞ்சல் தொடர்பு கூட இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என்ற விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டே இந்தக் குறிப்பை முடிக்க நினைக்கிறேன். ஒருவேளை இதை வாசிக்கும் போது அவருக்கு மனவருத்தம் உண்டாகக் கூடும். வயதில் மூத்தவரை வருத்தமடையச் செய்வதற்காக எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் விமர்சனம் எழுத வேண்டும் என்பதற்காக பூசி மொழுக வேண்டியதில்லை அல்லவா? திரு. ஜெயபாரதனின் கடும் உழைப்புக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். ஆனால் அந்த உழைப்பை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் செயல்படுத்தலாம். தயவு செய்து தாகூர் போன்ற ஆளுமைகளை விட்டுவிடுவது நல்லது.  இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கும் புதிய வாசகன் ‘இவ்வளவுதான் தாகூரா?’ என்று இழிவாக நினைத்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் கொட்டிக் கிடக்கின்றன என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

(செப்டெம்பர் 30 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்)