Sep 16, 2014

அவள் அப்படித்தான் - எதிர்வினைகள்

அவள் அப்படித்தான் கட்டுரையை எழுதிய போது படம் உருவாக்கப்பட்ட முறை குறித்தான ஒரு சுட்டியைத் தேடிப் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை. அது படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமியின் நேர்காணல். அந்திமழை இதழில் வெளியாகியிருக்கிறது.
                                                         
கட்டுரை குறித்தான இரண்டு எதிர்வினைகள்.

                                                             ***
                                                             (1)

அவள் அப்படித்தான் படம் பற்றிய பதிவைப் பார்த்தேன். இப்போது தான் மூன்று நாட்களுக்கு முன் அந்தப் படத்தை நானும் பார்த்தேன். நான் பிறப்பதற்கு சில பல வருஷங்கள் முன்னால் வந்த படம். நீங்கள் சொன்னது போல் இந்தக் காலத்தில் அதை விடப் பல மடங்கு சிக்கலான பெண்களை தினம் தினம் எதிர்கொள்கிறோம் என்பது உண்மை தான். எனக்கும் சினிமாவின் நுண்ணியங்களைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாது தான்.

ஆனாலும் அந்தப் படத்தைப் பார்த்த போது நான் கவனித்த ஒரு மிக முக்கியமான விஷயம். இந்தக் காலத்துப் படங்களில் காணவே கிடைக்காத, In fact இது வரை நான் பார்த்த எந்தப் படங்களிலும் இல்லாத, முகத்திலறைவது போன்ற, கதாபாத்திரங்களின் இயல்புத் தன்மை. அது தான் Striking ஆக இருந்தது. கொஞ்சமே கொஞ்சம் மிகையாக " நடித்திருந்தது " கமல் மட்டுமே. படத்தைப் பார்த்து விட்டு நண்பரொருவரிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல் - கிராமத்து அத்தியாயம் ராஜாவின் இசையைக் கழித்து விட்டால் பைசா பெறாது என்பது தான். அத்தோடு ருத்ரைய்யா nfdc நிதி உதவியில் உச்சி வெயில் என்றொரு படம் இயக்கியதாகக் கேள்வி. நீங்கள் சொன்னது போல் படம் பார்க்கும் போது கொஞ்சமே கொஞ்சம் அயற்சி ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அதன் பின்னான படத்தின் தாக்கம் ரொம்ப ரொம்ப அதிகம்.

ஹரீஷ். 
                                                                  ***
                                                             (2)

அவள் அப்படித்தான் பற்றி எழுதியிருந்தீர்கள். நானும் இன்னும் படம் பார்க்கவில்லை. இனிமேல் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும். எனது விமர்சனங்கள் அதன் பிறகு நீங்கள் சொல்லும் செய்தித்தாள் செய்திகளை பற்றியது. // இன்று கூட ஒரு செய்தி. இரண்டு குழந்தைகளின் அம்மாவுக்கு வேறொருவருடன் தொடர்பு உண்டாகியிருக்கிறது// (தினத்தந்தியா?)

இந்த செய்தி பத்திரிக்கையில் வந்திருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இதை தாங்கள் வெளியிட்டிருந்த விதம் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. 24 வயது இளைஞனான நான் இன்றைக்கு என் நண்பர்கள் வட்டத்தில் பெண்கள் பற்றி பேசும் போது கேட்பதெல்லாம் பொதுவான வசைகள், வெறுப்பு, அவர்களின் கற்பு குறித்த ஆதாரமற்ற அவதூறுகள், பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள், இவையெல்லாம் கேட்டுகேட்டு சலித்துவிட்டன. அது அப்படியில்லை, அவர்கள் பக்கமும் சிக்கல்கள் இருக்கலாம் அல்லது ஆணின் மீதும் தவறு இருக்கலாம் என்று பேச்சை எடுத்தாலே ‘அப்படியெல்லாம் கிடையாதுடா பொண்ணுங்களே அப்படித்தான்’ என்று அவர்களின் வேகம் இன்னும் கூடும். நான் இதற்குமேல் விவாதித்து பயனில்லை என விட்டுவிடுவேன்.

பொதுவாகவே தமிழகம் முழுவதும் (நான் பார்த்தவரையில்) இளைஞர்கள் மத்தியில் இந்த வெறுப்பு மனநிலை இருக்கிறது. இத்தனைக்கும் பெரும்பாலானவர்களுக்கு காதலிகள், தோழிகள் இருப்பார்கள். ஆனால் ஆண் நண்பர்கள் மத்தியில் வசை பொழிந்துகொண்டே இருப்பார்கள். பேச்சுவாக்கில் ஒரு நகைச்சுவை உதிர்ப்பது போல இவர்களால் ஒரு பெண்ணை களங்கப்படுத்தி விட்டு எளிதில் கடந்துவிட முடிகிறது. இவர்களால் எப்படி பொதுவான வசைகள், அவதூறுகள் வைத்துக் கொண்டே பெண்களிடம் சகஜமாக பழக முடிகிறது என ஆச்சர்யமாக இருக்கும். இப்படி சமூகத்தில் மொத்த பாலினமே எதிர் பாலினத்தின் மீது சந்தேகமும் அவதூறும் கொண்டவாறே உறவில் நீடிப்பது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. நிச்சயம் இது கடந்த காலத்தைவிட மோசமடைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். இதுபோன்ற ஒருதலைபட்சமான பத்திரிக்கை செய்திகளும் அதற்கு விசை சேர்கிறது. தினத்தந்தி செய்தியை பற்றி இவர்கள்தான் கவலைப்படுபவர்கள் போல பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

நீங்கள் குறிப்பிட்ட மஞ்சு அந்த நிலைக்கு வந்ததற்கான பின்புலம், அவள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் போன்றவற்றை படத்திலும் தங்கள் பதிவிலும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு எத்தனைபேர் அதைபற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். அவர்கள் கண்களில் படுவதெல்லாம் மேலோட்டமான பத்திரிக்கை செய்தி அதை வைத்துகொண்டு ‘இப்படித்தான் எங்க வீதியிலும் ஒரு பொம்பிள..’ என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

இங்கு உள்ள அனைத்து ஊடகங்களும் ஆண்களின் பார்வையில் செயல்படுவது (குறிப்பாக தினசரிகள் என்றால் கேட்கவே வேண்டாம்). பெரும்பாலும் இம்மாதிரி செய்திகளில் அந்த பெண்ணுக்கு இருந்த சிக்கல்கள் பற்றியோ, அவளது பலவீனங்கள் பற்றியோ, இல்லை அதற்கு துணை போகும் ஆண்மீது இருக்கும் தவறு பற்றியோ சிறு பார்வையும் இருக்காது.  இந்த பின்புலத்தில்தான் அந்த பத்திரிக்கை செய்தியை வெளியிட்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று சொல்கிறேன். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பின்பு அவள் கொள்ளும் கள்ள உறவுதான் நமக்கு அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. மாறாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஒருவளை அடைய நினைக்கும் வேட்கையும் அதற்காக அந்த ஆண் போகத் துணியும் எல்லைகளும் நமக்கு எந்த அதிர்ச்சியும் அளிப்பதில்லை.

இல்லை மீண்டும் வாசித்து பார்க்கையில் இதுபற்றிய கேள்விகளை நீங்களும் எழுப்பியிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. // அவளது மனநிலை எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும் //

ஆனால் முன்பத்தியில் பத்திரிக்கை செய்தியை உதாரணமாக கொண்டு எழுத ஆரம்பிப்பது, இம்மாதிரி கேரக்டர்கள் கேள்விப்படுவது சகஜமாகிவிட்டது என்பது போன்ற தொனி ஆகியவற்றை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதுவரை அப்படி கேள்விப்பட்ட பெண்கள் மட்டுமே குற்றவாளிகளாக (சரி இலக்கியவாதிகளுக்கு வேண்டுமானால். புரிந்துகொள்ள முடியாத உளசிக்கல்கள் கொண்ட கேரக்டர்) நம் நினைவில் உள்ளனர். ஆனால் அனைத்து சம்பவங்களிலும் குற்றத்தில் சரிபாதி பங்குடைய ஆண்கள் நம் நினைவில் உள்ளனரா? அதை நாம் சரிபார்த்து கொள்கிறோமா என நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவே இக்கடிதம் எழுதினேன்.

தே.அ.பாரி.  

                                                                        ***

அன்புள்ள பாரி,

ஆண் பெண் என்ற பேதம் எல்லாம் எதுவும் இல்லை. இங்கு எல்லோரிடமும் சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வகையில் புரிந்து கொள்ளவே முடியாத செய்திகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கட்டுரையில் குறிப்பிட்டிருந்த செய்தி ஒரு உதாரணம்தான். ஒருவேளை அந்தப் பெண் தன் கணவனைக் கொலை செய்யவில்லை என்றாலும் கூட காதலுக்காக கணவனைக் கொல்லும் மனைவிகளையும், பிள்ளைகளைக் கொல்லும் ஆண்களையும், தாயைக் கொல்லும் மகன்களையும் கேள்விப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்.

இன்று அதே தினத்தந்தியில் இன்னொரு கொலைச் செய்தி வந்திருந்தது. மனைவிக்கு யாருடனோ உறவு இருக்கிறது என்பதற்காக அவளையும், தனது ஐந்து வயது மகனையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டான் ஒருவன். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் இளையமகனை ஒரு உறவினர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அது இளையமகனின் அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. தப்பித்துவிட்டான். 

இந்தச் செய்தியில் ஆண் மனநிலையின் சிக்கல்தான் பிரதானமாகத் தெரிகிறது. இருவரையும் கொன்றுவிட்டு அவனாகவே சென்று சரணடைந்திருக்கிறான். காவலர்கள் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். தூக்கி விளையாடிய குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து கதறி அழுதிருக்கிறான். இனி காலம் முழுவதும் கூட அவன் அழக் கூடும்.

இது இன்னொரு உதாரணம்.

பெண்களைப் பற்றி மட்டும்தான் நாம் பேசுகிறோம் ஆண்களைப் பற்றி பேசுவதில்லை என்றெல்லாம் இல்லை. சிக்கல்களில் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கலாமேயொழிய எல்லோருக்குமே சிக்கல்கள் இருக்கின்றன. ஒரே குட்டைதான். 

ஆணுக்கும் பெண்ணுக்குமான எல்லைகள் மிக வேகமாக அழிந்து கொண்டிருக்கின்றன. யார் வேண்டுமானாலும் யாருடையை எல்லைக்குள்ளும் சென்று வர முடிகிறது- சென்று வருகிறோம். எல்லாவற்றிலும் அவசரம். Curiosity. எல்லைகள் சிதையச் சிதைய நம் சிக்கல்கள் பெருகுகின்றன. மிக எளிதில் எதிர்பாலினரோடு நெருங்க முடிகிறது. எதைப் பற்றி வேண்டுமானாலும் பேச முடிகிறது. விவாதம் என்ற பெயரில் விரல்களை நீட்டுவது சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது. காமம் என்ற பெரும்புள்ளி பெரும்பாலான கண்களை மறைக்கிறது. உறவுகளின் வரையறைகள் தாறுமாறாக மாறிக் கொண்டிருக்கின்றன. 

இந்த எல்லை மீறல்களுக்காக நிறைய தகிடுதத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மொபைல் ஃபோனை மறைப்பதும், பாஸ்வேர்ட்களை பாதுகாப்பதும், பொய்களைச் சொல்வதுமாக மனதின் இருளை அதிகமாக்கிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் தங்களது வீட்டில் நடைபெறும் மீறல்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாத குழப்பங்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னமும் விரிவாக பேச முடியும்.

அவள் அப்படித்தான் படத்தில் வரும் மஞ்சு என்ற பெண்ணின் கதாபாத்திரத்தைப் பற்றி பேச வேண்டியிருந்ததால் பெண் குறித்தான செய்தியை உதாரணமாக பயன்படுத்திக் கொண்டேன். ஒருவேளை ஆணின் கதாபாத்திரத்தைப் பற்றி பேச வேண்டியிருந்திருந்தால் அதற்கு உதாரணமாகச் சொல்லவும் நம்மிடையே லட்சக்கணக்கான செய்திகள் குவிந்து கிடக்கின்றன.

நன்றி.