Sep 17, 2014

வீடு வாடகைக்கு கிடைக்குமா?

வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டி அந்த வீடு இருக்கிறது. தரைதளத்தில் கணவனும் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள். மூத்த குடிமக்கள். அந்தப் பெரியவர் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்றவர். தனது வீட்டுக்கு மேலாக ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். வீட்டுக்கு பாதுகாப்பும் ஆயிற்று. வயதான காலத்தில் இருவருக்கும் ஒரு வருமானமும் ஆயிற்று. மேல் வீட்டில் ஒரு தம்பதியர் குடியிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருமே வேலையில் இருக்கிறார்கள். காலையில் கிளம்பினால் வீடு திரும்ப இரவாகும். அதனால் பகல் நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். 

பெரியவர்கள் கன்னடக்காரர்கள். பகலில் பதினோரு மணிக்கு மேலாக வீட்டு வேலை எல்லாம் முடிந்த பிறகு வீதியில் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பாவுக்கு அந்தப் பெரிய மனிதர் பழக்கம். அரைகுறைத் தமிழில் எதையாவது பேசிவிட்டுச் செல்வார். அவர்களுக்கு வாரிசு யாரும் இல்லை. அதனால் வீட்டில் வாடகைக்கு வந்து போகிறவர்கள்தான் தங்களுக்கு பிள்ளைகள் மாதிரி என்று அப்பாவிடம் சொல்வாராம். அந்தப் பெண்ணை பார்த்திருக்கிறேன். பத்து மணிக்கு மேலாக லேப்டாப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்வாள்.பெரும்பாலான நாட்களில் ஜீன்ஸ் அணிந்திருப்பாள். அந்த ஆணைப் பார்த்ததில்லை. நைட் ஷிஃப்டில் இருப்பார் போலிருக்கிறது. 

இப்படி இரண்டு மூன்று மூத்தவர்கள் எங்கள் ஏரியாவில் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். அவர்கள் பணியிலிருந்த சமயத்தில் இந்த விவசாய நிலத்தை பிரித்து ஆளுக்கு மூன்று அல்லது ஐந்து செண்ட்களாக ஒதுக்கியிருக்கிறார்கள். அதற்கு பிறகு நிலத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகள். ‘எங்களைப் பெற்றவர்களை நிறுவனம் ஏமாற்றிவிட்டது’ என்று விவசாயிகளின் வாரிசுகள் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அலையவிட்டு கடைசியில் பத்து வருடங்களுக்குப் பிறகுதான் இடம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இடம் வந்து சேர்ந்தவுடன் இந்தப் பெரியவர்கள் ஆளாளுக்கு வீடு கட்டி இங்கேயே குடி வந்துவிட்டார்கள். சில பெரியவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் செட்டில் ஆனவர்கள். எப்பொழுதாவது எட்டிப்பார்த்துவிட்டு போவார்கள். மேற்சொன்ன பெரியவர்களைப் போல ஓரிரண்டு பேர் இருக்கிறார்கள். வாரிசுகள் யாரும் இல்லை. உள்ளுக்குள் வருத்தப்படுகிறார்களோ என்னவோ தெரியாது ஆனால் மாலை நேரத்தில் வெகு சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவரின் வீட்டின் முன்னால் குழுவாக அமர்ந்து பேசுவதைப் பார்க்கும் போது சீக்கிரம் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் அவர்களின் வேலை அப்படி. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் அதே நிறுவனத்திலேயே வேலை செய்திருக்கிறார்கள். அவர்களின் நட்பு குறைந்தபட்சம் முப்பாதாண்டு காலக் கணக்கு. எனக்கு அப்படியான நட்புகள் அமையுமா என்றெல்லாம் தெரியவில்லை. பெரும்பாலான நட்புகள் தற்காலிகமானவை. Passing clouds. இன்று பேசிக் கொள்கிறோம். நாளை பேசுவோமா என்று கூடத் தெரியாது. அவர் நிறுவனம் மாறிவிடக் கூடும் அல்லது நான் மாறிவிடக் கூடும்.

இந்தப் பெரியவர் உடுப்பிக்காரர். அங்குதான் உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் நண்பர்களோடு இருந்துவிடலாம் என்று இங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவ்வளவு ஒன்றும் மோசமான வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு தினத்தையும் சிரித்துக் கொண்டே தாண்டுகிறார்கள் என்று தோன்றும். அப்பாவுக்கு அந்தக் குழாம் ஒத்து வருவதில்லை. முழுக்க கன்னடத்திலேயே பேசுகிறார்கள் என்று ஒதுங்கிக் கொள்வார். ஆண்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள் என்றால் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை. நடந்து கொண்டே பேசுவார்கள். காலையில் ஒரு நடை. மாலையில் ஒரு நடை. சலிக்கும் போது ஏதாவதொரு வீட்டின் வாசலில் காலை நீட்டி அமர்ந்து கொள்வார்கள். 

எங்கள் ஏரியா அவ்வளவாக ஜனநெருக்கடி இல்லாத பகுதி என்பதால் அவர்களுக்கு வேறு எந்தத் தொந்தரவும் இல்லை. அவ்வப்போது ரோந்துப் போலீஸார் வந்து செயினை வீட்டிலேயே வைத்துவிட்டு வரச் சொல்வார்கள். செயின் பறிப்பு நடப்பதாகச் சொல்வார்கள். அதனால் கழுத்தை போர்த்திக் கொண்டு அந்த பாட்டிமார்கள் நடப்பார்கள். எனக்கு பெரியவர்கள் யாருடனும் அறிமுகம் இல்லை. இந்தப் பெரியவரை மட்டும் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்வேன். அப்பாவோடு பேசிக் கொண்டிருந்தால் பரஸ்பரம் சிரித்துக் கொள்வோம். 

இரண்டு நாட்கள் முன்பாக அலுவலகத்தில் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது. மாலையில் வீடு திரும்பிய போது அப்பா வீட்டில் இல்லை. விசாரித்த போது பெரியவரின் வீட்டில் திருட்டு போய்விட்டது என்றார்கள். அப்பா அங்கு சென்றிருந்தார். முதலில் அதிர்ச்சியாகத் தெரியவில்லை. ஆனால் துணையே இல்லாத அந்த மனிதரிடம் ஏன் திருடினார்கள் என்று நினைத்த போது சற்று அங்கலாய்ப்பாக இருந்தது. எதற்கும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று போன போதுதான் தெரிந்தது. அது குரூரமான கொள்ளை.

வீட்டில் இருந்த அத்தனை சாமான்களையும் லாரி கொண்டு வந்து நிறுத்தி அள்ளியெடுத்திருக்கிறார்கள். பெரியவர்கள் இரண்டு பேருக்கும் மயக்கமருந்து கொடுத்துவிட்டார்கள். இருந்தாலும் வெளியில் நின்று கொண்டிருந்த லாரியை எப்படி யாருமே கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கும் போது ‘ஒரு வேன் நின்னுச்சு..ஆனால் எதுக்கு நிக்குதுன்னு கவனிக்கல’ என்றே சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஒரு நகரத்தில் மதியம் ஒரு மணிக்கு லாரி நிற்கும் போது அதை ஏன் திருட்டு என்று நினைக்கப் போகிறோம்?

அந்தப் பெரியவரின் மனைவியின் கழுத்திலிருந்த நகைகள், வீட்டுச் சாமான்கள், டிவி, ப்ரிட்ஜ் என கிட்டத்தட்ட வழித்தெடுத்துவிட்டார்கள். நகை மட்டும் பதினெட்டு பவுன். அந்தப் பாட்டி கிட்டத்தட்ட மயக்கத்தில் இருந்தார். பெரியவராலும் பேச முடியவில்லை. கடைசி காலத்தில் என்ன செய்வார்கள்? திருட்டைக் கூட பொறுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. மேல் வீட்டில் குடியிருந்தவர்களேதான் திருடினார்கள் என்பதைத்தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள்தான் கடைசியாக வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். வலுக்கட்டாயமாக எதுவும் செய்யவில்லை. ஏதோ ஸ்பிரே அடித்த வரைக்கும்தான் ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு எதுவுமே தெரியவில்லை. அவர்களின் நிழற்படங்களை வாடகை ஒப்பந்தத்துக்காக வாங்கி வைத்திருக்கிறார். அவர்கள் அதைவிட விவரமானவர்கள். தேடி எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்பொழுது எந்த அத்தாட்சியும் இல்லை. அடையாளமும் இல்லை.

குரூரமானவர்களால் சூழப்பட்டிருக்கிறோம். கருணை, மனிதாபிமானம், சக மனிதன் மீதான எளிய நம்பிக்கை என்றெல்லாம் எதுவுமே இருக்க முடியாத சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு பணம் மட்டுமே பிரதானம். அதற்கு பிறகுதான் உயிர், அன்பு, பிரியம், நேசம் என்பதெல்லாம். பணம் கிடைக்கும் என்றால் எவ்வளவு கீழாகவும் இறங்குவதற்கு மனிதர்கள் தயாராகிவிட்டார்கள். அந்தக் கீழ்மையைத் தற்காலிகமாக மறைப்பதற்குத்தான் பகட்டான உடையும், பாலிஷான பேச்சும், போலியான புன்னகையும், இன்னபிற இத்யாதிகளும்.

போலீஸார் தைரியமாகப் பேசினார்கள். சிக்னல் கேமிராவில் லாரியின் படம் பதிவாகியிருக்கும். பிடித்துவிடலாம் என்றார்கள். வீட்டில் குடியிருந்தவர்கள் கொடுத்திருந்த முன்பணம் ஒரு லட்சம் மட்டும் தப்பித்திருக்கிறது. அது போக ஒன்றரை லட்சம் பெரியவரின் வங்கிக் கணக்கில் இருக்கிறது. அதைத்தவிர அத்தனையும் வழித்துவிட்டார்கள். அடுத்த வேளை சோறாக்குவதற்கும் கூட சிலிண்டரும் அரிசியும் சட்டிகளும் வாங்கினால்தான் உண்டு. நண்பர்கள் தேற்றிக் கொண்டிருந்தார்கள். இப்போதைக்கு அவர்கள்தான் பெரியவர்களின் ஒரே பற்றுக்கோல். மேல் தளத்திற்குச் சென்ற போது போலீஸார் அனுமதிக்கவில்லை. கைரேகைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். தங்களிடையே இருக்கும் பல்லாயிரக்கணக்கான ரேகைகளின் டேட்டாபேஸில் இன்னும் இரண்டு ரேகைகளைச் சேர்த்துக் கொள்கிறார்கள். 

நேற்று இரவு அந்த வீடு பூட்டியிருந்தது. உறவினர்கள் வந்து உடுப்பிக்கே அழைத்துச் சென்றுவிட்டார்களாம். அது ஒருவிதத்தில் நல்லதுதான்.