Sep 16, 2014

ஜா மணி தெரியுமா?

பெங்களூரில் புத்தக வெளியீடு நடந்தது. அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள். ஐடி நிறுவனம் ஒன்றின் Conference Hall இல் நடத்தினார்கள். எழுத்தாளர் சொக்கனின் நிறுவனம்தான் அது. அவருக்கு பெரிய மனம். இப்படியான கூட்டங்களுக்கு ஏதாவது வழி செய்துவிடுகிறார். அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் குழுவாக கம்பராமாயணம் வாசிக்கிறார்கள். கலந்து கொள்பவர்களே பாடல்களை சீர் பிரித்து வாசிக்க வேண்டும். பாடலை வாசித்துவிட்டு அதற்கான பொருளையும் விவாதிப்பார்கள். என்னால் ஒரேயொரு முறைதான் கலந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு ஊர் சுற்றுவதன் காரணமாக இயலவில்லை. அநேகமாக கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியை நெருங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆயினும் விருப்பமிருக்கும் பெங்களூர்வாசிகள் சொக்கனை நாடலாம்.

இந்த மாதிரி கூட்டங்களுக்குச் செல்லும் போது தலை வாருவதுதான் எனக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. என்னிடம் இருக்கும் நாலேகால் முடிக்கு ஒரு சீப்பு இல்லை இரண்டு சீப்புகளை வைத்திருக்கிறேன். ஒன்று வண்டியின் பெட்ரோல் கவரில் இருக்கும். இன்னொன்று பேண்ட்டில். யாராவது பார்த்துவிடுவார்களோ என்று அந்தச் செல்லக்குட்டிகளை மறைக்க நான் படும்பாடு இருக்கிறதே- சொல்லி மாளாது. இந்தக் கூட்டத்திலும் அப்படித்தான். வண்டியை நிறுத்துகிறேன். ஒருவர் அருகில் வந்துவிட்டார். ‘தலையை வாரிவிட்டு வருகிறேன் நீங்க போங்க’ என்று சொல்லலாம்தான். ஆனால் அந்தப் பக்கமாகச் சென்று அவர் சிரித்தால் என்ன செய்வது? இதற்குத்தான் ஆபத்பாந்தவனாக செல்போன் வந்திருக்கிறது. ரிங் ஆகாத அதைக் காதில் இடுக்கிக் கொண்டு ‘பேசிட்டு வர்றேன் நீங்க போங்க’ என்று சைகை செய்துவிட்டு அந்தப்பக்கமாக நகர்ந்துவிட்டேன். நோயில் இறந்து கொண்டிருப்பவனுக்குத்தான் மிச்சமிருக்கும் நாட்களின் அருமை தெரியும் என்பது போல குளிக்கும் போதெல்லாம் நாற்பது ஐம்பது முடிகளை ஜலசமாதி செய்பவனுக்குத்தான் தெரியும்- இருக்கிற நாலேகால் முடியில் எப்படியெல்லாம் ஸ்டைல் காட்டுவது என்று. அது போகட்டும்.

ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கரவியூகம்’ சிறுகதைத் தொகுப்பையும் செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’ என்கிற கவிதைத் தொகுப்பையும் நிகழ்வில்  வெளியிட்டார்கள். பதிப்பாளர் பொன்.வாசுதேவன் சென்னையிலிருந்து வந்திருந்தார். ஐயப்பன் கிருஷ்ணனின் கதைகள் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை.

செல்வராஜ் ஜெகதீசன் நிறைய கவிதைகளை எழுதுகிறார். இப்பொழுதெல்லாம் சராசரியாக வருடத்திற்கு ஒரு தொகுப்பை கொண்டு வந்துவிடுகிறார். தனிப்பட்ட முறையில் பேசினால்- அடிக்கடி கவிதைப் புத்தகம் கொண்டு வருவது பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. சுந்தர ராமசாமி தன் வாழ்நாள் முழுமையிலும் வெறும் 104 கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். அவரது கவிதைகளைச் சேர்க்காமல் தமிழ்க் கவிதைகளை வரிசைப்படுத்த முடியாது. ராஜ சுந்தரராஜனின் மிக சொற்ப எண்ணிக்கையிலான கவிதைகளை விட்டுவிட்டு தமிழ்க் கவிதைகளைப் பற்றி பேச முடியாது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் கவிஞனின் இடம் என்பது வெறும் எண்ணிக்கையில் இல்லை என்று நம்புகிறேன். 

இது ஒரு பொதுவான கருத்துத்தான். செல்வராஜ் ஜெகதீசனுக்காகச் சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இன்னமும் இரண்டு புத்தகங்களையுமே வாசிக்கவில்லை. வாசித்துவிட்டுத்தான் புத்தகங்களைப் பற்றி பேச வேண்டும். ஆனால் புத்தகங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போது ஜா மணி ஆகிவிடக் கூடாது என்று பத்து நிமிடம் தலைகீழாக  நின்று தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். 

வா மணி இல்லை- ஜா மணி.  ஏதாச்சும் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் ஜா மணிதான் ஞாபகத்துக்கு வருவார். கு.அழகிரிசாமியின் மனப்பால் என்ற கதையில் மணிதான் நாயகன். அவர் ஒரு சுயேட்சை எழுத்தாளர்- ப்ரீலான்ஸ். ‘முயலுக்கு மூன்று கால்’ என்று எழுதிவிட்டால் அவராக பார்த்து திருத்தினால்தான் உண்டு. யாராவது திருத்தச் சொன்னால் அவ்வளவுதான். கடித்துத் துப்பிவிடுவார். உங்களை மாதிரியானவர்களுக்கு வேண்டித்தான் மூன்று கால் என்று எழுதினேன் இல்லையென்றால் இரண்டு கால் என்றுதான் எழுதியிருப்பேன் என்கிற கேரக்டர். சுயேட்சை எழுத்தாளராக சுற்றினால் வருமானம் வேண்டும் அல்லவா? அதற்காக விமர்சனம் எழுதுவார். விமர்சனம் என்றால் கிழித்துத் தொங்கவிடுவதுதான். அதனால் எழுத்தாளர்களுக்கெல்லாம் இவரைப் பார்த்தால் பயம். சிம்ம சொப்பனம்.

‘குமாரி கோமளா’ என்றொரு நாவல் வந்திருக்கிறது. அதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று மணியாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த நாவலை எழுதிய நாவலாசிரியனுக்கு மாதம் நானூற்றைம்பது ரூபாய் சம்பளம். ஜா மணியோ மளிகைக்காரனுக்கும் பால்காரனுக்கும் கடன் வைத்துவிட்டு ஏரியா விட்டு ஏரியா வீடு மாறும் அன்னக்காவடி. சம்பளக்காரனின் புத்தகத்தைப் பார்த்தால் வயிறு எரியத்தானே செய்யும்? எப்படி விமர்சனம் எழுதுகிறார் பாருங்கள். 

“இந்த ஆசிரியர் இதையும் நாவல் என்று எழுதியதற்கு பதிலாக வேறு ஏதாவது செய்திருக்கலாம். செய்வதற்கு வேலைகளா இல்லை? மோகினியாட்டம் ஆடலாம். கழைக் கூத்து ஆடலாம், வேசையர்பால் தூது சென்று பிழைக்கலாம் என்றெல்லாம் அந்தக் காலத்து புலவன் பட்டியல் அடுக்கியிருப்பது இந்த ஆசிரியருக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. அதற்காக நம் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்”

கு.அழகிரிசாமியின் எள்ளலான மொழிநடையும் ஜாமணி என்ற பாத்திரத்தின் சித்தரிப்பும் இந்தக் கதையில் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. நேரமிருந்தால் இந்தக் கதையை ஆன்லைனில் தேடி வாசித்துவிட்டு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி தொகுப்புக்கு எழுதப்பட்ட இந்த விமர்சனத்தையும் வாசித்துப் பார்க்கலாம். புத்தகம் வெளிவந்த நான்கே நாட்களில் எழுதப்பட்ட இதை ஏன் ஒன்றரை வருடங்களாகச் சுட்டிக்காட்டவில்லை என்றால்- பெரும்பாலான கல்லடிகளைத் தாண்டும் போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு வேகமாகத் தாண்டி விட வேண்டும். வெகுதூரம் தாண்டிய பிறகு வேண்டுமானால் விழுந்து கிடக்கும் கற்களைத் திரும்பிப் பார்க்கலாம். அப்பொழுது அவற்றை நம்மால் ரசிக்க முடியும். இல்லையென்றால் எமோஷனலாகி ஆங்காங்கே தேங்கிவிடுவோம்.