Sep 19, 2014

ஹலோ மிஸ்டர் அப்பாடக்கர்

ஒரு சந்தேகம்.  தமிழ்மொழி பற்றி. 

முதலில் மொழிதான் உண்டானது, இலக்கணம் என்பது அதன் பிறகுதான் எழுதப்பட்டது என்பது என் எண்ணம்.  அது எந்த மொழியாக இருந்தாலும் முதலில் இலக்கணத்தை வகுத்துவிட்டு, பிறகு மொழி புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்க முடியாது. மாறாக, புழக்கத்திலிருக்கும் ஒரு மொழியின் அனாடமி தான் இலக்கணமாகியிருக்க முடியும். சரிதானே?

அப்படியென்றால், இன்று உள்ள எழுத்துவழக்கு, ஒரு காலத்தில் பேச்சு வழக்காக இருந்ததா? பின்னர் பிறண்டதா? இல்லை, இப்படியொரு பேச்சு வழக்கே இல்லையென்றால், பிறகேன் இல்லாதவொன்றுக்கு இலக்கணம் கண்டார்கள்?

அல்லது, ஒரு காலத்தில் பேச்சுவழக்கும் எழுத்துவழக்கும் ஒன்றாக இருந்து, பின்னர் பிறண்டிருக்கிறது என்று கொண்டால், இலக்கணப்படி இயல்பாகப் பேசமுடியாத அளவிற்குத் தமிழ் அவ்வளவு கடினமா? அப்படியும் கடினமில்லையே. புரியவில்லை.

வடமொழி காற்றை அடிவயிற்றிலிருந்து கொண்டுவரும், அதனால் கடினமானது. தமிழுக்குக் காற்றைக் கழுத்துக்கு மேலிருந்து கொண்டுவந்தால் போதுமானது, அதனால் இயல்பாகவே எளிய ஒலிவடிவம் - என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், அவ்வாறு எளிமையாயிருப்பதானால், இலக்கணத்திலிருந்து பிறண்டு பேசுவது என்பது முரணாயிருக்கிறதே?

தங்களுக்கு இதைப்பற்றிய கருத்திருந்தால் பகிரவும்.

அன்புடன்,
வி.நாராயணசாமி


இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் என்ன செய்வது? அதிர்ச்சியில் நேற்றிரவு தூக்கமே இல்லை. ஒருவேளை பெரியவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை எனக்கு மாற்றி அனுப்பி வைத்துவிட்டாரோ என்று கூட சந்தேகமாக இருந்தது. ஆனால் தெளிவாக பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பதில் எழுதுவது கூடச் சிரமம் இல்லை. ‘பாருங்கய்யா எனக்கு சகல டிபார்ட்மெண்ட்டும் தெரியுமாக்கும்’ என்று ஸீன் போடுவதற்காக அதை ஒரு பதிவாகவும் போட்டுவிடுவேன். ஆனால் அந்தப்பக்கமாக நான்கு பேர் குலுங்கிக் குலுங்கி சிரிப்பார்கள். நான்கு பேர் என்பது damage control க்கான எண்ணிக்கை. நானாக சொல்லிக் கொள்வது. நூற்றுக்கணக்கானவர்கள் சிரிப்பார்கள். 

இப்பொழுது முகத்தை சீரியஸாக  மாற்றிக் கொண்டு வசனம் பேச வேண்டும். பேசுகிறேன்.

அன்புள்ள நாராயணசாமி,

உண்மையிலேயே இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுமளவிற்கு எனக்கு புலமை இல்லை. அப்படியே மீறிச் சொன்னாலும் அது எவ்வளவு தூரம் துல்லியமாக இருக்கும் என்றெல்லாம் தெரியாது. 

என் சுண்டைக்காய் அறிவுக்குத் தெரிந்து தமிழில் வெகுகாலம் வரையில் உரைநடை இல்லை. எழுதப்பட்டவை யாவும் செய்யுள்களும் பாடல்களும்தான். செய்யுள்களை இஷ்டப்படி எழுதிவிட முடியாதல்லவா? அதனால்தான் ‘எழுதறதுன்னா இப்படி எழுது’ என்கிற இலக்கண வரையறையை வகுத்திருக்கிறார்கள். அதைப் பின்வந்த புலவர்களும் பின்பற்றி எதையும் எழுத்தாக்கும் போது அதை ஒரு இலக்கண வரையறைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். 

ஆனால் எழுதப்படும் போது மட்டும்தான் இந்த வரையறை எல்லாம். காலங்காலமாக பாடப்படும் நாட்டுப்புற பாடல்கள், வாய்வழியாக பாடப்படும் பாரம்பரியப்பாடல்கள் எல்லாம் இலக்கண வரையறை இல்லாதவைதானே? ஆக சுவடி ஏறும் போது மட்டும் ‘நாங்க இலக்கணத்தில் ஸ்ட்ராங்’ என்று சொல்லிவிடுகிறார்கள். இதே பார்முலாவை சமீபத்தில் உரைநடை எழுத ஆரம்பிக்கப்படும் போதும் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ‘பேச்சு வழக்கு என்பது கொச்சையானது அதை எழுத்தாக்கக் கூடாது’ எனவும் எழுத்து என்றால் அது இலக்கண வரையறையுடன்தான் இருக்க வேண்டும் என்றும் நம்பியிருக்கிறார்கள். 

அதனால்தான் 1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையில் கூட அசோகமித்திரன் யதார்த்த வகை எழுத்தை எள்ளலாக பார்க்கிறார்கள் என்றும் அதைக் கொச்சை என்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆக கடந்த நாற்பதாண்டு முன்பு வரையிலும் கூட பேச்சு வழக்கை எழுத்தாக்காமல்தான் இருந்திருக்கிறார்கள். இலக்கண விதிகளுக்குட்பட்ட எழுத்து வழக்கு வேறு; பேச்சு வழக்கு வேறு.

பேச்சு வழக்கு வேறாகவும் எழுத்து வழக்கு வேறாகவும் இருக்கும் மொழிகளைப் பட்டியலிடுமளவுக்கு எனக்கு பன்மொழிப் புலமை இல்லையென்றாலும் அப்படியான மொழிகள் நிறைய இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் இது இயல்புக்கு முரணானதாகத் தெரியவில்லை.

பேச்சு வழக்கு என்பதுதான் இயல்பானது. அதுதான் இயற்கை. திருநெல்வேலிக்காரருக்கும் கோயமுத்தூர்காரருக்கும் மதுரைக்காரருக்கும் அவர்களது பேச்சுவழக்குத்தான் அடையாளம். அது கம்பீரமானது கூட. அதற்கு இலக்கண வரையறையெல்லாம் அவசியமே இல்லை. அவர்களது பேச்சில் இலக்கணத்தை எதிர்பார்க்கத் தேவையில்லை.

மொழியைப் பொறுத்தவரையில் எனக்கு ஒரு கருத்து உண்டு. இலக்கணம் என்பது அவசியமானது. அதுதான் மொழி சிதைக்கப் படாமல் காப்பாற்றும். ஆளாளுக்கு மொழியை கந்தரகோலம் ஆக்காமல் தடுக்கும். இந்த ஒரு காரணத்திற்காகத்தான் ‘எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் ஆனால் எழுதும் போது ஒரு வரையறைக்குட்பட்டு எழுத வேண்டும்’ என்கிற விதியை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுது அந்தக் கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டோம். எப்படி வேண்டுமானாலும் எழுதுகிறோம். அரை மண்டையன் எல்லாம் தினம் ஒரு பதிவு எழுதுகிறான். இது ஒருவிதத்தில் சிதைவை மொழிக்குள் அனுமதிக்கும் செயல்தான்.

ஏற்கனவே சொன்னது போல இதையெல்லாம் என் சுண்டைக்காய் சைஸ் அறிவிலிருந்து எழுதியிருக்கிறேன். ‘நீ சொல்வது டுபாக்கூர்’ என்றாலும் தலையைக் குனிந்து ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. btw, அடுத்த கேள்வி அனுப்புவர்கள் சித்த வைத்தியத்திலிருந்து கேட்கவும். சிறுமணவூர் முனிசாமி முதலியாரவர்களால் பன் நூற்கிணங்க இயற்றப்பட்டு ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட எட்டணா விலையுடைய மூலிகைமர்மம் என்ற 1899 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்று சிக்கியிருக்கிறது. அதிலிருந்து சில வரிகளை எடுத்துப் போட்டு பதில் எழுதி படம் காட்டிவிடலாம்.