சூரிய மின்சக்திதான் நமக்கான ஒரே வழி. அதை ஏன் உங்களால் உரத்துச் சொல்ல முடியவில்லை?
-நித்யானந்தன்.
அன்புள்ள நித்யானந்தன்,
இப்படித்தான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம் தேவைக்கான மின்சாரத்தின் பெரும்பகுதியை சூரிய சக்தியில் தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரே ஒரு புள்ளிவிவரம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 2030 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் தேவை 9,50,000 மெகாவாட் ஆக இருக்கும் என்கிறார்கள். இதில் எத்தனை சதவீதம் சூரிய சக்தியால் தயாரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?
இப்படித்தான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம் தேவைக்கான மின்சாரத்தின் பெரும்பகுதியை சூரிய சக்தியில் தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரே ஒரு புள்ளிவிவரம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 2030 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் தேவை 9,50,000 மெகாவாட் ஆக இருக்கும் என்கிறார்கள். இதில் எத்தனை சதவீதம் சூரிய சக்தியால் தயாரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?
ஒரு மெகாவாட்- வெறும் ஒரு மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியால் தயாரிக்க தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஆறு ஏக்கர் நிலம் தேவை. அது என்ன தென்னிந்தியா? அப்படியானால் வட இந்தியாவில் இன்னமும் அதிக இடம் தேவையா? ஆமாம். தேவைப்படும் நிலத்தின் பரப்பு பகுதிக்கு பகுதி மாறுபடும். அதாவது பூமத்திய ரேகையில் நமது நாடு இருந்தால் சோலார் தகடுகளை படுகிடையாக வைக்கலாம் (ஜீரோ டிகிரியில்) அதுவே பூமத்திய ரேகைக்கு மேலே செல்லச் செல்ல அதன் கோணமும் மாறும். தென்னிந்தியாவில் பதினைந்து டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அதுவே வட இந்தியாவில் இருபத்து மூன்று டிகிரி வரையிலும் கூட மாறுபடலாம். இப்படி கோணத்தை அதிகரிக்க அதிகரிக்க ஒரு பிரச்சினை உண்டாகும். ஒரு தகட்டின் நிழல் இன்னொரு தகட்டின் மீது விழத் துவங்கும். அதனால் ஆறு ஏக்கர் போதாது. இன்னமும் அதிக பரப்பளவு தேவை. இதெல்லாம் வெறும் ஒரு மெகாவாட் மின்சாரத் தயாரிப்புக்குத்தான். முதல் பத்தியில் இந்தியாவின் தேவை எவ்வளவு என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். இதில் பத்து சதவீத உற்பத்திக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தார் பாலைவனம் முழுவதும்- கிட்டத்தட்ட 35000 சதுரகிலோமீட்டர் பரப்புக்கு சோலார் தகடுகளை அமைத்து- திறமையாக பராமரிக்க முடிந்தால் கிட்டத்தட்ட இருபது லட்சம் மெகாவாட் தயாரிக்கலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய இடத்தை எப்படி பராமரிப்பது என்பதிலிருந்து அதற்கான முதலீடு என்பது வரையிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.
தார் பாலைவனம் இல்லாவிட்டால் என்ன? நம்மிடம்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே என்பார்கள். சாதாரண மைல்கல்லைக் கூட ஏமாந்தால் பிடுங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தேசத்தில் கண்காணாத இடத்தில் எல்லாம் இந்தத் தகடுகளை பதிக்க முடியுமா என்ன? பாதுகாப்பான இடம் வேண்டும். விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாது. நிழல் விழுந்தால் விவசாயம் பாதிக்கும். அதுவுமில்லாமல் இந்தத் தகடுகள் மீது தூசி படிய படிய மின் உற்பத்தி குறையும். சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பராமரிப்பு அதிகம். அதற்காக சில ஆட்டோமேடிக் பம்புகள் வந்திருக்கின்றன. தினமும் ஒரு முறை கழுவி விடும். ஆனால் அது அவ்வளவு சிறப்பு இல்லை.
கட்டடங்கள் மீது வைக்கலாம் என்பார்கள். வைக்கலாம்தான். ஒன்றரை சதுர மீட்டர் கட்டிடத்தின் மீது சோலார் தகடை வைத்தால் அதிகபட்சம் 300 வாட்ஸ் தயாரிக்கலாம். அதுவும் பக்கத்துக் கட்டடத்தின் நிழல் தகடுகள் மீது விழாமல் இருந்தால். முந்நூறு வாட்ஸ் என்பது ஐந்து ட்யூப்லைட் எரிக்கும் கணக்கு. அவ்வளவுதான். அதற்கு மேல்? ஹீட்டர் வேண்டும் என்றால்? வாஷிங் மெஷின் ஓட்ட வேண்டுமென்றால்? அதற்கெல்லாம் மின்சார வாரியத்தைத்தான் தொங்க வேண்டும்.
மேகமூட்டம் இல்லாமல் நல்ல வெளிச்சம் இருந்தால் சோலார் தகடுகள் ஐந்தரை மணி நேரத்துக்கு தன் மொத்த உற்பத்தித் திறனில் மின் உற்பத்தி செய்யும். மற்ற நேரங்களில் இருபது சதவீதமோ முப்பது சதவீமோதான். இரவில் சுத்தமாகவே கிடையாது. இந்த நேரங்களில் எல்லாம் மின்சாரத்திற்கு எங்கே போவது? அதுதான் பேட்டரியில் சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாமே? பயன்படுத்திக் கொள்ளலாம்தான் 100 கிலோவாட்டுக்கு மேலாக பேட்டரி வேலைக்கு ஆகாது. அதுவும் இல்லாமல் ஒரு சாதாரண செல்போனில் பேட்டரி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்று தெரியும் அல்லவா? உங்கள் வீட்டில் யுபிஎஸ் இருந்தால் எவ்வளவு நாட்களுக்கு மின்தேக்கி(பேட்டரி) வேலை செய்கிறது? ஒரு வருடத்திற்குள் ஏதாவதொரு செலவு வைத்துவிடும். ஒவ்வொரு வருடமும் சோலார் தகட்டின் விலை குறைந்து கொண்டே போகிறது ஆனால் பேட்டரியின் விலை பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது.
சூரிய மின்சாரம் என்பது நம் மேலதிகத் தேவைக்கும் மற்ற மின் பயன்பாட்டைக் குறைக்கவும் வேண்டுமானால் பயன்படுமேயொழிய அதுதான் அடுத்த தலைமுறை மின் உற்பத்திக்கான ஒரே வழி என்பதெல்லாம் அடிப்படை தெரியாமல் பேசுபவர்களின் பேச்சாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன். நமது ஆசை என்பது வேறு Practicality என்பது வேறு. அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் நமது மொத்த மின் பயன்பாட்டில் ஐந்து சதவீதமாவது சூரிய மின்சாரம் என்ற நிலையை எட்டினாலே அது மிகப்பெரிய சாதனையாகத்தான் கருத வேண்டும்.
நான் சொல்வதில் நம்பிக்கையில்லை என்றால் சூரிய மின் சக்தித் துறையில் யாராவது வல்லுநர் இருந்தால் கேட்டுப்பாருங்கள். நான் கேட்டுப்பார்த்துவிட்டேன்.