Sep 3, 2014

ப்ரேக்

எதற்கெடுத்தாலும் சீறிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. என்னைத்தான் சொல்கிறேன். கடந்த சில நாட்களில் எழுதியதை வாசித்தால் அப்படித்தானிருக்கிறது. இங்கு அடுத்தவர்கள் பேசுவது பற்றியும் எழுதுவது பற்றியும் அவர்கள் செய்வதைப் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.  அடுத்தவர்களின் செய்கைகளைப் பற்றி பேசத் துவங்குவது ஒருவகையிலான மனநோயின் ஆரம்பப்படி. இங்கு பலருக்கும் அந்த நோய் இருக்கிறது. அதைத் தொடங்கிவிட்டால் பிறகு அது இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. மனதின் ஒரு பகுதியாகவே அந்த எண்ணம் மாறிவிடும். சிலருக்கு அடுத்தவர்களைப் பற்றி குசலம் பேசாவிட்டால் தூக்கமே வராது அல்லவா? அப்படி. விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் விமர்சனம் மட்டுமே எழுத்து இல்லை அல்லவா? 

கொஞ்ச நாட்களாக கோபம் வருகிறது. வீட்டில் இருப்பவர்கள் மீது கோபப்படலாம். வெளியில் இருப்பவர்கள் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது? அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவரவருக்கு அவரவர் அரசியல், அவரவர் கொள்கை, அவரவர் பாதை. நமது பாதை சற்று குழம்பும் இடத்தில் இரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். எண்ணங்கள் திசை மாறுவதாகத் தெரிந்தால் அந்த இடத்திலேயே நங்கூரம் போட்டுவிடுவது நல்லது. காற்று வீசுவது நிற்கட்டும். பிறகு பயணத்தைத் தொடங்கலாம்.

சில நாட்கள் அமைதியாக இருந்துவிடுகிறேன். இந்தச் சில நாட்களுக்கு ஃபேஸ்புக், ப்லாக் என்று எதுவும் வேண்டாம். இடையில் சில வேலைகள் இருக்கின்றன. ஒரு அயல்மொழி நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன். இப்பொழுது முதல் அத்தியாயம் முடிந்திருக்கிறது. ஆங்கிலத்தில் நானூறு பக்கங்கள். அதில் இரண்டு மூன்று அத்தியாயங்களையாவது முடிக்க வேண்டும். 

வருகிற ஞாயிறன்று(செப்டம்பர் 07) பெங்களூரில் ஒரு சிறு இலக்கியக் கூட்டம் ஒன்றை நடத்தலாம் என்று திட்டம். காலை பத்தரை மணிக்கு கோரமங்களா YWCA அரங்கில். கோரமங்களா காவல் நிலையத்திற்கு அருகில் இந்த அரங்கு இருக்கிறது. நாவல் பற்றிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தலாம். முதல் கூட்டம் அல்லவா? ஒரு மணி நேரத்திற்குள்ளாக முடிந்துவிடக் கூடும். வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இன்றுதான் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பத்தை மீண்டும் அனுப்பவிருக்கிறேன். தாமதமாகிவிட்டது. அறக்கட்டளையின் ரப்பர் ஸ்டாம்ப் வேண்டும், லெட்டர் பேட் வேண்டும், அறக்கட்டளையின் PAN Card வேண்டும் என்று நிறையக் கேட்டிருந்தார்கள். PAN Card இந்த வாரத்தில்தான் வந்து சேர்ந்தது.  விண்ணப்பத்தை அனுப்பி வைத்தால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் கணக்கு எண் வந்துவிடும். வந்தவுடன் வேறு சில பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைத்துக் கொடுக்கும் வேலையை ஆரம்பிக்கலாம் என்று யோசனை இருக்கிறது. ஐந்து அல்லது பத்து கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கித் தரலாம். இந்த முறை புத்தகங்களின் பட்டியலை புதிதாகத் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. தகுதியான பள்ளிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வேலைகள் எல்லாம் பாக்கியிருக்கின்றன. இப்படி எத்தனையோ உருப்படியான காரியங்கள் இருக்கின்றன. வங்கிக் கணக்கு வந்தவுடன் முதல் பதிவை எழுதுகிறேன். அதுவரைக்கும் ப்ரேக். நன்றி.