Sep 2, 2014

அந்த நாலு பேர்ல நீங்க யாரு?

கந்தப்ப ஆசாரி என்றொரு மனிதர். நாட்டு வைத்தியர். அந்தக் கால நாட்டுவைத்தியர்கள் வெறும் பச்சிலைச் சாறு மட்டும் கொடுக்கமாட்டார்கள் அல்லவா? காய்ச்சல் என்றால் திருநீறு மந்திரிப்பது, தண்ணீர் மந்திரிப்பது, கயிறு கட்டிவிடுவது, ஏடு எழுதுவது என்று பல வேலைகளையும் செய்வார்கள். கந்தப்ப ஆசாரியும் அப்படியானவர்தான். 

திருநீறு மந்திரிப்பது, தண்ணீர் மந்திரிப்பது பற்றியெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கக் கூடும். திருநீறையும், தண்ணீரையும் கையில் வைத்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்லி நம்மிடம் கொடுப்பார்கள். ஏடு எழுதுவது எங்கள் ஊர்ப்பக்கமும் இன்னமும் சில இடங்களில் இருக்கிறது. பனை ஓலையில் வயதுக்குத் தகுந்த மந்திரங்களை எழுதி அதை மஞ்சள் நூலில் கோர்த்து இடுப்பில் கட்டிவிடுவார்கள். காத்து கருப்பு அண்டாது. ஏடு கட்டத் தொடங்கிவிட்டால் பதினைந்து வயது வரைக்குமாவது தொடர்ந்து கட்டிக் கொள்ள வேண்டும். இடையில் கட்டாமல் விட்டுவிட்டால் காய்ச்சல் வந்துவிடும். அப்படியொரு நம்பிக்கை.

கந்தப்ப ஆசாரியின் காலம் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு. அப்பாவுக்கு இருபது வயதாகும் போதே இறந்து போனாராம். அப்பா அவரைப் பற்றிச் சொன்ன போது கந்தப்ப ஆசாரி சாகும் போது அவருக்கு அறுபது வயதாவது இருக்கும் என்றார். ஆசாரி வெளியூர்க்காரர். பிள்ளை குட்டியெல்லாம் இல்லை. அந்த முரட்டு மனிதன் தனது சிறுவயதிலேயே எங்கள் ஊர்ப்பக்கமாக குடிவந்து படு பாப்புலராகிவிட்டார். அமாவாசை ஆனால் அப்பிச்சிமார் மடத்துக்கு பேய் பிடித்தவர்களை ஓட்டிச் செல்வது அவரது தலையாய கடமை. அந்தக் கோவில் பேய் விரட்டுதலுக்கு பிரசித்தி பெற்றது. கோவிலிலேயே சட்டி பானை வைத்து சோறாக்கி உண்டுவிட்டு சில நாட்கள் தங்கியிருந்து கடைசியில் உச்சந்தலையிலிருந்து முடியை வேரோடு பிடுங்கி மரத்தில் ஆணியடித்துவிட்டு வருவார்கள். பேயை மரத்தில் சிக்க வைத்துவிட்டு தப்பி வந்துவிடும் சூட்சமம் அது. இன்னமும் கூட இதை நிறையப் பேர் அங்கு செய்து கொண்டுதானிருக்கிறார்கள் என்றால் அந்தக் காலத்தில் கேட்கவா வேண்டும்?  அமாவாசையானால் கூட்டம் அள்ளும். கந்தப்ப ஆசாரி இதில் செம பிஸி.

பேய் பிடித்த எல்லோருமே தலையை விரித்துப் போட்டு ஆடுவதில்லை. சைலண்ட் பேய்களும் உண்டு. நள்ளிரவில் எழுந்து சட்டிபானையை உருட்டுவது, வீட்டில் இருப்பவர்களை தூங்கவிடாமல் ‘உஸ் உஸ்’என்று பெருமூச்சு விடுவது என்று பகலில் சாந்தசொரூபிகளாகவும் இரவில் அடங்காப்பிடாரிகளாகவும் மாறும் இவர்களை எந்தப் பேய் பிடித்திருக்கிறது என்று  கண்டுபிடிக்க வேண்டுமல்லவா? அதற்காக ஆசாரியார் ஒரு அம்மிக்கல்லை மந்திரித்து வைத்திருப்பார். பேய் பிடித்ததாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டவர்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு வந்து அந்த அம்மிக்கல்லின் முன்பாக அமர்ந்து கொள்ள வேண்டும். பூசை புனஸ்காரங்களை முடித்துவிட்டு வரும் ஆசாரியார் ‘ம்ம்ம்’ என்றவுடன் அந்த அம்மிக்கல்லைத் தொட வேண்டும். அந்தக் கல்லைத் தொட்டவுடன் உள்ளே அடங்கியிருக்கும் பேய் துள்ளத் துவங்கும். தனது ரெஸ்யூமை ஆசாரியாருக்கு படிக்கக் கொடுத்துவிடும். எந்த ஊர் பேய், எப்பொழுது பிடித்தது, ஏன் பிடித்தது என்றெல்லாம் சொல்லிவிடும். இந்த ரெஸ்யூமின் அடிப்படையில்தான் ஆசாரி தனது விளையாட்டைத் தொடங்குவார்.

சில பேய்கள் harmless. வாராவாரம் கோழிக்கறியும் பட்டைசாராயமும் கொடுத்தால் போதும். அத்தகைய பேய்களுக்கு Low priority. மெதுவாகக் துரத்திக் கொள்ளலாம். எதுவும் செய்யாது. ஆனால் வேறு சில பேய்கள் அழிச்சாட்டியங்கள் செய்யும். ‘ஏன் இவனைப் புடிச்சிருக்க’ என்றால் ‘இவன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்டு புடிச்சேன்’ என்று சொல்லும். விட முடியுமா? உடனடியாக அடித்துத் துரத்தியாக வேண்டும். ஆசாரி வழிமுறைகளைத் தேடத் தொடங்கிவிடுவார். அடங்கவே அடங்காத பேய்களுக்கு உள்ளங்காலில் கம்பியைக் காய்ச்சி இழுத்துவிடுவார். மாதக்கணக்கில் நடக்க முடியாது. டூ மச்.

இது போன்ற கொடூர சிகிச்சை முறைகளினால் ஆசாரியைப் பார்த்தால் உள்ளூரில் பயம். ஆனாலும் அந்தக் காலத்தில் சில விடலைகளுக்கு கந்தப்ப ஆசாரியை சீண்டிப்பார்க்க ஆசை. குண்டக்கமண்டக்க யோசித்துப் பார்த்தாலும் ஐடியா கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு இனாவானாவைப் பிடித்து பேய் பிடித்த மாதிரி நடிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள். அந்த இனாவானாவுக்கு பயம்தான். இருந்தாலும் குருட்டுத் துணிச்சல். ஆசாரி ஏமாற்றுகிறார் என்று நிரூபித்துவிட்டால் ஊருக்குள் மரியாதை கூடி விடுமல்லவா? விடிந்தும் விடியாததுமாக மற்ற மூவரும் சேர்ந்து இனாவானாவை அழைத்துச் சென்று ஆசாரி வீட்டில் அமர வைத்துவிட்டார்கள். வெகு நேரத்திற்கு பிறகு ஆசாரி வந்து ‘ம்ம்ம்ம்’ என்கிறார். இந்த இனாவானா அம்மியில் கை வைத்து பேயைப் போல தலையை ஆட்டியிருக்கிறார். நடிப்புதான்.

எத்தனை பேய்களை பார்த்திருப்பார்? எது ஒரிஜினல் ஐடி எது ஃபேக் ஐடி என்று தெரியாதா என்ன? கண்டுபிடித்துவிட்டார். 

ஆனால் கந்தப்ப ஆசாரி கண்டுபிடித்தது இவர்களுக்குத் தெரியாது. இனாவானாவுக்கும் தெரியாது. ‘பையனுக்கு அயல் ஊர் பேய் பிடிச்சிருக்கு...வீட்டுக்குள் கொண்டு போய் அந்தக் கம்பத்துல கட்டி வெச்சுட்டு போயிடுங்க...சாயந்திரமா வாங்க வைத்தியம் சொல்லுறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுதாவது இவர்கள் சுதாரித்திருக்க வேண்டும். எங்கே சுதாரித்தார்கள்? ஆசாரியை ஏமாற்றிவிட்டதான பூரிப்பில் ஒரு பந்தல்காலில் நிறுத்தி கையை பின்புறமாக கட்டி வைத்துவிட்டார்கள். எல்லோரும் கிளம்பும் போதுதான் இனாவானாவுக்கு பயம் வந்திருக்கிறது. ‘சும்மா கட்டி வைக்கத்தான் சொல்லியிருக்காரு...அந்த ஆளு வண்டவாளத்தை நாம கண்டுபுடிச்சே ஆகோணும்’ என்று வீராப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார்கள். மதியம் வரைக்கும் வருகிறவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தவர் மதியத்திற்கு மேல் மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்க்கும் வரைக்கும் தின்றுவிட்டு கதவைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? ம்ஹூம். மூச்சே விடவில்லை. சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. வாயில் ஒரு துணியை உருட்டி செருகி அதன் மீது இன்னொரு துணியால் வாயைக் கட்டி விட்டு சென்றுவிட்டார். வேறு எதுவுமே பேசவில்லை.

மாலை நேரத்தில் இந்த வீரக்காயன்கள் மூன்று பேரும் வந்திருக்கிறார்கள். மூன்று பேர்கள். வீடு பூட்டியிருக்கிறது. தங்களது இனாவானா உள்ளே இருக்கிறானா என்றும் தெரியவில்லை. வெளியில் நின்று கத்தவும் முடியாது. இந்தக்காலம் மாதிரி ‘எவனோ எக்கேடு கெட்டுப் போகட்டும்’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். பொழுது சாயும் வரைக்கும் நின்றிருக்கிறார்கள். பிறகு ஒருவேளை அப்பிச்சிமார் மடத்திற்குச் சென்றிருக்கக் கூடும் என்று கிளம்பிவிட்டார்கள். இனாவானாவுக்கு நாவெல்லாம் வறண்டு விட்டது. மதியம் சோறு இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. ஒரு சொட்டு இரண்டு சொட்டு எச்சில் ஊறினால் அதையும் உள்ளே செருகி வைத்திருக்கும் துணி உறிஞ்சிக் கொள்கிறது. கதவும் திறக்கிற பாடில்லை. வெகு நேரத்திற்குப் பின்பு இருட்டிய பிறகு கதவு திறந்திருக்கிறது. யாரோ வந்துவிட்டார்கள் என்று இனாவானாவுக்கு துளி சந்தோஷம். ஆனால் அதற்குள் கால்கள் நனைந்து கிடக்கின்றன. வியர்வையெல்லாம் இல்லை. இரண்டு மூன்று முறை பயத்திலேயே ஆகியிருக்கிறது.

கதவைத் திறந்த ஆசாரி விளக்குக் கூட பற்ற வைக்காமல் விளாசியிருக்கிறார். ஐய்யோ அம்மா என்று கூட கத்த முடியவில்லை. வாயில்தான் துணி இருக்கிறதே. எப்படிக் கத்துவது. என்னவோ பச்சைச் செடியால் அடிக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் யார் அடிக்கிறார்கள் எந்தத் திசையிலிருந்து விளாசுகிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. பச்சை விளார் படும் இடத்திலெல்லாம் ரத்தம் கசிகிறது போலிருக்கிறது. கண்களில் கண்ணீர் கசிவது மட்டும்தான் ஒரே ரியாக்‌ஷன். ஆனால் அதுவும் அடிப்பவனுக்குத் தெரியாது. அரை மணி நேர நொறுக்குதலுக்குப் பிறகு அந்த உருவம் வெளியே போகிறது. அப்பவும் துணியை வாயிலிருந்து எடுக்கவில்லை. 

ஆசாரி எவ்வளவு விவரம் பாருங்கள். பெரிய தடியால் அடித்தால் மயக்கம் போட்டுவிடக் கூடும் என்பதால் வெறும் பச்சை விளாரால் மட்டும்தான் அடி. மயக்கமெல்லாம் வராது. ஆனால் வலி உயிரை எடுத்துவிடும். அதுவும் அடித்துவிட்டு ஒரு வார்த்தை சொல்லாமல் அந்த உருவம் வெளியேறி போய்விட்டது. இனாவானாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காலையிலிருந்து நின்று கொண்டிருக்கும் வலி, இப்பொழுது விழுந்த அடியின் வலி என எல்லாம் சேர்த்து வாழ்க்கையின் நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. 

அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்பாகவே வந்த ஆசாரி துண்டை வாயிலிருந்து எடுத்துவிட்டு ‘வெளியூருக்கு போயிருந்தேன்....ராத்திரி வர முடியல...மன்னிச்சுக்கணும்’ என்கிறார். இதை நம்புவதா வேண்டாமா? அப்படியானால் நேற்று விளாசியது இந்த ஆள் இல்லையா? படு குழப்பமாகிவிடுகிறது. உண்மையிலேயே பேய் இருக்கிறதா என்றெல்லாம் தாறுமாறாக பிபி எகிறுகிறது. இரவில் கொடுத்தது Physical punishment. காலையில் சைக்கலாஜிக்கல் பனிஷ்மெண்ட். 

ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த ஆசாரி வெகு தெனாவெட்டாக பேசுகிறார்.  ‘போச்சாதுன்னு இதோட விடுறேன்..அந்த மூணு பசங்களையும் சும்மா உட மாட்டேன்..இனி என்ரகிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க..சரியா?’ என்கிறார்.

எப்படி கண்டுபிடித்தார் யார் சொல்லியிருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் கண்டுபிடித்துவிட்டார். மூன்று பேரும் வருவதற்குள்ளாக கயிறை அவிழ்த்துவிட்டு குளிக்கச் சொல்லி திருநீறு அணியச் சொல்லிவிட்டார். இனாவானாவும் அச்சுபிசகாமல் தயாராகிவிட்டார். இல்லையென்றால் மறுபடியும் அடி விழுமே. அவர்கள் வந்தவுடன்  ‘இனி அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இருக்காது...என்ன பத்தியம்ன்னு சொல்லுறேன்...அப்படி இருக்கச் சொல்லுங்க..உள்ள வாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாராம். இனி என்ன நடந்திருக்கும் என்று யூகித்திருப்பீர்களே. அதேதான். 

சவுக்கைச் சுழற்று சுழற்றென சுழற்றுகிறார். கண்டபடிக்கும் அடி விழுகிறது. அதுவும் எப்படியான சவுக்கு? சவுக்கு முழுவதுமாக சின்னச் சின்ன முடிச்சுகளை போட்டு வைத்திருக்கிறார். ஒவ்வொரு முடிச்சும் தோலில் படும் போதும் துளி சதையை பிய்த்து எடுத்துக் கொண்டு வருகிறது. முரட்டு அடி. கத்துகிறார்கள் கதறுகிறார்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் ‘ஆசாரி பேய் விரட்டுகிறார்’ என்றுதான் நினைத்திருப்பார்கள். காப்பதற்கு ஒரு ஆள் வரவில்லை. முக்கால் மணி நேரம் கபடியாடிவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார். முகம் உடல் என்று ஒரு இடம் பாக்கியில்லை. பிய்த்து உதறிவிட்டார்.

‘மூன்று பேர் சேர்ந்து ஒரு ஆளை பிடிக்க முடியாதா?’ என்று அப்பாவிடம் கேட்டால்,

‘கேட்கிறதுக்கு ஈஸியா இருக்கும். அந்த ஆஜானுபாகுவானவனை பொடியனுகளால என்ன செய்ய முடியும். சிலம்பாட்டம், குஸ்தின்னு அத்தனையும் கத்து வெச்சிருந்தாரு’ என்று சொல்லும் போது இப்பொழுதும் அப்பாவுக்கு கண்ணீர் முட்டிவிடும் போலிருக்கிறது. 

‘ஆமா அந்த நாலு பேர்ல நீங்க யாரு?’ என என்னால் ஆனவரைக்கும் அப்பாவிடம் கேட்டுவிட்டேன்.

‘அது வேற பசங்க..நான் அந்த க்ரூப்லேயே இல்லை’ என்று டபாய்த்துக் கொண்டேயிருக்கிறார்.