Sep 13, 2014

நாங்கெல்லாம் ஒரு குரூப்..தெரியுமா?

சென்ற வாரம் பெங்களூரில் ஒரு கூட்டம் நடந்தது. நாங்களாக நடத்திய கூட்டம். லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம் இல்லை. பதினைந்து பேர்கள் கலந்து கொண்டார்கள். புத்தகம் பதிப்பகத்தின் ராஜலிங்கம் கூட்டத்திற்கான செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். அரங்கு வாடகை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். கப்பன் பார்க் போன்ற பொது இடங்களில் வட்டமாக அமர்ந்து பேசும் போது போகிற வருகிறவர்கள் மார்க்கமாக பார்க்கிறார்கள். அதற்காகவே ஒரு அரங்கு தேவைப்பட்டது. ஆனால் பதினைந்து பேருக்கு இந்தத் தொகை டூ மச். அது போக டீ, பிஸ்கட்டெல்லாம் வாங்கிக் கொடுத்தார். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் அஞ்சப்பரில் மதிய விருந்து ஏற்பாடு செய்வார் என்று நினைக்கிறேன்.

அடுத்த முறை பெங்களூர் தமிழ்ச்சங்கத்துக்கு ஜாகையை மாற்றிவிட வேண்டும். அங்கு வாடகை குறைவு. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் பத்தரை மணிக்கு நடத்துவதாகத் திட்டம். இது போன்ற கூட்டங்களை நடத்துவதில் consistency முக்கியம். இந்த முறை பதினைந்து பேர் வந்தால் அடுத்த முறை இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் அதே பதினைந்து பேர்கள் வருவார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு மொக்கையாகத் தோன்றி வராமல் இருந்துவிடக் கூடும். வேறு யாராவது கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டு புதிதாகக் கலந்து கொள்வார்கள். போகப் போக இவர்களில் சிலர் ஒவ்வொரு கூட்டத்திலும் நிரந்தரமாகக் கலந்து கொள்ளத் துவங்குவார்கள். அந்த நிரந்தரத் தன்மையை அடைய வேண்டும். அடைந்துவிடலாம்.


இது போன்ற கூட்டங்களால் என்ன பிரயோஜனம் என்று கேட்கலாம்தான். சுத்தமாக பிரயோஜனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஓரான் பாமுக் பற்றி யாராவது பேசுகிறார்கள். Kite Runner பற்றி யாராவது பேசுகிறார்கள். வாடிவாசல் பற்றியோ, தான் இதுவரை ஒரு வரி கூட வாசித்ததே இல்லை என்பது பற்றியோ யாராவது சொல்கிறார்கள். ஒரு காலத்தில் நான் வாசித்த புத்தகங்களை என் நண்பருக்கு பரிந்துரை செய்து கொடுப்பேன். அதை அவர் இன்னொருவருக்குக் கொடுப்பார். ஆனால் இன்றைய Ebook ஐ என்ன செய்வது? புத்தகம் போன்ற அறிவுசார்ந்த விஷயத்தைத் தனியுடமையாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று யாராவது வாய் எடுக்கிறார். ‘அட ஆமாம்ல’ என்று யோசிக்கத் தோன்றுகிறது. அது பற்றி யாராவது ஒரு வல்லுநரை அழைத்துப் பேசச் செய்யலாம். இப்படி ஏதாவது வகையில் பிரயோஜனம்தான்.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் நான்கு பேர் சேர்ந்து பேசுவதற்கு தனி மரியாதை இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசுவதற்குக் கூட தயங்கும் பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து கொண்டு இப்படி எதையாவது தெரிந்து கொள்கிறோம் அல்லவா? மாதத்தில் ஒரேயொரு நாளின் காலை நேரத்தை செலவழிக்கிறோம். மதியம் வாய்ப்பில்லை. ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் இரண்டு மணியிலிருந்து லேப்டாப்பைத் தொட மாட்டேன், கூட்டங்களுக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். அதுவும் எதிர்பாராத தருணத்தில் மிரட்டி வாங்கிக் கொண்டார்கள். அதை விடுங்கள். 

இப்படியான கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இனி பெங்களூரிலும் நடக்கவிருக்கிறது. அவ்வளவுதான்.

இந்த முறை கூட்டத்திற்கு யார் எல்லாம் வருவார்கள், எதையெல்லாம் பேசுவார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை. அதனால் ‘நாவல்கள்’ என்று எடுத்துக் கொண்டோம். உருப்படியாகத்தான் இருந்தது. அசோகமித்திரன் 1971 ஆம் ஆண்டு வாசித்த கட்டுரை ஒன்று கிடைத்தது. ‘தமிழ் நாவல் ஒரு கண்ணோட்டம்’ என்பது தலைப்பு. அந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலம் வரையிலும் தமிழ் நாவல்களில் யதார்த்தம் இடம் பெற்றிருக்கவில்லை. மெளனி, நீல.பத்மநாபன்  போன்றவர்களின் பெயர்களை யாருக்குமே தெரியவில்லை என்றும், அத்தகைய நாவல்களை ‘கொச்சை’ என்று எல்லோரும் ஒதுக்கிறார்கள் என்றும் ஒருவிதத்தில் வருத்தப்படும் தொனியிலான கட்டுரை. அந்தக் கட்டுரையை கூட்டத்தில் வாசித்துவிட்டு அது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆக எப்படிப் பார்த்தாலும் திருப்தியாகத்தான் இருந்தது.

அடுத்த கூட்டத்திற்கு சிறுகதைகள்தான் அவல். எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளில் முதல் இருபது கதைகளை மெல்லலாம். இந்த முறை கலந்து கொண்டவர்களுக்கு ஏற்கனவே இருபது கதைகளையும் அனுப்பியாகிவிட்டது. அடுத்த முறை கலந்து கொள்வதாக இருந்தால் ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தால் கதைகளை அனுப்பி வைத்துவிடலாம். 

காசி- பாதசாரி
காஞ்சனை, செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்- புதுமைப்பித்தன்
வெயிலோடு போய்- ச.தமிழ்ச்செல்வன்
அழியாச்சுடர், பிரபஞ்சகானம்- மெளனி
காட்டில் ஒரு மான் - அம்பை
சிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல்- ஆதவன்
மஹாராஜாவின் ரயில் வண்டி- அ.முத்துலிங்கம்
அக்கினி பிரவேசம்- ஜெயகாந்தன்
நகரம், ஃபிலிமோத்ஸவ்- சுஜாதா
சித்தி - மா.அரங்கநாதன்
குருபீடம், முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்
ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
கதவு - கி.ராஜநாராயணன்
மதினிமார்கள் கதை- கோணங்கி
புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

கூட்டம் நடந்தவுடனே இதை எழுதியிருக்க வேண்டும். அஞ்ஞாதவாசம் என்று ஒரு பிட் போட்டிருந்தேன் அல்லவா? அதனால் எழுதவில்லை. கோயமுத்தூரில் ராமநாதன் என்றொருவர் இருக்கிறார். அண்ணன் என்று சொல்ல முடியாது. எங்களுக்கிடையில் நிறைய வயது வித்தியாசம். சார் என்று அழைக்கவும் மனம் வருவதில்லை. ‘போங்க வாங்க’ என்று பொதுவாக பேசிக் கொள்வேன். இன்று அழைத்திருந்தார். இருபது நிமிடங்கள் அவரிடம் பேசுவதற்கான சரக்கு என்னிடம் இருந்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் ‘இதையெல்லாம் நிசப்தத்திலேயே படித்துவிட்டேனே’ என்பார். அதனால் சில நிமிடங்களில் பேச்சு முடிந்துவிடும். ஆனால் இந்த முறை சொல்ல அவரால் அப்படிச் சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான் உறைத்தது- எழுதுவதற்கான ஏகப்பட்ட சமாச்சாரங்கள் சேர்ந்துவிட்டன. ஃபோனை கட் செய்துவிட்டு வந்து எழுதத் தொடங்கிவிட்டேன்.