Sep 25, 2014

ஊருக்கு ஒண்ணு வைக்க முடியாதா?

என் பெயர் குணசீலன், முன்னாள் விகடன் உதவி ஆசிரியர்.

சூரிய மின்சாரம் ஏன் நடைமுறைக்கு ஒத்துவராது என்பதைக்குறித்த தங்களுடைய கட்டுரையை வாசித்தேன். நடைமுறைக்கு எப்படி அதனை ஒத்துவரவைக்கலாம் என்பதற்கு என்னுடைய சில யோசனைகள்.

தங்கள் கூற்றுப்படி ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு ஆறு  ஏக்கர் இடம் தேவை. தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சி மன்றங்களின் எண்ணிக்கை பதின்மூன்றாயிரத்து சில்லறை. தமிழகத்தின் மொத்த மின்சார தேவையும் ஏறத்தாழ பதின்மூன்றாயிரம் மெகாவாட்தான். எனவே, ஒவ்வொரு ஊராட்சியும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து வெறும் ஆறே ஆறு ஏக்கர் நிலத்தை இதற்காக ஒதுக்கினால் போதுமே? ஒட்டுமொத்தமாக பார்த்தால்தான் பெரிய அளவில் இடம் தேவை. மாறாக, இந்த மாதிரி ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு மெகாவாட் என்று பிரித்துக்கொண்டால் பெரிய அளவில் இடம் தேவை என்ற கேள்விக்கே இடமில்லை.

நீண்ட அகண்ட இடத்தைப் பராமரிப்பது மிகப்பெரிய வேலை என்பதை குறித்தும் கவலையில்லை. விவசாயம் எல்லாம் பாதிக்காது. நான் தஞ்சாவூர்க்காரன். தோண்டினால் முப்பது நாப்பது அடியில் ஊற்று இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் தரிசாக சில நூறு ஏக்கர்கள் கிடக்கின்றன. இதனைவிடவும் மிகப்பெரிய ஒரு ப்ளஸ் இந்த முறையில் ஒன்று உண்டு. அதாவது, ஊராட்சிக்கு ஒரு மெகாவாட் வீதம் சோலார் முறையில் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார கடத்துதலில் ஆகும் விரயம் அப்படியே மிச்சப்படுத்தலாம். எங்கோ மேட்டூரில் அல்லது நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை தூத்துக்குடிக்கோ சென்னைக்கோ கொண்டு செல்வதில் 30% அளவிற்கு மின்விரயம் ஏற்படுவதாக படித்திருக்கிறேன். ஆக, எந்த இடத்தில் எல்லாம் தேவை இருக்கிறதோ அந்தந்த இடங்களில் ஆறு ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் மின்விரயம் தடுக்கப்படும். ஆக, 13000 மெகாவாட் தேவை எனில், மின்கடத்தலின்போது ஏற்படும் விரயத்தில் 30% அதாவது கிட்டத்தட்ட 3000 மெகாவாட் மின்சார உற்பத்தியே தேவைப்படாதே? மேலும், ஒரு ஊராட்சிக்கென்று ஒரு ஊழியரை நியமித்து இந்த சோலார் பேனல்களை சுத்தப்படுத்துவதும் அரசாங்கத்துக்கு பெரிய செலவாக இராது. 

ஊராட்சிகளில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பதற்கு ஓர் ஆளை நியமிப்பது எல்லாம் ஊராட்சி மன்ற தலைவர்தான். பெரிய சம்பளம் எல்லாம் இல்லை, ரெண்டாயிரம்தான். எங்க ஊர்ல எங்க சொந்தக்கார பையன் அந்த வேலை செய்கிறான். காலை மாலை இரண்டு நேரமும் தண்ணீர் திறந்து பிறகு நிறுத்துவதும், மாதம் ஒருமுறை தண்ணீர் தொட்டியை கழுவுவதும்தான் அவர் வேலை.

சூரிய சக்திமூலம் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 8 கோடி செலவு ஆகும் என கேள்வி.  தமிழ்கத்தில் தற்போதைய பற்றாக்குறையான 2000 மெகாவாட் உற்பத்திக்கு சூரிய சக்திமூலம் பெற விரும்பினால் கேவலம் 16000 கோடி மட்டுமே செலவு. சென்னையில் இருக்கும் மக்களுக்கு என மெட்ரோ செலவுக்காக 14500 கோடி செலவு செய்ய முடியும் அரசாங்கத்தால் தமிழகம் முழுமைக்கும் பயன்படும் ஒரு திட்டத்திற்காக இந்தத் தொகையை செலவு செய்ய நினைத்தால் முடியும். ஆனால், காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான கமிஷனுக்காகவும், இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிமூலம் தயாரிக்கபடும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனும் பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே அரசாங்கம் இதனை செயல்படுத்த மறுக்கிறது. இடப்பற்றாக்குறை மாதிரியான சிறிய காரணங்களைச் சொல்லி திட்டத்தை முடக்கும் அதிகாரிகளுக்கும் இந்த கமிஷனில் மிகப்பெரிய பங்குண்டு. சோலார் மின்சாரம் குறித்து நீங்கள் கருத்துக்கேட்ட அந்த 'வல்லுந‌ரும்' மேற்படி நிறுவனங்களிடம் சந்தாதாரராக இருக்க வாய்ப்பு அதிகமுண்டு.

எத்தனை செலவானாலும் சோலார் திட்டம் வேண்டும் என்ற என்னுடைய கருத்துக்கு வலு சேர்க்க நான் மேலும் முன்வைப்பவை கீழே.

1. எடுக்க எடுக்க வருவதற்கு நிலக்கரி அமுதசுரபி இல்லை. கர்நாடகக்காரனையும் நம்பமுடியாது.

2. அனல், புனல், அணு மின் திட்டங்களுக்கும் செலவுதான் ஆகிறது. அவற்றுக்கு ஆகும் பராமரிப்புக்கும், அவற்றினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டுக்கு கொடுக்கும் விலையை சூரியபகவானுக்கு காணிக்கையாக‌ படைப்பது விரயமாகாது.

3. சென்னையில் இடப்பற்றாக்குறை என்ற கேள்விக்கும் பதிலுண்டு. சென்னையில் சிந்தாரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரைக்கும் உயர்த்தப்பட்ட மின்வண்டி பாதை  இருக்கிறதே. உயர்த்தப்பட்ட தண்டவாளங்களுக்குமேல் இன்னொரு 20 அடி உயரத்துக்கு இருபுறமும் இரும்பு தூண்கள் அமைத்து அதன்மேல் பேனல்கள் வைக்கலாம். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கும் 15 கி.மீட்டர்கள் இருக்கும். 15 கி.மீ. தூரத்தில் எத்தனையோ ஏக்கர் நிலம் கிடைக்கும். பெரிய அளவில் நிலம் தேவை என்றால் தரையில் இருந்துதான் தேவையா என்ன? இந்தமாதிரி வேறு ஒரு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிற இடத்தை மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்துவது அறிவுசார் செயலாகும்.

4. நூறு கிலோவாட்டுக்கு மேல் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பது தங்கள் கூற்று. இந்தியாவின் ஒவ்வொரு சந்துபொந்தையும் மூலைமுடுக்கையும் வார்டுவாரியாக பிரித்துவைத்து அரசு ஆளுமையின் உச்சத்தை தொட்டுவிட்டுச் சென்றிருக்கிறான் வெள்ளைக்காரன். நாம் இன்னும் அதனை முறையாக பயன்படுத்தாமலேயே காலத்தை கழிக்கிறோம். ஒரு நூறு கிலோவாட் மின்சாரத்தை சேமிப்பதற்கு வார்டு ரீதியாக திட்டம் வகுக்கலாம்.

முடியும்னு நினைச்சதாலதான் ஜே.சி.பி., பொக்லைன், கிரேன் எதுவுமே இல்லாம கரிகாலன் கல்லணையை கட்டினான், ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டினான், ராஜராஜன் பெரியகோயிலை கட்டினான். முடியாதுன்னு நினைச்சதாலதான் நாம குஷ்புவுக்கு கோயில் கட்டுவதோடு நிறுத்திக்கிட்டோம்.

அன்பன்
குணசீலன்

                                                           ***

படிக்கப் படிக்க அண்ணாமலை சினிமா பார்ப்பது போலவே இருந்தது. சாத்தியமே இல்லை என்றும் சொல்ல முடியாது- இதெல்லாம் பாஸிபிளா என்று கேள்வி எழாமலும் இருக்காது. குணசீலன் விகடனில் பணியாற்றியிருக்கிறார். அந்த நுட்பங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கும் அல்லவா? கற்றுக் கொண்ட மொத்த வித்தையில் துளியை இறக்கி வைத்திருக்கிறார்.  இன்னும் நாம் ட்யூன் ஆக வேண்டியதுதான் பாக்கி.

கருத்துக்கேட்ட வல்லுநர் கமிஷன் வாங்கியிருக்கக்கூடும் என்று சொல்வதற்கு மட்டும் பதில் சொல்லிவிட வேண்டும். அவரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கல்லூரியில் சீனியர். அப்பொழுதெல்லாம் சுமாராகத்தான் படிப்பார். முதல் வருடத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவர் அழைப்பதாகச் சொன்னாலே எங்களுக்கு கிலி பிடித்துக் கொள்ளும். கட்டுக்கட்டாக அசைன்மெண்ட், ரெக்கார்ட் ஏடுகளை எல்லாம் தலையில் கட்டிவிடுவார். அதுவும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவெல்லாம் தர மாட்டார். நாளைக்கு வேண்டுமென்றால் முந்தின இரவில் கொடுப்பார். விடிய விடிய எழுதிக் கிழிக்க வேண்டும். ‘இவர்கள் எல்லாம் தேறவே மாட்டார்கள்’ என்று சிலரைப் பார்த்து நினைப்போம் இல்லையா? அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் விஸ்வரூபம் எடுத்து முன்னால் நிற்கும் போது வாயடைத்துப் போவோம். அப்படித்தான் நடந்தது.  எம்.ஈ முடித்தார் பிறகு ஒரு சோலார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் பிறகு இன்னொருவருடன் பார்ட்னராகச் சேர்ந்து சொந்தமாகவே சோலார் தொழிலில் இறங்கிவிட்டார். இந்தியாவில் அந்த நிறுவனத்தின் மொத்த இயக்கத்தையும் அவர்தான் பார்த்துக் கொள்கிறார். 

சோலார் விற்றால்தான் அவருக்கு இலாபம். அதனால் அவர் கமிஷன் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த மின்னஞ்சல் உண்மையிலேயே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல இதெல்லாம் ரியாலிட்டியில் சாத்தியமா என்று சந்தேகம் எழாமல் இல்லை. அவர் சொல்லியிருப்பது போல அது நம் தனிக்குணம்.

மணிகண்டன்.