Sep 1, 2014

நீ அறிவாளியா?

சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார்.  பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள். 

சில மாதங்களுக்கு முன்பு ஒரு மரக்கடைக்காரரைச் சந்தித்த போது தெரியாத்தனமாக ‘உங்க பிஸினஸ் பரவாயில்லீங்களா?’ என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன் ‘என்னங்க பெரிய பிஸினஸு? நாலு கோலும் குச்சியும் வித்து வாயும் வயிறும் வளர்க்கிறேன்..அத விடுங்க தம்பி’என்று பல்ப் கொடுத்துவிட்டார். அவருக்கு தலை முழுவதும் நரை. இந்தப் பொடியனிடம் எதைப் பேசுவது என்று நினைத்திருக்கக் கூடும். கொங்கு மண்டலம் முழுவதும் அவர் மரம் சப்ளை செய்கிறார் என்று தெரியும். கோடிக்கணக்கான ரூபாய்கள். கேட்டால் நாலு கோலும் குச்சியும் என்கிறார். இப்படிச் சொன்னவரிடம் வேறு என்ன பேசுவது? அடங்கிக் கொண்டேன்.

இந்தத் தேனிக்காரரிடமும் பல்ப் வாங்கத் தயாரில்லை. எனக்குத் தெரிந்த விவகாரங்களாகப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு புத்தகங்கள் என்று ஆரம்பித்தவுடன் ‘அதெல்லாம் நமக்கு பழக்கமேயில்லீங்க’ என்றார். சினிமா என்றவுடன் ‘சினிமா பார்த்து இருபத்தேழு வருஷம் ஆச்சுங்க’ என்றார். அவ்வளவுதான். பெரிய சிக்கலாகிவிட்டது. புத்தகம்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருந்தால் இதுதான் பிரச்சினை. வாசிக்கிறவன் தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தால் நாம்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்த மனிதருக்கு புத்தகமும் எழுத்தும் ஒரு பொருட்டே இல்லை. அவரை முட்டாள் என்று சொல்ல முடியுமா என்ன? பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார்.

‘அவர் மட்டும் புத்தகங்கள் வாசிக்கிறவராக இருந்திருந்தால் அவரது வெற்றி பன்மடங்காக இருந்திருக்கும்’ என்று யாராவது முஷ்டியை மடக்க வேண்டாம். காலங்காலமாக புத்தகங்களோடு மாரடித்து நாசமாகப் போனவர்களின் பெரும்பட்டியலைத் தயாரிக்க முடியும். உண்மையில் புத்தகம், சினிமா, இணையம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய உலகம் இருக்கிறது. எழுத்து, ஃபேஸ்புக், வலைப்பதிவு, ட்விட்டர் என்று திரிபவர்கள்தான் தம்மை பெரிய அறிவாளியாகவும் மற்றவர்களை ஒன்றுமே தெரியாத பொக்கைகளாகவும் நினைத்துக் கொள்கிறோம்.

ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மோட்டலில் பேருந்து நின்றது. இறங்கியிருந்தேன். அங்கு ஒரு லாரி பழுதடைந்து நிற்கிறது. அது பஞ்சாப் வண்டி. இரண்டு மூன்று லாரி டிரைவர்கள் என்னனென்னவோ செய்து பார்த்தார்கள். வேலைக்கு ஆகவேயில்லை. சில நிமிடங்களில் இன்னொரு லாரியிலிருந்து ஒரு ஓட்டுநர் இறங்கினார். அறுபது வயதைத் தொட்டிருந்தார். லுங்கியோடு இறங்கியவர் லாரியின் பேட்டரியில் கை வைத்து என்னென்னவோ செய்தார். ஐந்து நிமிடங்களுக்குள் வண்டி கிளம்பிவிட்டது. அவர் எதுவுமே காட்டிக் கொள்ளாமல் தனது வண்டியை எடுத்துச் சென்றார். நள்ளிரவில் இது நடந்தது. அதன் பிறகு எனக்குத் தூக்கமே வரவில்லை. அத்தகையை பெரிய ராட்சத இரும்பு வண்டியின் சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் அந்த எளிய மனிதர். நான் எம்.டெக் படித்திருக்கிறேன். பேரு பெத்த பேரு தாக நீலு லேது. கிரைண்டர் பழுதடைந்தால் பட்டர்பிளை ஷோரூமுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியதாக இருக்கிறது.

ஊரில் கோவணம் கட்டிக் கொண்டு வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் சிலரிடம் பேசிப்பார்க்கலாம். செம்பூத்து பறக்கும் விதத்தை வைத்தே மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். அவர்களிடம் இல்லாத அறிவா நம்மிடம் இருக்கிறது? 

இந்த எழுத்தை வாசிக்க ‘நீ அறிவாளியாக இருக்க வேண்டும்’ என்கிற ரீதியில் இன்று ஒருவரி கண்ணில்பட்டது. இத்தகைய வரிகள் உண்மையிலேயே disturb செய்கின்றன. சங்கடமாகவும் இருக்கிறது. தஸ்தாயோவ்ஸ்கியை வாசிக்கவில்லை என்றால் அவன் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. மாக்ஸிம் கார்க்கியை புரிந்து கொள்ளாதவன் மடையன் என்று அர்த்தம் இல்லை. இதையெல்லாம் வாசிக்கத் தெரிந்தவன் தான் அறிவாளி என்று ஸ்டேட்மெண்ட் விடுவதை எப்படி புரிந்து கொள்வது? இது ஒருவிதமான மிரட்டல். இதை புரிந்து கொண்டால்தான் நீ அறிவுஜீவி என்பது ஒருவிதமான ப்ளாக்மெயில். 

புத்தகங்களும் எழுத்தும் சிந்தையைக் கிளறுவதாக இருந்தால் போதும் (Thought provoking). அடிப்படையில் அதுதான் எழுத்தின் சித்தாந்தம் இல்லையா? அதில் மொழி விளையாட்டுக்களும், சிக்கலான வாக்கிய அமைப்புகளும், புதிய வார்த்தைகளையும் அள்ளிவிடுவது எழுத்தாளனுக்கான உரிமை. அவனது திறமை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் திருகித் திருகி எழுதிவிட்டு இதுதான் செறிவான எழுத்து; இதை வாசிக்கிறவன் தனி உலகத்தினன் என்றெல்லாம் சொல்வது வெளியில் இருந்து பார்க்கும் எளிய வாசகனிடம் ‘இதைப் படிக்கத் தெரியலைன்னா ஓடிப் போடா முட்டாப்பயலே’ என்பது போல இருக்கிறது. அவன் கொஞ்சம் விவரமானவனாக இருந்தால் தப்பித்துக் கொள்வான். ஏமாந்த சோனகிரியாக இருந்தால் ‘எதுக்கு வம்பு? படிக்கிறோமோ இல்லையோ அந்த மனுஷனின் எழுத்தை படிக்கிறேன் என்று சொல்லி வைப்போம்’ என்று பம்மத் தொடங்கிவிடுவான்.  

வாசிப்பதும் எழுதுவதும் ஒரு கலைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக செருக்கும் திமிருமாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளனுக்குத் திமிர் அவசியம் என்றும் படைப்பவனின் கர்வம் பெருமையுடைத்து என்றெல்லாம் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஒரு மண்ணும் இல்லை. தறி ஓட்டுபவனும், வயல் உழுபவனும் எந்தவிதத்திலும் கேவலமானவன் இல்லை. காலங்காலமாக சேற்றுக்குள் உழலும் அவனுக்குத்தான் எந்தப் பயிர் எந்தப் பருவத்தில் விளையும் என்று தெரியும். அவனது துறையில் அவன் கொண்டிருக்கும் அறிவில் ஐந்து சதவீதம் கூட நம்மிடம் இல்லை என்பதுதானே உண்மை? 

இதையெல்லாம் ‘அவர் எழுதியதற்கு எதிர்வினை’ என்று எந்த எழுத்தாளரோடும் இதை இணைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ‘அவர் சொல்லவந்ததன் அர்த்தமே வேறு’ என்று யாராவது வியாக்கியானம் வேறு கொடுப்பார்கள். எதற்கு வம்பு? எழுத்தும் வாசிப்பும்தான் அறிவின் இலக்கணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமான பதில்தான் இது. இங்கு நிறையப் பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- மண்டை நிறைய கனத்தோடு. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் வாசிப்பதும் எழுதுவதும் எந்தவிதத்திலும் பிறவற்றைவிட சிறப்பு வாய்ந்ததில்லை. அப்படி யாராவது நம்பிக் கொண்டிருந்தால் பொடனியிலேயே புறங்கையால் தட்டலாம். ஆனது ஆகட்டும்.

அவனவன் துறையில் அவனவன் கில்லி. அவன் வாசிக்காவிட்டாலும் கூட கில்லிதான்.