Sep 18, 2014

என்னதான் வழி?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் உதயகுமாரை நேபாளம் செல்லவிடாமல் தடுத்தார்கள் என்ற செய்தி கண்ணில்பட்டது. இந்த அணு உலை எதிர்ப்பு விவகாரத்தில் கிறித்துவ மிஷனரிகள் உள்ளே புகுந்து விளையாடுகிறார்கள் என்றும் உதயகுமார் வெளிநாடுகளின் கைக்கூலி என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன. ‘உளவுத்துறையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அரசுக்கு ஆகாதவர்கள் என்றால் அவர்கள் மீது எப்படி வேண்டுமானாலும் மண்ணைக் கரைத்து ஊற்றுவார்கள்..உதயகுமார் நல்லவர்தாங்க’என்று ஒரு தரப்பு சொல்கிறது. இரண்டுக்கும் நடுவில் நிற்பவர்களுக்குத்தான் பெருங்குழப்பம். 

எதை நம்புவது? இப்பொழுதெல்லாம் நமது மனநிலை ஊடகத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வலதுசாரியாக இருந்தால் ‘உதயகுமார் ஒரு கடைந்தெடுத்த ஃப்ராடு’ என்று சொல்லி நம்மைத் திருப்திப்படுத்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கின்றன. அணு உலை எதிர்பாளாராக இருந்தால் ‘அரசாங்கம் மிகப்பெரிய சதி செய்கிறது’ என்று நம்மை நம்ப வைக்க வேறு  நூறு கட்டுரைகள் இருக்கின்றன. இரண்டு வகைக் கட்டுரைகளிலும் தலா ஐந்து கட்டுரைகளை வாசித்தவன் செத்தான். பைத்தியம் பிடிப்பதுதான் மிச்சம். குழப்பமாக இருக்கிறது என்று வெளியே சொன்னால் ‘இரண்டு தரப்பில் எது சரியானது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீ எல்லாம் என்னத்தை படிச்சு கிழிச்ச’ என்று இரண்டு தரப்புமே துணி துவைப்பதற்கு நம் முதுகை சலவைக்கல்லாகக் கொடுத்த மாதிரி ஆகிவிடும். 

அணு ஆற்றல் பற்றி வாசிக்க ஆரம்பித்தால் அது தேவையா இல்லையா என்று தொடர்ந்து சிந்தனை மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் ஏகப்பட்ட நிறுவனங்கள் கால் பதித்திருக்கின்றன. இருபத்தி நான்கு மணி நேரங்களும் இயந்திரங்கள் உறுமிக் கொண்டேயிருக்கின்றன. கம்யூட்டர்கள் மின்னிக் கொண்டேயிருக்கின்றன. நகரங்கள் மின்சாரத்தை கடும்பசி கொண்டு குடித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஏரியாவிலும் மால்களைத் திறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாலையிலும் சூப்பர் மார்கெட்டுகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான மின்விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு சாலையின் இருபுறங்களும் சோடியம் விளக்குகளை பொருத்தி வைத்திருக்கிறோம். ஏ.சி என்பது சாதாரணமாகிவிட்டது. ப்ரிட்ஜ், ஹீட்டர் என்பன வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளாகிக் கொண்டிருக்கின்றன. மின்சாரத்தின் தேவை தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் இப்பொழுது நாம் உறிஞ்சும் மின்சாரத்தின் அளவு என்பது ஜூஜூபி. இந்த மின் தேவை பன்மடங்கு பெருகப் போகிறது. ஒவ்வொரு நாடும் ஐந்தாயிரம் கோடி கொடுக்கிறேன் பத்தாயிரம் கோடி கொடுக்கிறேன் என்பதெல்லாம் இந்த நாட்டை புரட்டப் போகிறோம் என்பதன் சூசகமான வெளிப்பாடு. நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள். புதிய ப்ராஜக்ட்களால் இந்த தேசத்தை திணறடிப்பார்கள். ஆற்றலின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். கிராமங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி வெறும் நாற்பத்தாறு சதவீத கிராமப்புற வீடுகளில்தான் மின்சார வசதி இருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் துல்லியமானதாக இருக்காது என்றாலும் கூட இன்னமும் மின்சார வசதி பெறாதவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்று நம்பலாம். இவர்கள் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுக்கும் போது இன்னும் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்? இன்னும் நூறு புதிய நகரங்களை உருவாக்குகிறார்கள். அந்த நகரங்களின் ஆற்றல் தேவை எவ்வளவு இருக்கும்? பெட்ரோல் விலையும் டீசல் விலையும் எகிறும் போது மின்சாரத்தின் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்பிஜி வாயுவின் விலை அதிகரிக்கும் போதும், தட்டுப்பாடு வரும் போதும் மின்சார அடுப்புகளை பயன்படுத்துவது அதிகரிக்கும்.

இப்படி யோசித்துக் கொண்டே போகலாம். எந்தக் காலத்திலும் மின் தேவைக்கான தேவை குறையப் போகப் போவதில்லை என்பதுதான் நிஜம்.

இன்றைக்கு இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு உலகத்தின் சராசரியோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. ஆக நமது மின்சார உபயோகம் அதிகரிக்கத் துவங்கும் போது- உலக மக்களின் சராசரியை நெருங்கும் போது இந்தியாவின் மொத்த மின் தேவையைக் கணக்கிட்டால் ‘கிர்ர்ர்’ என்றாகிவிடும். இப்பொழுதே கூட உலகிலேயே மின்சாரத்தை அதிகம் உறிஞ்சும் நாடுகளின் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறோம். இன்னும் போகப் போக நிலைமை என்னவாகப் போகிறது?

சில வகைகளில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்கலாம். உதாரணமாக மின் விநியோகத்தில் கிட்டத்தட்ட முப்பது சதவீதம் இழப்பு ஏற்படுகிறது (Distribution and Transmission Loss) அதில் கொஞ்சம் குறைக்கலாம் என்று வையுங்கள். பிறகு? மக்களை மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்கலாம். அதுவும் நல்ல யோசனை. அப்புறம்? சோலார் பதிக்கலாம். சரி. இதையெல்லாம் செய்துவிட்டால் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா? யானையின் பசிக்கு மன்ச் சாக்லேட் கொடுப்பது போலத்தான்.

வேறு என்ன வழி? நீர் மின்சாரம் எல்லாக்காலத்திலும் கிடைப்பதில்லை. காற்று மின்சாரமும் அப்படித்தான். குப்பையில் மின்சாரம் தயாரிக்கலாம். கரும்புச்சக்கையிலும் மின்சாரம் தயாரிக்கலாம். டீசல், நிலக்கரி என கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தித் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாவற்றையும் சேர்த்தாலும் கூட இந்தியாவின் மின்சாரப் பசிக்கு கட்டுபடியாகாது என்றுதான் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன.

ஒருவகையில் அணு மின்சாரத்திற்கு நான் ஆதரவாளன். வளர்ச்சி வேண்டும், கார் வேண்டும், ஏசி வேண்டும், கம்யூட்டர் வேண்டும் எல்லாவற்றிற்கும் மின்சாரம் வேண்டும் என்று கேட்டுவிட்டு அணு உலை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது? ஆனால் அதற்காக ஒரேயடியாக அணு மின் உலைதான் சரணம் என்று அதன் காலில் விழவும் முடியாது. ரேடியோஐசோடோப்புகள்தான் பெரும்பிரச்சினை- கதிரியக்கம். ஐசோடோப்புகள் உமிழும் கதிர்கள் புவியை நாசமாக்கும் மனிதர்களை நாசாமாக்கும் மற்ற உயிர்களையும் தொலைக்கும். இப்படி எந்தவகையில் பார்த்தாலும் அபாயம்தான். ஒரு பாலித்தீன் கவரை வீசினாலே பூமியை வன்புணர்ச்சி செய்கிறார்கள் என்கிறோம். இந்தக் கழிவுகளையெல்லாம் நிலத்தில் புதைத்தால் வன்புணர்ச்சியும் செய்து ஆசிட்டும் அடிப்பது போல.

ஐசோடோப்புகள் எல்லாக்காலத்திலும் கதிர்களை உமிழ்ந்து கொண்டிருப்பதில்லைதான். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அடங்கிவிடும். ஆனால் அது எந்தக் காலம் என்பதுதான் சிக்கல். சில ஐசோடோப்புகள் அடங்க பல்லாயிரம் ஆண்டுகள் வரை ஆகும். மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அடங்காத ஐசோடோப்புகளும் கூட இருக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி ஒழிக்கப் போகிறார்கள்?

லேசர் டெக்னாலஜி கண்டுபிடித்திருக்கிறோம். லேசரை பாய்ச்சி அந்தக் கழிவை செயலிழக்கச் செய்ய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் கேட்பதற்குத்தான் சர்க்கரைத் தண்ணீர். இப்போதைக்கு சாத்தியமில்லை. இப்படி அணுக்கழிவை ஒழிக்க ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஒன்றைச் சொல்கிறார்கள். விண்வெளியில் கொண்டு போய் எறிந்துவிட்டு வந்துவிடலாம், பாறைகளுக்குள் ஊற்றி மேலே மூடிவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் எதுவுமே சாத்தியப்பட்ட மாதிரி தெரியவில்லை. இப்பொழுது எல்லா நாடுகளும் ஒரேயொரு தில்லாலங்கடி வேலையைத்தான் செய்கின்றன. கடலுக்குள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. திமிங்கலங்களும் மீன்களும் சண்டைக்கு வரவா போகின்றன என்ற தெனாவெட்டுதான்.

அப்போ என்னதான் வழி? எனக்கு எப்படிங்க தெரியும்!