Sep 17, 2014

பெரியாரா?இராமசாமியா?

இன்று பெரியாரையும் அண்ணாவையும் ஆளாளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விமர்சனம் என்று கூடச் சொல்ல முடியாது. வசை. பெரியாரின் ஏதாவது ஒரு வரியை எடுத்துக் கொண்டு ‘அப்படிச் சொன்னவன்தானே ராமசாமி?’ என்று எழுதுகிறார்கள். ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரும் சரி; காந்தியும் சரி அல்லது அம்பேத்கரும் சரி- தங்களது செயல்பாட்டின் வழியாக தனிப்பட்ட வாழ்வில் எந்தப் பலனையும் அனுபவிக்காதவர்கள். பிற்காலத்தில் ஆட்சியாளர்கள் ஆகவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. குடும்பத்துக்குச் சொத்துச் சேர்க்கவில்லை. வாரிசுகளை முன்னெடுக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் எவையெல்லாம் தவறு என்று பட்டதோ அதையெல்லாம் எதிர்த்தார்கள். அதையெல்லாம் விமர்சித்தார்கள். அவ்வளவுதான். 

இந்த ஒரு நினைப்பை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை விமர்சிக்கலாம். அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் பெரியாரையும் காந்தியையும் இன்றைய அரசியல்வாதிகளைப் போல கருதிக் கொண்டு- பிழைப்புக்காக களமிறங்கினார்கள், அதிகாரத்தைக் கைப்பற்ற  கொடி தூக்கினார்கள் என்ற நினைப்பில் குருட்டுவாக்கில் விமர்சித்தால் அது விமர்சனமாக இருக்காது வெறும் வசையாகத்தான் இருக்கும். அப்படித்தான் பெரும்பாலானவர்கள் இவர்களையெல்லாம் பெருமொத்தமாக நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்திலும் நம் பண்பாட்டிலும் காலங்காலமாக புரையோடிக் கிடந்த விஷயங்களின் மீது தங்களின் சிந்தனைகளாலும் பேச்சினாலும் எழுத்தினாலும் ஆழமான கீறலைப் போட்டுவிட்டுச் சென்றவர்களை அவ்வளவு சீக்கிரம் நிராகரிக்க வேண்டியதில்லை. நம்மால் நிராகரித்து விட முடியுமா என்ன? அது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை.

இன்னமும் நூறாண்டு ஆனாலும் இவர்களின் தாக்கம் ஏதாவதொருவிதத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். மதுவிலக்கு பற்றி அறிவார்ந்த விவாதத்தை ஆரம்பிக்கும் போது நமக்கு காந்தி தேவைப்படுவார். விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் போது அம்பேத்கரை நினைத்துக் கொள்வோம். சாதி ஒழிப்பு பற்றியும் சமூக சீர்திருத்தம் பற்றியும் பேசுவதற்கு பெரியாரை முன் வைக்க வேண்டியிருக்கும். இதுதான் நிதர்சனம். அதை விட்டுவிட்டு ஒன்றரை வரி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் இத்தகையை ஆளுமைகளை நாறடிப்பதாக நினைத்தால் அது சாணத்தை வாரி நமக்கு நாமே அடித்துக் கொள்வது போலத்தான்.

என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும், பெரியார் இல்லாமலிருந்தால் தமிழகத்தில் நஞ்சப்பனும் கருப்பணனும் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தில் எத்தனை சதவீதத்தை அடைந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இன்றைக்கு சாதியை பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ள கூசும் தலைமுறை உருவாகியிருப்பதில் பெரியாரின் தாக்கம் மிக முக்கியமானது. இன்னமும் சாதி நம்மிடையே புரையோடித்தான் கிடக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் எழுபதுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டாயிரம் வரையில் சாதியை பெருமைக்காக பயன்படுத்துவதை ஒரு தலைமுறையே தவிர்த்து வந்திருக்கிறது. அதில் பெரியாரின் பங்களிப்பு இல்லை என்று ஒதுக்கிவிட முடியுமா என்ன? 

ஒரு மனிதன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களையும் தனது கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் எதிரான கருத்துக்களை எழுதிச் சென்றவன் என்ற எரிச்சலையும் மனதில் வைத்துக் கொண்டு ‘எடுடா அருவாளை போடுடா பெரியாரை’ என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கிளறி மூடுவது அபத்தம். பெரியாரின் கடவுள் மறுப்பு மீது விமர்சனம் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் எனக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் அந்த விமர்சனத்தை ஏன் அவர் தூக்கிப் பிடித்தார்? அவரது காலத்தின் சூழல் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டும். பெரியாருக்கும் விநாயகனுக்கும் என்ன பங்காளித் தகராறா? முருகனுக்கு ஈவேராவுக்கு என்ன வாய்க்கால் தகராறா? அப்புறம் ஏன் எதிர்த்தார் என்ற ரீதியில் விவாதிக்க வேண்டும். 

அண்ணாவின் நினைவுக்கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது போல பெரியார், அண்ணாவை பின்பற்றி ஒரு பெரும் கும்பல் உருவாகியது. இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்தக் கும்பல் எந்தப் புரிந்துணர்வுமே இல்லாமல் கண்ணில் படுவதை எல்லாம் எதிர்க்கத் துவங்கியது. கம்பராமாயணத்தை எதிர்த்தார்கள். அற்புதமான சமயப்பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. பாடத்திட்டங்களில் பொக்கையான இலக்கியம் முன்னெடுக்கப்பட்டது. ரமலானில் இப்தார் விருந்துண்பதும் கிறித்துவத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் மத நிகழ்வு இல்லை ஆனால் தீபாவளியும் விநாயகர் சதுர்த்தியும் மதச்சார்புடையது என்ற போலியான பிம்பங்கள் உருவாக்கப்பட்டன. இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் எப்படி பெரியாரின் குறை என்று சொல்ல முடியும்?

பெரியாரைக் கடவுளாக்கியது அவரைப் பின் தொடர்ந்து வந்த அரசியல்வாதிகள்தான். பெரியாரின் காலத்திலேயே அவரது கருத்துக்களை முன்னிறுத்தி விவாதத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் தடுத்தார்கள். வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு பெரியார், அண்ணா என்ற புனித பிம்பங்கள் தேவைப்பட்டன. ஒரு பீடத்தைக் கட்டி அதன் மீது அவர்களை நிறுத்தி வைத்துவிட்டார்கள். யாராவது எதிர்மறையாக பேசத் துவங்கினால் கற்களால் அடிக்கத் துவங்கினார்கள். பெரியாரின் கருத்துக்கள் முழுமையாக விவாதிக்கபடவில்லை. அதை விவாதித்திருந்தால் இன்றைய சூழலுக்கு ஏற்ப அவை உருமாறியிருக்கக் கூடும். அதை அந்தக் கும்பல்தான் தடுத்தது. பார்வையாளர்களிடம் கைதட்டு வாங்கவும் அவர்களை மொன்னைகளாக்குவதற்காகவும் திரும்பத் திரும்ப அடுக்கு மொழியில் பெரியாரின் கருத்துக்களை தங்கள் குரலில் பேசி அதோடு நிறுத்திக் கொண்டார்கள். அதன் மீது கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை. உரையாடல் நிகழ்த்தப்படவில்லை. அப்படியே உறைந்து போய்க் கிடக்கின்றன அந்தக் கருத்துக்கள்.

பெரியாரின் சிந்தனைகள் காலத்திற்கு ஏற்ப வடிவத்தை எடுத்துக் கொள்ளாததற்கு காரணம் பெரியார் இல்லை. அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் அல்லவா? அந்த கயவாணிகள்தான். ‘நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்’ என்று சொல்லிக் கொண்டே ஒரு குழு பெரியாரை நெருங்க விடாமல் செய்கிறது என்றால் இன்னொரு குழு ‘பெரியார் சொன்னது அத்தனையுமே தவறு’ கத்திக் கொண்டு திரிகிறது. இந்த இரண்டு குழுவுக்குமே பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பது முழுமையாகத் தெரியாது என்பதுதான் அவலம். 

பெரியாரின் கருத்துகளை மட்டுமில்லை நம் முன்னோர்கள் யாருடைய கருத்தையுமே நம்மால் நூறு சதவீதம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் அந்தக் கருத்துக்களை விவாதங்களின் வழியாக காலந்தோறும் உருமாற அனுமதிக்கலாம். அதுதான் அறிவார்ந்த சமூகத்திற்கு அழகு. ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. செய்யவும் மாட்டோம். ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளின் போது ஒரு கும்பல் மாலை அணிவிக்கும். இன்னொரு கும்பல் ‘பெரியார் ஒரு கயவாணி’ என்று எழுதும். நடுவில் சில சில்லுண்டிகளுக்கு இதைப் போன்றதொரு கட்டுரை எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவுதான். 

குடிஅரசு இதழின்(1925-26) தொகுப்புகள் (மூன்று தொகுதிகள்) பிடிஎஃப் வடிவில் இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.