Sep 14, 2014

அவள் அப்படித்தான்

தமிழ் சினிமாவைப் பற்றி யார் பேசினாலும் ‘அவள் அப்படித்தான்’ படத்தை பற்றி பேசிவிடுகிறார்கள். இரண்டே படங்களை எடுத்துவிட்டு தமிழ் சினிமா சரித்திரத்தில் இவ்வளவு அழுத்தமாக பெயரை பதித்துக் கொண்ட இயக்குநர் இவர் ஒருவர்தான். ருத்ரய்யா. இன்றைக்கும் இந்தப் படத்தைப் பற்றி யாராவது பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்- படம் வந்து முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகும். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது.

நண்பரொருவர் அந்தப் படத்தை பார்த்துவிடச் சொல்லியிருந்தார். படம் பார்ப்பதற்கு முன்பாக அந்தப் படம் பற்றிய சில கட்டுரைகளையும் வாசித்துவிட வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட எல்லோருமே இந்தப் படத்தை பொக்கிஷம் என்றுதான் எழுதியிருந்தார்கள். சுரேஷ் கண்ணனின் சினிமாப்பார்வை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் 'எனக்குப் பிடித்த தமிழ்த் திரைப்படங்களை மிகவும் வடிகட்டி பட்டியலிட்டால் அதில் இந்தப்படம் நிச்சயமிருக்கும்' என்று எழுதியிருந்தார். ஆக, பலருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கிறது.

படம் யூடியூப்பில் கிடைக்கிறது. 1 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடுகிறது. ஓரளவுக்கு தெளிவான பிரிண்ட். படத்தில் கமல்ஹாசனும் ஸ்ரீப்ரியாவும் பின்னணிப் பாடகி ஜானகியை சந்திப்பதற்காக செல்லலாம் என பேசிக் கொள்கிறார்கள். ஆனால் கடைசி வரை ஜானகியின் முகமே படத்தில் வரவில்லை. அதனால் யூடியூப்பில் இருப்பது முழுமையான படமா என்று தெரியவில்லை. ஒருவேளை இடையில் யாராவது துண்டித்துவிட்டார்களோ அல்லது படத்திலேயே அந்தக் காட்சி வராதோ என்னமோ.

இந்தப் படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே கமலும் ரஜினியும் வெற்றியின் ஏணியில் வேகமாக ஏறிக் கொண்டிருந்தார்களாம். ஸ்ரீப்ரியாவும் டாப்தான். ஆனால் இந்தப்படத்திற்கு மூவரும் சம்பளம் வாங்கினார்களா என்று தெரியவில்லை. அதனால் இந்தப்படத்திற்கு கால்ஷீட் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஓய்வு கிடைக்கும் போது வந்து நடித்துவிட்டு போயிருக்கிறார்கள். மூவருக்கும் படத்தின் கதை மீது அவ்வளவு நம்பிக்கை. இந்தப் படம் திரையாக்கப்பட்டது பற்றிய விரிவான கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். ஆனால் யார் எழுதியது, எங்கே கிடைத்தது என்று ஞாபகமில்லை. இப்பொழுது தேடிப்பார்த்தாலும் பிடிக்க முடியவில்லை. இல்லையென்றால் சுட்டியை இணைத்திருக்கலாம்.

ஸ்ரீப்ரியா ஏற்றுக் கொண்ட மஞ்சு என்ற கேரக்டர் அந்தக் காலத்தில் நிச்சயமாக அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும். இளம்பிராயத்தில் தனது அம்மா இன்னொருவனுடன் குலாவிக் கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறாள். அம்மா என்பதன் புனிதத் தன்மை உடைந்து நொறுங்குகிறது. தனது மனைவி அப்படித்தான் என்று அவளது அப்பாவுக்கும் தெரியும். ஆனால் அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.  அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவின் காதலன் மஞ்சு மீதும் கை வைக்கிறான். அதன் பிறகு கல்லூரிக் காலத்தில் தெய்வீகம், மனப்பூர்வம் என்று பிதற்றியபடியே வளர்ந்த காதலும் தோல்வியடைகிறது. காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கிறார்கள். அதன் பிறகு பாதிரியாரின் மகன் ஒருவன் மஞ்சுவுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு பிறகு சிஸ்டர் என்கிறான். இப்படியான தொடர்ந்த அடிகள் அவளைப் பந்தாடுகின்றன. அவள் சந்திக்கும் ஒவ்வொரு ஆணுமே காமத்தோடுதான் அவளை அணுகுகிறார்கள். 

இதன் பிறகு சென்னையில் அவள் வேலை செய்யும் ரஜினியின் நிறுவனத்தில் மற்ற ஆண்களும் பெண்களும் மஞ்சுவை எப்படிப் பார்க்கிறார்கள், கமலுடனான ஸ்ரீப்ரியாவின் உறவு என சிக்கல்களால் நிறைந்த ஒரு பெண்ணின் கேரக்டரை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் இது. படம் பார்க்கும் போது தலைவலி வந்துவிடும் போல இருந்தது என்பதுதான் உண்மை. அடிதடி, சண்டை, காமெடி, இடுப்பாட்டம் எனப் பார்த்துவிட்டு கறுப்பு வெள்ளையில் மிகக் குறைவான இசையில் - இளையராஜாவின் இசை- இது போன்ற சிக்கலான கேரக்டரை படத்தில் பார்க்கும் போது அயற்சியாகத்தான் இருந்தது. ஆனால் மூன்று மணிக்கு படுத்த பிறகு தூக்கத்தில் ஸ்ரீப்ரியாதான் வந்து கொண்டிருந்தார். அவ்வளவு அற்புதமான நடிகை ஏன் பிற்காலத்தில் அவ்வளவு மட்டமாக நடித்தார்? அது அவர் விருப்பம். ரஜினி மட்டும் என்ன? ஸ்ரீப்ரியாவிடம் வாலாட்டி அடி வாங்கிக் கொண்டு ஓடும் போது....இத்தகைய கேரக்டர்களை அவரால் மட்டும்தான் செய்ய முடிந்திருக்கும்.

இந்தக் குரூரமான உலகத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக மஞ்சு முரண்பாடுகளால் நிறைகிறாள். கோபப்படுகிறாள். ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறாள். ஆண்களை எந்தவிதத்திலும் மதிப்பதில்லை. ஆனால் ‘அவளுக்குத் தேவை ஒரு ஆண்’ என்று நினைத்தபடியே ஆண்கள் நெருங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். அதே நிலைப்பாட்டோடு கமலையும் தூக்கியெறிந்து பேசுகிறாள். காதல் சிதைகிறது.

நல்ல படம்தான். மிகச் சிறந்த திரைக்கதை. அட்டகாசமான நடிப்பு. பிரமாதமான கேரக்டரைசேஸன். ஆனால் சினிமாவின் எந்த நுட்பமும் தெரியாத என்னைப் போன்ற இந்தக் கால மண்டூஸூக்கு இந்தப் படம் என்னவிதமான மதிப்பீட்டை உருவாக்கும் என்று தெரியவில்லை.

இத்தகையை கேரக்டர்களைக் கேள்விப்பட்டும் செய்தித்தாள்களிலும் அறிந்து இப்பொழுதெல்லாம் சலித்துப் போய்விட்டது. இன்று கூட ஒரு செய்தி. இரண்டு குழந்தைகளின் அம்மாவுக்கு வேறொருவனுடன் தொடர்பு உண்டாகியிருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட கணவன் கண்டிக்கிறான். காதலனிடம் சொல்லி கணவனின் கதையை முடிக்கச் சொல்கிறாள். அவன் தனது நண்பர்களோடு சேர்ந்து மினி லாரியை ஓட்டி அவளது கணவனை கொன்றுவிட்டார்கள். பிறகு தனது குழந்தைகளோடு காதலனோடு தங்கியிருக்கிறாள். அங்கு தனது மூத்த மகன் ஏதோ தொந்தரவு செய்திருக்கிறான். அந்தக் குழந்தையையும் காதலன் எட்டி மிதித்திருக்கிறான். சுவரில் மோதி குழந்தை செத்திருக்கிறது. அப்படியும் கூட அந்தப் புண்ணியவதி அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. மகனைவிடவும் காதலன் அவசியமாகியிருக்கிறான் என்று எடுத்துக் கொள்வதா? இவனைவிட்டால் தனக்கு வேறு கதியில்லை என்று கதறியிருப்பாள் என்று புரிந்து கொள்வதா? கணவனைக் கொல்லும் போதும் மகன் சாகும் போதும் அதையெல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ள முடிகிறது என்றால் அவளது மனநிலை எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும்? அவிழ்க்கவே முடியாத சிக்கல்கள். புரிந்து கொள்ளவே முடியாத புதிர்கள்.

இப்படி எத்தனையோ செய்திகள் வந்து கொண்டுதானே இருக்கின்றன? மஞ்சுவைவிடவும் சிக்கல்கள் நிறைந்த மனிதர்களை ஏதாவதொருவிதத்தில் எதிர்கொண்டபடியேதான் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கேள்விப்படும் இத்தகைய கேரக்டர்கள் நம்மை சலிப்படையச் செய்துவிடுகின்றன. இதுதான் ரியாலிட்டி என்பதற்கான மனநிலை நமக்கு வந்துவிட்டது. எதுவுமே அதிர்ச்சி தருவதில்லை. இருபது வருடங்களுக்கு முன்பாக நிர்வாணம் என்பது அதிர்ச்சி. வன்புணர்ச்சி என்பது அதிர்ச்சி. முகத்தில் ஆசிட் அடிக்கிறார்கள் என்பது அதிர்ச்சி. கள்ளக்காதல் என்பது அதிர்ச்சி. சொந்த ரத்த உறவுகளையே கொல்கிறார்கள் என்பது அதிர்ச்சி. ஆனால் இன்று இவை அனைத்துமே வெறும் செய்திகள்தான். அதற்கு மேல் அவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

இந்தக் காலத்தில் நமது கேரக்டர்கள் அவ்வளவு சிக்கலாகிக் கிடக்கின்றன. நம் எல்லோரிடமும் ஏதாவதொருவிதத்தில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. தொழில்நுட்பமும் தகவல் தொடர்புச் சாதனங்களும் நம்மை ஒவ்வொரு நாளும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் கிராமம் நகரம் என்ற எந்த மாறுபாடும் இல்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான். எண்பதுகளில் ஒரு சில மஞ்சுகளைத்தான் பார்த்திருப்பார்கள். இப்பொழுது அப்படியில்லை அல்லவா?