Sep 15, 2014

எவ்வளவு சம்பளம் தருவார்கள்?

‘காலம் முழுவதும் ஐடியிலேயே இருந்துக்குவியா?’ என்று யாராவது கேள்வி கேட்டால் பிதுக் பிதுக் என்று முழிக்கத் தொடங்கிவிடுவேன். பதில் இருந்தால்தானே சொல்வதற்கு? இதற்கான பதில் என்னிடம் இல்லை. எதையாவது செய்ய வேண்டும் என்றும் தோன்றும். ஏதேதோ தகவல்களைச் சேகரிப்பேன். சில நாட்களுக்குப் பிறகு இப்படியே போகிற வரைக்கும் போகட்டும் என்று அந்த முயற்சியைக் கைவிட்டு அமைதியாகிவிடுவேன். 

சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் ஏதாவதொரு கல்லூரியில் வாத்தியார் ஆகிவிடலாம் என்று நம்பியிருந்தேன். இப்பொழுது அதற்கும் டிமாண்ட் அதிகம் போலிருக்கிறது. திருடர்கள் எல்லாம் கல்லூரி நடத்தினால் எப்படி இருக்கும்? பல கல்லூரிகளில் ‘அஞ்சோ பத்தோதான் தூக்கிப் போடுவேன்..வந்தா வா’ என்கிறார்களாம். அதற்கும் சரி என்று சொல்ல ஆட்கள் மித மிஞ்சிக் கிடக்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தான் வீதிக்கு வீதி பொறியியல் கல்லூரிகள் ஆயிற்றே? பி.ஈ முடித்துவிட்டு வேலை கிடைக்கவில்லையென்றால் எம்.ஈ முடித்துவிடுகிறான். பிறகு ஏதாவது கல்லூரியில் ஒட்டிக் கொள்ளலாம். படிக்கும் போது பதினைந்து அரியர்ஸ் வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது பி.ஹெச்.டி முடித்துவிட்டு அசோஸியட் ப்ரொபஸர் ஆகிவிட்டார்கள். அதுவும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப்படிப்பின் தலைப்பை பார்க்க வேண்டுமே. ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியை வைத்துக் கொண்டுதான் அர்த்தம் கண்டு பிடிக்க வேண்டும். பயோ, இண்டகிரேஷன், அல்காரிதம் போன்ற வார்த்தைகளை பிய்த்து கொத்து புரோட்டா போட்டு பி.ஹெச்.டி வாங்கிவிடுகிறார்கள். 

சில கல்லூரிகளில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள்தான். ஆனால் பெரும்பான்மையான கல்லூரிகளில் ஆசிரியர்களை பண்ணையத்து ஆள் மாதிரிதான் வைத்திருக்கிரார்கள். இருக்கிற வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும். ஆனாலும் கிள்ளித்தான் கொடுக்கிறார்கள். ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு என்ன செய்வது? தனியார் பள்ளிகளில் நிலைமை இன்னமும் மோசம். பி.எட் முடித்திருந்தால் மூன்றாயிரம் ரூபாய்தான் சம்பளம். எம்.எட் முடித்திருந்தால் நான்காயிரம். ஆனால் பிழிந்தெடுத்துவிடுவார்கள். சனி, ஞாயிறு கூட ஓய்வில்லை. அடுத்த வருடம் ஸ்டேட் ரேங்க் வாங்க வேண்டுமல்லவா? அப்பொழுதுதானே முதலாளிகளின் கல்லாப்பெட்டி நிரம்பும்.

ரங்கநாத் என்றொரு மனிதர் வீட்டுக்கு வந்திருந்தார். பெங்களூரில் ஹிந்து பத்திரிக்கை வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளைக் கொடுக்கிறது. வருடச் சந்தா 500 ரூபாய். அதை மார்க்கெட்டிங் செய்வதற்கு சிலரை நியமித்திருக்கிறது. ரங்கநாத் அதில் ஒருவர். காலை ஆறரை மணிக்கு பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால் ஒன்பதரை மணிக்குள் நான்கு வாடிக்கையாளர்களை பிடித்தாக வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு பேர் என்பது நிறுவனம் நிர்ணயித்திருக்கும் இலக்கு. அதை ஏன் ஒன்பதரை மணிக்குள் முடிக்க வேண்டும் என்றால்- அதன் பிறகு தான் வேலை செய்யும் சோலார் நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டும். ஹிந்து நிறுவனத்திற்கான வேலை பகுதி நேர வேலை. சோலார் நிறுவனத்திற்கு நிறைய பொருட்கள் இருக்கின்றன. குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, ஜன்னல்களுக்கு அடிக்கும் கொசுவலை, ஜன்னல் திரைச்சீலைகள் போன்ற பல ஐட்டங்களை விற்கிறார்கள். அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் விற்பனைத் தொகைதான் இலக்கு. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வியாபாரம் செய்தாக வேண்டும். அலைந்து திரிகிறார். இரு சக்கர வாகனம் கூட இல்லை. நடையே நடைதான். அவருக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள்? அறுபதைத் தொட்டுக் கொண்டிருக்கிறார். எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அது சரியும் இல்லை. ஆனால் அவரைவிடவும் மோசமான நிலையில் இருக்கும் கல்லூரி பேராசிரியர்களைச் சந்திக்க முடிகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரிக்கு பேச அழைத்திருந்தார்கள். பெருமுதலாளியின் கல்லூரி அது. அங்கிருக்கும் சில பேராசியர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கொடுமையாக இருந்தது. ‘வேற கல்லூரிக்கு மாறிவிடலாம் அல்லவா?’ என்றால் அதற்கு ஏகப்பட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட அந்தப்பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கல்லூரியுமே அப்படித்தான். நல்ல கல்லூரி ஒன்றிரண்டு இருந்தால் அங்கு சேர்வதற்கு கடும் போட்டி இருக்கிறது என்கிறார்கள். இப்படியே உழன்று கொண்டிருக்கிறார்கள். 

வெள்ளிக்கிழமையன்று வர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். சரி என்று அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன். அலுவலகத்திற்கே கூட மோசமான சட்டையும் பேண்ட்டும்தான் அணிந்து செல்வேன். ஆனால் கல்லூரிக்கும் எப்படி அப்படியே செல்ல முடியும் என்று புதுத்துணி எடுத்து அதில் ஒரு செலவு. வெளியூர்களுக்குப் போகும் போது அரசுப்பேருந்துகளில் செல்வதுதான் வழக்கம். ஆனால் இறங்கியவுடனே மாணவர்களிடையே பேச வேண்டும் அல்லவா? அதனால் ஸ்லீப்பர் பேருந்தில் பதிவு செய்து கொண்டேன். பேருந்துக் கட்டணமாக கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவு. இப்படியே ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைத்த கணக்காக கிட்டத்தட்ட மூன்று நான்காயிரம் செலவு செய்து அங்கு சென்று பேசியும் விட்டேன். ஆனால் கல்லூரியிலிருந்து ஒரு பைசா தரவில்லை. பேசியதற்காக காசு தர வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் போக்குவரத்துச் செலவுக்காவது தர வேண்டும் அல்லவா? அது கூட தொலையட்டும். துறைத்தலைவர் அழைத்து ‘நாங்க படிக்கும் போது வைரமுத்து, பாரதிராஜாவையெல்லாம் அழைப்போம். அப்போ அவங்க ஃப்ரீயா வந்து பேசிட்டு போவாங்க...இப்போ பெரிய ஆள் ஆகிட்டாங்க..அதே மாதிரி நீங்களும் ஆகிடுவீங்க’ என்றார் பாருங்கள். கையில் ப்ளேடு இருந்திருந்தால் ஒரு கீறு கீறிவிட்டிருப்பேன். 

எனக்கு காசு தரவில்லை என்பதற்காக மட்டமாகச் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். பணம் பொருட்டு இல்லை. ஆனால் இந்தப் பெருமுதலாளிகள் எல்லாவிதத்திலும் சுரண்டுகிறார்கள் என்பதுதான் அங்கலாய்ப்பு. பேராசிரியர்களுக்குச் சம்பளம் தர மாட்டார்கள். மாணவர்களுக்கு வசதிகள் தர மாட்டார்கள். இப்படி பேச வருபவர்களும் அவர்களது சொந்தச் செலவில் வந்து போக வேண்டும். ஆனால் ஃபீஸ் மட்டும் கொள்ளையடிப்பார்கள். 

அதனால்தான் பலரும் கல்லூரி பேராசிரியர் பணி என்றாலே முகத்தைச் சுளிக்கிறார்கள் போலிருக்கிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் பேராசிரியர்களின் சம்பளம் மரியாதையாக இருக்கிறது. அதனால் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் ‘ஐடியிலேயே இருந்துக்குவீங்களா?’ என்று கேட்ட போது ‘கொஞ்ச நாள் கழித்து ஏதாவது ஒரு கல்லூரிக்கு போய்விடலாம்’ என்றேன். 

‘அந்தச் சம்பளம் போதுமா?’ என்றார். எனக்குத் தெரியவில்லை. 

‘எவ்வளவு தருவார்கள்?’ என்றேன்.

‘முப்பது அல்லது நாற்பது’ என்றார்.

நான் எதுவும் பதில் சொல்லவில்லை. ‘யோசிச்சுக்குங்க’ என்று மிரட்டினார். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தச் சம்பளம் போதுமானதாகத்தான் தெரிகிறது. ரங்கநாத் போன்றவர்கள் பிழைக்கும் அதே ஊரில் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு தாராளமாக பிழைத்துவிடலாம். ஐந்தாயிரம் ரூபாயைச் சம்பளமாக வாங்கிக் கொண்டு கோபியிலும் சத்தியமங்கலத்திலும் ஆசிரியர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள். பத்தாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு கோயமுத்தூரிலும் மதுரையிலும் பேராசிரியர்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இதைவிடவும் மோசமான நிலையிலும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதையெல்லாம் ஒப்பிடும் போது நாற்பதாயிரம் மிகப்பெரிய தொகை.

முகத்தைச் சுளித்தவரிடம் பேசி முடித்த அதே வாரத்தில்தான் ரங்கநாத்தைச் சந்தித்தேன். அவருக்கு மனைவி இல்லை. இரண்டு பெண்கள். இரண்டு பேருமே பியூசி படித்துக் கொண்டிருக்கிறார்கள். வயது தள்ளாடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அவருக்கு முன்பாக ஏகப்பட்ட கடமைகள் குவிந்து கிடக்கின்றன. இன்னும் சில வருடங்களில் இவற்றையெல்லாம் முடித்துவிட்டுத்தான் காலை நீட்ட வேண்டும். இனி நேரம் இல்லை. ஓடிக் கொண்டிருக்கிறார். பாட்டிலில் நீரை நிரப்பித் தரச் சொன்னார். அப்பொழுது காலை ஒன்பதரையைத் தாண்டியிருந்தது. அதுவரை அவர் சாப்பிட்டிருக்கவில்லை. வெயில் ஏறிக் கொண்டிருந்தது. அவசர அவசர்மாக அடுத்த வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தார்.

எனக்கு ‘யோசிச்சுக்குங்க’ என்று சொன்னவரின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வந்து போய்க் கொண்டிருந்தது.