சூடாமணி என்ற பெயர் சேலத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் அறிமுகம். இது அரசியல்வாதி சூடாமணி. அப்பொழுது அந்த ஊருக்கு அவர்தான் மேயராக இருந்தார். அதனால் சூடாமணி என்ற பெயர் ஆணுக்கு மட்டுமான பெயர் என்று எப்படியோ பதிந்து விட்டது. அதன் பிறகு அவ்வப்பொழுது ஆர். சூடாமணி என்ற எழுத்தாளரின் பெயரைக் கேள்விப்படும் போதெல்லாம் ஆண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் ஆர்.சூடாமணி பெண் எழுத்தாளர். எழுத்தாளர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. என்னதான் முயன்றாலும் பெண்ணின் உளவியலை ஆண் எழுத்தாளர்களால் அவ்வளவு துல்லியமாக எழுதிவிட முடிவதில்லை என நினைக்கிறேன். சூடாமணியிலிருந்து குட்டிரேவதி வரைக்குமான பெண் எழுத்தாளர்களின் எழுத்தை வாசிக்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது. பெண்ணுலகின் நுண்மையான விவரணைகளை பெண்களால் மட்டுமே எழுத்தாக்க முடிகிறது. பெண் எழுத்தாளர்களின் கவிதைகளைச் சொல்லவில்லை. சிறுகதைகளைச் சொல்கிறேன். பெண் கவிஞர்களின் பத்துக் கவிதைகளை வாசித்தால் அதில் ஒன்றுதான் பிடித்த மாதிரியானதாக இருக்கிறது. குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- எனக்கு என்னவோ அப்படித்தான். அதனால் கவிதைகளை விட்டுவிடலாம்.
இருக்கட்டும்.
சூடாமணியின் ‘பிம்பம்’ என்ற கதையில் நாயகியின் பெயர் எஸ்.மீனாட்சி. அவளுக்கு ஜான்சி ராணியாகவோ, அன்னை தெரஸாவாகவோ அல்லது மேடம் க்யூரியாகவோ புகழ்பெற்ற பெண்ணாக வேண்டும் என விருப்பம். வகுப்பில் வருகைப் பதிவின் போது கூட பல நேரங்களில் அவள் தனது பெயரை மறந்துவிடுகிறாள். அவளுடைய அம்மா சமஸ்கிருதத்தில் பண்டிட். ஆனால் திருமணத்திற்குப் பிறகு புத்தகங்களை மூட்டை கட்டி பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டுவிடுகிறாள். மீனாட்சியின் தந்தைக்கு பிடிப்பதில்லை என்பதுதான் காரணம். அதனால் குடும்பம் மட்டும் போதும் என ஒடுங்கிக் கொள்கிறாள். ஆனால் மீனாட்சி அப்படியில்லை. சாதனைகளைச் செய்ய வேண்டும் என நினைக்கிறாள். நிறைய வாசிக்கிறாள். அவளைத் பெண் பார்த்துச் செல்கிறார்கள். பம்பாய்க்காரன். அவனை மீனாட்சிக்கும் பிடித்திருக்கிறது. ஊருக்குச் சென்று ‘வேலையை விட்டுவிடச் சொல்லுங்கள்’ என கடிதம் வருகிறது. விட்டுவிடுகிறாள். ‘அவளை மூக்குத்தி அணிந்து கொள்ளச் சொல்லுங்கள்’ என அடுத்த கடிதம் வருகிறது. அதற்கு மீனாட்சி மறுக்கிறாள். வீட்டில் வற்புறுத்துகிறார்கள். பிறகு மீனாட்சி என்ன முடிவு எடுக்கிறாள் என்பதுதான் கதையின் முடிவு. முடிவு நாடகத்தனமாக இருக்கிறது. ஆனால் முடிவு வரைக்கும் கதையின் நகர்தலில் காட்டப்படும் மீனாட்சியின் மனம், அவளது அம்மாவின் மனவோட்டங்கள் என்பவையெல்லாம்தான் கதையின் பெரும்பலம்.
இந்தக் கதை ஒரு உதாரணம்தான்.
சூடாமணி தன் வாழ்நாளில் எழுதிக் குவித்திருக்கிறார். 1954 ஆம் ஆண்டு அவரது முதல் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது. தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள், 2004 வரை பிரசுரமான கதைகள் மட்டும் 574. பிரசுரமான கதைகள் மட்டுமே அறுநூறை நெருங்கியிருக்கிறது என்றால் எழுதிய கதைகளின் எண்ணிக்கை நிச்சயமாக ஆயிரத்தைத் தாண்டியிருக்கக் கூடும். கல்கி வார இதழின் ஆசிரியர் சீதா ரவியும், கே.பாரதியும் தொகுத்திருக்கிறார்கள்.
ஆர்.சூடாமணியின் பெயரை சமீபமாக யாரும் உச்சரிப்பதாகத் தெரியவில்லை. அதுவும் இணைய எழுத்துக்கள் பரவலான பிறகு எஸ்.ரா, சாரு, ஜெயமோகன் என்று மும்மூர்த்திகள் பெரிய அணைக்கட்டுகளாகிவிட்டார்கள். அவர்களைத் தாண்டி எந்த எழுத்தாளரின் எழுத்துக்களும் இங்கு அவ்வளவாக விவாதிக்கப்படுவதில்லை. இந்த அணைக்கட்டுகளின் காரணமாக இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் எழுத்துக்களையே இங்கு பரவலாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை. அப்புறம் சூடாமணி பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று எதிர்பார்ப்பது மடத்தனம். எஸ்ராவையும், ஜெமோவையும், சாருவையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் படைப்புகள், படைப்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்தால் அது இமாலயத்திற்கு ஒப்பானது. என்ன பிரச்சினையென்றால் இந்தக் காலத்தில் அவர்கள் மூவரைத் தாண்டி நாம் விவாதிப்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது.
எனக்கும் கூட சூடாமணியின் புத்தகம் ஓசியில் கிடைத்தது. அதனால்தான் துள்ளுகிறேன்.
சென்ற புத்தகக் கண்காட்சியிலேயே வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம்தான் இது. ஆனால் புத்தகத்தின் விலை ஐந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எனக்கு ஒரு சிண்ட்ரோம் இருக்கிறது. Book Price Syndrome. ஒவ்வொரு முறை புத்தகம் வாங்கச் செல்லும் போதும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதில்லை. கை நீண்டு விடும் என்பதால் இந்த ஏற்பாடு. இரண்டாயிரம் ரூபாய்க்கு என்ன வாங்க முடியுமோ அவ்வளவுதான். எனது ஜீனிலும் கூட ஒரு பிரச்சினை இருக்கிறது. கொடுக்கிற காசுக்கு கை நிறைய இருக்க வேண்டும் என நினைப்பேன். இரண்டாயிரம் ரூபாய்க்கு நான்கு புத்தகங்களை வாங்குவதைவிடவும் தலா நூறு ரூபாய்க்கு இருபது புத்தகங்கள் வாங்கலாம் அல்லவா? அப்படித்தான் சூடாமணியின் புத்தகத்தை வாங்கவில்லை.
இந்த முறை மதுரை சென்றிருந்த போது காலச்சுவடு கருத்தரங்கில் பேச வந்திருந்தவர்களுக்கு ஒரு சிறிய பையில் இந்த புத்தகத்தை வழங்கியிருந்தார்கள். சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ‘தனிமைத் தளிர்’.மதுரையிலிருந்து திரும்பும் போதே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தத் தொகுப்பில் அறுபத்து மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்திருக்கிறார்கள். அவரது மொத்தக் கதைகளில் சுமார் பத்து சதவீதம் மட்டும்தான். எழுத்தாளர் அம்பை சூடாமணியோடு நெருங்கிப் பழகியிருக்கிறார். அவர் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சூடாமணியின் சிறந்த கதைகளாக குறிப்பிடுவனவற்றில் ‘நான்காம் ஆசிரமம்’ மட்டும்தான் தொகுப்பில் இருக்கிறது. அப்படியிருந்தும் இது வாசகனுக்கு முழுமையான தொகுப்பாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆக மிச்சமிருக்கும் கதைகளை எல்லாம் தொகுத்தாலும் கூட இன்னமும் நான்கைந்து தொகுப்புகள் கிடைக்கும்.
இந்தத் தொகுப்பில் சூடாமணியின் வாழ்க்கை குறிப்பு இடம்பெறவில்லை என்பது ஒரு குறைதான். அடுத்த தலைமுறையினருக்கு சூடாமணி பற்றிய விவரத்தை கொடுத்திருக்கலாம். சூடாமணியை உளவியல் எழுத்தாளர் என்று தொகுப்பாசிரியர்கள் தங்களது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது சரிதான். மனித மனதின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் டார்ச் அடித்து வெளிச்சம் காட்டுகிறார். கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் வழியாக சூடாமணி என்ற அற்புதமான கதை சொல்லியின் ஐம்பதாண்டு கால எழுத்துப் பயணத்தின் உருமாற்றத்தை நீள்வெட்டாக பார்க்க முடிகிறது.
சூடாமணிக்கு சிறுவயதிலேயே அம்மை நோய் தாக்கத்தினால் உடல் வளர்ச்சி குன்றிவிட்டது. அவரது தந்தையார் அந்தக் காலத்து ஐ.சி.எஸ் அதிகாரி. சூடாமணியின் உடல்நிலை காரணமாக பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்துச் சொல்லித் தந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாத சூடாமணிக்கு எழுத்தும், வாசிப்பும்தான் உறுதுணையாகியிருக்கின்றன. நிறைய வாசித்திருக்கிறார். நிறைய எழுதியிருக்கிறார். கடைசி வரைக்கும் தனியாகவே இருந்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பில் வடிகாலன் என்ற ஒரு கதை இருக்கிறது. ரவி என்றொரு இளைஞனுக்கு போலியோ பாதிப்பினால் கால்கள் செயல்படுவதில்லை. அவனுக்கு வாசிப்புதான் உலகம். மற்றவர்களின் பார்வையில் அவன் யோகி. ஆளாளுக்கு தங்கள் பிரச்சினைகளை அவனிடம் கொட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் வடிகால். நண்பன், அப்பாவின் தோழன், அம்மா என்று யாரும் பாக்கியில்லை. பக்கத்து வீட்டில் ஒரு பெண் குடி வருகிறாள். இவனது வாழ்வுக்கு ஏதோ அர்த்தம் கிடைத்தது போல நினைக்கிறான். ஆனால் அவளும் கடைசியில் தனது காதல் கதையின் பிரச்சினைகளை இவனிடம் கொட்டுகிறாள். இதுவரை யாரிடமும் காட்டாத கோபத்தை அவளிடம் காட்டி அவளை ‘எழுந்து போ’ என்று துரத்திவிட்டு அழத் துவங்குகிறான்.
ஏனோ இந்தக் கதையை வாசிக்கும் போது பின்னட்டையில் இருந்த சூடாமணியின் முகம் திரும்பத் திரும்ப வந்து போனது. ரவிக்கும் சூடாமணிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கக் கூடும் எனத் தோன்றியது.
நோன்பின் பலம் என்ற கதையில் வரும் யமுனாவின் மனவோட்டம் வேறொரு தளம். சிறுவயதுப் பெண் தன் வீட்டில் வேலை செய்யும் தாழ்ந்த சாதிப் பையனிடம் காதல் கொள்கிறாள். அதைக் காதல் என்று சொல்ல முடியாது. அக்கறை. அவ்வளவு நேர்த்தி அந்தக் கதையில். இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. Book Price Syndrome மட்டும் இல்லையென்றால் இந்த புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.
சூடாமணி இறக்கும் போது உயில் எழுதி வைத்திருக்கிறார். அவரது மொத்தச் சொத்துக்களையும்- கிட்டத்தட்ட பதினோரு கோடி ரூபாய்- ராமகிருஷ்ண மிஷன் உட்பட சேவை நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். புத்தகத்தை வாசித்து மூன்று நாட்களாகிவிட்டது. இன்னமும் அந்தக் கதைகள்தான் கனவில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் சூடாமணி என்ற தனிமைத் தளிர் தவறாமல் வந்து போகிறது.