Aug 30, 2014

கோசின்ரா தெரியுமா?

ஒரு நண்பர் இருக்கிறார். கவிதையே வாசிக்காத நண்பர் அவர். ஆனால் சிறுகதை, நாவல் எல்லாம் வாசிப்பார். பேச்சுவாக்கில் ‘கோசின்ரா தெரியுமா?’ என்றார். அவரைத் தெரியுமே. கவிஞர். எப்படி இருப்பார் என்றெல்லாம் தெரியாது. நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவரது கவிதைகளை வாசித்திருக்கிறேன். இப்பொழுது வடமாநிலம் எங்கேயோ அரசு அதிகாரியாக இருக்கிறார். அவருடைய நிழற்படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடினால் சில படங்கள் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் படத்தில் இருப்பவர்தான் கோசின்ராவா என்று சந்தேகம். விட்டுவிட்டேன்.

‘எதுக்கு கேட்டீங்க?’ என்றேன். கவிதைக்குச் சம்பந்தமே இல்லாத ஆள் ஒருவர் கவிஞரைப் பற்றி பேசினால் இந்தக் கேள்வியைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்? ‘

‘ஒரு கவிதையை ஆன்லைனில் வாசித்தேன்’ என்று எனக்கு ஜெர்க் கொடுத்துவிட்டு ‘நாய் பிழைப்பு’ என்ற கவிதையை அனுப்பி வைத்திருந்தார். கவிதை என்றவுடன் தெறிக்க வேண்டியதில்லை. புரிந்து கொள்ள எந்தச் சிக்கலும் இல்லாத நேரடியான கவிதை. ஒரே வாசிப்பில் புரிந்து கொள்ளலாம்.  வாசித்துவிடுங்கள்.

எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை. 
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை 
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை 
நாயைக் கண்டதும் பயப்படுகிறேன். 
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது. 
நான் அறையில் உறங்குகிறேன். நாய் தரையில் உறங்குகிறது. 
நாய் கனவு காண்கிறது. நானும் கனவு காண்கிறேன். 
நாய் தேர்தலில் நிற்பதில்லை. நானும் தேர்தலில் நிற்பதில்லை. 
நாய் இப்போதும் நாயாக இருக்கிறது. மனிதன் நான் 
எல்லாவற்றுக்கும் நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

கோசின்ராவின் முதல் தொகுப்பு ‘என் கடவுளும் என்னைப் போல் கருப்பு’ வெளிவந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கும். அந்தச் சமயத்தில் அந்தத் தொகுப்பை நிறையப்பேர் சிலாகித்தார்கள். அவரது அரசியல் கவிதைகள் முக்கியமானவை. நிறுத்தி வைத்து பொட்டில் அடிப்பது போல இருக்கும். அதற்கப்புறம் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு. ‘பூனையின் கடவுள்’. நன்றாக எழுதுபவர்கள் அடிக்கடி எழுதுவதில்லை. என்னைப் போன்றவர்கள்தான் தினமும் எழுதி.....சரி விடுங்கள். 

இரண்டாவது தொகுப்பில்தான் மேற்சொன்ன கவிதை இடம் பெற்றிருக்கிறது. புது எழுத்து வெளியீடு. 

கோசின்ராவின் கவிதைகளில் கவிதைக்கான எந்த சித்து வேலையுமே இருப்பதில்லை. கவிதைகளை பிரசவிக்கிறேன் என்று முக்கி மெனக்கெடுவது இல்லை. ஒரே டெம்ப்ளேட்டில் இருபது முப்பது கவிதைகள் எழுதி ‘படிச்சுக்கோ’ என்று விசிறியடிப்பதில்லை. வெண்ணையின் மீதாக இழுக்கப்படும் கூர்முனையுடைய கத்தியைப் போல சமூகத்தின் முடிச்சுகளை அறுத்துச் செல்கிறார். திருகலான மொழிநடை, புரியாத வாக்கிய அமைப்பு என்று எதையும் தனது கவிதையில் பிரஸ்தாபிப்பதில்லை. நேரடியான கவிதைகள்.

கவிதையில் எளிமை மிக அவசியம். வாசகனை திணறடிக்காத எளிமையாக இருக்க வேண்டும். அந்த எளிமை கோசின்ராவின் கவிதைகளில் இருக்கிறது. ஏகாதிபத்தியம், அரசின் அடக்குமுறைகள், துப்பாக்கிகளின் மிரட்டல்கள் என சகமனிதனுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் பயமூட்டும் சமாச்சாரங்களை தனது கவிதையில் பிசிறில்லாமல் பேசிவிடுகிறார் கோசின்ரா. அதற்காக புரட்சிகரக் கவிதைகள் என்று அர்த்தம் இல்லை. ஒரு நண்பனோடு உரையாடுவது போன்ற கவிதைகள் இவை. 

கோசின்ராவின் தொகுப்புகளின் தலைப்பில் மட்டும் இல்லை- கவிதைகளிலும் கடவுளுக்கு இடம் அதிகம். 

‘இந்த பூமிக்கு அம்பேத்கர் வருவதற்கு முன்னும் 
ராமர் இருந்தார்.
இந்த பூமிக்கு பெரியார் வருவதற்கு முன்னும் 
இயேசு இருந்தார்
இந்த பூமிக்கு ஃபூலே வருவதற்கு முன்னும்
முகமது நபிகளிருந்தார்.
எல்லாக் கடவுள்களும் வந்து போனார்கள்.
மலம் அள்ளுகிறவன் அப்படியே தானிருந்தான்
பிணம் தூக்கிகள் அப்படியே தானிருந்தார்கள்’ என்று தொகுப்பு முழுவதுமாகவே கடவுள்களுக்கு  கேள்விகளும் சாட்டையடிகளும் உண்டு. 

‘செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை’ ‘கடவுள் அமெரிக்கனாகப் பிறக்கமாட்டார்’ ‘கடவுளால் கொல்லப்பட்டவன்’ ‘கடவுளின் பிரேத பரிசோதனை அறிக்கை’ என்று தொகுப்பு முழுவதுமாக கடவுள் கோசின்ராவிடம் சிக்கிக் கொண்டு சீட்டியடிக்கிறார். கடவுளை தவிர்த்துவிட்டு இவரால் கவிதை எழுத இயலுமா என்று சந்தேகமாக இருக்கிறது. 

எப்பொழுதுமே தமிழ்க் கவிதைகளில் வெறும் அழகியல் மட்டுமே கோலோச்சுவதில்லை. அதேபோல தனிமனித துக்கங்களை பேசும் கவிதைகள் மட்டும் வெற்றியடைவதில்லை. கோசின்ரா போன்றவர்களின் அரசியல் மற்றும் சமூகக் கவிதைகள் திடீரென்று ஒரு வெளிச்சத்தை பாய்ச்சிவிட்டுச் செல்கின்றன. சலனமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கவிதையின் போக்கில் ஒரு ஆழமான கீறலைப் போட்டுப் பார்க்கின்றன. ஆனால் இத்தகைய கவிதைகளுக்கு எந்த மாதிரியான கவனம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. பொதுவாகவே தமிழில் கவிதைகளுக்கு பெரிய கவனம் இருப்பதில்லை. 

அதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். கவிதைகள் என்பவை புனிதமானவை, புதிரானவை, புரியாதவை என்றெல்லாம் பேசிப் பேசியே முந்நூறு பேர்களைத் தாண்டி வராத வஸ்தாக கவிதையை மாற்றிவிட்டார்கள். சாமானியர்களுக்கு கவிதை புரியாது என்று சொல்லிச் சொல்லியே அவற்றை அந்நியமானதாக்கிவிட்டார்கள். தமிழ்க் கவிதைகள் உண்மையில் வெகுஜன தளத்தில் மிகப்பெரிய உரையாடலாக மாறியிருக்க வேண்டும். ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. கவிதைத் தொகுப்பு வெளியிடுவதும் ஒரு பாழுங்கிணற்றில் பெருங்கல்லைத் தூக்கிப் போடுவதும் ஒன்றுதான்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் குறைகளும் இருக்கின்றன. உதாரணமாக சில கவிதைகள் அறிவுரை சொல்வதைப் போல அமைந்திருக்கின்றன அல்லது கடைசியில் ஒரு ஸ்டேட்மெண்ட்டோடு முடிகின்றன. ஒரு கவிதையை உதாரணமாகக் காட்டலாம். இந்தக் கவிதையும் சுலபமானதுதான். 

ஒரு பிச்சைக்காரரோ அல்லது யாரோ ஒரு அநாதையோ இறந்து கிடக்கிறார். அதைப் பற்றி பேசுகிறது. 

அவர் இறப்பது இது முதல்  தடவையல்ல
இறப்பை யாரும் நம்பவில்லையென்பதால்
மீண்டும் மீண்டும் இறந்திருக்கிறார்
இப்பொழுது அவரை முழுவதும்  நம்பிவிட்டார்கள்
அதற்கு அடையாளமாக அவரை
அன்றைய செய்திதாள்களால் மூடியிருக்கிறார்கள்
சாவதற்கு சில மணி நேரம்  முன்புவரை
இருமிக்கொண்டிருந்தாராம்
அவருக்கென்று சொத்துக்கள்  ஏதுமில்லை
வாழ்ந்து வந்த நடைப்பாதை
நகராட்சிக்கு சொந்தமானது
அவர் மரணத்திற்கு அழ யாருமில்லை
தடவியல் நிபுணனுக்கு
எவ்வித சிரமும் கொடுக்காமல் செத்துவிட்டார்
நெடு நாளாக பசி உருண்டைகளை விழுங்கியிருக்கிறார்
பசி மனிதனை கொல்லக்கூடிய மிருகம்தான்
திரைப்படப் சுவரொட்டிகள்தான்
படுக்கைவிரிப்புகளாக இருந்திருக்கிறது
அதை யாருக்கும் உயில் எழுதவில்லை
இறந்தபிறகு செய்திதாள் போர்வை கிடைத்திருக்கிறது
அவருக்காக அமரர் ஊர்தி வரப்போவதில்லை
மாநகராட்சி வண்டிக்காக காத்துக் கிடக்கிறார்
வைகுண்டஏகாதேசி தினத்தில் இறந்திருப்பதால்
சொர்க்கம் போவாரென பேசிக்கொண்டார்கள்
போனவாரத்தில் இறந்து கிடந்த நாயை
மாநகராட்சி வண்டிதான்  தூக்கிக்கொண்டு போனது
மாநகராட்சி வண்டிகளுக்கு ஏழைகளும் குப்பைதான்.

நல்ல கவிதை. ஆனால் கடைசி மூன்று வரிகளைத்தான் ஸ்டேட்மெண்ட் என்கிறேன். சொர்க்கம் போவாரென பேசிக் கொண்டார்கள்- என்ற வரியோடு நிறுத்திக் கொள்ளும் போது வாசகனுக்குகென ஒரு இடம் கிடைக்கிறது. யோசிக்கத் துவங்குகிறோம். அந்த மனிதனைப் பற்றிய சித்திரம், அந்தச் சாவைப் பற்றிய காட்சிகள், சாவுக்கு முன்பான அவனுடைய வாழ்வு என எதையெதையோ பின்னிப்பின்னி ஒரு சித்திரத்தை நம் மனதுக்குள் உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் கடைசி மூன்று வரிகள் கவிதையின் மொத்த குரலையும் ‘மாநகராட்சி வண்டிகளுக்கு ஏழைகளும் குப்பைதான்’ என்கிற ஒரு அரசியல் ஸ்டேட்மெண்ட்டாக முடிக்கிறது. நமது மொத்த சிந்தனையும் இந்த வரியில் தேங்குகிறது. இத்தகைய ஸ்டேட்மெண்ட் கவிதைக்கு அவசியமில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

ஆனால் இவை போன்ற சில குறைகள் ஒரு தொகுப்பில் தவிர்க்கவே முடியாதவை. குறைகளே இல்லாத தொகுப்பு என்று ஒன்றை யாராவது சுட்டிக்காட்டினால் ஒன்று அந்தக் கவிஞனின் முகதாட்சண்யத்துக்காக பொய் சொல்கிறார் என்று அர்த்தம் அல்லது அந்தத் தொகுப்பை அவர் வாசித்திருக்கவே இல்லை என்று அர்த்தம். 

‘பூனையின் கடவுள்’ தொகுப்பு பற்றி ஒற்றை வரியில் சொன்னால் ‘இந்தத் தொகுப்பு என மிகப் பிடித்திருக்கிறது’.

தமிழில் ஒரு கவிதைத் தொகுப்பை அதிகபட்சமாக எத்தனை பேர் வாசிக்கிறார்கள்? இருநூறு என்றால அது மிகப்பெரிய எண்ணிக்கை. அந்தக் கவிதையைப் பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள்? முகம் தெரியாத மூன்று பேர் பேசினால் அது மிக மிகப் பெரிய எண்ணிக்கை. அவ்வளவுதான் தமிழில் கவிதைக் கலாச்சாரம். வாசகர்களும் ‘கவிதை புரிவதில்லை’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுகிறார்கள். கவிஞர்களும் ‘நீ வாசிச்சா வாசி இல்லைன்னா போ’ என்று விட்டுவிடுகிறார்கள். கவிதைக்குள் ஒரு காலை வைத்துப் பார்க்கலாம் என்று இறங்குபவர்கள் அரிது. அப்படி இறங்குபவர்கள் கோசின்ரா போன்றவர்களின் நேரடிக் கவிதைகளில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

தொகுப்பை ஆன்லைனில் வாங்க முடியும்.