Aug 30, 2014

விநாயகர்- கடிதம்

இன்றைய விவாதப் பொருளான விநாயகனுக்கு வருவோம். விநாயகன் தமிழ் கடவுளா இல்லையா என்பது தானே பிரச்சனை. பொதுவாக திராவிட இயக்கங்களின் அல்லது பெரியாரிஸ்டுகளின் வாதம் விநாயாகர் என்ற கடவுளே தமிழர் வரலாற்றில் கிடையாது என்பது. சங்க இலக்கியங்கள் எதிலும் அதற்கான குறிப்புகள் இல்லை. விநாயகனும், இந்த விநாயக சதுர்த்தி பண்டிகைகளும் வடக்கிலிருந்து இங்கு திணிக்கப்பட்டவை. இன்னும் சொல்லப் போனால் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிவேலை. கிட்டதட்ட உங்கள் கட்டுரையும் இதை ஆமோதிக்கும் தொனியில் இருப்பதாக எனக்கு படுகிறது. ஒருவேளை விநாயகர் தமிழர் கடவுளாக இல்லாமல் இருந்தாலும் இது இந்துத்துவ திணிப்பு!, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது போன்ற கூற்றுகளில் எனக்கு உடன்பாடில்லை.

1.      பொதுவாக இதுதான் தமிழர் வரலாறு என்று ஒன்றை வரையறுத்து கூறுவது சரியாகுமா? கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிள்ளையார் இல்லையென்றே நம்பி கொள்கிறேன். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதன்பிறகாவது இருந்திருக்கிறார் அல்லவா. அதாவது ஏழாம் நூற்றாண்டு முதல் இருபத்தோராம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட பதினாலு நூற்றாண்டுகள் இருந்திருக்கிறார் அல்லவா. அந்த காலம் தமிழர் வரலாற்றில் சேர்த்தி கிடையாதா. ஏன் எப்போதும் தமிழ், தமிழர் வரலாறு என்றாலே சங்க காலத்தயே மேற்கோள் காட்டுகிறார்கள்? அப்போது இருந்த வாழ்க்கை முறையில் பத்து சதவீதம் கூட தற்போது இருக்குமா என்பது சந்தேகமே. அப்படியிருக்கையில் ஒரு சமூக நிகழ்வின் நம்பகத்தன்மையை
சரிபார்ப்பதற்கு மட்டும் வ்ரலாற்றை புரட்டி பார்ப்பது எப்படி சரியாகும். வரலாற்றை தெரிந்து கொள்வதும் அதுகுறித்த பிரக்ஞையோடு இருப்பதும் அவசியம்தான். ஆனால், அதற்காக வரலாறு காலாகாலத்துக்கும் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இப்படி யோசிக்கையில் வரலாறு என்பதே தினமும் update ஆவதுதான் எனத் தோன்றுகிறது

2.      இரண்டு வருடங்களுக்கு முன்பென்றால் பிள்ளையார் இந்துத்துவ திணிப்பு என்பதை நூறு சதவீதம் ஒப்புக் கொண்டிருப்பேன். இன்னும் சொல்ல போனால் சின்ன வயதிலிருந்து எனது அபிமான கடவுளாக இருந்த பிள்ளையார் இளவயதில் ஏற்பட்ட பெரியாரிய சிந்தனை மாற்றங்களுக்கு பிறகு ஒழிக்கப்படவேண்டிய கடவுளரின் வரிசையில் முதலிடத்தில் வைத்திருந்தேன். பின்னர் ஜெமோவை வாசிக்க ஆரம்பித்த பிறகு எனது அனைத்து தர்கங்களும் உடைய ஆரம்பித்தது. அதன் பிறகே வரலாறு என்பது நம் கண்ணுக்கு தெரிந்த/தெரியாத பல நூறு காரணிகள் மூலம் உருவாவது என்றும் அதை எளிய ஒற்றைபடை கூற்றுகளால் வரையறுப்பது அபத்தம் என்ற தர்க்கம் உருவானது. எனவே இப்படி பிள்ளையாரை திட்டமிட்டு ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வியலின் மீது திணிப்பது சாத்தியம் தானா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே திணிக்கப்பட்டாலும் அந்த நிகழ்விற்கான வரலாற்று தேவைகள் இல்லாமல் அந்த நிகழ்வு தொடர்வது சாத்தியம் தானா போன்ற கேள்விகள்..

3.      இந்த விவாதம் குறித்து தங்களுக்கு கடிதம் எழுத தூண்டியதே இன்று நுங்கம்பாக்கம் வீதிகளில் நான் கண்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்தான். கிட்டதட்ட அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொரு சந்திலும் ஒரு பிள்ளையார் முளைத்திருந்தார். சிறுவர்கள் ஊர்வலத்தின் முன்பாக பட்டாசு வெடிக்க போட்டி போட்டுகொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் கையில் பூஜை சாமான்களுடன் அவரவர் வீட்டின் முன் முகத்தில் பரவசத்துடன் நின்று கொண்டிருந்தனர். அந்த பரவசத்தை நான் அறிவேன். முதன் முதலாக அதிகம் அறிந்திராத சுற்றத்தாரோடு சேர்ந்து ஒரு பண்டிகையை கொண்டாடும்போது ஏற்படும் பரவசம் அது. சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இது பரவசங்களும் சமூக கொண்டாட்டங்களும் அவசியம் தேவை. தமிழர் பண்டிகைகளில் சமூகமாக ஒன்றுசேர்ந்து கொண்டாடப்படுவது பொங்கல் மட்டும் தான். அது அநேகமாக நகரங்களில் கொண்டாட படுவதேயில்லை. கிராமங்களை போன்ற ஊர்த் திருவிழாக்களும் கிடையாது. இந்நிலையில் பெருநகரங்களில் இம்மாதிரி சமூகமாக சேர்ந்து எதையாவது கொண்டாடுவது நல்லது
என்றே படுகிறது.

இதையெல்லாம் எதிர்வாதமாகவோ, கேள்வியாகவோ உங்கள்முன் வைக்கவில்லை. தோன்றியதை உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என நினைத்தேன். அவ்வளவு தான். ஆமாம் நீங்கள் என்ன சொன்னீர்கள்? எதையாவது செய்துவிட்டு போங்கள், நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் இருந்தால் சரி என்று தானே சொன்னீர்கள். உங்களிடம் ஏன் இத்தனை தர்க்கம் புரிகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்கு வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. பிள்ளையார் சிலையின் ஒரு ஓரத்தில் ‘இந்த சிலையை கரைப்பதால் மாசுபடும் நீரை ஈடுகட்ட பத்து மரங்களை எங்கள் வீதியில் நட்டு வளர்த்துள்ளோம்!‘ என்ற குறிப்பை சேர்த்துவிடலாம். விநாயகர் கார்ப்பரேட் சாமி. அவருக்கு மட்டும் social responsibility இல்லாமல் போய்விடுமா என்ன.

இப்படிக்கு,
தே.அ.பாரி.

                                         ***
வணக்கம் பாரி.

பிள்ளையாரை இந்துத்துவத் திணிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. பல நூற்றாண்டுகளாக தமிழ்ர்களின் வாழ்வியலோடு பிள்ளையார் கலந்திருக்கிறார். பெரிய புராணத்திற்கு பிறகு எழுதப்பட்ட பெரும்பாலான இலக்கியங்களில் கணபதிக்கு இடமுண்டு- காப்பு என்ற வடிவிலாவது. முச்சந்திக்கு முச்சந்தி பிள்ளையார்தான் இருக்கிறார். கிட்டத்தட்ட பெரும்பாலான பூசைகளில் அவருக்கு இடம் உண்டு. இன்று நேற்று வந்திருந்தால் திணிப்பு எனலாம். ஆனால் பிள்ளையார் வழிபாடு என்பது நமது பண்பாடாகியிருக்கிறது. எப்படிச் சொல்ல முடியும்? 

கணபதியை நிராகரிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் நாம் ஏன் வரலாற்றினை வரலாறாக மட்டும் பார்ப்பதில்லை? எல்லாவற்றிலும் ஏதாவதொரு கண்ணாடியை அணிந்து கொள்கிறோம். மாலிக் காஃபூர் தமிழகத்தைச் சூறையாடினார் என்று யாராவது வாயெடுத்தால் ஒரு சாரார் இல்லையென்று மறுப்பார்கள். கணபதியை சிறுத்தொண்டர் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார் என்றால் இன்னொரு சாரார் மறுக்கிறார்கள். நம் பண்பாடு என்று சொல்லிக் கொள்ளும் எல்லாவற்றுக்குமே ஒரு வரலாறு உண்டு. ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாவிட்டாலும் புராணக்கதைகளாகவேனும் ஒரு பின்னணி இருக்கிறதல்லவா? மாரியம்மன், கருப்பராயன், காளியம்மன், அண்ணமார் சாமிகள் என்று எந்தக் கடவுளாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அல்லது ஆடிப் பெருக்கு போன்ற பண்டிகைகளாக இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணி உண்டு. அப்படித்தானே பிள்ளையாருக்கும் இருக்க வேண்டும்? அதை ஏன் பேசத் தயங்குகிறோம் அல்லது முரட்டுவாக்கில் மறுக்கிறோம்?

ஒருவேளை இந்த வரலாறு தவறென்றால் அதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால் கண்களை மூடிக் கொண்டு ‘ஒட்டுமொத்தமாக இது புரட்டுவாதம்’ என்று பேசுவது எந்தவிதத்தில் சரி? பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம் அவரவர் உரிமை. ஆனால் பிள்ளையார் எந்தவிதத்தில் தமிழ் மண்ணோடு தொடர்புடையவர் என்று தெரிந்து கொண்டு கொண்டாடுவதில் என்ன தவறு? 

கொண்டாடலாம்தான். எனக்கு அதில் எல்லாம் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல ஊர்வலங்கள், ப்ளாஸ்டர் சிலைகள், கூத்து, கும்மாளம் என்று  இதை கார்போரேட் மயமாக்குகிறார்கள். தெருவுக்கு தெரு வசூல் நடத்துகிறார்கள். சில இந்து அமைப்புகளும் நிதியுதவி செய்கின்றன. இதைத்தான் திணிப்பு என எடுத்துக் கொள்ள வேண்டும். இந்து அமைப்புகளிடம் பேசினால் ‘மிஷனரிகள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறார்கள். நாங்கள் கொடுத்தால் என்ன தவறு’ என்கிறார்கள். இதுதான் சிக்கல். இவன் காசு கொடுப்பதும் அதைத் தடுக்க அவன் காசு கொடுப்பதுமாக மிகப்பெரிய மத அரசியலை முன்னெடுக்கிறார்கள். 

சிலை ஊர்வலங்கள் போன்ற அர்த்தமற்ற கொண்டாட்டங்களின் வழியாக இங்கு உருவாக்கப்படுவது பக்தி இயக்கம் அன்று. தெளிவான புரிதல் இல்லாத மொன்னையான அரசியல் குழுக்கள்தான் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகள் பாரம்பரியமான பண்டிகைகளின் மீதான கவனத்தை இழக்கச் செய்து தீபாவளி, விநாயகர் ஊர்வலங்கள் போன்ற பெரும் பண்டிகைகள் மீது கவனத்தைத் திருப்புகின்றன. இதுதான் திணிப்பு. இன்னும் மூன்று தலைமுறை தாண்டிய பிறகு பார்த்தால் ஆடிப் பெருக்கு என்பது என்னவென்றே தெரியாது. ஆனால் சதுர்த்தி ஊர்வலங்களைத் தெரியும். 

ஆனால் இதையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆடிப்பட்டம் தேடி விதை என்று சென்ற தலைமுறை வரையில் இருந்தார்கள் அதனால் அவர்களுக்கு ஆடிப்பெருக்கு முக்கியமானதாக இருந்தது. இப்பொழுது ஆடிப்பட்டம் பார்த்து எத்தனை விவசாயிகள் விதைக்கிறார்கள்? மழை தப்புகிறது. பருவம் தவறுகிறது. அதனால் அதோடு ஒட்டிய பண்டிகையும் மதிப்பிழந்து போகிறது. அப்படித்தான் பொங்கல் விழாவும் கூட சிறுகச் சிறுக நம்மைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறது. 

கார்போரேட் வாழ்வு முறைக்கு ஏற்ப அட்சய திருதி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்று நமது கொண்டாட்டங்களும் கூட கார்போரேட் பண்டிகைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் போகிற போக்கில் விட வேண்டியதுதான். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இது போன்ற பல நூறு காரணிகள் சேர்ந்துதான் வரலாற்றின் போக்கை தொடர்ந்து திசைமாற்றிக் கொண்டிருக்கின்றன. திசை மாறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் எந்த இடத்தில் திசை மாறியது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படித்தான் தமிழர்களோடு விநாயகர் எப்படி ஒட்டினார் என்றும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்புடன்,
மணிகண்டன்