உங்களின் வலைப்பதிவு மூலமாக உங்களை எனக்குத் தெரியும் உங்களின் புத்தகங்களை இனிமேல்தான் வாசிக்க வேண்டும். வலைப்பதிவில் தொடர்ந்து வாசிக்கிறேன்.
பின்னூட்டங்கள் இல்லாமல் வாசிப்பது வருத்தமாக இருக்கிறது. பொதுவாக நான் பின்னூட்டங்கள் எழுதுவதில்லை, ஆனால் பல பெரும்பாலும் பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன அதே சமயம் ஒரே விஷயத்தை பல்வேறு பரிமாணங்களில் பார்க்கவும் உதவுகிறது. உங்கள் எழுத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது.
பின்னூட்டங்களை அனுமதிக்காததற்கு உங்களுக்கு 101 காரணங்கள் இருக்கும் என புரிந்து கொள்கிறேன். ஆனால் வளரும் எழுத்தாளராக உங்களின் பார்வையை ஒழுங்கமைத்துக் கொள்ள இவை உதவும். தமிழ் எழுத்தாளர்கள் ஏன் மெதுவாக இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்று புரியவில்லை. உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளராக வருவதற்கு இது ஒரு பரிணாம வளர்ச்சியா?
ராஜ கணேஷ்.
அன்புள்ள ராஜ கணேஷ்,
எழுத்தாளன், உலகத்தரம் என்றெல்லாம் எதுவும் இல்லை. எனது இடம், எனது தகுதி எனக்கு நன்றாகவே தெரியும். எழுத்தாளன் என்று கூட என்னைச் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. உரையாடுகிறேன். அவ்வளவுதான். அதனால் பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துச் செய்யவில்லை.
பின்னூட்டங்கள் நல்ல விஷயம்தான். இல்லையென்று சொல்லவில்லை. நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருப்பதை தவறு என்று அவ்வப்போது புரிய வைத்துவிடும். உதாரணமாக வவ்வால் போன்றவர்கள் கட்டுரையில் இருப்பதற்கு நேர் எதிரான விமர்சனத்தை முன் வைப்பார்கள். படித்த உடனே சுள்ளென்றிருக்கும்தான். ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து வாசிக்கும் போது இந்த மனுஷன் சொல்வதும் சரிதான் என்று தோன்றும். அது ஆரோக்கியமான விஷயம். ஆனால் பிரச்சினை விமர்சனத்தில் இல்லை- வசைகளில்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இணையத்தைத் திறப்பேன். ஏதாவது ஆபாசமாகத் திட்டி வந்திருக்கும் அல்லது சாபமாக இருக்கும். குறைந்தபட்சம் அதை நிராகரிப்பதற்காகவேனும் ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது அல்லவா? காலையிலேயே இப்படியா? என்றிருக்கும். யாரென்றே தெரியாத அனானிமஸிடம் எதற்காக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ‘இதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது’ என்று நினைத்தாலும் சிறு சலனமாவது ஏற்படத்தானே செய்யும்? சலனப்படுகிறேன். அதனால்தான் பின்னூட்டங்களே வேண்டாம் என்று நினைத்தேன்.
எழுதுவதை எழுதிக் கொண்டே இருக்கலாம். மின்னஞ்சல் ஐடி இருக்கிறது. எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படியே சொல்லாவிட்டாலும் எழுத்தைப் பற்றி விவாதிக்க வேறு வழிகளும் இருக்கின்றன. மற்றபடி, பின்னூட்டங்களை அனுமபதிப்பதால் எழுத்தின் நம்பகத்தன்மை கூடிவிடும் என்று அர்த்தம் இல்லை. அது எழுதுகிற எழுத்தையும் நமது செயல்பாட்டையும் பொறுத்தது. அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
நன்றி.
அன்புடன்,
மணிகண்டன்
***
மணி,
உங்களைப் பேர் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே உங்கள் சமீபத்திய பதிவுகளில் நான் சொல்லி இருந்தது போல் கொஞ்ச நாட்களாகத் தான் உங்களைப் பின் தொடர்ந்து வருகிறேன். இந்த வயதில் இத்தனை எழுத்தும் புத்தகங்கள் வெளியிடுவதும் என நீங்கள் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் தான். இணையத்தில் எழுதுவது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள், அதில் பின்னூட்டம் போட்டிருந்தேன். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தால் பின்னூட்டம் இடும் வசதியை நீக்கியதற்கான உங்கள் விளக்கம்.
நீங்கள் சொல்ல வந்தது நன்றாகப் புரிகிறது. வன்மம் செய்பவர்கள் எந்த ரூபத்திலும் செய்வார்கள்.
ஒரே ஒரு சிறு சந்தேகம். என்னைப் பொறுத்த வரை மேலே சொன்ன மாதிரி ஒருத்தரைக் கரம் வைத்து விட்டால் எப்படி இருந்தாலும் அடிப்பார்கள். அந்த மாதிரி ஆசாமிகள் உங்கள் மின்னஞ்சலையும் விட்டு வைக்கப் போவதில்லை நிச்சயம். எப்படி அவர்களை எதிர் கொள்ளப் போகிறீர்கள்? இதே யோசனை தான் எனக்கு உங்கள் விளக்கத்தைப் படித்ததிலிருந்து.
இன்னொன்றும் சொல்ல ஆசைப் படுகிறேன். நான் உங்களைப் பின் தொடர ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே இப்படியாகி விட்டதே என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.
ஒரு கட்டுரையைப் படித்து முடித்ததும் தோன்றும் கருத்தை சட்டென்று தெரியப் படுத்த பின்னூட்டம் சிறந்தது. மின்னஞ்சல் எந்த அளவுக்கு இதில் உதவும் என்று தெரியவில்லை.
எனக்கே கூட அப்படித் தான். நிச்சயம் உங்கள் எல்லாக் கட்டுரைகளையும் ( இனிமேல் வருபனவற்றை ) படித்து விடுவேன். ஆனால் உடனே மின்னஞ்சலைத் திறந்து அதற்கு எதிர் வினை கூற முடியுமா என்பதெல்லாம் தெரியாது. Of Course, என்னுடைய எதிர் வினைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிசப்தத்துக்கோ உங்களுக்கோ பெரிதாக இழப்பொன்றும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் ஒரு வாசகனின் குரலாக இதைப் பதிவு செய்ய நினைத்தேன். செய்து விட்டேன்.
ஜி.ஹரீஷ்.
அன்புள்ள ஹரீஷ்,
உடனடியாக எதிர்வினை புரியாமல் இருப்பதும் நல்லதுதான். கோபம், சிரிப்பு, நெகிழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும் இணையத்தில் காட்டிவிட முடிகிறது-அதுவும் உடனடியாக. அரை மணி நேரம் கழித்து வாசித்தால் ‘இது ஒன்றுமே இல்லை’ என்று தோன்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. நமக்கு பிடித்த விஷயங்களையே ஒருவன் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறோம் அல்லது நமக்கு பிடித்த தலைப்புகளையே தேடித்தேடி வாசிக்கிறோம். அதிலிருந்து சிறிது பிசகியிருந்தாலும் எரிச்சலைக் காட்டிவிடுகிறோம். இவையெல்லாம் அவசியமில்லை என்று நினைக்கிறேன். எழுத்தின் தாக்கம் அதிகமானதாக இருந்தால் மட்டுமே எதிர்வினை இருந்தால் போதும். அதை மின்னஞ்சலில் செய்துவிடலாம்.
மின்னஞ்சலில் வசைகள் வரும் போது அதைத் தடுப்பதற்கான ஒரு வசதி இருக்கிறது. ஒரு முறை அல்லது இரண்டு முறை பார்க்கலாம். தொடர்ச்சியாக எரிச்சல் வரும்படி இருந்தால் அந்த மின்னஞ்சல் முகவரியை ஒரு முறை ‘ஸ்பாம்’ என்று குறிப்பிட்டுவிட்டால் அடுத்த முறை அதுவாகவே நேரடியாக Spam folder க்குச் சென்றுவிடும். அவ்வளவுதான். அதன்பிறகு அந்த மனிதன் அந்த மின்னஞ்சலிலிருந்து குறுக்கிடவே முடியாது. வசைகளும் சாபங்களும் ஓரளவுக்கேனும் நமது கட்டுப்பாட்டில் இருக்கும்.
பின்னூட்டங்களை அனுமதிக்காதது சிலருக்கு வருத்தத்தைத் தரக் கூடும். மேலே குறிப்பிட்டதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.
தங்களின் அன்புக்கு நன்றி.
அன்புடன்,
மணிகண்டன்.